. கம்ப்யூட்டர்
டிப்ஸ்...-8
மொபைல் போன்
மொபைல் போன் குறித்து படிக்கும்போது ஜெயில் பிரேக்கிங் என்று படித்திருப்பீர்கள். இதற்கும் சிறைச் சாலைக்கும் என்ன சம்பந்தம்?
ஒரு சம்பந்தமும் இல்லை. டிஜிட்டல் சாதனம் ஒன்றில், அதனை வடிவமைப்பவர், தான் விரும்பும் வகையில் சில வரையறைகளை அமைத்திருப்பார். சாதாரணப் பயன்பாட்டில், அவற்றை மீறிப் பயன்படுத்த முடியாது. மீறினால் வரும் விளைவுகள் பல வேளைகளில் அந்த சாதனத்தையே முடக்கிவிடும்.
மொபைல் போனைப் பொறுத்தவரை ஐ–போன் தொடர்பாகத்தான் இந்த சொல் பயன்படுத்தப்படுகிறது. ஐ–போனை,மொபைல் போன் சேவை வழங்கும் நிறுவனம் வழியாகத்தான் வாங்க வேண்டும். அப்போது அந்த நிறுவனத்தின் சேவையை மட்டுமே பயன்படுத்தும்படி, ஆப்பிள் நிறுவனம் அதனை வடிவமைத்துத் தருகிறது. அமெரிக்காவில் ஏ.டி. அன்ட் டி நிறுவனம் இதனை விற்பனை செய்வதால், இந்த நிறுவன சேவை மட்டுமே இதில் மேற்கொள்ள முடியும். அங்கிருந்து கொண்டு வரப்படும் போனில், இந்திய நிறுவன சிம் கார்டைப் பயன்படுத்திப் பேச முடியாது. இதனால் சேவை வழங்கும் நிறுவனம், குறிப்பிட்ட கட்டணத்தைக் கட்டாயமாக, போன் வாங்குவோரின் தலையில் சுமத்திவிடும் வாய்ப்பு உண்டு.
இந்த தடையை உடைக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளே ஜெயில் பிரேக்கிங் என அழைக்கப்படுகிறது. இதில் ஈடுபடுபவர்கள், இதற்கான சாப்ட்வேர் புரோகிராம்களை எழுதி, போனில் பதிந்து தருவார்கள். அதற்கான கட்டணத்தையும் உங்களிடமிருந்து வசூல் செய்திடுவார்கள். ஆனால் தொடர்ந்து ஆப்பிள் நிறுவனம் தரும் அப்டேட்டுகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இல்லை என்றால், அந்த தடையையும் முறியடிக்க பணம் செலுத்தி ஜெயில் பிரேக்கிங் சாப்ட்வேரினைப் பெற வேண்டும்.
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா! அமெரிக்க அரசாங்கம் அண்மையில் சில பிரிவினர், இது போன்ற போன்களில் ஜெயில் பிரேக்கிங் முயற்சிகளை மேற்கொள்ள சட்ட ரீதியாக அனுமதி அளித்துள்ளது.
Portable
புரோகிராம்கள் அனைத்தையும் எடுத்துச் செல்ல
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த, பயன்படுத்திப் பழக்கப்பட்ட புரோகிராம்களில் செயல்படுவதனையே விரும்புவார்கள். இதனால் தான் பெரும்பாலும், பயன்படுத்தும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களையே பணியாற்ற தேர்ந்தெடுப்பார்கள். நாம் பணியாற்றும் பிற கம்ப்யூட்டர்களில், நாம் விரும்பும் அனைத்து புரோகிராம்களையும் இன்ஸ்டால் செய்திட முடியாது. ஏன், எடுத்துச் செல்வது கூட சிரமமாக இருக்கும்.
