Monday, November 9, 2020

ஏ.எம்.ராஜா

 


ஏ.எம்.ராஜா வாழ்கை பயணம்

, ‘பழகத்தெரியவேணும், உலகில் பார்த்து நடக்க வேணும்‘, ‘முடியும் என்றால் முடியாது‘, ‘பிருந்தாவனமும் நந்தகுமாரனும்‘, ‘வாராயோ வெண்ணிலாவேஎன்று ராஜா தொட்டதெல்லாம் பொன்னாச்சு. காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்கு பொருத்தமாகப் பாடக் கூடியவர் பாடல் மன்னன் .எம்.ராஜா என்று ஊர்ஜிதப்படுத்திய படம். அதே 1955ல் வந்த படம் மாடர்ன் தியேட்டர்ஸின் மகேஸ்வரி. இசை ஜி. ராமநாதன். மாடர்ன் தியேட்டர்ஸின் ஒலிப்பதிவுக் கூடத்தில்.... அழகு நிலாவின் பவனியிலே அமைதி கொஞ்சும் இரவினிலே அல்லி மலர்ந்தே ஆடுதே ஆடும் காரணம் ஏனோ? ....என்ற பட்டுக்கோட்டையின் பாடலை ராஜா-ஜிக்கி பாடிக் கொண்டிருந்தார்கள். ஒத்திகைக்குப் பிறகு, வாத்தியக் கலைஞர்களும் ஒலிப்பதிவாளர்களும் தேநீர் அருந்த வெளியே சென்றார்கள். ஒலிப்பதிவுக் கூடத்தில் ராஜாவும் ஜிக்கியும். பல வருடங்களாக இணைந்து பாடிக்கொண்டிருந்தவர்கள் தான் ஆனால் ராஜாவுக்கு ஏதோவொரு தயக்கம்.

ஜிக்கியின் கையில் இருந்த பாட்டுப் பிரதியை ராஜா கேட்டு வாங்கினார். அதில் ஏதோ எழுதிவிட்டு, ஜிக்கியிடம் கொடுத்தார். பாட்டில்தான் ஏதோ திருத்தம் செய்திருக்கிறார் என்று ஜிக்கி நினைத்தார். ராஜா அந்தக் தாளில் எழுதி இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார் ஜிக்கி... ‘உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, உன் பாட்டும் ரொம்ப பிடிச்சிருக்கு, உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசையா இருக்கு. உன் அபிப்பிராயம் என்ன?“ ‘அழகு நிலாவின் பவனியிலேபாடல் பிரதியில் ராஜா இப்படி எழுதியிருந்தார். இசையில் எந்த சங்கதி போட வேண்டும் என்றாலும் எளிதாக சமாளிக்கக் கூடியவர்தான் ஜிக்கி. இந்தப் புதிய சங்கதியை எப்படி சந்திப்பது என்று தெரியாமல் விழித்தார்!

அதுவரை, தன் சொந்தங்களின் வாழ்க்கை வசதிகளைப் பற்றியே நினைத்து வந்த ஜிக்கி, தன் சொந்த வாழ்க்கையைப் பற்றி முடிவெடுக்க வேண்டிய நிலையில் நின்றார். பாட்டுத் துணையாக வந்து, வீட்டுத் துணையாக வரும்படி தன்னை அழைத்தவரிடம், ‘என் பெரிய குடும்பமே என் ஒருத்தியின் வரும்படியில் தான் நடக்கிறதுஎன்று தெரிவித்தார் ஜிக்கி. ‘உன்னைத்தான நான் விரும்புகிறேன். உன் சொத்துக்களை அல்ல. கட்டிய புடவையோட நீ வந்தால் போதும்‘ – இது ராஜா. முறைப்படி பெண் கேட்டு, ராஜாவின் அம்மா லக்ஷமம்மாவும், அக்கா நாகம்மாவும் ஜிக்கியின் வீட்டிற்குச் சென்றார்கள். பிறந்த வீட்டிற்குப் பாதி, புகப் போகும் வீட்டிற்கு பாதி என்று தன் சொத்துக்களைப் பிரித்து, ராஜாவின் கை பிடிக்கத் தயாரானார் ஜிக்கி.

