யார் யார் எந்தெந்த ஜூஸ் குடிக்கலாம்?
9 பழச்சாறுகள்...
`மாப்ள வாயேன்... ஒரு டீயைப் போட்டுட்டு வருவோம்!’ இது, சர்வசாதாரணமாக அன்றாடம் நாம் கேட்கும் வாசகம். சோர்வுற்ற தருணங்களில் நாக்கில்பட, நமக்குப் புத்துணர்ச்சி தரும் என நம்பவைக்க ஏதோ ஒரு பானம் நமக்குத் தேவையாக இருக்கிறது. இன்றைய டைட் ஷெட்யூல் வாழ்க்கைமுறைக்கு உடலுக்கும் உள்ளத்துக்கும் எனர்ஜி தரக்கூடிய பானங்களே தேவை. கார்பனேட்டட் குளிர்பானங்களிலோ, நாயர் கடை டீயிலோ கிடைக்காத அபார சத்துக்களை அள்ளி அள்ளித் தருபவை, பழங்களில் இருந்து எடுக்கப்படும் ஜூஸ்கள். எந்த ஜூஸால் என்ன பலன் கிடைக்கும் என்பது தெரியாமலேயே நாம் பல பழச்சாறுகளை அருந்திக்கொண்டுதான் இருக்கிறோம்.
ஆப்பிள் ஜூஸ்
ஆப்பிள் ஜூஸைத் தொடர்ந்து குடித்து வரத் தோல் சம்பந்தமான நோய்கள் தீரும். அதோடு முடி உதிர்தல், பொடுகுத் தொந்தரவு போன்றவற்றுக்கு நிரந்தர தீர்வு தரும். இதில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைச் சீராக வைத்திருக்க உதவுகின்றன. இதில் குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் இருக்கிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதனைச் சாப்பிடுவது நல்லது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், இதயத்துக்கு வலுவினை தரக்கூடியது. கொழுப்புச் சத்தையும் குறைக்கும். ஆப்பிள், உடல் எடையைக் குறைக்கவும், உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மட்டுமின்றி புற்றுநோய் உட்பட பல நோய்களைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.
புற்றுநோயாளிகள், குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள், பெண்கள், எடை குறைக்க நினைப்போர் ஆப்பிள் ஜூஸை குடிக்கலாம். சர்க்கரை நோயாளிகள் மற்றும் இதய நோயாளிகள் அளவுடன் சாப்பிடலாம்.
ஆரஞ்சு ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஒரு சிறந்த பானம். எனவே, நம்மைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அல்சரை குணப்படுத்தும். இந்த பானத்தில் வைட்டமின் பி, சி, மற்றும் கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இருப்பதால், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, நரம்பு மண்டலத்தை அமைதியாக்கி, சீராகச் செயல்படவைக்கிறது.
எலும்பு தொடர்பான பிரச்னை இருப்பவர்கள், அல்சர் நோயாளிகள், 40 வயது கடந்தவர்கள், உடல் வெப்பம் அதிகமாக இருக்கும் பிரச்னை இருப்பவர்கள், நரம்பு தொடர்பான பிரச்னை இருப்பவர்களுக்கு ஏற்றது.
அன்னாசியில் வைட்டமின் பி மற்றும் சி இருப்பதால் செரிமான மண்டலம் சீராக இயங்கும். ரத்தக் குறைபாடு, தொண்டைப் புண், இருமல் போன்றவற்றையும் குணமாக்கும் சிறந்த மருந்து. ஆனால் கர்ப்பிணிகள் அன்னாசி ஜூஸை தவிர்க்கலாம். கெட்டக் கொழுப்பை குறைக்கும்.
தொண்டையில் தொற்று, இருமல், தொப்பை இருப்பவர்கள் சாப்பிட பலன்கள் கிடைக்கும்.
பப்பாளிப்பழ ஜூஸ்
பப்பாளிப்பழம் உடல் நலனுக்கு உகந்தது. பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், தாமிரம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, நார்ச்த்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் உள்ளன. பழங்களில் மிக மிகக் குறைவான கலோரி பப்பாளியில்தான் உள்ளது. 100 கிராம் பப்பாளியில் 32 கலோரிகளே உள்ளன. பப்பாளியை தினமும் உணவுடன் சேர்த்துக்கொண்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம். பப்பாளி ஜூஸ் அருந்திவந்தால், உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். குறிப்பாக, கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.