இந்த சிரமத்தைப் போக்கும் வகையில் அனைத்து புரோகிராம்கள் மற்றும் புக்மார்க்குகள், புரோகிராம் அமைப்புகள், இமெயில் கிளையண்ட் புரோகிராம் அமைப்புகள் என அனைத்தையும் எடுத்துச் சென்று, எந்த கம்ப்யூட்டரிலும் பயன்படும் வகையில் ஒரு தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதனை வேறு கம்ப்யூட்டர்களில் பயன்படுத்துகையில், நம் தனிநபர் தகவல்கள் எதுவும், பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர் களில் தங்காது என்பது இதன் சிறப்பு.
இந்த அப்ளிகேஷனை PortableApps.com என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெற்றுக் கொள்ளலாம். இலவசமாகக் கிடைக்கும் இந்த வசதி இரண்டு தொகுப்பாக PortableApps.com Suite and PortableApps Platform என்று கிடைக்கின்றன. இது முற்றிலும் இலவசம். சோதனைக் காலம், அதன் பின் கட்டணம் என்று எதுவும் இல்லை. இதில் ஸ்பைவேர் எதுவும் இணைக்கப்படவில்லை. இதனை காப்பி செய்து எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். Portable Apps.com Suite என்பதில் நமக்குத் தேவைப்படும் இணைய பிரவுசர், இமெயில் கிளையண்ட், ஆபீஸ் தொகுப்பு, காலண்டர்/ திட்டமிடுதல், இன்ஸ்டண்ட் மெசெஜ் அனுப்ப, ஆண்ட்டி வைரஸ், ஆடியோ பிளேயர், சுடோகு கேம்ஸ், பாஸ்வேர்ட் மேனேஜர், பிடிஎப் ரீடர்,பேக் அப் எடுக்க என அனைத்து பணிகளுக்கும் போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள் தரப்பட்டுள்ளன. மொஸில்லா பயர்பாக்ஸ், தண்டர்பேர்ட், சன்பர்ட், க்ளாம் விண், பிட்ஜின், சுமத்ரா பிடிஎப், கீ பாஸ் பாஸ்வேர்ட், சுடோகு, மைன்ஸ் பெர்பக்ட் கேம், கூல் பிளேயர், ஓப்பன் ஆபீஸ் / அபி வேர்ட் என அனைத்து வேலைகளுக்குமான புரோகிராம்கள் அனைத்தும் இதில் அடக்கம்.
இந்த தளத்தில் உள்ள சப்போர்ட் பிளாட்பார்மில், இந்த போர்ட்டபிள் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் பயன் படுத்தும் வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.
முதன் முதலில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கான போர்ட்டபிள் அப்ளிகேஷனை உருவாக்கிய ஜான் டி ஹாலர், பின் படிப்படியாக, ஒருவரின் கம்ப்யூட்டர் செயல்பாட்டிற்குத் தேவையான அனைத்து புரோகிராம்களையும் உருவாக்கி, இவ்வாறு முழுத் தொகுப்பாகக் கொடுத்துள்ளார். இந்த போர்ட்டபிள் அப்ளிகேஷன் தொகுப்பினை பிளாஷ் ட்ரைவ், ஐபாட், மெமரி கார்ட், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் போன்ற எந்த போர்ட்டபிள் மெமரி சாதனத்திலும் எடுத்துச் செல்லலாம்.
ஒரு இணையதளம் இறங்க மறுத்தால்
முதல் தீர்வாக நீங்கள் செய்ய வேண்டியது, இன்னொரு பிரவுசரைப் பயன்படுத்துவதுதான். எப்போதும் உங்கள் கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசரை வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த, நீங்கள் பயன்படுத்தும் பிரவுசர் எதுவாக இருந்தாலும், மற்றொரு பிரவுசரை இன்ஸ்டால் செய்து வைத்துக் கொள்வது, இது போன்ற சூழ்நிலைகளில் கை கொடுக்கும்.
