Tuesday, June 5, 2018

திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் கோவில்


திருப்பைஞ்ஞீலி  ஞீலிவனேஸ்வரர் கோவில்


சிவஸ்தலம் பெயர்
திருப்பைஞ்ஞீலி
இறைவன் பெயர்
ஞீலிவனேஸ்வரர், நீலகண்டேஸ்வரர்
இறைவி பெயர்
விசாலாட்சி


எப்படிப் போவது
இத்தலம் திருச்சிக்கு அருகில் சுமார் 12 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து மண்ணச்சநல்லூர் வழியாக திருப்பைஞ்ஞீலி செல்ல நகரப் பேருந்து வசதிகள் உண்டு. 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருவெள்ளரை என்ற திவ்யதேசம் ஸ்தலம் இங்கிருந்து சுமார் 4 கி.மி. தொலைவில் இருக்கிறது.
ஆலய முகவரி

அருள்மிகு ஞீலிவனேஸ்வரர் திருக்கோவில்
திருப்பைஞ்ஞீலி
திருப்பைஞ்ஞீலி அஞ்சல்
திருச்சி வட்டம்
திருச்சி மாவட்டம்
PIN - 621005

இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


           கோவில் அமைப்பு: ஞீலி என்பது ஒருவகை கல்வாழை. பைஞ்ஞீலி என்பது பசுமையான வாழையைக் குறிக்கும். பசுமையான ஞீலி வாழையை தலவிருட்சமாக பெற்றதால் திருப்பைஞ்ஞிலி என்று இத்தலம் பெயர் பெற்றது. ஞீலிவனேஸ்வரர் ஆலயம் முதலில் ஒரு முற்றுப்பெறாத மொட்டை கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. இந்த முதல் கோபுரத்தின் வாயில் வழியாக உள்ளே நுழைந்தவுடன் ஒரு 4 கால் மண்டபமும் அதன் பின்புறம் 3 நிலைகளை உடைய இராவணன் வாயில் என்று கூறப்படும் இரண்டாவது நுழைவு கோபுரமும் உள்ளது. இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் முன் இடதுபுறம் சோற்றுடை ஈஸ்வரர் சந்நிதி காணப்படுகிறது. திருநாவுக்கரசருக்கு அந்தணர் உருவில் வந்து உணவு படைத்து திருப்பைஞ்ஞிலி தலம் வரை கூட்டிவந்து சிவபெருமான் மறைந்து போன இடம் இதுவென்றும், பின்பு திருநாவுக்கரசருக்கு லிங்க உருவில் இவ்விடத்தில் காட்சி கொடுத்தருளினார் என்றும் தலபுராணம் கூறுகிறது. அந்த லிங்க உருவே சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில் இச்சந்நிதியில் அருள் பாலிக்கிறார். சித்திரை மாதம் அவிட்டம் நட்சத்திர நாளில் இச்சந்நிதியில் திருநாவுக்கரசருக்கு சோறு படைத்த விழா நடைபெறுகிறது.
எமன் சந்நிதி: இரண்டாவது கோபுர வாயில் வழியாக உள்ளே செல்லாமல் வெளி சுற்றுப் பிரகாரத்தில் வலம் வந்தால் எமன் சந்நிதியைக் காணலாம். இச்சந்நிதி ஒரு குடைவரைக் கோவிலாகும். பூமிக்கு அடியில் சற்று பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன் அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். இந்த சந்நிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக எமனை காலால் உதைத்து சம்ஹாரம் செய்தார் சிவபெருமான். இதனால் உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போக பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமிதேவி சிவபெருமானிடம் முறையிட்டாள்.மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு முறையிட்டனர். சிவபெருமான் அதற்கிணங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்து தர்மம் தவறாமல் நடந்து கொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியை செய்து வரும்படி அருள் செய்தார்.
சனீஸ்வரனின் அதிபதி எமன் என்பதாலும், எமனுக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளதாலும் திருப்பைஞ்ஞிலி ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனி சந்நிதி இல்லை. இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக சுவாமி சந்நிதி செல்ல ஒன்பது படிக்கட்டுகள் இறங்கி செல்ல வேண்டும் இந்த படிகள் இராவணின் சபையில் ஒன்பது நவக்கிரங்களும் அடிமைகளாக இருந்ததை குறிப்பிடுவதாக சொல்கிறர்கள். சுவாமி சந்நிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே ஒன்பது குழிகள் உள்ளன. அதில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்கள் ஆக எண்ணி வணங்குகின்றனர்.

