Wednesday, January 17, 2024

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?

 

வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?

"வெங்காயம் சுக்கானால் வெந்தயத்தால் ஆவதென்ன?

இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை? - மங்காத

சீரகத்தைத் தந்தீரேல் தேடேன் பெருங்காயம்

ஏரகத்துச் செட்டியா ரே"

இது தனிப்பாடல். புலவர் நம்மைப் பலசரக்குக் கடைக்கே இழுத்துச் சென்றுவிடுகின்றார். வெங்காயம், சுக்கு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் - இத்தனை சரக்குகளையும் இந்தப் பாடலிலே - புலவர் படைத்த கடையிலே காண்கிறோம். இந்தக் கடைச் சரக்குச் சொற்களெல்லாம் மேலெழுந்த வாரியாக இன்பந் தந்து, தம்முள் பதுக்கி வைத்திருக்கும் வேறு பொருள்களையும் வெளிப்படுத்தி நின்று அழகு செய்கின்றன. திருவேரகத்தில் எழுந்தருளியிருக்கும் செட்டியாரே! விரும்பத்தக்க இந்தக் காயம் (உடம்பு) சுக்குப் போலக் காய்ந்துவிட்டால் (இரத்தம் சுண்டிவிட்டால்) வெந்த அயத்தால் (அயபஸ்பம் என்ற மருந்தால்) ஆவதென்ன? அதனால் இந்தச் சரக்கை யார் சுமப்பார்கள்? நீர் எனக்குச் சிறந்த அகத்தை (இன்ப வீட்டை)த் தந்தால் இந்தப் பெரிய காயத்தை (உடம்பை)த் தேட மாட்டேன் என்று இவ் வகையில் பொருளுணர்த்தி இன்பந் தருகின்றன இந்தப் பலசரக்குச் சொற்கள்.