மெல்லிசை முன்னோட்டம்

கெட்டி மேளம் கேட்கும் முன், ராஜாஜிக்கி குரல்களில் பல டூயட்டுகள் பதிவாகின... காதலன் வேகத்தையும், காதலி நிதானத்தையும் காட்டுவதாக அமைந்த பாடல் – ‘திரை போட்டு நாமே‘ (ராஜா ராணி – 1956). ராஜாவின் மென்மையும் ஜிக்கியின் துள்ளலும் பின்னிப் பிணைந்து வரும் பாடல். சீரான கருத்தோட்டம் உள்ள மருதகாசியின் வரிகளை, சுகமான மெட்டுத்தறியிலே நெய்திருந்தார், இசை விற்பன்னர் டி.ஆர்.பாப்பா. வாத்திய இசை சேர்ப்பில் புத்துணர்வு இல்லை என்றாலும், கவிதை நயமும், நல்ல மெட்டும், குரல் இனிமையும் இணைவது அழகு.

ஆரவல்லியில் ஆங்கில மெட்டு

தயாரிப்பாளர் டீ.ஆர். சுந்தரத்தின் விருப்பத்தின் பேரில், ராமநாதன் மேற்கிலிருந்து இறக்குமதி செய்த, கவுன் அணிந்த மெட்டுசின்னப்பெண் ஆன போதிலே‘ (ஆரவல்லி-1957). இதிலும் ஜிக்கியுடன் இணைகிறார் ராஜா. மண்ணின் மணம் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும். ‘வாசமிகும் மலர்ச் சோலையிலேஎன்றொரு பாடல். (யார் பையன்-1957). எஸ். தட்சிணாமூர்த்தி இசை. பரவாயில்லை ரகம். இந்தக் காலகட்டத்தில் உருவான ஒரு பாடல், நாதவட்டத்தில் இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறது. படம்ஆசை. பாடல் – ‘ஆசை பொங்கும் அழகு ரூபம், அணைந்திடாத அமர தீபம்‘. பாகேஸ்ரீ ராகத்தில் அமைந்த பாகு போன்ற மெட்டு, நிலாவின் பவனிபோல் நிதானமான காலப் பிரமாணம், சிருங்கார ரசம் சொட்டி, லாகிரி தரும் சின்ன சின்ன வார்த்தைகள், இத்தகைய மயக்கங்களின் வாகனமாக வரும் மோகனமான குரல்கள்... நிஜமாகவேஅணைந்திடாக அமர தீபம்தான் இந்தப் பாடல். பம்பாய் சினிமா சந்தையிலிருந்து எடுத்ததுதான். சரியான தேர்வுக்காகப் பாராட்டலாம். சுசீலாவின் இனிமையான சாரீரத்துடன் ராஜா இணைந்த பாடல்தேன் உண்ணும் வண்டு மாமலரைக் கண்டு‘ (அமர தீபம்-1956). திஸ்ர கதியில், துள்ளல் நடை. நெஞ்சை அள்ளும் மெட்டு. தந்தவர் சலபதிராவ். பாடலை இயற்றியவர்கவிஞர் கே.பி. காமாட்சி. ராகம் தழுவிய மோகனமான மெல்லிசையின் எடுத்துக்காட்டு இந்தப் பாடல்.

கஸல் போன்ற காதல் கீதம்

காதலரின் சோகச் சுமையை, சோகச் சுவையாகத் தருகிறது, ‘வருவேன் நான் உனது மாளிகையில் வாசலுக்கே‘. பிரிவின் அவலத்தை, குரல்கள் படம் பிடித்துக் காட்டும் விந்தையை நிகழ்த்தியவர் இசை அமைப்பாளர் டி.ஆர்.பாப்பா. படம்மல்லிகா – 1957. வாத்திய இசை சேர்ப்பும் சோகத்தை அழகாக அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. கஸல் பாடல்போல் ஒலிக்கும் கீதம். பாடியவர்கள் ராஜாசுசீலாபாடும் சிரமம் துளியேனும் காட்டாத பாணி

