சிறுநீரகக் கல் என்பது எது
நாம் குடிக்கும் தண்ணீரிலும் சாப்பிடும் உணவிலும் கால்சியம், பாஸ்பேட், ஆக்சலேட், யூரியா என்று பல தாது உப்புகள் உள்ளன. பொதுவாக உணவு செரிமானமான பிறகு இவை எல்லாமே சிறுநீரில் வெளியேறிவிடும். சமயங்களில், அவற்றின் அளவுகள் ரத்தத்தில் அதிகமாகும்போது, அவை சிறுநீரில் வெளியேறுவதற்கு சிரமப்படும். அப்போது சிறுநீரகம், சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் இந்த உப்புகள் ஒரு படிகம்போல் படிந்து, கல்போலத் திரளும்.கடுகு அளவில் ஆரம்பித்து பெரிய நெல்லிக்காய் அளவுக்கு வளர்ந்துவிடும். இதுதான் சிறுநீரகக் கல். இது யாருக்கும் வரலாம். வழக்கத்தில் பெண்களைவிட ஆண்களுக்கே இது அதிக அளவில் ஏற்படுகிறது.
அதிகமாக வெயிலில் அலைவது / வேலை பார்ப்பது, போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, உடலில் ஏற்படும் நீரிழப்பு, தவறான உணவு முறைகள், குறிப்பாக, உப்பு, மசாலா, புளிப்பு மிகுந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது, குடிநீரில் கால்சியம், குளோரைடு அதிகமாக இருப்பது, சிறுநீர் கழிப்பதைத் தள்ளிப்போடுவது, உடற்பருமன், பரம்பரை போன்றவை சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு வாய்ப்பைத் தருகின்றன.
கற்கள் என்ன செய்யும்
விருந்துக்கு வந்த இடத்திலேயே திருடின கதையாக, சிறுநீரகப் பாதையில் உருவாகும் கற்கள் சிறுநீர் ஓட்டத்தை முதலில் தடை செய்யும். இதன் விளைவாக, சிறுநீரகத்திலோ,
சிறுநீர்ப் பையிலோ சிறுநீர் தேங்கும். இது சிறுநீரகத்துக்குப் பின்னழுத்தத்தைக் கொடுக்கும். இதனால் சிறுநீரகம் வீங்கும். இதை கவனிக்காவிட்டால்,
சிறுநீரகம் பழுதாகி, ஆரோக்கியத்தைப் பாதிக்கும்.சிறுநீரகத்துக்குள் கல் இருந்தால், ஆரம்பத்தில் எந்த அறிகுறியும் இருக்காது. கல் நகரும்போதும்,
சிறுநீரகக் குழாயில் அது அடைப்பை ஏற்படுத்தும்போதும்தான் வலி உண்டாகும். முதுகில், வலது அல்லது இடது விலா எலும்புகளுக்குக் கீழ் திடீரெனக் கடுமையாக வலி உண்டாகி, முன் வயிற்றுக்குப் பரவும்.
சிறுநீரகக் குழாயில் கல் இருந்தால், அடிவயிற்றில் வலி தோன்றி, பிறப்புறுப்புக்குப் பரவும். சிறுநீர்ப்பையில் கல் இருந்தால், தொப்புளுக்குக் கீழ் வலி துவங்கி, சிறுநீர் துவாரம்வரை பரவும். இத்துடன், அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், வலி, கடுப்பு, ரத்தம் கலந்து வருவது, குமட்டல், வாந்தி போன்ற அறிகுறிகளும் சேர்ந்துகொள்ளும்.சிறுநீர்ப் பாதையில் உள்ள கல்லைக் கண்டறிய வயிற்றை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் அல்லது சி.டி.ஸ்கேன் எடுத்துப் பார்க்க வேண்டும். சிலருக்கு 'ஐவிபி' எனும் பரிசோதனையும் தேவைப்படும். கல் எந்த இடத்தில் உள்ளது, அதன் அளவு என்ன, எந்த வகையான கல், சிறுநீரகம் பாதிக்கப்படுள்ளதா எனப் பல விவரங்களை இவற்றில் தெரிந்துகொள்ளமுடியும்.
