நடைமுறையில் ஒருவருக்குக் கிறுகிறுப்பு, தலைச்சுற்றல் வந்துவிட்டால், உடனே அது மூளை தொடர்பான நரம்புக் கோளாறு என்றுதான் பலரும் நினைக்கிறார்கள், அப்படியில்லை. பெரும்பாலான நேரங்களில் இந்தப் பிரச்சினைகளுக்குக் காதுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஏனென்றால், கேட்பதற்கு மட்டுமல்ல காது! உடலைச் சமநிலைப்படுத்த உதவும் உறுப்புகளில் முக்கியமானதும் காதுதான்!
காது கேட்பது எப்படி?
காதில்
வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று மூன்று பகுதிகள் உள்ளன. வெளிக்காது ஒலி அலைகளை உள்வாங்கிக் காதுக்குள்
கொண்டு செல்கிறது. நடுக்காதில் உள்ள
செவிப்பறை அந்த ஒலி அலைகளை ஏற்றுக்கொள்ளும்போது அதிர்கிறது.
இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள
சுத்தி, பட்டடை, அங்கவடி எனும் மூன்று எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழைந்து,
அங்கு நத்தை வடிவில் உள்ள ‘காக்ளியா'வை (Cochlea) அடைகின்றன.
அங்கு பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகைத் திரவங்கள் உள்ளன. இதில் எண்டோலிம்ப் திரவத்தின் மீது நடுக்காதின் அங்கவடி எலும்பு பிஸ்டன் போல் இயங்குவதால், இங்கேயும் அதிர்வுகள் உண்டாகின்றன. அப்போது இந்தத் திரவங்களில் மிதந்துகொண்டிருக்கும் இழை அணுக்கள் (Hair cells) தூண்டப்படுகின்றன. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவி நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பிறகுதான் நாம் கேட்பது பேச்சா, பாட்டா, இசையா, இரைச்சலா என்று வகை பிரித்துச் சொல்கிறது, மூளை.
சமநிலை காவலன்
உள்காதில், கேட்கும் திறனைத் தருகிற காக்ளியாவோடு உடலைச் சமநிலைப்படுத்துகிற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பகுதியும் உள்ளது. லேப்ரிந்தின் ஒரு பக்கத்தில் காக்ளியாவும், இன்னொரு பக்கத்தில் அரைவட்டக் குழல்களும் (Semicircular canals) இருக்கின்றன. லேப்ரிந்த் என்பது எலும்பு லேப்ரிந்த், படல லேப்ரிந்த் என்று இரண்டுவிதமாக இருக்கிறது.
மேலும் கீழும் உள்ள எலும்பு லேப்ரிந்தில் பெரிலிம்ப் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் எண்டோலிம்ப் திரவமும் உள்ளன. நாம் நடக்கும்போது, எழுந்திருக்கும்போது, ஓடும்போது, தலையைத் திருப்பும்போது படல லேப்ரிந்தில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அசைகிறது. இந்த அசைவின் வேகம், விகிதம், திசை, பரப்பு ஆகியவற்றைக் கொண்டு அரைவட்டக்குழல்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டாகும்.
இவற்றை இழை அணுக்கள் கிரகித்துச் செவிநரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லும். இந்தத் தகவல்களைக் கொண்டு நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா, தலையைத் திருப்புகிறோமா என்று நம் மூளை தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப மூளை செயல்பட்டு உடல் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து, உடலைச் சமநிலைப்படுத்துகிறது. இந்தச் சங்கிலிவினைச் செயல்பாட்டில் ஏதாவது குறை ஏற்படுமானால், காதிலிருந்து தவறான தகவல்கள் மூளைக்குச் செல்லும். அப்போது மூளை குழம்பிவிடும். இதனால்தான் தலைச்சுற்றல் ஏற்படுகிறது.
தலைச்சுற்றல் என்பது என்ன?
கிறுகிறுப்பு (Dizziness) என்பது மிதமான தலைச்சுற்றல். கிறுகிறுப்புக்கு அடுத்த நிலைதான் உண்மையான தலைச்சுற்றல். காதுப் பிரச்சினை காரணமாக உடல் சமநிலையை இழக்கும்போது, நம் கட்டுப்பாட்டில் இல்லாமல் தலை தனியாகச் சுற்றுவதுபோல் தோன்றும். அல்லது சுற்றியுள்ள பொருட்கள் சுற்றுவதுபோல் தோன்றும். இந்த வகைத் தலைச்சுற்றலை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டைகோ’ (Vertigo) என்கிறார்கள்.