என்றன் கண்ணில் கலந்து விளையாடும்‘ (மல்லிகா-1957, உடன் பாடியவர் பி.சுசீலா), ‘தென்றல் உறங்கிய போதும (பெற்ற மகனை விற்ற அன்னை-1958, விஸ்வநாதன்ராமமூர்த்தி இசையில் உடன் பாடியவர் பி.சுசீலா), ‘பூவில் வண்டு போதை கொண்டு‘ (அன்பு எங்கே-1958, வேதா இசையில் உடன் இணைந்தவர்ஜமுனா ராணி), ‘உன் கண்ணில் ஆடும் ஜாலம்‘ (பூலோக ரம்பை – 1958, சி.என். பாண்டுரங்கம் இசையில் இணைந்த குரல் பி. சுசீலா)....முதல் பாட்டில் சிருங்காரம், இரண்டாவதில் சல்லாபம், மூன்றாவதில் சரசம், நான்காவதில் புன்னாகவராளியில் அமைந்த பண் இன்பம்... எந்தப் பாட்டை எடுத்தாலும், மெல்லிசை என்னும் சிவப்புக் கம்பளத்தில் ராஜாவின் ரம்மியமான குரல் ராஜநடை போடுவதைப் பார்க்கலாம்! தன் குரலுக்கு ஏற்ற சுகமான ஸ்தாயியைகீழ்மேல் வரம்புகளைஅமைத்துக் கொண்டு, பாடுவதில் உள்ள சிரமம் கேட்பவர்களுக்குத் துளியேனும் தெரியாமல் பாடிய மெல்லிசை மன்னர் ராஜா! திருமணம் படத்தில், ‘தங்க நிலவில் இன்பக் கதைகள் சொல்லித் திரிவதுண்டோஎன்று ராஜாவும்ஜிக்கியும் ஆபேரி ராகத்தின் சாயல்களை திஸ்ர நடையில் தாவவிட்ட ஆண்டான 1958ல்....அவர்கள் திருமணம் நடந்தது.

ராஜாஜிக்கி கல்யாணம்

லாயிட்ஸ் சாலையில் சோமயாஜுலு கட்டடம் (இன்றைய அவ்வை சண்முகம் சாலை, ஹேமமாலினி கல்யாண மண்டபம்). சாலை அடைக்கப்பட்டது. திரை உலகமே திரண்டு வந்தது. ராஜாஜிக்கி கல்யாணம் என்பதைராஜாஜிக்கிகல்யாணம் என்று சிலேடை செய்த இலங்கை வானொலி, நாள் எல்லாம் அவர்களின் காதல் கீதங்களை ஒலிபரப்பியது. திருமணப் பரிசாகவோ என்னவோ, தமிழ்த் திரை இசையில் ராஜாவுக்கு ஒரு புதிய வேலை காத்திருந்தது!

ரயில் சிநேகம்.

அது ஒரு கதை. நீலகிரி எக்ஸ்பிரஸ், சென்னையிலிருந்து மலைப் பயணம் செல்லும் வழியில் தொடங்கிய ஒரு பயணத்தின் கதை. சேலம் மாடர்ன் தியேட்டர்ஸுக்கு செல்லும் கலைஞர்களில் ஒரு கதாசிரியர், ஒரு பாடகர். கதாசிரியருக்கு இயக்குநர் ஆவதுதான் லட்சியம். பாடகருக்கோ இசை அமைப்பாளர் ஆவதுதான் குறிக்கோள். தங்கள் அபிலாஷைகளைப் பற்றி ரயில் பயணத்தின் போது இருவரும் அளவளாவிக் கொண்டார்கள். பாடகருக்கு ஒரு வாக்குத் தந்தார் கதாசிரியர். ‘எனக்கு இயக்கும் வாய்ப்பு கிடைத்தால், நீங்கள்தான் இசை அமைப்பாளர்.‘ வாய்ப்புக் கிடைத்தது. வாக்கும் காப்பாற்றப்பட்டது. அதனால் தமிழ் சினிமாவுக்கு கலை அம்சங்களிலும் இசை நேர்த்தியிலும் ஒரு புதிய திருப்பம் கிடைத்தது. படம் கல்யாணப் பரிசு (1959). புது இயக்குநர் ஸ்ரீதர். புதிய இசை அமைப்பாளர்.எம். ராஜா. கல்யாணப் பரிசு சூப்பர் ஹிட்டாடனது. ராஜாவின் இசையில் ஒலித்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் இனிமையான பாடல்கள்குரல்கள் ராஜா, சுசிலா, ஜிக்கிரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