        இராவணன் வாயில் எனப்படும் இரண்டாவது கோபுரத்தின் வழியாக உள்ளே சென்று திருக்கார்த்திகை வாயிலில் நுழைந்து மூலவர் ஞீலிவனேஸ்வரர் சந்நிதியை அடையலாம். இங்குள்ள லிங்கமூர்த்தி ஒரு சுயம்பு லிங்கமாகும். எமனுக்கு உயிர் கொடுத்து மீண்டும் தனது தொழிலைச் செய்துவர அதிகாரம் கொடுத்து அருளியதால் இத்தலத்து இறைவன் அதிகாரவல்லபர் என்றும் அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணு, இந்திரன், காமதேனு, ஆதிசேஷன், வாயு பகவான், அக்கினி பகவான், இராமர், அர்ச்சுணன், வஷிஷ்ட முனிவர் ஆகிய பலர் இத்தலத்து இறைவனை வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். மூலவர் சந்நிதியில் இரத்தின சபை இருக்கிறது. வசிஷ்ட முனிவருக்கு அவரின் வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சிவபெருமான் நடன தரிசனம் தந்து அருளிய இரத்தின சபை தலம் இதுவாகும். இத்தலத்திற்கு மேலச் சிதம்பரம் என்ற பெயருமுண்டு.

           இக்கோவிலில் இரண்டு அம்மன் சந்நிதிகள் இருக்கின்றன. இரண்டு அம்மன்கள் பெயரும் விசாலாட்சி தான். பார்வதி தேவி ஒருமுறை சிவயோகத்திலிருக்க விரும்பி இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு தனக்கு பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள் செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்கு பரிகாரம் செய்ய விரைவில் திருமணம் கைகூடும். வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும். வாழைப் பரிகார பூஜை நேரம் காலை 8-30 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும், மாலையில் 4-30 மணிமுதல் 5-30 மணி வரையிலும் நடத்தப்படும்.

           திருநாவுக்கரசருக்கு இறைவன் பொதிசோறு கொடுத்தருளிய தலம் திருப்பைஞ்சீலி ஆகும். திருச்சிராப்பள்ளி, திருக்கற்குடி, திருப்பராய்த்துறை ஆகிய சிவஸ்தலங்களை தரிசித்துவிட்டு திருநாவுக்கரசர் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். வழியில் நீர்வேட்கையும், பசியும் அவரை வாட்டின. எனினும் மனம் தளராமல் திருப்பைஞ்சீலி நோக்கி சென்று கொண்டிருந்தார். இவர் களைப்பைப் போக்க இறைவன் எண்ணினார். அவர் வரும் வழியில் ஒரு குளமும் தங்கி இளைப்பாறும் மண்டபமும் உருவாக்கி கூட்டுச்சோறு வைத்துக் கொண்டு முதிய அந்தணர் உருவத்தில் இறைவன் காத்துக் கொண்டிருந்தார். களைத்து வந்த அப்பருக்கு தன்னிடம் உள்ள பொதிச்சோற்றை உண்டு குளத்து நீரைப் பருகியும் மேலே செல்லும்படி வற்புறத்தினார். அப்பரும் ஒன்றும் கூறாமல் உண்டு களைப்பாறினார். அந்தணரை நீர் எங்கு செல்கிறீர் என்ரு அப்பர் கேட்டதற்கு தானும் திருப்பைஞ்சீலி செல்வதாக இறைவன் கூற இருவரும் பேசிக்கொண்டே சென்றனர். திருப்பைஞ்சீலி ஆலயம் அருகே வந்தவுடன் அந்தணர் மாயமாய் மறைந்துவிட்டார். அப்போது தான் இறைவனே அந்தணராக வந்து தனக்கு உணவு அளித்ததை அப்பர் புரிந்து கொண்டார்.
 



No comments:

Post a Comment