Saturday, May 23, 2020

நலம் தரும் யோக முத்திரைகள்


நலம் தரும் யோக முத்திரைகள்
‘‘நிலம், நீர், காற்று, ஆகாயம், நெருப்பு என்ற பஞ்சபூத தத்துவங்களின் அடிப்படையில் அமைந்ததே மனித உடலும் என்கிறது சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவ முறைகள். உடலின் இந்த ஐந்து நிலைகளும் சமச்சீராக இருந்தால் ஒருவர் ஆரோக்கியமானவராக இருப்பார். அவற்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலில் நோய்த்தாக்கம் உண்டாகும். அப்படி உடல்நிலையில் பிரச்னை உருவாவதைத் தடுக்கவும், பிரச்னை வந்தால் குணமடையவும் யோகப் பயிற்சிகளைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் முடியும் என்று பரிந்துரைக்கின்றன சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவங்கள்.

குறிப்பாக, முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன என்கிறார்கள் யோகக் கலை நிபுணர்கள். நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்’’ என்கிற இயற்கை மற்றும் யோகா மருத்துவர் இந்திரா தேவி, முத்திரைகளின் வகைகளையும், அதன் பலன்களையும் இங்கே விளக்குகிறார்.

முத்திரை பயிற்சி செய்யும் முன்...

முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை என்கின்றன யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல்
நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது. பத்மாசனத்தில் அமர்ந்து யோக முத்திரைகளை செய்வது நல்லது.

*
நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.
*
முத்திரைகளை விரலோடு விரல் அழுத்தி செய்ய வேண்டும் என்பதில்லை. மெதுவாகத் தொட்டாலே போதும்.
*
எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.
*
ஆரம்பத்தில் 10- 15 நிமிடம் செய்யத் தொடங்கி, போகப்போக நேரத்தை கூட்டிக்கொண்டே போகலாம். 45 நிமிடங்கள் வரை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
*
வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும். நூறு விதமான முத்திரை வகைகள் இருந்தாலும், சில அடிப்படையான 10 முத்திரைகளை இங்கு பார்ப்போம். ஞான முத்திரை செய்முறை

சின் முத்திரை.
ஆள்காட்டி விரல் நுனி கொண்டு கட்டை விரல் நுனியைத் தொடவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும். கையை பூமியை நோக்கி கவிழ்த்து வைக்க வேண்டும். நிமிர்ந்து இருந்தால் அது சின் முத்திரை.

பலன்கள்

கட்டை விரல் நுனிகள் பிட்யூட்டரி மற்றும் நாளமில்லா (Endocrine) சுரப்பிகளுக்கு ஆதாரம். ஆள்காட்டி விரல் நுனியால் கட்டை விரலைத் தொடும்போது மேற்கண்ட சுரப்பிகளின் இயக்கம் சுறுசுறுப்படையும்.

மூளைக்கு அதிக ரத்த ஓட்டம் செல்லும், மூளை செயல்பாடு, நினைவாற்றல் அதிகரிக்கும். அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோக முத்திரை இது. பத்மாசனத்தில் அமர்ந்து காலையில் செய்ய வேண்டும். ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.

*
வாயு முத்திரைசெய்முறை

ஆள்காட்டி விரலின் நுனிப்பகுதியால், கட்டை விரலின் அடிப்பகுதியைத் தொட்டவாறும், கட்டைவிரல் மெதுவாக வளைந்து ஆள்காட்டி விரலின் கனுவைத் தொட வேண்டும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

பலன்கள்

இந்த முத்திரை உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்துகிறது. உட்கார்ந்திருக்கும்போது, நிற்கும்போது அல்லது படுக்கும்போது என ஒரு நாளில் எந்த நேரம் வேண்டுமானாலும் இதைச் செய்யலாம். 45 நிமிடங்கள் தொடர்ச்சியாக செய்தால் வாயுவால் ஏற்படும் தொந்தரவை நிவர்த்தி செய்ய முடியும்.

தொடர்ந்து 2 மாதங்கள் செய்து வந்தால் வாயுப்பிடிப்பு, கீழ் வாதம், பாரிச வாயு போன்ற வியாதிகளை கட்டுப்படுத்தும். வயிறு சம்பந்தப்பட்ட வாயு உபாதைகளும் நீங்கும். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வலியை குறைக்க இது உதவும். ஆர்த்தரைடிஸ் மூட்டுவலி, ரூமாடிசம், ஸ்பான்டிலைடிஸ் எனப்படும் கழுத்துவலிகளை குறைக்க உதவும்.

*
அக்னி முத்திரை செய்முறை

மோதிர விரலை மடக்கி அதன்மேல் கட்டை விரலால் தொட வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

பலன்கள்

உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை இந்த முத்திரை சமநிலைப்படுத்துகிறது. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையைச் செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை பயன்படுகிறது. உடல் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை குறைப்பதோடு, செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்துகிறது.

*
பிராண முத்திரை செய்முறை

சுண்டுவிரல் மற்றும் மோதிர விரல் இரண்டையும் சேர்த்து மடக்கி வைத்து, கட்டை விரலால் தொட வேண்டும். மற்ற இரு விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

பலன்கள்

வாழ்க்கையைக் குறிக்கும் முத்திரை இது. பெயருக்கு ஏற்றார்போல் வாழ்வின் சிறப்புக்கு வகை செய்யும். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இந்த முத்திரை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் குறைபாடு நீங்கும்.

சோர்வு நீங்கும். கண் பார்வை சிறப்பாகும். செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. களைப்பை போக்கி, ஆற்றல் திறனுடன் வைத்திருக்கவும் உதவும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். உடலின் நோய்த்தடுப்பு சக்தியை அதிகரிக்கும். பொதுவாக உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.