வெல்லும் மெல்லிசை

ராகம் தழுவிய, ஆனால் ராக சொரூபத்தை வெளிக்காட்டாத, எளிமையும் இனிமையும் வாய்ந்த மெட்டுக்களை அமைப்பதில் ராஜாவுக்கு தனியொரு வீச்சு இருந்தது. சுத்த சாவேரியை, சுகமான மெல்லிசையாக்கியவாடிக்கை மறந்ததும் ஏனோ‘, ஒரு நல்ல எடுத்துக்காட்டு. கல்யாணப் பரிசின் ஒவ்வாரு பாட்டும் ஒரு முத்து. 1959ம் ஆண்டின் தீபாவளிக்காக .எம்.ராஜா ஏற்றிய மெல்லிசை மத்தாப்புஉன்னைக் கண்டு நான் ஆட. நாற்பது ஆண்டுகளாக தொடர்ந்து எரியும் அதிசய மத்தாப்பு இது. ஹரிகாம்போஜியை ஆதாராமாகக் கொண்ட ராகத்தில் அமைந்த அருமையான பாடல். ராகத்தின் ரூபத்தை தெளிவாகக் காட்டாமல், காதுக்கு இனிமையான, காட்சிக்குப் பொருத்தமான மெட்டை ராஜா அமைத்திருக்கிறார். ‘ஆசையினாலே மனம்‘, ‘காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்‘, ‘துள்ளாத மனமும் துள்ளும்‘, இவை சூழ்நிலைக்கு ஏற்ப அமைந்த மெட்டுக்கள் மட்டும அல்ல. தனிப் பாடல்கள் என்ற முறையில் கொண்டால் கூட, நளினமும் நயமும் பொருந்திய மெல்லிசை வடிவங்கள். ராஜாவின் தனித்துவம் மிக்க இசை அமைப்பில் கல்யாணப்பரிசு மாபெரும் வெற்றியைப் பெற்றிருந்தும், ஸ்ரீதரின் அடுத்த படைப்பான மீண்ட சொர்க்கம் (1960), சலபதிராவ் அழைத்திருந்தார். மீண்ட சொர்க்கம் தோல்விப் படம் என்றாலும், ராஜா, பி. சூசீலாவுடன் அதில் பாடிய இரண்டு பாடல்கள்கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்‘, ‘துயிலாத பெண் ஒன்று கண்டேன்‘ – இரண்டாயிரத்தை இளமையுடன் எதிர் நோக்கி நிற்கின்றன! சிலருக்குத்தான் இந்த காயகல்பம் சாத்தியம் ஆகிறது. ஐம்பதுகளின் இறுதி ஆண்டுகளிலும், அறுபதுகளிலும், குறிப்பிடத்தக்க பல பாடல்கள் ராஜாவின் குரலில் ஒலித்தன. ‘மைனர் லைஃபு ரொம்ப ஜாலி‘ (இல்லறமே நல்லறம் – 1958), ‘துள்ளித் துள்ளி அலைகள் எல்லாம்‘ (தலை கொடுத்தான் நம்பி – 1959), ‘கண்பாடும் பொன் வண்ணமே‘ (சகோதரி-1959), ‘குயிலிசையும் குரலிசையும்‘ (சங்கிலித் தேவன்-1960), ‘கண்ணாலே நான் கண்ட கணமே‘, ‘பழகும் தமிழே‘ (பார்த்திபன் கனவு).... ராஜாவின் பாடல் பட்டியல்களில் பதர்களைப் பொறுக்குவது கடினமான காரியம். இங்கே தரப்பட்டிருப்பது கைகாட்டிதான். ஊருக்கு வழி. ஊர் அல்ல. சுதர்சனத்தின் இசை அமைப்பில் அந்த களத்தூர் கண்ணம்மா(1960), ஜெமினி கணேசனின் மென்மையான காதல் பாணிக்கு ஏற்ப, ராஜாவுக்கு மூன்று குளிர்ந்த காதல் பாடல்கள் – ‘கண்களின் வார்த்தைகள் புரியாதோ’, ‘ஆடாத மனமும் ஆடுதே‘, ‘அருகில் வந்தாள்‘. (களத்தூர் கண்ணம்மாவின் இசை அமைப்பில் .வி.எம்மில் வயலின் கலைஞராக இருந்த செங்கல்வராயனுக்கு கணிசமான பங்கு இருந்ததாம்.)