சிகிச்சை என்ன
சுமார் 5 மி.மீ. அளவுள்ள கற்களை சரியான உணவு முறை, போதுமான தண்ணீர் குடிப்பது, குளுக்கோஸ் ஏற்றுவது, மருந்து, மாத்திரைகள் மூலமே கரைத்துவிடலாம்.
1.5 செ.மீ. அளவுள்ள கற்களை 'ஷாக் வேவ் லித்தோட்ரிப்ஸி' எனும் முறையில் வெளியிலிருந்தே ஒலி அலைகளைச் செலுத்தி, கல்லின்மீது அதிர்வை ஏற்படுத்தி உடைத்துவிடலாம்.
சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை, சிறுநீர்க் குழாய் ஆகியவற்றில் உள்ள கற்களை 'யூரிட்ரோஸ்கோப்பி' எனும் முறையில் வளையும் தன்மையுள்ள குழாய்போன்ற ஒரு கருவியை சிறுநீர்த் துவாரம் வழியாக உள்ளே செலுத்தி கற்களை நசுக்கியும் லேசர் கொண்டு உடைத்தும் எடுத்துவிடலாம்.
ஆனால், சிறுநீரகத்துக்குள் உள்ள கற்களை இந்த முறையில் எடுக்க முடியாது. 2 செ.மீ.க்கும் அதிகமான அளவில் உள்ள கற்களை 'நெப்ரோ லித்தாட்டமி' எனும் முறையில் முதுகில் சிறிய துளைபோட்டு அறுவை சிகிச்சை மூலமே அகற்ற முடியும். கோடையில் 2 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12:00 மணியிலிருந்து மாலை 4:00 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது. அவசியம் செல்ல வேண்டுமென்றால் குடையை எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை நிழலில் செல்வது நல்லது.
நிறைய தண்ணீர்
கோடையில் தினமும் மூன்றிலிருந்து ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம். ( சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த ஆலோசனை பொருந்தாது. இவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவுக்குத் தண்ணீர் குடித்க்க வேண்டும்). அதிக அளவில் திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். ஒருவருக்குத் தினமும் 5 கிராம் சமையல் உப்பு போதும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், துரித உணவுகள், பேக்கிங் சோடா கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
இளநீர், சிட்ரஸ் பழச்சாறுகள், வாழைத்தண்டுச் சாறு, பார்லி தண்ணீர், நீர்மோர் போன்றவற்றை அதிக அளவில் அருந்த வேண்டும். நார்ச்சத்து மிகுந்த கம்பு, சோளம், குதிரைவாலி, தினை, சாமை போன்ற சிறுதானிய உணவுகளை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆரஞ்சு, எலுமிச்சை, கொய்யா, பேரீச்சை, இலந்தைப்பழம், சீத்தாப்பழம்,
வெள்ளரிக்காய், தர்ப்பூசணி, கிர்ணி, அன்னாசி போன்ற பழங்களையும், சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், சவ்சவ் போன்ற நீர்ச்சத்துள்ள காய்கறிகளையும் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவை சிறுநீரின் அமிலத் தன்மையை குறைத்துவிடும். சிறுநீர்க் கழிப்பை அதிகப்படுத்தும். அப்போது சிறிய அளவில் உள்ள கற்கள் கரைந்து வெளியேறிவிடும்.
எதை சாப்பிடக் கூடாதுசிறுநீர்ப் பாதையில் கல் உள்ளவர்கள் காபி, தேநீர், பிளாக் டீ, கோலிசோடா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. கோக் பானங்கள், இதர மென்பானங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகவே ஆகாது. உலர் பழங்கள், பாதாம்பருப்பு, வாதாம்பருப்பு,
முந்திரிப்பருப்பு, பீட்ரூட், சோயாபீன்ஸ், சேனைக்கிழங்கு, பசலைக் கீரையைச் சாப்பிட வேண்டாம். கேழ்வரகு, கீரைகள், கருணைக்கிழங்கு,
வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, மீன், இறால், நண்டு, முட்டையின் வெள்ளைக்கரு, பால், தயிர், வெண்ணெய், நெய், பாலாடைக்கட்டி, பால்கோவா, பால் அல்வா, இறைச்சி போன்ற உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.