தஞ்சாவூர் வெற்றிலை
படித்ததிலிருந்து பிடித்த ஒரு பதிவு
வெற்றிலை கோவிந்தராஜ்
தஞ்சாவூர் தாம்பூலத்திற்கு எப்போதும் தனி மகத்துவம் உண்டு
அதற்குக் காரணம்
மனத்திடல் . திருவையாறு. கண்டியூர்.
கரூப்பூர். நடுக்கடை.
திருக்காட்டுப்பள்ளி. திருப்பந்துருத்தி.
இந்த ஊர்களில் விளையும் வெற்றிலை
அப்படி விளையும் வெற்றிலை மொத்தமாக வந்து சேரும் இடம்
தஞ்சாவூர் அய்யங்கடை தெரு காமராஜ் மார்க்கெட்
அங்கு ஏழு வெற்றிலைக் கடை இருந்தது
எப்போதும் தாழம்பூ அகர்பத்தி வாசம் வீசும்
கோவிந்தராஜ் வெற்றிலை கடை முதன்மைக்கடையாக (முதல் கடையாக இருந்தது )
நெற்றி நிறைய விபூதி அதில் நடுநயமாக குங்குமம் என பக்தி முகமாகவே காட்சியளிப்பார் கோவிந்தராஜ்
தலைமுறை தலைமுறையாக அவர்களுக்கு வெற்றிலை வியாபாரம் தான்
அப்போதைய தஞ்சைவாசிகளுக்கு பொழுதுபோக்கே
லட்சுமி சீவல் . மணக்கும் ஏஆர்ஆர் சுண்ணாம்பு. வெற்றிலை தான்
அதுவும் கவுளி கவுளியாக வாங்குவார்கள்
வீட்டில் ஏதாவது விசேஷம் என்றால் இரண்டு நாட்களுக்கு முன்பே கோவிந்தராஜ்விடம் சொல்லி விடுவார்கள் இத்தனை கவுளி வேண்டும் என்று மண்டபத்திற்கு வீட்டிற்கோ வெற்றிலையும் அதற்கு ஈடான சீவலும் சுண்ணாம்பு வைத்துவிட்டு கிளம்பி விடுவார்
விசேஷம் எல்லாம் முடிந்த பிறகு சாகவாசமாக வெற்றிலை சீவல் காசை கொடுப்பார்கள் அதில் கூடவோ குறைச்சலோ இருக்கும்
முகம் சுளிக்காமல் வாங்கிக் கொள்வார் கோவிந்தராஜ்
வெற்றிலைக் காம்பை பார்த்தே இது எந்த ஊர் வெற்றிலை என்று சரியாக கண்டுபிடித்து விடுவார்
வெற்றிலை விற்பது என்பது எல்லோராலும் முடியாது
ரகம் வாரியாக தரம் வாரியாக பிரித்து கவுளியாக அடுக்க வேண்டும்
எந்த வெத்தலை எத்தனை நாள் தாங்கும் என்றும் தெரிந்திருக்க வேண்டும்
தஞ்சாவூர் சம்சாரிகள் மாடு வாங்குவதாக இருந்தாலும் விற்பதாக இருந்தாலும் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வடக்கு வாசலில் கூடும் மாட்டுச் சந்தையில் ஒன்று கூடுவார்கள் அது முடிந்த பிறகு அவர்கள் நேராக செல்லும் இடம் அய்யங் கடை தெரு காமராஜ் மார்க்கெட் தான்.
காய்கறி எல்லாம் வாங்கிவிட்டு கடைசியாக கோவிந்தராஜ் கடையில் கவுளி கவுளியாக வெற்றிலையை வாங்கிக் கொண்டு பெருமையோடு ஊர் திரும்புவார்கள் வெள்ளிக்கிழமை அன்று மட்டுமே மாட்டு கயிரோடு எப்போதும் பத்து பேர் வெற்றிலை சீவலோடு அவர் கடையில் உட்கார்ந்து ஊர் கதை பேசுவதை காணலாம். இது எல்லாம் ஒரு காலத்தில் ஜெகஜோதியாக நடந்தது முன்பு எல்லாம் தஞ்சை ஜில்லாவில் வீட்டுக்கு வீடு வெற்றிலைப் பெட்டி என்று ஒன்று இருந்தது
விருந்தாளிகள் வந்தால் முதலில் வெளியே வருவது வெற்றிலைப் பெட்டி தான்
இப்போது யாரும் வெற்றிலை போடுவதில்லை. வெற்றிலைப் பெட்டியும் இல்லை விசேஷங்களுக்கு கூட கவுளி கவுளியாக வெற்றிலை வாங்கியது போய் சம்பிரதாயத்திற்கு மட்டும் வாங்குகிறார்கள் வெற்றிலை தேவை குறைந்த பிறகு சம்சாரிகளும் வெற்றிலை சாகுபடியை குறைத்து விட்டார்கள்
ஏர் கலப்பையும் மேய்சல் நிலங்களும் தொலைந்த பிறகு மாடுகள் தேவையற்று மாட்டுச்சந்தை பொழிவிழந்தன சம்சாரிகளும் மாட்டு வியாபாரிகளும் வருகை குறைந்த பிறகு அய்யங்கடைத் கடை தெரு மார்க்கெட் சரிவை சந்தித்தன
நகர விரிவாக்கமும் புதிய வணிக வீதிகளை உருவாக்கின
பழைய மார்க்கெட் இடிக்கப்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய மார்க்கெட் உருவாக்கப்பட்டன
காலமும் கவுளி கவுளியாக வியாபாரம் செய்த கோவிந்தராஜை எடுத்துக் கொண்டது
காலம் எல்லாவற்றையும் தொலைத்துக் கொண்டே இருக்கிறது
அதில் வெற்றிலையும் அடங்கும் !