Saturday, May 23, 2020

தஞ்சாவூருக்கு சினிமா வந்த கதை ...


தஞ்சாவூருக்கு சினிமா வந்த கதை ...
1924இல் தான் தஞ்சைக்கு முதன் முதலில் மின்சாரம் வந்தது .. அதற்கு பின் 1930 களில் தான் முதன் முதலில் ஊமை திரைப்படங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன . நாடக கொட்டகைகளாக இருந்த அரங்கங்கள் ஊமை திரைப்பட கொட்டகைகளாக மாற்றப்பட்டன ... தஞ்சையின் முதல் சினிமா அரங்கம் இந்த "டவர் சினிமா" தான். பிறகு 1940களில் பேசும் படம் அறிமுகப்படுத்தப்பட்டன ... . பிறகு இந்த "டவர் சினிமா" என்ற பெயர், "டவர் டாக்கீஸ்" ஆகா மாற்றப்பட்டது.
இது போன்று மாற்றப்பட்ட ஒரு அரங்கம் தான் நீங்கள் இங்கு காணும் "டவர் டாக்கீஸ்". இதனையுடைய அப்போதய உரிமையாளர் கிருஷ்ண ராவ் அவர்கள். பிறகு 1940களில் பரிசுத்த நாடார் அவர்கள் உரிமையாளர் ஆனார்கள். 1952இல் ஒரு பெரும் புயல் தஞ்சையை தாக்கியது "டவர் டாக்கீஸ் " கடும் சேதம் அடைந்தது ... பிறகு அது புதுப்பிக்கப்பட்டு 1953இல் இருந்து "ஞானம் டாக்கீஸ்" ஆனது. (இப்போதைய ஆனந்தம் சில்க்ஸ், ஞானம் ஓட்டல் இருக்குமிடத்தில் இருந்தது).
தஞ்சையின் இரண்டாவது சினிமா அரங்கம் "மீனா டாக்கீஸ்" .. இது தஞ்சை வடுக்குவாசல் AYA நாடார் ரோட்டில் "கிருஷ்ண காண சபா"வாக செயல்பட்ட நாடகக்கொட்டகை. பிற்காலத்தில் இது "கிருஷ்ண டாக்கீஸ்" என்று பெயர் மாற்றம் பெற்றது.
மூன்றாவதாக இப்போது உள்ள பரிசுத்தம் ஹோட்டல் இருக்கும் இடத்தில், "யாகப்பா டென்ட் (டூரிங்) சினிமா டாக்கீஸ்" கொட்டகை இருந்தது அது 1946இல் செயல்பட்டது பிறகு தான் தஞ்சையின் பிரமாண்டமான திரை அரங்கம் "யாகப்பா டாக்கீஸ்" 1949இல் இப்போது இருக்கும் இடத்தில் உருவானது .
பிறகு நான்காவது திரை அரங்கமாக "நியூடவர் டாக்கீஸ்" 1950களில் உருவானது. 1960 களில் இந்த தியேட்டரின் பெயர்ஜூபிடர்என மாற்றப்பட்டது. இதன் உரிமையாளர் குத்தாலம் நாராயணன் அவர்களுக்கு திருச்சி ,குடந்தை மற்றும் சீர்காழியில் இதே பெயரில் திரை அரங்குகள் செயல்பட்டன.
1969இல் "ராஜா கலை அரங்கம்", 1970 களில் "திருவள்ளுவர் அரங்கம்", "குமரன் தியேட்டர்", "அருள் தியேட்டர்", 1980களில் "ராஜ ராஜன்", "ராணி பாரடைஸ்" , விஜயா தியேட்டர் மற்றும் "சாந்தி - கமலா" .
இவை இல்லாமல் டவுனுக்கு வெளியே அண்ணா நகரில் "சாம்பியன் டூரிங் டாக்கீஸ்", ஜெபமாலைபுரத்தில் "ராஜாராம் டூரிங் டாக்கீஸ் " நாஞ்சிக்கோட்டை ரோட்டில் பிலோமினா நகரில் "பர்வீன் தியேட்டர்" இயங்கி வந்தன ...