கண் பிரச்னையிருப்போர், பார்வைக் குறைபாடு, வறண்ட சருமத்தினர், உடல்பருமானவர், ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்கள் சாப்பிட ஏற்றது.
திராட்சைப்பழ ஜூஸ்
மார்பகப் புற்றுநோய் செல்களை அழிப்பதால், பெண்கள் இதனை அருந்தலாம். திராட்சைப்பழ ஜூஸைத் தொடர்ந்து காலையில் சர்க்கரை சேர்க்காமல் குடித்துவர, ஒற்றைத் தலைவலி குணமாகும். ஆஸ்துமாவையும் குணப்படுத்தக்கூடியது. நுரையீரலுக்கு நல்லது.
மார்பகப் புற்றுநோயாளி, புற்றுநோயாளிகள் என அனைவருமே அருந்தலாம்.
இதய நோயாளி அளவுடன் குடிக்க வேண்டும்..
மாதுளம்பழ ஜூஸ்
தினமும் ஒரு கப் மாதுளம்பழச் சாறு குடித்துவர, 15 நாட்களில் டெஸ்டோஸ்டீரான் சுரப்பின் அளவு அதிகரிக்கும். இதனால் எலும்பு, தசை தொடர்பான நோய்கள் குணமாகும். பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டால், கர்ப்பப்பை, சினைப்பைப் பிரச்னைகள் குணமாகும். சருமத்துக்கு நல்லது.
பெண்கள், கர்ப்பப்பை பிரச்னை, ரத்தசோகை பிரச்னை உள்ளவர்கள் அருந்தலாம்.
பேரீச்சைப்பழ ஜூஸ்
பேரீச்சை ஜூஸைத் தொடர்ந்து குடித்தால், உடலில் உள்ள ரத்தத்தின் அளவு அதிகரிக்கும். மாதவிடாய்க் காலங்களில் ஏற்படும் அதீத ரத்தப்போக்கு பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக அமையும். பற்களுக்கும் எலும்புகளுக்கும் வலு அளிக்கும். மலச்சிக்கலை தீர்க்கும். இரும்புச்சத்து நிறைந்தது.
ரத்தசோகை உள்ளவர்கள், கர்ப்பிணிகள், கால்சியம் குறைபாடு உள்ளவர்கள் அருந்தலாம்.
கேரட் ஜூஸ்
வயிற்றில் புண்கள் இருப்பவர்களுக்கு, கேரட் ஜூஸ் நல்ல மருந்து. கல்லீரலின் இயக்கத்தை சீராக்கும். சருமத்துக்கான டானிக் இது. பார்வை குறைபாடுகளை தீர்க்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும். இது, உடம்புக்கு குளிர்ச்சி தருவதால், மதிய வேளைகளில் அருந்தலாம். கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய கேரட் ஜூஸ் பருகலாம். சளி தொந்தரவு உள்ளவர்கள், அதிலிருந்து விடுபட்ட பின்னரே கேரட் ஜூஸைப் பருக வேண்டும்.
பார்வை குறைபாடுள்ளவர்கள், சீரான சருமம் கிடைக்க, முடி வளர்ச்சிக்கு, அல்சர் பிரச்னை இருப்பவர்கள், நெஞ்செரிச்சல் தொல்லை இருப்பவர்கள் குடித்து வரலாம்.
எப்போதும் எலுமிச்சை ஜூஸைத்தான் பலரும் விரும்பிச் சாப்பிடுவார்கள். இதில் உள்ள வைட்டமின் பி, சி உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, சருமத்தை அழகாக வைத்திருக்க உதவும். செரிமானத்தையும் அதிகரிக்கும். இந்த ஜூஸ் புற்றுநோயைக் குணப்படுத்தக் கூடிய வல்லமை கொண்டது.
அசைவ உணவு சாப்பிட்ட பிறகு குடிக்கலாம். தொண்டை வலி, புண் இருப்பவர்கள், மயக்கம் வரும் பிரச்னை இருப்பவர்கள், புத்துணர்ச்சி பெற என அனைவருமே குடிக்கலாம்.
அனைத்து ஜூஸ்களுமே ஏதோ ஒரு வகையில் பல நன்மைகளைத் தருபவைதான். நம் உடலுக்குப் பொருத்தமான ஜூஸைப் பருகுவோம்... ஆரோக்கிய வாழ்வுக்கு அஸ்திவாரமிடுவோம்.