*
ப்ரித்வி முத்திரை செய்முறை

பூமி முத்திரை என்றும் சொல்லப்படும். மோதிர விரல் நுனியால் கட்டைவிரலை தொடவேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.

பலன்கள்

அண்டத்தில் உள்ள உலக தனிமத்தை உங்கள் உடலுக்குள் ஊக்குவிக்கவே இந்த முத்திரை. ரத்த ஓட்டம் மேம்படும், பொறுமை அதிகரிக்கும், தசைகள் மற்றும் எலும்புகள்
வலுவடையும். உள்ளார்ந்த ஸ்திரத்தன்மையை வளர்க்கவும், தன்னம்பிக்கையை அதிகரிக்கவும், மன அமைதிக்கும் உதவும் சிறந்த முத்திரை இது. உடலையும் உள்ளத்தையும் புதுப்பிக்கிறது. மேலும், உடல் மெலிந்தவர்கள் எடை அதிகரிக்க இந்த முத்திரையைச் செய்யலாம்.

*
சூன்ய முத்திரை செய்முறை

நடு விரலை சுக்கிர மேட்டின் மேல் வைத்து கட்டை விரலால் அழுத்தவும். மற்ற மூன்று விரல்களும் நேராக இருக்க வேண்டும்.

பலன்கள்

சூன்ய முத்திரை என்பது உங்கள் காதுகளுக்கானது. இந்த முத்திரை உங்கள் காது வலிகளைப் போக்கும். மேலும் வயது மற்றும் நோயினால் காது கேட்கும் திறன் குறைபவர்களுக்கும் இது உதவும். இவர்கள் தினமும் 45 நிமிடமாவது இந்த முத்திரையை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். வலது காதில் பிரச்னை இருந்தால் வலது கரத்தாலும், இடது காதில் பிரச்னை இருந்தால் இடது கரத்தாலும் செய்ய வேண்டும். உடல் சோர்வினையும் போக்கக் கூடியது.

*
சூர்ய முத்திரை செய்முறை

மோதிர விரலை வளைத்து நுனியால் கட்டை விரலைத் தொடவும். கட்டை விரல் வளைந்து மோதிர விரலை தொடவேண்டும். இதை பத்மாசனத்தில் அமர்ந்து இரண்டு கைகளாலும் செய்ய வேண்டும். சூரியனின் ஆற்றல் திறனை அனுசரிப்பதே சூரிய முத்திரையின் அடிப்படை என்பதால் விடியற்காலையில் செய்ய வேண்டும்.

பலன்கள்

தைராய்டு சுரப்பியை தூண்டும் சக்தி இந்த முத்திரைக்கு உண்டு. தினமும் இரு முறை 5 முதல் 15 நிமிடங்கள் பயிற்சி செய்யலாம். கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். நிம்மதியின்மை, செரிமானமின்மை போன்ற குறைபாடுகளை களைய உதவும். சோம்பலைப் போக்கி சுறுசுறுப்பைத் தரும். உடல் எடையை குறைக்க உதவும்.

*
லிங்க முத்திரை செய்முறை

இரு உள்ளங்கைகளையும் சேர்த்து விரல்கள் ஒன்றுக்கொன்று பின்னி இருப்பது போல் சேர்த்துக் கொள்ளவும். இப்படி செய்யும்போது இடது கை கட்டை விரல் தனித்து நேராக நிற்க வேண்டும். வலது கை கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரல் நடுவில் இருக்குமாறும் வைத்துக் கொள்ளவும்.

பலன்கள்

இந்த முத்திரை ஆண்மையை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதால், அதிக நேரம் செய்யக் கூடாது. ஏனெனில், இந்த முத்திரையை குளிர்காலத்தில் செய்தால் கூட வியர்வை வரும். மழை. பனி காலத்தில் வரும் கபம்மற்றும் சளி போன்ற சுவாசம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்தவல்லது. உடல் எடை குறையும்.

*
அபான முத்திரை செய்முறை

நடுவிரல் மற்றும் மோதிர விரல்களின் நுனிகளை சேர்த்து கட்டை விரலின் நுனியை தொடவேண்டும்.

பலன்கள்

பல்துறை முத்திரையான இது அனேகமாக அனைவருக்குமே பயனை அளிக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மை கலந்த நீரை இந்த அபான் முத்திரை சுத்தப்படுத்தும். சிறுநீரகம், மலக்குடல், பிறப்புறுப்புகளின் வேலையை துரிதப்படுத்துகிறது. சுகப்பிரசவம் தருவதோடு, கர்ப்பப்பை, மாதவிடாய் கோளாறுகளை நீக்க வல்லது. மூலம், நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இதயத்தை வலுப்படுத்தி, இதயத்துடிப்பை சீராக்கும்.

*
சங்கு முத்திரை செய்முறை

இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதியும்படி வைத்து வலது பெருவிரல் தவிர மற்ற விரல்களால் அதை இறுக மூடிக் கொள்ளவும். வலது பெருவிரல் இடது கையின் மற்ற நான்கு விரல்களையும் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

பலன்கள்

தைராய்டு சுரப்பிகளை இயங்கச் செய்கிறது. தொண்டை சம்பந்தமான நோய்களை குணப்படுத்துகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்தவும், செரிமானக் கோளாறுகளைப் போக்கவும் வல்லது. மூளை சோர்வடையாமல் நாள் முழுவதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. திக்குவாய் நீங்கவும், நல்ல குரல்வளம் பெறவும் உதவுகிறது.

No comments:

Post a Comment