இது முப்பது வயதுக்கு மேல் எவருக்கும் வரலாம் என்றாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்களில் நூறு பேரில் பத்து பேருக்குக் கட்டாயம் உள்ளது. ஆண்களைவிட பெண்களுக்குத்தான் தலைச்சுற்றல் தொல்லை அதிகம். என்றாலும், இந்த மாதிரித் தலைச்சுற்றல் காரணமாக உயிருக்கு ஆபத்து ஒன்றும் ஏற்பட்டுவிடாது என்பது ஓர் ஆறுதல்.
மூன்று வகை
மிதமான வகை: இந்த வகை தலைச்சுற்றல் உள்ளவர்களுக்குக் குமட்டலும் தலைச்சுற்றலும் சிறிது நேரம் இருக்கும். படுத்துக்கொண்டு சில மணி நேரம் ஓய்வு எடுத்துக்கொண்டால், இந்த அறிகுறிகள் தானாகவே மறைந்துவிடும்.
மத்திய வகை: இவர்களுக்குத் தலைச்சுற்றலோடு வாந்தியும் இருக்கும். படுத்து ஓய்வு எடுத்துக்கொண்டால் இவை சரியாகிவிடும்.
தீவிர வகை: இந்த வகைதான் மோசமானது. தலைச்சுற்றலும் அதிகமாக இருக்கும், வாந்தியும் மோசமாக இருக்கும். தலையை அசைத்தாலே இந்த இரண்டும் அதிகப்படும். நடந்தால் மயங்கிவிடுவோமோ என்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.
மினியர் நோய்
உள்காதில் எண்டோலிம்ப் திரவம் அளவுக்கு அதிகமாகச் சேருவதால் காதுக்குள் அழுத்தம் அதிகரித்துத் தலைசுற்றல் வருவது ஒரு வகை.
இது தூங்கும்போதுகூட வரும். இந்த வகை தலைசுற்றல் உடனே குறையாது; இரண்டு நாட்களுக்கு மேல்கூட நீடிக்கும். குமட்டலும் வாந்தியும் அதிகமாக இருக்கும். எப்போதும் படுக்கையிலேயே இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வு இருக்கும். காதில் இரைச்சல் கேட்கும். காது மந்தமாகக் கேட்கும். இதற்கு ‘மினியர் நோய்’ (Meniere’s disease) என்று பெயர்.
ஒரு திசை தலைச்சுற்றல்
சிலருக்கு ஏதாவது ஒரு பக்கமாகக் கழுத்தைத் திருப்பும்போது, மேல்நோக்கிப் பார்க்கும்போது, குனியும்போது, நிமிரும்போது தலை சுற்றும். இதற்கு ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ ( Benign Paroxysmal Positional
Vertigo) என்று பெயர். இதன் அறிகுறிகள் மினியர் நோய்க்கு எதிராக இருக்கும். குறிப்பாக, இந்த வகைத் தலைச்சுற்றலின்போது காதில் இரைச்சல் இருக்காது. காது கேட்பதில் பிரச்சினை இருக்காது. தலைசுற்றலுக்காகச் சிகிச்சை பெற வருகிறவர்களில், பெரும்போலோருக்கு இந்த வகை தலைசுற்றல்தான் முக்கியக் காரணமாக இருக்கும்.
உட்செவி நரம்புப் பிரச்சினை
ஜலதோஷம் பிடிக்கும்போது உட்செவி நரம்பில் வைரஸ் கிருமிகள் பாதிக்குமானால், நரம்பு வீங்கித் தலைச்சுற்றலை ஏற்படுத்தும். லேப்ரிந்த் பகுதியில் வீக்கம் ஏற்பட்டாலும், உட்செவியில் கட்டிகள் தோன்றினாலும் தலைச்சுற்றல் உண்டாகும். நடுக்காதில் சீழ் வைக்கும்போது, வெளிக்காதில் அழுக்கு சேர்ந்து அடைக்கும்போது எனப் பலவிதக் காதுப் பிரச்சினைகளால் தலைச்சுற்றல் ஏற்படலாம்.