அடுத்த தீர்வு, கம்ப்யூட்டரை ரீ பூட் செய்வது. கம்ப்யூட்டரில் உள்ள அனைத்தையும் மறுபடி இயக்கிப் பார்க்கலாம். கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடவும். ரௌட்டருக்கு வரும் மின்சக்தியை நிறுத்திப் பின்னர் இயக்கவும். டி.எஸ்.எல் அல்லது கேபிள் மோடம் வைத்திருந்தாலும் இதே போலச் செயல்படவும். இவை இயங்கத் தொடங்கியதை அவற்றில் உள்ள விளக்குகள் உறுதிப்படுத்திய பின்னர், கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடவும். பின் நீங்கள் குறிப்பிடும் தளத்தினைப் பெற முயற்சிக்கவும்.
அடுத்ததாக, குறிப்பிட்ட வெப்சைட்டின் பெயருக்குப் பதிலாக, அதன் இணைய முகவரியை எண்களில் தந்து பார்க்கவும். நாம் சொற்களில் அமைக்கும், இணைய தள முகவரிகள், முகவரிகளே அல்ல. அவை குறிப்பிட்ட இணைய முகவரிகளுக்கான திசை காட்டிகளே. இந்த சொற்கள், அதற்கான எண்களில் அமைந்த முகவரிகளைப் பெறுவதில், ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், இந்த வகையில் அந்த பிரச்னை தீர்க்கப்பட்டு உங்கள் தளம் உங்களுக்குக் கிடைக்கலாம். இந்த எண்களால் அமைந்த முகவரிகளைப் பெறுவதற்குப் பல வழிகள் உள்ளன.
எளிதான ஒரு வழி, http://www.selfseo.com/find_ip_address_of_a_website.php என்ற முகவரியில் உள்ள தளத்தின் மூலம் பெறுவதுதான். இந்த தளம் சென்று, சொற்களில் அமைந்த முகவரியை டைப் செய்து என்டர் தட்டவும். அல்லது Enter என்ற பட்டனில் தட்டவும். எண்களினால் ஆன முகவரி கிடைக்கும். அதனை காப்பி செய்து, பிரவுசரின் முகவரி கட்டத்தில் ஒட்டி முயற்சிக்கவும். இதன் பின்னும் இணையதளம் கிடைக்கவில்லையா! அமைதியாக இருங்கள். தவறு உங்கள் பக்கம் இல்லை. தளத்தின் பக்கம் தான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. தளத்தை அமைத்து இயக்குபவர்களாகப் பார்த்து அதனைச் சரி செய்தால் தான் உண்டு.
ஆனால் எண்களால் ஆன ஐ.பி. முகவரி மூலம் முயற்சிக்கையில், தளம் கிடைத்தால், முகவரிக்கான எண் முகவரி கிடைப்பதில் ஏதோ சிக்கல் உள்ளது என்று பொருள். எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், இந்த பிரச்னை இருந்து கொண்டுதான் இருக்கும்.
இந்தச் சூழ்நிலையில், இன்னொரு வழியில் முயற்சிக்கலாம். நோட்பேடினைத் திறக்கவும். அதில் C:\Windows\System32\drivers\etc\hosts என டைப் செய்து என்டர் செய்திடவும். இப்போது உள்ள டெக்ஸ்ட் பைலில் உங்கள் இணையதள முகவரி கிடைக்கிறதா எனப்பார்க்கவும். அந்த முகவரி இருந்தால், அதன் முன் # என்ற அடையாளத்தை இணைக்கவும். பின் அந்த பைலை சேவ் செய்து, பின் பிரவுசரை மீண்டும் இயக்கவும். இப்போதும் தளம் கிடைக்கவில்லை என்றால், கம்ப்யூட்டரை மூடிவிட்டு, இன்னொரு கம்ப்யூட்டரில் முயற்சி செய்து பார்க்கவும். குறிப்பாக பொதுவான கம்ப்யூட்டர் ஒன்றில் முயற்சி செய்து பார்க்கவும்.
இணைய தளம் சரியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தால், நிச்சயம் மேலே குறிப்பிட்ட வழிகளில் ஒன்றில், தளம் கிடைக்க வாய்ப்புண்டு. இல்லையேல் தளம் தானாகச் சரி செய்யப்படும் வரை பொறுத்திருந்து, அவ்வப்போது பெற முயற்சிக்கவும்.
