'தங்கக் கப்பல்' போர்ச்சுகீசிய புதையல்
500 ஆண்டுகளுக்குப் பிறகு பாலைவன மணலில் கண்டுபிடிக்கப்பட்ட 'தங்கக் கப்பல்'... போர்ச்சுகீசிய புதையல் வெளிவந்தது.
ஏதோ ஹாலிவுட் சயின்ஸ் பிக்ஷன் படம்போலத் தோன்றுகிறதா? ஆனால், இது நிஜமாகவே ஆப்பிரிக்காவின் நமீப் (Namib) பாலைவனத்தில் நடந்துள்ளது.
அட்லாண்டிக் கடற்கரையோரம் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மணல் பரப்பிற்கு அடியில், 500
ஆண்டுகளாக உறங்கிக் கொண்டிருந்த 'தங்கக் கப்பல்' உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த
2008-ம் ஆண்டு, நமீபியாவின் கடற்கரை ஓரம் வைரச் சுரங்கப் பணிகளுக்காகக் கடல் நீரை வெளியேற்றித் தரையைத் தோண்டியபோது, ஆராய்ச்சியாளர்கள் திகைத்துப்போனார்கள். அங்கே ஒரு பழைய மரக்கப்பலின் சிதைவுகள் தெரிந்தன. ஆய்வில் அது 1533-ம் ஆண்டு மாயமான 'பாம் ஜீசஸ்'
(Bom Jesus) என்ற போர்ச்சுகீசிய வணிகக் கப்பல் என்பது உறுதியானது.
கப்பலுக்குள் என்ன இருந்தது?
கப்பலின் மரப்பலகைகளை மெதுவாக விலக்கியபோது, கண்ணைப் பறிக்கும் பொக்கிஷங்கள் கொட்டிக்கிடந்தன. 2,000 தங்க நாணயங்கள் இத்தனை நூற்றாண்டுகள் கழிந்தும் அதன் பிரகாசம் குறையாமல் அப்படியே இருந்தன. டன் கணக்கிலான செப்புக் கட்டிகளும், ஏராளமான வெள்ளி நாணயங்களும் கண்டெடுக்கப்பட்டன. ஆசியாவிற்கு வணிகம் செய்யச் சென்றபோது சேகரிக்கப்பட்ட அரிய வகை யானைத் தந்தங்களும் மிகச் சரியான நிலையில் இருந்தன.
பாலைவனத்திற்கு கப்பல் வந்தது எப்படி?
1533-ம் ஆண்டு போர்ச்சுகல் மன்னரின் கட்டளையை ஏற்று, மிளகு உள்ளிட்ட நறுமணப் பொருட்களை வாங்க இந்தியா நோக்கிப் புறப்பட்டது இந்தக் கப்பல். ஆனால், வழியில் அட்லாண்டிக் கடலில் ஏற்பட்ட மிகக் கொடூரமான புயலில் சிக்கி, பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. காலப்போக்கில் கடல் மட்டம் மற்றும் காற்றின் திசையால், அந்த இடம் கடலில் இருந்து விலகிப் பாலைவனமாக மாறியது. இதனால் கப்பல் மணலுக்குள் பாதுகாப்பாகப் புதையுண்டது.
200 வீரர்கள் எங்கே? - தீராத மர்மம்!
இந்த கண்டுபிடிப்பில் எல்லோரையும் உறைய வைக்கும் விஷயம் உண்டு. இந்தக் கப்பலில் சுமார் 200 வீரர்கள் பயணம் செய்திருக்க வேண்டும். ஆனால், கப்பல் இருந்த இடத்தில் மனித எலும்புக்கூடு கூடக் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்தார்களா? அல்லது கரை ஒதுங்கி இந்தப் பாலைவனத்தில் தப்பிப் பிழைக்கப் போராடினார்களா? என்பது இன்றும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது. இந்தக் கப்பலில் கிடைத்த அத்தனை புதையல்களையும் போர்ச்சுகல் அரசு நமீபியாவிடம் ஒப்படைத்துவிட்டது. 'பாம் ஜீசஸ்' கப்பல் வெறும் மரக்கட்டை அல்ல; அது 500 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் கடல் கடந்து செய்த வீரதீரப் பயணங்களின் சாட்சி!

No comments:
Post a Comment