வெங்காயம்
வெங்காயத்தில் பல விஷயம் இருக்கிறது!
இரத்தக்குழாய்களில் கொழுப்பு சேர்வதால் குழாய்கள் தடிமன் அடைகின்றன. இரத்தத்தில் கொழுப்பு அதிகரிப்பதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதய தசைகளுக்கு செல்லும் இரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் இதய தசைகள் பாதிக்கின்றன. அதே போல் மூளைக்கு செல்லும் இரத்த ஓட்டமும் குறைகிறது. இதனால் சோர்வும், நரம்புத்தளர்ச்சியும் உண்டாகிறது. உடம்பில் ஏற்படும் நுண்கிருமிகளின் தொற்று, விக்கடிகள் போன்றவற்றால் புரோஸ்டோகிளாண்டின் என்னும் பொருள் அதிகரித்து உணர்வு நரம்புகளை பாதிக்கின்றன. மேலும் உடலில் சேர்ந்த நுண்கிருமிகள் சிறுநீர்பாதை மற்றும் மலப்பாதையில் தங்கி மலம் கழிக்கும் போது வலியையும், சிறுநீர் செல்லும் போது எரிச்சலையும் உண்டாக்கின்றன. அது போல் இரத்தத்தில் அதிகரித்த யுரிக் அமிலம் எலும்பு இணைப்புகளை பாதிப்பதுடன் சிறுநீர்ப் பாதையில் யுரிக் அமிலக் கற்களையும் உற்பத்தி செய்கின்றன.
உடலின் அத்தியாவசிய செயல்பாடு மற்றும் மனநலனின் பாதுகாப்பிற்கு தேவையான துத்தநாகம், கந்தகம், செலினியம் போன்றவை உடலில் நுண்கிருமிகள் தாக்குவதை தடுப்பதுடன், உடலுக்கு ஊட்டச்சத்தையும் ஏற்படுத்தி மன இறுக்கத்தை போக்குகின்றன. சருமத்திற்கு தேவையான கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் போன்றவை சீரான முறையில் உற்பத்தியாகவும், தோலில் தங்கவும் அத்தியாவசிய புரதச்சத்துக்கள் நிறைந்த உணவு நமக்கு தேவைப்படுகிறது.
இவ்வாறு குறிப்படப்பட்ட பலவிதமான சத்துக்கள் இரத்தத்தில் குறைவதால் நமது அன்றாட உடலின் செயல்பாடு பாதிக்கப்படுவதுடன், பலவிதமான நோய்களும் உண்டாகின்றன. ஆகவே நாம் உண்ணும் உணவில் மேற்கண்ட சத்துக்கள் தவறாமல் இடம்பெற வேண்டுமா? கவலை வேண்டாம். நாம் உண்ணும் உணவில் அன்றாடம் வெங்காயத்தை சேர்த்துக் கொண்டாலே போதுமானது. இந்திய உணவில் முக்கியப் பங்கை வகிப்பது வெங்காயமே. வெங்காயம் உணவின் ருசியை கூட்டுவதுடன், பலவிதமான சத்துக்களையும் உள்ளடக்கியுள்ளது. ஆண் மற்றும் பெண்களுக்கான ஹார்மோன்களின் வளர்ச்சியை தூண்டுவதுடன், இனப்பெருக்க உறுப்புகளில் நுண்ணிய குழாய்களில் ஏற்படும் இரத்த தடையையும் நீக்கும் அற்புத ஆற்றல் வாய்ந்தது வெங்காயம். சித்த மருத்துவத்தில் வளி, அழல், ஐயம் என்று சொல்லப்படும் மூன்று குற்றங்களையும் தணிக்கும் திரிதோட சமனிப் பொருளாக வெங்காயம் சிறப்பிக்கப்பட்டுள்ளது.
வெங்காயத்திலுள்ள சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, ஏ, பி, சி வைட்டமின்கள் இரத்தக்குழாய்களில் அடைப்பை நீக்குகின்றன. இவை உடலில் சேரும் பொழுது பைபிரினோலைசின் என்னும் பொருளை உற்பத்தி செய்து இரத்தக் கட்டிகளை கரைக்கின்றன. ஆகவே இதய நோயாளிகளுக்கு ஏற்ற உணவு வெங்காயம். வெங்காயத்திலுள்ள அலினின் மற்றும் அலிசின் என்ற பொருள் செல்களுக்கு இன்சுலினின் தேவையை குறைக்கிறது. அது போல் ஆஸ்துமா நோயாளிகளுக்கு சிறிய வெங்காயத்தை அடிக்கடி உட்கொள்ள அதிலுள்ள தையோசல்பனேட்டுகள் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றன.
தேனீ மற்றும் வி வண்டுகள் கொட்டிய இடங்களில் சின்ன வெங்காயத்தை தடவ விம் நீங்கும். ஆறாத புண்கள் ஆறவும், கட்டிகள் உடையவும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறுசிறு துண்டுகளாக வெட்டி, லேசாக வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வரலாம். வெயில் காலங்களில் ஏற்படும் தோல் கருமை மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டை நீக்க வெங்காயத்தை அடிக்கடி உணவில் உட்கொள்வதுடன் வெங்காயச் சாறை வெயில் படும் இடங்களில் தடவி வரவேண்டும். இனப்பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவதாலும், விரைப்புத் தன்மையை அதிகப்படுத்துவதாலும் தாம்பத்ய குறைபாடுள்ள ஆண்கள் அடிக்கடி வெங்காயத்தை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. மாதவிலக்கின் போது குறைவான இரத்தப் போக்குள்ள பெண்கள் வெங்காயத்தை மைய அரைத்து சாப்பிட இரத்தம் நன்கு வெளியேறும்.