மைக்ரோசாப்ட் தரும் இலவச இணையதளம்
உங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பின் மூலம் தொழில் ரீதியான ஓர் இணைய தளம், தளப் பெயர், இமெயில் வசதி மற்றும் அதனைத் தாங்கி இயக்கும் வசதி என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் பெறலாம். இவை அனைத்துமே இலவசம் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ஒன்று. இதனைப் பெற நீங்கள் முதலில் அணுக வேண்டிய தள முகவரி http://smallbusiness.officelive.com/en-ca/ தளத்தில் நுழைந்தவுடன் அங்குள்ள "Create a Free Website" என்ற லிங்க்கில் கிளிக் செய்திடவும். உடன் இதில் பதிவு (Sign In) செய்திட செய்தி கிடைக்கும். அனைத்தும் பதிவு செய்து உறுதியானவுடன், மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் மெயின் விண்டோவிற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். இங்கு தான் உங்களுக்குத் தேவையான இமெயில் வசதி, தளப் பெயர், தள வடிவமைப்பு ஆகியவற்றைப் பெறலாம். நீங்களே உங்கள் தளத்தினை வடிவமைக்கலாம். அதற்கான டூல்கள் இங்கு தரப்பட்டுள்ளன. இங்கு சென்று இந்த டூல்களைப் பற்றித் தெரிந்த பின்பே, இணையதளம் ஒன்றினை வடிவமைப்பது எவ்வளவு எளிது என்று அறிந்து கொள்ளலாம்.
"Design Site" லிங்க்கில் கிளிக் செய்தவுடன் இரண்டு விண்டோக்கள் திறக்கப்படும். ஒரு விண்டோவில் வெப்சைட் மேனேஜர் பக்கம் கிடைக்கிறது. இன்னொன்றில் வெப் டிசைன் டூல்கள் தரப்படுகின்றன. இதற்குக் கீழாக ஹோம் பேஜ் ஒன்று தரப்பட்டு நீங்கள் எடிட் செய்வதற்கு ரெடியாக இருக்கும். அதிலேயே உங்கள் தளத்திற்கான "About Us" மற்றும் "Contact Us" தயாராக இருப்பதனைக் காணலாம். இதன் பின்னர், அதில் தரப்பட்டுள்ள எளிதான யூசர் இன்டர்பேஸ் மூலம் தளத்தினை வடிவமைக்கலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் தரும் ஷேர் பாய்ண்ட் பயன்படுத்தியவர்களுக்கு இது இன்னும் எளிதாகத் தோன்றும்.
தளத்தின் ஹெடர் டெக்ஸ்ட்டை விரும்பியபடி மாற்றலாம். அதற்கான பாப் அப் விண்டோக்கள் அடுத்தடுத்து கிடைக்கின்றன. டெக்ஸ்ட்டை நமக்கேற்ற வகையில் பார்மட் செய்திடலாம். இதில் நம் இலச்சினையைச் சேர்த்து அமைக்கலாம். எளிதான டூல்களும், வழி நடத்தும் குறிப்புகளும் இணைந்து நம் இணைய பக்கத்தினை எளிதாக உருவாக்க உதவுகின்றன. மேலும் இது இலவசம் என்பது கூடுதல் சிறப்பாகும். எதற்கும் ஒருமுறை சென்று பார்த்து பயன்படுத்திப் பாருங்கள்.
Desktop
டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களைச் சற்றுப் பெரிதாக வைத்துக் கொள்ளும்முறை
கீழே தரப்பட்டுள்ள நடைமுறை மூலம், ஐகான்களைச் சிறிதாகவும், பெரிதாகவும் மாற்றலாம். டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Appearance என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். Item என்பதன் கீழ் கிடைக்கும் பட்டியலில் Icon என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Size என்ற இடத்தில் கிடைக்கும் அம்புக் குறிகளைப் பயன்படுத்தி, ஐகான்களின் அளவைப் பெரிதாகவோ, சிறியதாகவோ அமைக்கலாம். மாற்றங்களை ஏற்படுத்தியபின், Apply என்பதில் கிளிக் செய்திடவும்.
