மருத்துவ ஆலோசனை வேண்டாம்
மூத்தக் குடிமக்களே கேளாமல் யாருக்கும் இலவச மருத்துவ ஆலோசனை கூறாதீர்கள்.
ஒவ்வொரு நோய்க்கும் மருத்துவம் வேறுபடும். நோயாளிகள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை மருத்துவமனையே காகிதத்தில் அச்சிட்டு வழங்கி விடும் இக்காலத்தில், உங்கள் அக்கம் பக்கத்து வீட்டினரோ அல்லது உறவினரோ கூறிய அனுபவ வார்த்தைகளை அடுத்தவர் மேல் திணிக்காதீர்கள். மிகவும் தப்பாக போய்விடும்.
முடிந்த வரை யூட்யூப் மருத்துவத்தை நீங்களும் முயற்சிக்காதீர்கள். மற்றவர் மீதும் வலிந்து திணிக்காதீர்கள்.
மனசு மட்டும் அல்ல, உடம்பும் வெவ்வேறு தினுசுதான். ஒருத்தரைப் போன்றே இன்னொருவருக்கு நோய் வருவதில்லை, கொரோனாவைத் தவிர்த்து. ஆக வைத்திய முறையும் சிகிச்சையும் மாறுபடும். இங்கே முன்பெல்லாம் ஒரு வார்த்தை சொல்வார்கள். லோயர் பூரோ lawyer
buruh) என்று. தயவு செய்து அது போன்று இருக்காதீர்கள்.
அண்மையில் கண் சிகிச்சைக்குச் சென்ற ஒரு பெண்மணிக்கு மற்றொரு பெண்மணியின் ஆலோசனைகள் :
கறுப்பு கண்ணாடி வாங்கி வச்சிக்கோ. எப்பவும் கண்ணாடி போட்டுக்கோ
நோயாளியின் மனக்குரல்: எப்பவும் இல்லை. சூரிய வெளிச்சம், மின்சார விளக்கு வெளிச்சம் போன்றவை பளிச்சென படும் இடத்தில் மட்டுமே
கண்ணுல தண்ணி படக்கூடாதாம். அதனால மூஞ்சி கழுவாத.
நோயாளியின் மனக்குரல் அதெல்லாம் மூஞ்சி மொகரையெல்லாம் சுத்தமா கழுவலாம்ன்னு சொல்லித்தான் அனுப்பியிருக்காங்க ஆஸ்பத்திரில.
தலைக்கி குளிக்காத.
நோயாளியின் மனக்குரல். : ஷாம்பு போட்டே குளிக்கலாம்னு சொல்லியிருக்காங்க ஆஸ்பத்திரியில
அடுப்பங்கரையில போயி சமைக்கிறேன்னு நிக்காத. இருக்கிறத வச்சி பார்த்துக்கோ
நோயாளியின் மனக்குரல்.: எடுக்கப் பிடிக்க ஆள் இருந்தாத்தான் பிள்ளை ஏங்கி ஏங்கி அழும். ஒண்டி சண்டியா கெடக்கிற சீவன் தன் பொழப்ப தானேத்தானே பார்த்துக்கனும்
அதையும் இதையும் சாப்பிடாத. பார்த்து நல்லப் பொருளா சாப்பிடு
நோயாளியின் மனக்குரல்: அதெல்லாம் நாங்க வெவரமாத்தான் இருக்கோம். க்ளே போட் சிக்கன் ரைஸ், சீ சியோங் ஃபன், கொய்த்தியோ கோரேங் ந்னு சாப்பிட்டுக்கிட்டு
வெளியே தெருவ போகாத
நோயாளியின் மனக்குரல் வெளியத் தெருவ போகாதன்னா என் தேவைக்கு ஒன்னை கூப்பிட முடியுமா?
நோயாளியானவர் சிகிச்சைக்குப் பின்னரான ஓய்வில் இருப்பாரா, இது போன்ற அட்வைஸ் மழையில் நனைவாரா? நோயின் கொடுமையை விடவும் பெருங்கொடுமையாக இருக்கும் போலிருக்கிறது இந்த இலவச மருத்துவ ஆலோசனைகள்.
(கேட்ட நமக்கே இப்படி என்றால் நோயாளியின் நிலைமை என்ன?)
No comments:
Post a Comment