அந்த காலத்தில் .. முன்பு சொன்னதை போல 1930 களில் .. பேசும் திரை படம் கிடையாது .. மாறாக பேசாத ஓடும் திரை படம் தான். அதனை சினிமா (CINEMA) என்று குறிப்பிடுவார்கள் .. ஸ்டேஜில் தகர ஒலி பெருக்கியுடன் (Cone Megaphone - தகரத்தால் கோபுர வடிவில் செய்யப்பட்ட பேச்சு ஒலி பெருக்கி) ஒருவர் திரை அம்சத்தை, இசை பக்கவாத்தியங்களுடன், வர்ணிப்பார் (COMMENTATOR). பிறகு தான் பேசும் திரை படங்கள் அறிமுகமாயின. அதனை டாக்கி (TALKIE) என்று குறிப்பிடுவார்கள்.
ஒவ்வொரு திரை படம் ரிலீஸ் ஆகும் போது .. சினிமா போஸ்டர் தட்டியுடன், பாண்டு வாத்தியங்குளுடன், வீதி வீதியாக, பெட்ரோமாக்ஸ் லைட்களுடன் ஊர்வலம் சென்று சினிமா நோட்டீஸ் கொடுத்து, விளம்பரம் செய்வார்கள்.
அந்த கால கட்டத்தில் கலர் சினிமா கிடையாது. கருப்பு வெள்ளை திரைப்படங்கள் தான் திரை இடப்படும்.
நாடக கொட்டைகைகள், சினிமா அரங்குகளாக மாற்ற பட்டன. ஆதலால் அந்த காலத்தில் சினிமா அரங்குகளைகொட்டகைஎன்றும் குறிப்பிடுவார்கள்.
பொதுவாக 1950களில் இரண்டு காட்சிகள் நடைபெறும். பிறகு அது மூன்று காட்சிகளாக ஆக்கப்பட்டது - அவைகளை 2மணி ஆட்டம், 6 மணி ஆட்டம் மற்றும் 10 மணி ஆட்டம் என்று குறிப்பிடுவார்கள். கடைசி கட்டின பகுதியை "தரை டிக்கெட்" என்று குறிப்பிடுவார்கள் ஏனென்றால் அதில் பெஞ்ச் இருக்காது ... தரையில் அமர்ந்து பார்ப்பார்கள் .. பிற்காலத்தில் பெஞ்ச் போட்ட பிறகும் அதை "தரை டிக்கெட்" என்று தான் குறிப்பிட்டார்கள்.
அப்போது ஒவ்வொரு சினிமா ரிலீஸ் ஆகும் போது அந்த சினிமாவில் வரும் பாடல்களை பாட்டு புத்தகமாக விற்பார்கள்.
தஞ்சையில் அதிக நாட்கள் ஓடி வெற்றி சாதனை ஏற்படுத்திய படங்கள் 'ஹரிதாஸ்' [1946] (365 நாட்களுக்கு மேல் ஞானம் டாக்கீஸில் ஓடியது) ... 'எங்க வீட்டு பிள்ளை' [1965] ( யாகப்பாவில் 175 நாட்கள் ஓடியது )
காலம் மாறியது .... 1981ல் டிவி முதன் முதலாக தஞ்சைக்கு அறிமுகமானது ... இலங்கை தொலைக்காட்சி "ரூபவாஹினி " தெளிவாக பெரும்பாலான நாட்களில் தெரிய ஆரம்பித்தது. 1985இல் தூர்தர்ஷன்தெரிய ஆரம்பித்ததது, 1990களில் சன் டீவீ .. நாளடைவில் வெகுவாக நூற்றுக்கணக்கான டீவீ தொலைக்காட்சிகள் தெரிய ஆரம்பித்தன .. .. சினிமா மோகம் குறைந்தது ... .....
15 ஆண்டுகளுக்கு முன்னாள் பெரும்பாலான அரங்குகள் மூடப்பட்டன .. 1990களில் ஞானம், குமரன், திருவள்ளுவர் .. 2005இல் யாகப்பா , ராஜா கலை அரங்கம் .. ..... இப்போது மிஞ்சி இருப்பது விஜயா தியேட்டர் , ராணி பாரடைஸ், ஷாந்தி - கமலா, மற்றும் ஜூபிடர் தான் ..


No comments:

Post a Comment