சிவகாமி பக்தி
அந்த பெண்மணி பிற்காலத்தில், 'சிவகாமி அம்மையார்' எனப் பெயர் பெற்றார். இவர் திருப்பணி செய்த திருமலை முருகன் கோயில் செங்கோட்டைக்கு அருகில் உள்ளது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற இத்தல முருகனைத் தன் மகனாக கருதிய அம்மையார் வசந்த மண்டபம் ஒன்றைக் கட்டினார். இதற்காக அவர் சந்தித்த சவால்கள் கணக்கில் அடங்காது.
அம்மையார் பணியை மேற்பார்வை செய்ய, கல் துாண்கள், உத்தரங்களை பனை நாரால் ஆன கயிற்றால் கட்டி பணியாளர்கள் மலை மீதிருந்து இழுப்பர். கழுத்தில் ருத்திராட்சம், நெற்றியில் விபூதி, குங்குமம், ஒரு கையில் பெரிய வேல், மற்றொரு கையில் கமண்டலம், காவி உடையுடன் அம்மையார் வரும் போது, காண்பவர் எல்லாம் கைகூப்பி வணங்குவர்.
மேலே இழுக்கப்படும் கல்துாண் அல்லது உத்தரமோ உத்தரங்களோ, கயிறு அறுபட்டு 'கடகட' என்ற ஓசையுடன் உருண்டு விழும். அதைக் கண்ட அனைவரும் பதறி ஓட அம்மையாரோ, வேல் தாங்கியபடி,'முருகா!' என கூவிக் கொண்டு, தலையால் அதை தடுத்து நிறுத்துவார். நானுாறு அடி உயரம் கொண்ட இந்த மலையில் இருந்து ஒரு கல் கூட எடுக்காமல், உயிரைப் பணயம் வைத்து அம்மையார் செய்த சாதனையை மக்கள் இன்றும் நன்றியுடன் போற்றுகின்றனர்.
கோயில் பணிக்காக பனை நார் தேவைப்பட்டது. திருச்செந்துாரில் பனைநார் கிடைக்கும் என்பதை அறிந்த அம்மையார் அங்கு சென்றார். அப்போது திருச்செந்துாரில் மாசித் திருவிழா நடந்தது.
செந்திலாண்டவர் தேரில் வலம் வந்து கொண்டிருந்தார். சுவாமியை கண்டதும் கண்ணீர் பெருக்கியபடி தன்னை மறந்து நின்றார்.
அம்மையார் நிற்பதை இடையூறாக எண்ணிய கோயில் பணியாளர் ஒருவர், கீழே தள்ளியதோடு, அவமரியாதையுடன் பேசினார். எழுந்த அம்மையார்,''முருகா! என்ன சோதனை இது? தேரில் வலம் வரும் உன்னை தரிசிப்பதைக் கூட தடுக்கிறார்களே.... இது நியாயமா'' என்று கதறினார். யாரும் அதை பொருட்படுத்தவில்லை.
அடியவர் படும்துயரை ஆறுமுகப் பெருமான் பொறுத்துக் கொள்வாரா.... வெகுண்டார்.
விளைவு... ஓடிய தேர் அப்படியே அசைவற்று நின்றது. கூடியிருந்தவர்கள் பலமுறை முயற்சித்தும் தேர் அசையவில்லை.
அப்போது, அங்கிருந்த அர்ச்சகர் பரவசநிலை அடைந்தார். ஆவேசமுடன், ''என் பரம பக்தையான சிவகாமி தேருக்குப் பின்புறம் மனம் கலங்கி நிற்கிறார். அவரது கைகளால் வடம் பிடித்து இழுத்தால் தேர் ஓடும்'' என்றார்.
நிர்வாக அதிகாரி உட்பட அனைவரும் அம்மையாரிடம் ஓடினர். கண்ணீர் மல்க, நின்ற அம்மையாரிடம் நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டதோடு, வடம் பிடிக்கவும் வேண்டினர்.
அம்மையார், ''கடலோரம் நிற்கும் கந்தா! இந்த அடியவள் மீது உனக்கு இவ்வளவு கருணையா?''என்று சொல்லி வடம் தொட்டு தேர் இழுக்கலானார். அழகுத்தேர் அசைந்தாடி நகரத் தொடங்கியது. பக்தர்களும், 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா'' எனக் கோஷமிட்டனர்.
அதன் பின் கோயில் நிர்வாகத்தினர்,''அம்மா! திருமலை முருகன் கோயிலில் நீங்கள் செய்யும் திருப்பணி குறித்து கேள்விப் பட்டிருக்கிறோம்! இந்த உலகமே உங்களின் பெருமையை அறிய வேண்டும் என்பதற்காகவே, வள்ளி மணாளன் இந்த திருவிளையாடலை நிகழ்த்தியிருக்கிறார். உங்களுக்குத் தேவையான உதவியைச் செய்வது எங்கள் பொறுப்பு. தேவையான பனைநார் திருமலைக்கு அனுப்புகிறோம்'' என வாக்களித்தனர்.
திட்டமிட்டபடி சிவகாமி அம்மையார் திருமலை முருகன் கோயிலில் வசந்தமண்டபம் கட்டி முடித்தார்.
1854 ஜூன் 9 (வைகாசி 28) வெள்ளிக் கிழமையன்று சிவகாமி அம்மையார் சித்தியடைந்தார். பெண் சித்தராக வாழ்ந்த அம்மையாரின் சமாதி, திருமலை முருகன் கோயிலுக்குக் கிழக்காக வண்டாடும் பொட்டல் என்னும் இடத்தில் உள்ளது.
திருமலைக்கோவில் தென்காசி இல் இருந்து 10 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
No comments:
Post a Comment