Friday, November 6, 2020

‘இசைச் சித்தர்’ சி.எஸ். ஜெயராமன்

 காவியமா.. ஓவியமா? -

இசைச் சித்தர்என்று அழைக்கப்பட்ட கம்பீரமான குரல் கொண்டவரான பாடகர் சி.எஸ். ஜெயராமனின் 1984-ல் அவரைச் சந்தித்த நினைவுகளில் இருந்து சில இங்கே:

சங்கீத சௌபாக்கியமேஎன்று சம்பூர்ண ராமாயணக்குரல் வளைய வந்தபோது லயித்துத் தலையாட்டியவர்கள் நிறைய பேர். ‘ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளேகேட்டும், ‘காவியமா.. ஓவியமா?’ கேட்டும் ஒன்றிப் போய்ச் சிலாகித்தவர்கள் அநேகம்பேர்.


நெறுநெறுவென்ற குரல். நல்ல உச்சிக்குப் போய்ச் சாவகாசமாகக் கீழிறங்கும் ராக ஒழுங்கு. வயதாகியும் இன்னும் குரல் தளர்ந்து உடையாமல் இருக்கிற சிதம்பரம் ஜெயராமனை வீட்டில் பார்த்தோம். குறுகலான வீட்டின் முன் அறை. அடிக்கடி வெற்றிலையையும், சீவலையும் மென்று கொண்டு உற்சாகமாகப் பேசுகிறார்.


செழிப்பான தஞ்சை மாவட்டத்தின் திருவிடை மருதூர். பாரம்பரியமான இசைக்குடும்பம். ஜெயராமனுடன் பிறந்தவர்கள் இரண்டு பேர். சிறு வயதிலேயே ஜெயராமனுக்குக் குரல் குறுகுறுக்க ஆரம்பித்துவிட்டது. தகப்பனார்பாட்டக சுந்தரம் பிள்ளைபக்கத்தில் உட்கார வைத்து அதட்டிப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறார். மூத்த சகோதரனும் திருத்துகிறான். பையன் நான்கு வயது நிறைவதற்குள் ஸ்வரம் பாட ஆரம்பித்துவிட்டான். ஒன்பது வயது வரை இடைவிடாமல் பயிற்சி.


1934
ஆம் ஆண்டு. திரைப்பட இயக்குநரான பி.வி.ராவ்கிருஷ்ண லீலாபடத்திற்காக கிருஷ்ணனைத் தேடிக் கொண்டிருந்தார். அவரிடம் அகப்பட்டார் பாடத்தெரிந்த கிருஷ்ணன் ஜெயராமன். அப்போது சென்னையில் ஸ்டூடியோ ஒன்றுமில்லை. கல்கத்தாவிற்குக் கிளம்பிவிட்டார்கள். பயோனியர் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு. அதில் சளைக்காமல் 64 பாடல்கள். பதினாறு வயதான ஜெயராமன் அதில் இருபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறான். ஆர்மோனியம், மிருதங்கம் இரண்டும்தான் பக்க வாத்தியங்கள். வெயிலில் நின்று கொண்டு நடித்துக் கொண்டே பாடவேண்டும். ஒரு அட்டையில் சிகரெட் பாக்கெட்டில் இருக்கிற ஜிகினாக் காகிதத்தை ஒட்டி அது தான்ரிஃப்ளக்டர்”. உடன் நடித்தவர்கள் எம்.எஸ். முத்துக்கிருஷ்ணனும், பந்துலுவும்.





எல்லோருக்கும் என் மேல் எப்பேர்ப்பட்ட அன்பு. அப்போ ஜாதி, மதம் எதுவும் தெரியாம அப்படிப் பழகுவோம். ஒரு நாள் ஷூட்டிங் முடிஞ்சிருக்கு. மரத்தடியில் தாடியோடு இருந்த வயசானவர் ஒருத்தர் வந்து என்னை பாடச் சொன்னார். பாடினேன். கிட்டே வந்து தட்டிக் கொடுத்தார். ஆசீர்வாதம் பண்ணினார்.


சின்னப் பையன் நான். கூசிப் போனேன். போன பிறகு தான் சொன்னாங்க. அவர் தான் ரவீந்திரநாத் தாகூர்ன்னு.”-பழைய ஞாபகத்திற்குப் போய்விடும்போது குரல் நெகிழ்ந்து போய்விடுகிறது ஜெயராமனுக்கு. தொடர்ந்து நல்லதங்காள், துருவா என்று வரிசையாயச் சில படங்கள். பதினெட்டு வயதுவரை நடித்தபின் திரும்பவும் இடைவெளி.