தேனிசை நிலவு

காஷ்மீரின் குளிர்ச்சியை தன் இசை அமைப்பிலும் குரலிலும் கொண்டு வந்த ராஜாவின் இசையில், ஸ்ரீதர் காஷ்மீரில் எடுத்த படம் தேன் நிலவு (1961). இதில் பாட்டுப் பாடவா மாதரி லைட் பாடல்கள் ஒருபுறம், ராகரசம் குறையாத காலையும் நீயே (பசந்த் பஹார், பந்துவராளி, ஹம்சானந்தி அடங்கிய ராகமாலிகை) ஒரு புறம். (இரண்டாவது பாடலில் ஜானகியின் ஹம்மிங் இணைவதில் ஒரு தனி நேர்த்தி). ஊரெங்கும் தேடி -. கொலை முயற்சிக்க முன்னோட்டமான படகு பாட்டு. இதில் காதலையும் குரோதத்தையும் ராஜா மாறிமாறி பிரதிபலித்திருக்கும் விதம் அருமை. ராஜாவின் இயல்பான மெல்லிசைப் பாணியில் அமைந்த தேன்நிலவு பாடல்கள் அனைத்தும் ஹிட்டானாலும படம் தோல்வி அடைந்துவிட்டது. தேன்நிலவுடன், ஸ்ரீதர்ராஜா உறவு முறிந்து விட்டது. தேன் நிலவின் பின்னணி இசையைக் கூட ராஜா அமைக்க விரும்பவில்லையாம். எம்.ஜி.ஆர். போன்றவர்களின் தலையீட்டால் ராஜா செய்துமுடித்தாராம். நெஞ்சில் ஓர் ஆலயத்திற்கு இசை அமைக்க ஸ்ரீதர் ராஜாவிற்கு முன்னமேயே செக் கொடுத்திருந்தார். அதை திருப்பி அனுப்பினார் ராஜா. (நெஞ்சில் ஓர் ஆலயத்திற்கு இசை அமைக்கும்படி ஸ்ரீதர் விஸ்வநாதன்ராமமூர்த்தியைக் கேட்டுக் கொண்டார். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், ராஜாவின் வீட்டுக்குச் சென்று அவரது அனுமதியைப் பெற்றார் விஸ்வநாதன். ‘இதோ இப்படி வந்து இங்கே தான் உக்காந்தாருஎன்று நினைவு கூர்கிறார் ஜிக்கி. ‘நான் படத்தை பண்ணலைட்னனு விட்டுட்டேன். இனிமே யார் பண்ணாலும் எனக்குக் கவலை இல்லேஎன்று விஸ்வநாதனிடம் கூறினார் ராஜா.) ஏற்கனவே, விடிவெள்ளி (1960-கொடுத்துப் பார் பார், இடை கையிரண்டில் ஆடும்), அன்புக்கோர் அண்ணி (1960 – ஒரு நாள், இது ஒரு நாள்) போன்ற படங்களில் தனது இசை அமைப்புத் திறனைக் காட்டியிருந்த ராஜா, 1962ல் வெளி வந்த ஆடிப்பெருக்கில் மீண்டும் அருமையான பாடல்கள் தந்தார். தனிமையிலே இனிமை காண முடியுமா‘, ‘கண்ணிழந்த மனிதர் முன்னே ஓவியம் வைத்தால்‘....இவை ராஜாவின் மெலடி பாணிக்கு சான்றுகள்.