இதே விண்டோவில் Font மற்றும் Size என்று இருப்பதனைப் பார்க்கலாம்.
இன்னொரு மாற்றத்தையும் இதில் ஏற்படுத்தலாம். ஒவ்வொரு ஐகானுக்கிடையில் உள்ள தூரத்தினை மாற்றலாம். ஐகான்கள் திரையில் நெருக்கமாக இருப்பதாக உணர்ந்தால், அவற்றை இன்னும் சற்று இடைவெளியில் அமைக்கலாம். Item என்பதன் கீழ் இரண்டு ஆப்ஷன்கள், Icon Spacing (Horizontal) மற்றும் Icon Spacing (Vertical), இருப்பதனைப் பார்க்கலாம். இவற்றைப் பயன்படுத்தி, ஐகான்கள் அமையும் இட வெளியை அமைக்கலாம்.
நீங்கள் விண்டோஸ் விஸ்டா அல்லது விண்டோஸ் 7 வைத்திருந்தால், மேலே சொன்ன வேலை எல்லாம் தேவையில்லை. ஜஸ்ட், டெஸ்க் டாப் சென்று, கண்ட்ரோல் கீயை அழுத்தியவாறே, மவுஸின் ஸ்குரோல் வீலை உருட்டினால், படங்களும் எழுத்து அளவும் சிறிது, பெரிதாவதைக் காணலாம். அல்லது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், வியூ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம்.
File Transfer பைல்களை மாற்ற
மிக எளிதாக ஒரு ட்ரைவிலிருந்து இன்னொரு ட்ரைவிற்கு பைல்களை மாற்ற இணையத்தில் புரோகிராம் ஒன்று உள்ளது. FreeCommander என இதற்குப் பெயர். இதனை http://www.freecommander.com/fc_downl_en.htm என்ற முகவரியில் உள்ள தளத்தில் டவுண்லோட் செய்து கொள்ளலாம். fc_setup.zip என்ற பைல் கிடைக்கும். இதனை செட் அப் செய்து இந்த புரோகிராமைப் பதிந்து இயக்கலாம். இது விண்டோஸ் எக்ஸ்புளோரரின் இரண்டு விண்டோக்களை அடுத்தடுத்து பக்கமாகத் தருகிறது. இதனால் இரு வேறு டைரக்டரிகளில் உள்ள பைல்களை இழுத்து விடுவது எளிது. இந்த புரோகிராமினை ஒரு பிளாஷ் ட்ரைவில் பதிந்து எடுத்துச் சென்று பயன்படுத்தலாம். கம்ப்யூட்டரில் கட்டாயம் இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
Toggle Key
டொகிள் கீ (Toggle Key) என்றால் என்ன?
சில கீகளின் செயல்பாட்டினை வைத்து இந்த பெயர் அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கீ போர்டில் சில தனிப்பட்ட இயக்கங்களுக்கு என்று பல கீகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக ஆங்கிலத்தில் கேப்பிடல் எனப்படும் பெரிய எழுத்தில் அடிக்க கேப்ஸ் லாக், டெக்ஸ்ட் செருக இன்ஸெர்ட், ஸ்குரோல் லாக், நம்லாக் (Caps Lock, Insert, Scorll Lock, Num Lock) போன்றவற்றைச் சொல்லலாம். இவற்றைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் அந்த பயன் பாட்டை நிறுத்தவும் ஒரே கீ பயன்படுத்தப் படுகிறது. எடுத்துக் காட்டாக பெரிய எழுத்து வேண்டும் என்றால் Caps Lock கீயை அழுத்துகிறோம். பின்னர் வேண்டாம் என்றால் அதனையே மீண்டும் அழுத்துகிறோம். மேலே சொன்ன அனைத்து கீகளையும் இவ்வாறே செயல்படுத்துகிறோம். இந்த செயல்முறையில் பயன்படும் கீகளையே டாகிள் கீ (Toggle Key) என அழைக்கிறோம்.