19
வயசிலிருந்து ஜெகன்னாதய்யர் நாடகக் கம்பெனியில் சேர்ந்து நடிப்பிற்காக ஊர் ஊராக அலைச்சல். அப்போது உடனிருந்த நடிகர்கள் எம்.ஆர்.ராதாவும், யதார்த்தம் பொன்னு சாமிப் பிள்ளையும். நாடகத்தில் ஜெயராமனுக்கு கதாநாயகி வேடம். முதல் ஆறு மாதம் சம்பளம் கிடையாது. பிறகு சம்பளம் மாதத்திற்கு மூன்று ரூபாய். பிறகு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுடன் பழக்கம் ஏற்பட்டுவிட்டது. சேர்ந்து கேரம் போர்டு விளையாடுவார்கள். மூன்று ஆண்டுகளாக ஜெயராமன் தான் கேரம் போர்டில் சாம்பியன். ஒரு நாள் கலைவாணர் வாட்டசாட்டமான ஒருவரை அழைத்துக் கொண்டு வந்து அறிமுகப் படுத்தியிருக்கிறார். அவரும் அவர்களுடன் சேர்ந்து கேரம் விளையாட ஆரம்பித்திருக்கிறார். அப்படி வந்த வாலிபர் எம்.ஜி.ஆர்.


1940
ல்கிருஷ்ண பக்திபடத்தில் நாரதராக நடித்தவர் ஜெயராமன். கூடவே நடித்தவர் பி.யு.சின்னப்பா. அந்தச் சமயத்தில் பிரபலமாக இருந்த இன்னொரு ஹீரோ தியாகராஜ பாகவதர். தன்னைவிட வயதில் இளையவராக இருந்தாலும், ஜெயராமனிடம் மூன்று ஆண்டுகள் சங்கீதம் கற்றிருக்கிறார் பாகவதர். “திருச்சியில் பாகவதர் இருந்தார். அங்கே நான் போய்ச் சொல்லிக் கொடுப்பேன்.குரு-சிஷ்ய உறவு மாதிரி இருந்தது எங்க உறவு. எவ்வளவு இனிமையானது அவருடைய குரல்!”


47
ல் ஜெயராமனுக்குத் திருமணம் நடந்தபோது அதற்கான செலவுகளை எல்லாம் சொந்தத்துடன் தானே ஏற்று நடத்தியவர் பி.யு.சின்னப்பா. தலைமை தாங்கிப் பேசியவர் என்.எஸ்.கிருஷ்ணன். “ ஜெயராமன் என்னுடைய தம்பி. தம்பீன்னா சாதாரணமான தம்பீ இல்லே.. தம்ப்ப்பீ..”


திரும்பவும் திரையுலகத்திற்குத் திரும்பிப் பின்னணி பாட ஆரம்பித்திருக்கிறார் ஜெயராமன்.
பராசக்தியில் புதுமுகமாக அறிமுகமான சிவாஜிக்குப் பல பாடல்களைப் பாடினார். “கா..கா..காபாட்டும், “தேசம் ஞானம் எல்லாம்”, “நெஞ்சு பொறுக்குதில்லையேபாட்டும் ஏகத்துக்கும் பிரபலம். சிவாஜிக்குத் தொடர்ந்து பல படங்களில் பின்னணி.


அப்போ பாட்டுக்கான ரிக்கார்டிங் நடந்துக்கிட்டிருக்கும். சிவாஜி தூரத்திலே ஒரு மூலையில் நின்னு என்னோட வாயசைப்பையே கூர்ந்து கவனிச்சிக்கிட்டிருப்பார். ஒரு வார்த்தை கூடப் பேச மாட்டார். அவ்வளவு மரியாதை”. பாவை விளக்கு, தெய்வப்பிறவி, புதையல் என்று படங்கள் அடுத்தடுத்து வர வர ஜெயராமனின் பெயர் பரவ ஆரம்பித்தது. தெய்வப் பிறவி படத்திற்கான ரிக்கார்டிங். “அன்பாலே தேடிய என்எனத்துவங்கும் பாட்டிற்கு இடையில்ஹம்மிங்பண்ணத் தேவை ஒரு பெண் குரல். பலர் ஆடிஷனுக்கு வந்திருக்கிறார்கள். ஒல்லியான ஒரு பெண்ணும் வந்திருக்கிறார். குரல் சரியில்லை என்று அவரை அனுப்ப முயற்சித்தபோது ஜெயராமன் தடுத்து அவரைப் பாட வைத்திருக்கிறார். அப்படிஹம்மிங்கில் ஆரம்பித்துப் பிரபலமானவர் பின்னணிப்பாடகியான எஸ்.ஜானகி.