ராஜாவும் திரை உலகமும்

படித்துப் பட்டம் பெற்ற ராஜா, கண்டிப்பும் கட்டுப்பாடும் கொண்டவர். தன் பணியைக் குறித்து படு சீரியஸான கண்ணோட்டம் உடையவர். தன்னுடன் பணியாற்றுபவர்களும் அப்படியே இருக்க வேண்டும் என்று நினைப்பார். சினிமா உலகின் நெளிவுசுளிவுகளும், சினிமா நபர்களிடம் பழகும் போது காட்ட வேண்டிய நீக்கு போக்குகளும், ராஜாவுக்கு கைவராத விஷயங்கள். தமிழ் சினிமாவில் அவர் கொடிகட்டிப் பறந்தபோது இதெல்லாம் குறைகளாகத் தெரியவில்லை. காலம் மாறத் தொடங்கியபோது ராஜா தன்னை மாற்றிக்கொள்ளத் தயாராக இல்லை. சினிமா வருமானத்தைத் தவிர, அவருக்குச் சொந்தமான டூரிஸ்ட் கார்களின் மூலம் வருமானம் வந்துகொண்டிருந்தது. இந்தக் காரணத்தாலும் அவர் யாரிடமும் வளைந்துகொடுக்க அவசியம் இல்லாமல் போனதுபிடிக்கவில்லை என்றால் திரும்பி விடுவார்

தான் எதிர்பார்க்கிற சூழ்நிலை ஒரு இடத்தில் இல்லை என்றால், ஒலிப்பதிவு கூடத்தை விட்டு, பேசாமல் வீட்டுக்குச் சொன்றுவிடக் கூடியவர் ராஜா. “இப்படிப் பலமுறை நடந்திருக்கிறதுஎன்கிறார் ஜிக்கி. தமிழ்த் திரை உலகில், தன்னை சிலர் ஒதுக்க நினைக்கிறார்கள் என்று சந்தேகப்பட்ட ராஜா. ‘தானே ஒதுங்கி விட்டார். பின்னணிப் பாடகி என்ற முறையிலே, படுபிஸியாக இருந்த ஜிக்கியின் பணிக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தமிழிலிருந்து விலகிய ராஜா, அறுபதுகளில் பல நூறு மலையாளத் திரைப்பாடல்கள் பாடினார் என்பது பலர் அறியாத தகவல். ஜேசுதாஸ் அங்கே பிரபலம் ஆகும்வரை, ராஜாவின் ராஜ்ஜியம் தானாம். அதன் பிறகு உள்ளூர் கச்சேரிகள், வெளிநாட்டுக்கச்சேரிகள் என்று ராஜா இயங்கிக் கொண்டிருந்தார்.

மீண்டும் .எம்.ராஜா

முத்தாரமே, உன் ஊடல் என்னவோ (ரங்க ராட்டினம் – 1971, இசை வி. குமார்) செந்தாமரையே செந்தேன் மழையே (புகுந்த வீடு – 1972 – இசை சங்கர்கணேஷ்) ராசி, நல்ல ராசி (வீட்டுமாப்பிள்ளை – 1973 – இசை .எம். ராஜா) எதை கேட்பதோ எதைச் சொல்வதோ (பத்துமாத பந்தம் – 1974 இசை சங்கர்கணேஷ்) ராஜா-ஜிக்கியின் ராகம் இன்னும் ஓய்ந்துவிடவில்லை என்று காட்டிய பாடல்கள். எனக்கொரு மகன் பிறப்பான் என்றொரு படத்திற்கு ராஜா இசை அமைத்தார் (1975). இந்தப் படத்தில்மனதுக்குத் தெரியும்என்றது அதே ஜோடி. ஏனடா கண்ணா இந்த பொல்லாத்தனம், என்று அதே ஆண்டு அன்பு ரோஜாவில் ராஜாவின் குரல் சுசீவாவுடன் ஒலித்தது. (மீண்டும் உபயம் சங்கர்கணேஷ்). இப்படி எழுபதுகளில் கூட நிறைவாக ஒலித்த குரல்கள் பல வருடங்கள் ஏன் வனவாசத்திற்கு உள்ளாயின என்பதுதான் புரியத புதிர். ‘இன்றும் நல்ல இசையை உருவாக்கி, என்னால் சாதித்துக்காட்ட முடியும்என்று இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு அளித்த பேட்டியில் (ஜூன் 27, 1987), ராஜா கூறியிருந்தார். ஏப்ரல் 1989ல், தன் இசைக் குழுவுடன் தமிழ் நாட்டின் தெற்கு நோக்கி ராஜா பிரயாணம் செய்து கொண்டிருந்தார். வெள்ளியூருக்கு அருகே ரயில் பிளாட்பாரத்தில், ராஜாவின் உயிர் ஒரு விபத்திலே பிரிந்தது.