Tuesday, January 3, 2017

கலைஞர்





       தமிழக முன்னாள் முதல்வர் உடல்நலம் சரி இல்லை.

         இது அவரது குடும்பத்தாருக்கும், அவரை உயிரினும் மேலாக நேசிக்கிற உடன்பிறப்புகளுக்கும், கட்சிக்காரர்களுக்கும் நிச்சயம் வேதனை தருகின்ற விஷயம் என்பதில் சந்தேகமே இல்லை.

        எருது காயம்பட்டு கிடக்கும் போது புண்ணை கொத்தி இரத்தம் சொட்ட வைப்பது காக்கையின் வேலை என்பது போல சிலர் சமூக வலைதளங்களில் கேலியும் கிண்டலுமாக எழுதிவருகிறார்கள். அவற்றை படிக்கும் போது பண்பில் சிறந்த தமிழ்நாடு இப்போது தடமாறி போய்கொண்டிருக்கிறதோ? என்று எண்ணத் தோன்றுகிறது.

          ஒருவருடைய வேதனையை நையாண்டி செய்வது குரூரத்திலும் கொடூரமானது.

        கலைஞர் அவர்களின் கொள்கைகளை பிடிக்காதவர்கள் இருக்கலாம் அவரது அரசியல் செயல்பாட்டின்மீது விமர்சனம் கொள்பவர்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை எல்லாம் அரசியலாக பார்க்கவேண்டுமே தவிர மனிதநேயம் இல்லாமல் பார்க்க கூடாது.

           அவரை முன்னாள் முதல்வர் என்று கருதவேண்டியது இல்லை. திமுக-வின் தலைவர் என்று பார்க்கவேண்டியது இல்லை, லட்சக்கணக்கான தொண்டர்களின் இதயம் கவர்ந்தவர் என்பதை கருத்தில் கொள்ளவேண்டியது இல்லை, அவர் ஒரு முதியவர், தள்ளாத வயதில் இருப்பவர், நாடி நரம்பு அனைத்தும் தளர்ந்து போனாலும் அறிவாற்றலில் தளராத சிம்மம் போன்று இருப்பவர், இன்றும் உழைப்பதற்கு சளைக்காதவர், வாழ்வின் அடிமட்டத்திலிருந்து மேல்நிலைக்கு வர எப்படியெல்லாம் எதிர்நீச்சல் போடவேண்டுமோ அப்படியெல்லாம் போட்டு கரைசேர்ந்தவர் எந்த வகையில் அவர் மதிக்கப்பட வேண்டியவர்.

           நாம் விரும்புகிறோமோ இல்லையோ கடந்த ஐம்பது வருடமாக தமிழ்நாட்டில் கலைஞர் அவர்களை எதிர்த்து அரசியல் நடத்த வேண்டும் அல்லது ஆதரித்து அரசியல் நடத்த வேண்டும் என்ற வகையில் ஐம்பது வருட தமிழ்நாட்டு சரித்திரத்தில் மையப்புள்ளியாக இருப்பவர், அவருடைய ஆளுமையை அவ்வளவு சீக்கிரம் யாரும் புறக்கணித்துவிட இயலாது.

           இதுமட்டுமல்ல அவர் சிறந்த இலக்கியவாதி, பழந்தமிழ் இலக்கியங்களை எளிய நடைபடுத்தி இளைஞர்கள் மத்தியில் கொண்டுவந்த புதுமைவாதி, குறளோவியம் என்ற அழகிய நூலில் வள்ளுவனின் வாய்மொழியை தனது துள்ளுதமிழ் நடையழகால் மெருகேற்றியவர், அவருடைய அரசியல் திட்டங்களை, தத்துவங்களை புறக்கணிக்கலாம், விமர்சனம் செய்யலாம், அது அவரவர் விருப்பம் ஆனால், அவர் தமிழ் இலக்கியத்திற்கு ஆற்றியிருக்கும் பணியை யாரும் மறுத்துவிட முடியாது மறந்துவிடவும் இயலாது


         அப்படிப்பட்ட கலைஞர் அவர்களை அவர் கண்டிருக்கும் நோயை கிண்டல் செய்வதும், நையாண்டி பேசுவதும், மனிதநேய மிக்க மனிதர்களின் செயலாக கருத இயலாது. எதற்கும் இலக்கணம் வேண்டும், எல்லையும் வேண்டும், எல்லை மீறி செய்கின்ற விமர்சனங்கள் அருவருக்க தக்கதாக இருக்குமே தவிர ரசிக்க கூடியதாக இருக்காது.

        தற்போதைய தமிழ்நாட்டு தமிழர்களும் பண்பாட்டில் குறைந்தவர்கள் அல்ல, விரக்தியின் காரணமாக தனது விமர்சனத்தின் போக்கு இன்னதென்று அறியாமல் செய்பவர்களாகவே கருதப்பட வேண்டும். இனிமேலும் யாருடைய துன்பத்தையும் கிண்டல் செய்யாத மனோபாவத்தை மக்கள் பெறவேண்டும். கலைஞர் அவர்களும் பூரண குணமடைய வேண்டும் இது இறைவனிடம் நாம் வைக்கும் பிராத்தனை.

No comments:

Post a Comment