Saturday, May 11, 2024

கார்களில் நாலாவதா ஒரு பெடலை ஏன் குடுக்கறாங்க தெரியுமா?

கார்களில் நாலாவதா ஒரு பெடலை ஏன் குடுக்கறாங்க தெரியுமா? 

ரொம்ப வருஷமா கார் ஓட்றவங்களுக்கே இந்த விஷயம் தெரியாது! பொதுவாக கார்களில் 3 பெடல்கள் மட்டும்தான் இருக்கும் என்று பலரும் நினைத்து கொண்டுள்ளனர். அவை ஆக்ஸலரேட்டர், பிரேக் மற்றும் க்ளட்ச் பெடல்கள் ஆகும். ஆனால் ஒரு சில கார்களில் நான்காவதாக ஒரு பெடல் இருக்கும். அது 'டெட் பெடல்' (Dead Pedal) ஆகும். பொதுவாக இந்த பெடல், கார்களின் இடது பக்கம் (Left Side) அமைந்திருக்கும். க்ளட்ச் பெடலுக்கு அடுத்தபடியாக 'டெட் பெடல்' வழங்கப்பட்டிருக்கும். கார்களில் இந்த 'டெட் பெடல்' எதற்காக வழங்கப்படுகிறது? என்பது பலருக்கும் தெரிவதில்லை. இன்னும் சொல்லப்போனால், இப்படி ஒரு பெடல் இருப்பதே நிறைய பேருக்கு தெரியாது. அவர்களுக்காகவே இந்த செய்தி. 'டெட் பெடல்' நன்மைகளை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்வோம். நீங்கள் தேசிய நெடுஞ்சாலை ஒன்றில் பயணம் செய்து கொண்டுள்ளீர்கள் என்று வைத்து கொள்வோம். அப்போது போக்குவரத்து நெரிசல் இல்லை.

 

அப்படிப்பட்ட சமயங்களில் டிரைவரின் இடது காலுக்கு பெரிதாக வேலை இருக்காது. எனவே இடது காலை தேவையில்லாமல் க்ளட்ச் பெடலின் மீது வைத்து கொண்டு பயணம் செய்ய நேரிடும். தேவையில்லாமல் காலை வைத்து கொண்டிருந்தால், க்ளட்ச் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இங்கேதான் 'டெட் பெடல்' ஹீரோவாக மாறுகிறது. இது போன்ற சமயங்களில் உங்கள் இடது காலை, 'டெட் பெடல்' மீது வைத்து கொள்ளலாம். எனவே இதனை 'ஃபுட் ரெஸ்ட்' என்றும் கூட கூறலாம். இடது காலை 'டெட் பெடல்' மீது வைத்து கொள்வதால், தேவையில்லாமல் க்ளட்ச் பெடலை மிதிப்பதை தவிர்க்க முடியும். இது உங்கள் காரின் க்ளட்சை பாதுகாக்கும்.

 

அத்துடன் உங்கள் பயணம் 'ரிலாக்ஸ்' ஆக இருப்பதற்கும் 'டெட் பெடல்' உதவி செய்யும். அதாவது காலை 'டெட் பெடல்' மீது வைத்து கொள்வதால், உங்களால் சௌகரியமாக காரை ஓட்ட முடியும். 'டெட் பெடல்' இல்லாவிட்டால் டிரைவர் விரைவிலேயே சோர்வடைந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த சோர்வு சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கலாம். எனவே ஒரு வகையில், இது முக்கியமான பாதுகாப்பு வசதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 'டெட் பெடல்' பயன்படுத்துவதன் மூலமாக, டிரைவருக்கு ரிலாக்ஸான டிரைவிங் பொஷிஷன் கிடைக்கும். இது கால்களில் தேவையில்லாமல் வழி ஏற்படுவதையும் தடுக்கும். இதன் மூலம் டிரைவர் தனது முழு கவனத்தையும் சாலையில் செலுத்தலாம். டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஒட்டுமொத்தத்தில் க்ளட்ச் பாதுகாப்பு, டிரைவருக்கான சௌகரியம் மற்றும் பாதுகாப்பு என பல்வேறு விதங்களிலும் 'டெட் பெடல்' உதவி செய்கிறது. குறிப்பாக க்ளட்ச் பயன்பாடு அதிகளவில் தேவைப்படாத தேசிய நெடுஞ்சாலை பயணங்களில் 'டெட் பெடல்' டிரைவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்தான். கார்களில் வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு அம்சத்திற்கு பின்னாலும், நிச்சயமாக இது போன்ற ஏதாவது காரணங்கள் இருக்கும். காரணம் இல்லாமல் கார் உற்பத்தி நிறுவனங்கள் எதையும் வழங்குவதில்லை. ஆனால் கார் ஓட்ட கூடிய பலருக்கும், கார்களில் உள்ள வசதிகளை பற்றி முழுமையாக தெரிவதில்லை என்பதுதான் உண்மை.

 

No comments:

Post a Comment