எங்கூர்ல ஒரு பழங்காலத்து ஊர்நாட்டு பேச்சு இன்னைக்கும் பொழக்கத்துல இருக்கு...
"ஆடி பொறந்துட்டா போதும்....
ஒழவுமாடு கால் நொண்டும்
பொண்டாட்டி கோச்சிகிட்டு அப்பன் ஊட்டுக்கு போயிடுவா
தலகூட்டுன வைக்கபோரு திடீர்னு சாய்ஞ்சிடும்
இன்னும் நிறைய சொல்லிட்டே போவாங்க...
ஆடிமாதம் என்பது எங்களைபோன்ற காவிரிடெல்டாவின் கடைமடை பாசன விவசாயிகளுக்கு உழவுப்பணியை தொடங்கும் தருணம். துவக்கத்தில் இப்டி நிறைய தடைகள் வரும் ஒவ்வொரு தடைவரும்போதும் மேலே சொன்ன வார்த்தைகளை சொல்லிக்கொண்டே சிரித்துகொண்டு எல்லாவற்றையும் தாங்கிதான் குடியானவர்கள் மேழி புடிக்கிறாங்க....வட்டிக்கு கடன் வாங்கிதான் மொதல் போடுவாங்க. அப்படியிருக்கையில் அவங்களுக்கு ஐப்பசி மாதம் என்பது நாத்துவிட்டு,பறிச்சி, நடவு நட்டு, அடி உரம் கொடுத்து, இரண்டாவது உரமும் கொடுத்து ஒரு பூச்சுகட்டுபாட்டு பணி முடித்து களையெடுத்து முடித்த கையோடு பயிரை அடைமழையிடம் கொடுத்துவிட்டு வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருப்பார்கள். அந்த நேரம் உழவர்கள் கையில் சுத்தமாக எந்த பொருளாதாரமும் இருக்காது. கடன் வாங்கியிருந்த காசும் சாகுபடிக்கு முதலீடாகியிருக்கும். அந்த நேரத்தில் எப்டி இவ்வளவு கொண்டாட்டமாக புத்தாடையுடுத்தி வெடிவெடித்து கொண்டாடுவது... சாத்தியமேயில்லை. அடித்தட்டு உழைக்கும் மக்களும் நடுத்தரவர்க்க குடியானவர்களும் ஒவ்வொரு தீபாவளியையும் ஏன் வருகிறது என்ற பொலம்பலோடுதான் கடக்கிறார்கள்.
குழந்தைகளுக்கு
எதுவும் தெரியாது. சீருடையில் பள்ளிக்கு போகிறவங்களுக்கு தீபாவளி முடித்த அடுத்தநாள் கலர் ட்ரெஸ் போட்டுட்டு போகலாம் என்பதும் தன்னால் போட்டுட்டு போகமுடியாது என்பது மட்டும்தான் தெரியும்.
ஔவை "கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை" ம்பார் ஆனால் "இளமையில் வறுமையைவிடவும் கொடிது குழந்தையில் வறுமை" இளமையில் வறுமை என்பது புரிதலொடு கூடிய பருவம் குறைந்தபட்சம் இந்த பெருமுதலாளித்துவ உலகை புரிந்துகொண்டு தனது வறுமையின் காரணத்தையாவது விளங்கிக்கொள்ள முடியும். ஆனால், குழந்தையில் வறுமையென்பது சொல்லி விளங்கிகொள்ளமுடியாதது. தீபாவளி முடித்த மறுநாள் பழைய சட்டையில் ஏதாவதொரு நல்ல சட்டையை போட்டுகொண்டு போகும்போது அங்க மொத்த பள்ளியும் வண்ணவண்ண ஆடைகளில் இருக்கும். ஏதாவது ஒரு க்ளாஸ்ல ஆசிரியர் தகுதித்தேர்வை வெறுமனே ஏட்டில் மட்டும் முடித்துவிட்ட வேறெந்த தகுதியில் இல்லாது பணிக்கு வந்த அந்த வாயிடமிருந்து வரும் வார்த்தைகள்
"செந்தில் ஏன் நீ மட்டும் பழயசட்ட போட்டுட்டுவந்துருக்க தீபாவளிக்கு சட்ட எடுக்கலயா"
"இல்லசார் எங்களுக்கு இந்த வருசம் தீபாவளி கிடையாது. எங்க தாத்தா செத்ததால சூதவம்"
"போனவருசமும் தாத்தா செத்துபோயிட்டார்னுதான் சொன்ன..."
"இல்லசார் இது அம்மாவ பெத்த தாத்தா"
அறிவிருந்தா இந்த பதிலே போதும் புரிஞ்சிக்கமுடியும்.
"அம்மாவழில செத்தாதான் சூதவம் இல்லையேடா செந்தில்...."
தாய்மாமன்கள் இருக்குற வீட்டுக்கு தீபாவளி வரிசை வரும்போது வெடி எக்சக்கமா வரும் நமக்கு அந்த கொடுப்பினையும் இல்ல. லெட்சுமிவெடி யானவெடி குருவிவெடி டபுள்சாட் லாம் இன்றும் எத்தனையோ குழந்தைகளுக்கு நீ காசில்லாவன் காசில்லாதவன் என்கிற வேட்டு சத்தமாகவே ஒலித்துகொண்டிருக்கிறது.ஒருபக்கம் சூழல் மாசு மறுபுறம் ஒரு சமூகத்தின் பொருளாதார வரவற்ற காலத்தில் பணம்படைத்தவர்களால் தங்கள் வர்க்கமேட்டிமையை தம்பட்டம் அடித்துகொள்ளும் மண்ணுக்கு சம்பந்தமற்ற பண்டிகை....
நமக்கு பள்ளி கல்லூரி எல்லாமே நாலும்மூனு ஏழு சட்டதுணியோட முடிஞ்சிட்டு சரி அரசு பள்ளில படிச்ச நமக்குதான் இந்த கதினா இதே நடுத்தர வர்க்கத்தில் இருந்துகொண்டு கொஞ்சம் சிரம்பட்டு மெட்ரிகுலேசன் ல படிக்கவச்சிடலாம்னு முயற்சியெடுத்து
படித்துமுடித்து
அப்டியே காவிரி டெல்டாமாதிரியான உழுகுடிகளின் நிலத்திலிருந்து பெருநகரம் போய் SRM,ஹிந்துஸ்தான் னு கல்லூரி முடிச்சிட்டு வந்தவங்களோட சட்ட கதையெல்லாம் கேட்டா நம்ம கதய விட கொடூரமா இருக்கு. ஆனா இந்த மண்ணோட ஐக்கியபட்டுபோனவனின் மனஉறுதியென்பது நீங்க புறத்தோற்றதில் பார்ப்பதை விட ஆயிரம் மடங்கு வலிமையானது .
பொங்கல் தமிழர் திருநாள் என்று சொல்வது வெறுமே தமிழ்தேசிய சிந்தனை மட்டுமல்ல அது குடியானவர்களுக்கும் விவசாய கூலிகளுக்கும் கூட பொருளாதார வரவு உள்ள காலம் அடுத்த ஒருவருடத்துக்கான தனது உணவுத்தேவை உறுதிசெய்யபட்டது என்பதை உணர்ந்து அதற்கு காரணமான சூரியனை போற்றும் இயற்கை பெருவிழா....
எந்தவொரு குடியானவனுக்கும் பொங்கல் விழாவை போல தீபாவளி இனிப்பானதாக இருந்தது இல்லை.