கோலம்............ ஒரு வர்ண ஜாலம்.
கோலங்கள் நகரங்களில் மறைந்துக் கொண்டிருக்கும் ஒரு கலையாகி விட்டதென்றே நினைக்கிறேன். மிக அதி காலையில் எழுந்து வீட்டு வாசலில் ,பசுஞ்சாணி நீரால் வாசல் தெளித்து அரிசி மாவினால் புள்ளி வைத்து கோலம் போடுவதை இக்கால நவநாகரீகப் பெண்கள் பலர் அறிய மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். வீட்டு வாசலைக் குனிந்து பார்க்கவே நேரமில்லை. கழுத்தை நெறிக்கும் வேலை. அது மட்டுமா? வெளியே நடந்து போகும் போதும் , ICU விலிருந்து தப்பித்து வந்தவர்கள் போல் காதுகளிளிருந்தும் கைக்கும் ஒயர் ஒயராக ஏதோ தொங்கிக் கொண்டிருக்க (ஆண்கள், பெண்கள் இருவரும் இதே மாதிரி) எங்கேயோ பார்த்து பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.
இதில் கோலம் போடுவதாவது.. வீடுகள் எல்லாம் அடுக்கு மாடிக் குடியிருப்புகளானதால் கோலத்திற்கு தான் கேடு. சரி, தனி வீடுகளிலாவது கோலம் இருக்கிறதா என்றால் அங்கும் அதனுடைய முக்கியத்துவத்தை இழந்து வெகு நாட்களாகி விட்டன.
அங்கெல்லாம் கோலம் இருக்கிறது ஆனால் ஒரு சில வீடுகளைத் தவிர பெரும்பாலான வீடுகளில் பெயிண்ட் அல்லது ஸ்டிக்கர் கோலம் தான் நம்மைப் பார்த்து சிரிக்கும். ஆனால், மறைந்த கோலத்தில் தான் எத்தனை எத்தனை விஷயங்கள் அடக்கம்.. மார்கழி மாதத்தில் முன்பெல்லாம் பெரிய பெரிய கோலங்கள் வீட்டு வாசலை அடைத்திருக்கும். நீ முந்தி, நான் முந்தி , உன் கோலம் பெரிதா , என் கோலம் பெரிதா என்று விட்டிற்கு வீடு , அறிவிக்கப்படாத கோலப்போட்டியே நடக்கும்.
கோலம் போடும் பெண்களுக்குத் துணையாக அந்தப் பெண்ணின் கணவரோ, சகோதரரோ அந்த அதிகாலை நேரத்தில் தலையில் மப்ளருடன் அவரும் தூய்மையான ozone காற்றை சுவாசிப்பார். கணவர் , மனைவி கோலம் போடும் அழகையும் , கோலத்தின் அழகையும் சேர்ந்தே ரசிக்கலாம்.
புத்துணர்ச்சி கிடைக்கும். கோலத்தைப் போட்டுவிட்டு கையில் கோலப்பொடி டப்பியுடன் அப்படி நின்று, இப்படி நின்று தான் போட்ட கோலத்தை பெருமிதத்துடன் பார்க்கும் போதே தன்னம்பிக்கை அவளுக்குள் ஊற்றெடுப்பதை கண் கூடாக காணலாம்.
கோலம் போடுவதும் ஒரு யோகப் பயிற்சி என்று தான் கூறுகிரார்கள் .
சரியான இடைவெளி விட்டு , புள்ளி வைத்து ,அதை லாவகமாக வளைத்து , வளைத்து, இழைகள் இடும்போது அந்தப் பெண்மணி தானும் அல்லவா குனிந்து, வளைந்து, கைகளை நீட்டி , மடக்கி, கால்களை அங்கு மிங்கும் கோலத்தின் மேல் படாமல் நேர்த்தியாக நகரும் போது பார்த்தால் , நமக்கு ஒரு யோகா செண்டர் நினைவிற்கு வருவதைத் தடுக்க முடியாது. குழந்தை பிறந்து காப்பிடும் வைபவத்தில் ஆரம்பித்து நூற்றாண்டு விழா வரை ,வாழ்வின் ஒவ்வொரு மகிழ்ச்சியான விழாக்களை அமர்க்களமாய் நாம் கொண்டாடுவதை, வெளியுலகிற்கு அறிவிக்கும் அறிவிப்புப் பலகை என்றே கொள்ளலாம்.
கோவில் திருவிழாக்களிலோ, கல்யாண வீடுகளிலோ , தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலோ கோலத்தின் முக்கியத்துவத்தை சொல்லவே வேண்டியதில்லை.
அரிசி மாவினால் கோலமிடும் போது எறும்பிற்கும் உணவளித்து
food pyramid ஐ நம்மை அறியாமலே காப்பாற்ற முனைகிறோம். அதை சுற்றி இடும் செம்மண், தீய சக்திகள் வீட்டிற்குள் வர விடாமல் தடுக்கும் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். கோலத்தைப் பற்றியெல்லாம் ஆய்வுகள் மேற்கொள்ளப் படுவது சற்றே நம் புருவத்தை உயர்த்துகின்றன.
கோலம் போடும் பெண்கள் கணிதப் பாடத்தில் சிறந்து விளங்குவதற்கான சாத்தியக் கூறுகள் ஏராளம் என்கிறார்,.ஒருகணிதப் பேராசிரியை.
கோலப்பொடியை விரல்களிற்கு இடையே எடுத்து இடும் போது மூளைக்கு
செல்லும் நரம்புகள் தூண்டப்படுவதால் ,மண வளர்ச்சிக் குன்றிய குழந்தைகளுக்கு ஒரு தெரபியாகக் கொடுக்கிறார்கள் என்று தகவல்.
நம் கோலத்தின் அருமை புரிந்த அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் கூட இதில் ஆர்வம் காட்டுவதாக பிரெஞ்சு ஆய்வாளர் ஒருவர் கூறுகிறார். அதற்காகவே இந்த ஆய்வாளர் வருடா வருடம் மார்கழி மாதத்தில் சென்னை மைலாப்பூர் வந்து தங்கி விடியோவும் மைலாப்பூர் மாமிகளை பேட்டியும் , எடுத்து செல்வதாக பத்திரிகை செய்தி கூறுகிறது.
இத்தனை இருந்து என்ன..........
நம் மாறி வரும் வாழ்க்கை முறை, அடுக்கு மாடிக் கட்டடங்களின்
ஆக்கிரமிப்பு, போன்ற காரணங்களால் கோலமிடும் கலை நம்மிடையே மெல்ல மெல்ல அழிவது தெரியாமல் அழிந்து கொண்டிருக்கிறது.
No comments:
Post a Comment