Tuesday, January 15, 2019

தர்ப்ப சயன ராமன் திருப்புல்லாணி


தர்ப்ப சயன ராமன்   திருப்புல்லாணி.

           ராமபிரானை ராவணனின் தம்பி விபீஷணண் தேடி வந்து சரணாகதி அடைந்தபோது அவனை இலங்கைக்கு அரசனாக ராமன் முடிசூட்டிய இடம் திருப்புல்லாணி. தன்னைச் சரணடைந்தவர்களுக்குக் குறைவின்றி வழங்குபவர், இங்கு உறைந்துள்ள ஸ்ரீஆதிஜெகந்நாதப் பெருமாள். பெருமாளே, பெருமாளை வணங்கிய இடமும் இதுவே! விஷ்ணுவின் அவதாரமான ராமபிரான், திருப்புல்லாணி மூலவர் ஸ்ரீஆதிஜகந்நாதனை வணங்கி, அவரால் கொடுக்கப்பட்ட வில்லைப் பெற்று, இராவண சம்ஹாரம் செய்து சீதாப்பிராட்டியை மீட்டார் என்கிறது புராணம்.
             மகாவிஷ்ணு எப்போதும் உறைந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் 108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசம், திருப்புல்லாணி. ராமநாதபுரத்துக்குத் தென்கிழக்கில் 8 கி.மீ. தூரத்தில் அமைந்த கோயில் இது. சுக, சாரணர்களுக்கு அபயம் கிடைத்த இடம். புல்லவர், கண்ணுவர், காலவர் போன்ற ரிஷிகள் ஸ்ரீஆதிஜெகந்நாதரைச் சரணடைந்து பரமபதம் பெற்ற இடம்... ஆகவே, இது சரணாகதித் தருமத்தை வலியுறுத்தக்கூடிய ஒரு திருத்தலம் என்கிறார்கள்.

20 பாசுரங்கள் பெற்ற பெருமாள்

            திருமங்கை ஆழ்வார் தமது பெரிய திருமொழியில் 20 பாசுரங்களையும், பெரிய திருமடலில் ஒரு துணுக்குப் பாசுரத்தையும் இத்தலப் பெருமாள் குறித்து அருளியுள்ளார். இங்கு தலவிருட்சமாக அரசமரம் விளங்குகிறது. வியாஸ பகவானால் எழுதப்பெற்ற 18 புராணங்களில் ஒன்றான ஆக்னேய புராணத்தில், ஒன்பது அத்தியாயங்களில் இவ்வாலயம் வர்ணிக்கப்பட்டுள்ளது.
          
              இக்கோயிலில் ஸ்ரீபத்மாசனித் தாயார் வரத அபயஹஸ்தங்களுடன் அருள் பாலிக்கிறார். தவிர, பெருமாள் மூன்று வடிவங்களில் தனித்தனிச் சந்நிதிகளில் எழுந்தருளியுள்ளார்கள். ஸ்ரீஆதிஜகந்நாதன் ஸ்ரீபூமி மற்றும் நீளை என்ற தேவியர்களுடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். அடுத்து ராமன் சீதையைத் தேடிக்கொண்டு வந்தபொழுது, இங்கே மூன்று நாட்கள் புல்லில் இட்ட படுக்கையில் பள்ளி கொண்டிருந்தார். எனவேதான் இப்பெருமாளுக்குதர்ப்ப சயன ராமன்என்ற திருநாமம் ஏற்பட்டது. இங்குதான் கடல் மீது அணை கட்ட வானர வீரர்களுடன் இவர் ஆலோசனை செய்தார்.

           கடலரசன் தம்மை அவமதித்ததால் சீற்றம் கொண்டார். சமுத்திரராஜன் சரணாகதி ஆனதும் ராமன் சாந்தக் கடலாகிவிட்டார். ராமன், ராவணனை மாய்த்து சீதையுடன் அயோத்தி திரும்புகையில், இவ்விடத்தில் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க, பட்டாபிஷேகம் செய்துகொண்டு ஸ்ரீபட்டாபிஷேக ராமராகக் காட்சியளித்தார். இவரைத் தரிசிக்கும் பக்தர்களுக்கு விவரிக்க இயலாத புண்ணிய பலன் உண்டு என்று கருதப்படுகிறது. இப்படி இவ்வாலயத்தில் பெருமாள் இருந்தும், நின்றும், கிடந்தும் காட்சி கொடுப்பது மிகவும் அபூர்வம் என்று கூறப்படுகிறது.