“இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப் பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்சமுடைய, அன்னியர்களை சந்திக்க விரும்பாத, அதுவுமில்லாமல், மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான்.”
ஜெயலலிதா ஜெயராம் 1999ஆம் ஆண்டு தொலைக்காட்சி நேர்காணலொன்றில் மேற்கண்டவாறு பதிலளிக்கின்றார். இந்தப் பதிலைக் கூறும் போது தமிழக அரசியலில் மாத்திரமல்ல, இந்திய அரசியலிலேயே அவர் அண்ணாந்து பார்க்கப்படும் ஒருவராக மாறியிருந்தார். யாரும் இலகுவில் அணுக முடியாத, யாராலும் வளைக்க முடியாத, எந்த சக்தியாலும் அகற்ற முடியாது இடத்தினை அவர் அடைந்து விட்டிருந்தார்.
எம்.ஜி.ஆர் என்கிற பெரும் ஆளுமையின் மறைவுக்குப் பின்னரான பெரிய சதிராட்டத்தில், அ.தி.மு.க. என்கிற பெரிய ஆலாமரத்தை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து முதல்வராகி, பெரும் ஊழல் குற்றச்சாட்டுக்களையும் சந்தித்த பின்னரும் அசைக்க முடியாத ஆளுமையாக ஜெயலலிதா வீச்சம் பெற்றிருந்த தருணம்; Simi Garewal எடுத்த நேர்காணல் அது. அந்த நேர்காணல் முழுவதும் வெட்கப்படும், புன்னகைக்கும், தவிர்க்க முடியாமல் வாய்விட்டுச் சிரிக்கும் ஜெயலலிதாவைக் காண முடியும்.
ஒரு கட்டம் வரையில் ஜெயலலிதா என்கிற தனி ஆளுமை தொடர்பில் எனக்கு மிகப்பெரிய எரிச்சலும் ஏமாற்றமும் இருந்தது. அது, என்னுடைய பதின்மங்களில் உச்சம் பெற்றிருந்தது. அவரின் தெனாவட்டான நடவடிக்கைகளை கண்டு எழுந்த எரிச்சலாக இருக்கலாம். ஆனால், அந்தத் தெனாவட்டினை ஒரு கட்டம் தாண்டி ரசிக்க ஆரம்பித்த போது நிச்சயமாக பல விடயங்களில் முன்னுதாரணமாகக் கொள்ளக் கூடிய ஆளுமையாக அவர் இருந்தார் என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டியிருந்தது. இன்னமும் “போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்” என்கிற ஜெயலலிதாவின் கூற்று தொடர்பில் பலத்த ஏமாற்றமும் வருத்தமும் உண்டு. அதை என்னால் மன்னிக்கவே முடியாது.
ஆனாலும், ஜெயலலிதாவை நான், அரசியலின் படிப்பினையாகவும் நம்பிக்கையாகவும் கொள்கிறேன். அந்த நம்பிக்கை கொள்கை கோட்பாடுகள் சார்பிலானது அல்ல. மாறாக, சாமானிய மக்களிடம் சென்று சேர்ந்த விதம் தொடர்பிலானது. எனக்குத் தெரிந்து தமிழக அரசியலில் எம்.ஜி.ஆருக்குப் பின்னர் சாமானிய மக்களிடம் அதிகமாக சென்று சேர்ந்த தலைவர் ஜெயலலிதா மட்டுமே. அந்த இடத்தினை அண்மைய நாட்களில் யாராலும் அடையவே முடியாது. கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் இறுதிக் காலங்களில் எம்.ஜி.ஆரையே தாண்டிய ஆளுமையாக அவர் வளர்ந்து நின்றார் என்றும் நம்புகிறேன். அது, அவ்வளவு ஊழல் அடாவடிக் குற்றச்சாட்டுக்களையும் சந்தித்த பின்னரும் எழுந்து வந்தது என்பது ஆச்சரியப்பட வைப்பது.
ஒரு கட்டத்தில் ஜெயலலிதா ஜெயராம் சொல்வார், “….சிறுவயதில் பரிகாசங்களை கேட்டு, உடைந்து போய் அழுதது உண்டு. ஆனால் இப்போது அப்படி இல்லை. என்னை பரிகசிப்பவர்களுக்கு திருப்பி கொடுக்க கற்றிருக்கிறேன். சில நேரங்களில், அவர்கள் பரிகசித்ததற்கு அதிகமாகவே திருப்பி அடிக்கிறேன்…..” என்கிறார்.
ஜெயலலிதா ஜெயராமின் ஆளுமையின் அத்திவாரமாக உருமாறிய விடயம் ‘திருப்பி அடித்தல்’ என்கிற குணமே. ஏனெனில், பல நேரங்களில் அவர் தயவு தாட்சண்யங்கள் பற்றியெல்லாம் யோசிப்பதில்லை. வேண்டப்பட்டவர்கள் கூட விரோதியாகிவிட்டால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டார்கள். பழிவாங்கப்பட்டார்கள்.
ஊடகங்கள் என்ன சொல்லுமென்று ஜெயலலிதா சிந்தித்தில்லை. தான் நினைத்தது நடக்க வேண்டும் என்பதற்காக, அவர் எதிரிகளை பந்தாடிய விதம்தான், எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் அவரின் முன்னால் வளைந்து நிற்க வைத்தது. அவர், எதிரிகளுக்கு மிகவும் ஜீரணிக்கவே முடியாத எதிராளி. அதுதான், அவரின் சர்வாதிகார மனநிலையாகவும் நீட்சி பெற்றது; கட்சியை கண் அசைவில் வழிநடத்தவும், அமைச்சரவையை வளைந்து கூழைக் கும்பிடு போடவும் வைத்தது.
ஜெயலலிதா ஜெயராமை நோக்கி கடுமையான விமர்சனங்கள் உண்டு. அந்த விமர்சனங்கள் நியாயமாவையும் கூட. ஆனால், அந்த விமர்சனங்களைத் தாண்டி, அண்மைய நாட்களில் மிகவும் பிரமாண்டமாக வளர்ந்து நின்ற பெண் அவர். பலருக்கு நம்பிக்கையளித்த பெண்.
அவரின் மறைவுச் செய்தியைக் கேட்டதும் மனதில் தோன்றியது, ‘ஓநாய்கள் உலவும் காட்டில் புள்ளி மானாக நுழைந்து கர்ஜிக்கும் சிங்கமாக தன்னை உருமாற்றிய ஆளுமை’ என்று. முதல் தடவையாக, அவரை ‘அம்மா’ என்று விழிக்கவும் வைத்தது அவரின் மறைவு கொடுத்த அதிர்வு.
No comments:
Post a Comment