எம்.ஜி.ஆருக்கு புதுமைப்பித்தன் உட்பட மூன்று படங்களுக்குப் பின்னணி பாடியிருக்கிறார். பிறகு அடுத்தடுத்துப் பத்து படங்களுக்கு மேல் இசையமைப்பாளராகிவிட்டார். அதில் ஒரு படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கியரத்தக்கண்ணீர்’. அப்போது ஒரு பாடலுக்கு இசையமைக்க ஜெயராமன் வாங்கிய தொகை 750 ரூபாய். ரத்தக்கண்ணீர் படத்திற்கான இசை, பாடல்கள் அனைத்திற்கும் சேர்த்து இவர் வாங்கிய தொகை பதினோராயிரம் ரூபாய்தான். “அதிலேகுற்றம் புரிந்தவன்னு ஒரு பாட்டு வரும். பாட்டு இடையிலே எம்.ஆர். ராதாவோட குரல் இடையிடையே வசனமா வரும். ஆரம்பத்தில் இப்படிச் செய்யலாமான்னு நினைச்சப்போ பலர் மலைச்சாங்க. அந்தப் பாடல் நல்ல ஹிட்டாயிடுச்சு. இப்போ பலரும் அந்த மாதிரி நிறையப் பண்றாங்க.”


1953
ல் கன்னடத்தில்பேதரக் கண்ணப்பாபடத்தில் கன்னட சூப்பர் ஸ்டாரான ராஜ்குமாருக்கு ஜெயராமன் பின்னணி பாட முதல் படமே அவார்டு வாங்கியிருக்கிறது. சில மாற்றங்களுக்குப் பிறகு சிதம்பரம் ஜெயராமன் கொஞ்சம் கொஞ்சமாக மறக்கடிக்கப் பட்டுவிட்டார். வெளிக்கச்சேரிகள் அதிகம் போக ஆரம்பித்திருக்கிறார். சிதம்பரம் கோவில் விழாவின் போது தொடர்ந்து பதினொன்றரை மணி நேம் பாடியிருக்கிறார். ராத்திரி கேட்க வருகிறவர்கள் விடியும்போது கேட்டுக் கொண்டே பல் துலக்கிக் கொண்டிருப்பார்களாம். அதன் பிறகு இவர் அதிகம் பாடியது நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி கொலுவின் போது. பாடியது எட்டே முக்கால் மணி நேரம்.


எழுபதை நெருங்குகிற வயதில் சற்றுக் குரல் நடுங்கப் பேசுகிறார், உடம்பு தளர்ந்து போயிருக்கிறது. இடையில் சங்கீத நாடக அகாடமி அவார்டு கிடைத்திருக்கிறது. ஏழு வருஷங்களாக தமிழகத்தில் உள்ள இசைக்கல்லூரிகளுக்கு இவர் தான் கௌரவ ஆலோசகர். இதற்கெல்லாம் காரணமான எம்.ஜி.ஆரை நினைவுகூரும்போது நன்றியுடன் உணர்ச்சிவயப்படுகிறார்.


பள்ளிக்கூடம் கறுப்பா..சிவப்பான்னு கூடத் தெரியாது. படிச்சது சங்கீதம் தான். அது தான் சோறு போடுது. வாழ வைக்குது. இப்போ உங்களைக் கூட அது தானே இப்பவும் கூட்டிக்கிட்டு வந்திருக்கு. அப்போ பாட்டுக்கிடையில் அதிகம் இடைவெளியாக சங்கீதம் இருக்காது. சாகித்யம் கருத்துக்குத் தான் முக்கியத்துவம். இப்போது கருவி இசைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இப்போ சிலேடைப் பாடல்கள் எல்லாம் பாடுறாங்க. இப்படிப்பட்ட பாடல்களை எல்லாம் என்னால் பாட முடியாது. கலையை நாம் கௌரவப்படுத்தணும். அப்பத்தான் அது நம்மையும் கௌரவப்படுத்தும்”- கரகரத்த தொண்டையில் முதிர்ச்சியாகச் சொல்கிறார் கலைஞர் மு. கருணாநிதியின் மைத்துனரும், சம்பந்தியுமான ஜெயராமன்.


கேட்டுக் கொண்டதற்கு இணங்கவீணைக் கொடியுடைய வேந்தனேஎன்று துவங்கும் பாடலை ஆலாபனையுடன் சில நிமிடங்கள் பாடிக்காட்டும்போது வயதாகியும் கிறங்கடிக்கிறது அந்தக் குரல்.


கடைசியா பாடின பாட்டு ஏதாவது?


1979
ல்தர்மங்கள் சிரிக்கின்றனபடம். அதில் நடித்த எம்.ஆர்.ராதா வீட்டுக்கு வந்து அன்புடன்நீ பாடியே ஆகணும்என்று சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் தனக்குப் பின்னணி பாட வைத்திருக்கிறார். அந்தப் படம் வெளிவரவே இல்லை. அந்தப் பாடல் மட்டும் வெளிவந்துவிட்டது.


‘’
போடா.. உலகத்தைப் புரிஞ்சுக்க
புத்தியிருந்தாப் பொழைச்சுக்க..”


கடைசியாகப் பாடின திரைப்படப் பாடல் என்றாலும் யதார்த்தத்தை எவ்வளவு அழுத்தமாகச் சொல்கிற பாடல்!