இதர காரணங்கள்
பொதுவாகக் காதுப் பிரச்சினை காரணமாக 80 சதவீதம் பேருக்குத் தலைச்சுற்றல் ஏற்படுகிறது என்றால், மீதி 20 சதவீதம் பேருக்கு மற்றக் காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுகிறது. ஒற்றைத் தலைவலி, உயர் ரத்தஅழுத்தம், குறை ரத்தஅழுத்தம், மிகை ரத்தக்கொழுப்பு, ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைவு, கட்டுப்படாத நீரிழிவு நோய், தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சினை, தைராய்டு பிரச்சினை, கர்ப்பத்தின் ஆரம்பக் கட்டம், இதயத்துடிப்புக் கோளாறுகள், மருந்துகளின் பக்கவிளைவு, பார்வைக் கோளாறு, மன அழுத்தம், உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது, தலைக்காயங்கள் என்று பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுவதுண்டு.
பரிசோதனைகள் என்ன?
ஒருவருக்கு முதல்முறையாகத் தலைச்சுற்றல் ஏற்படும்போது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. அப்போதுதான் காரணம் தெரிந்து சிகிச்சை செய்துகொள்ளமுடியும். மேலும் தலைச்சுற்றல் என்பது பலருக்கும் மீண்டும் மீண்டும் வருகிற தொல்லை என்பதால், ஒருமுறை காரணத்தைக் கண்டுபிடித்துவிட்டால், அடுத்தமுறை இது தொல்லை தரும்போது பயப்படாமல் இருக்கலாம்.
பொதுவாக, தலைச்சுற்றல் ஏற்பட்ட நபருக்கு உட்கார்ந்த நிலையிலும் படுத்த நிலையிலும் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். முழு ரத்தப் பரிசோதனை உதவக்கூடும். ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் உள்ளிட்ட காதுக்கான அனைத்துப் பரிசோதனைகளும் தேவைப்படும். சில வேளைகளில் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் தேவைப்படும்.
சிகிச்சை என்ன?
தலைச்சுற்றலுக்குப் பலதரப்பட்ட காரணங்கள் உள்ளதால், முதலில் அடிப்படைக் காரணத்துக்குச் சிகிச்சை பெற வேண்டும். அப்போதுதான் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். காது தொடர்பான தலைச்சுற்றல் பிரச்சினையைப் போக்க, இப்போது நல்ல மருந்துகள் உள்ளன. இவை காதின் சமநிலை உறுப்புக்கு ஓய்வு கொடுப்பதால், தலைச்சுற்றல் சரியாகிறது. சில மருந்துகள் உட்செவிக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும். இதனாலும் தலைச்சுற்றல் கட்டுப்படும்.
மினியர் நோய்க்குக் காதின் செவிப்பறையில் ஸ்டீராய்டு ஊசி மருந்து அல்லது ஜென்டாமைசின் ஊசி மருந்தைச் செலுத்திக் குணப்படுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. இப்போது இதைக் குணப்படுத்துவதற்கு நல்ல மாத்திரைகள் வந்துள்ளன. இதில் குணமடையாதவர்களுக்கு அறுவைச் சிகிச்சை உதவுகிறது.
பயிற்சிகள் உதவும்
இங்கு
ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ‘ஒரு திசை தலைச்சுற்றல்’ உள்ளவர்களுக்கு மாத்திரை மருந்துகளால் மட்டுமே தலைச்சுற்றலைத் தடுக்க முடியாது. குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியதும் முக்கியம்.
படுத்திருக்கும்போது கண்களைச் சுழற்றுதல், உட்கார்ந்துகொண்டு கழுத்துத் தசைகளுக்கும் தோள்பட்டைத் தசைகளுக்கும் பயிற்சி அளித்தல், தலையை முன்னும் பின்னும் வளைத்தல், பக்கவாட்டில் வளைத்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பல பயிற்சிகள் இவ்வகை தலைச்சுற்றலைத் தடுக்க உதவுகின்றன. இவற்றைக் காது மூக்கு - தொண்டை மருத்துவர் மற்றும் இயன்முறை மருத்துவர் ஆலோசனையுடன் முறையாகவும் சரியாகவும் செய்துவந்தால், தலைச்சுற்றல் விடைபெற்றுக்கொள்வது உறுதி.
தடுப்பது எப்படி?
l உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
l அதிகக் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
l சரியான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
l ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளை நல்ல கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள்.
l புகைபிடிக்காதீர்கள்.
l மது அருந்தாதீர்கள்.
l போதை மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.
l தலை சுற்றுவதுபோல் உணர்ந்தால், உடனே தரையில் படுத்துக்கொள்ளுங்கள். கால்களைச் சற்று உயரமாக வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கமுடியாத
நிலைமைகளில் தரையில் உட்கார்ந்துகொண்டு, உடலை முன்பக்கமாகச் சாய்த்து, முழங்கால்களை மடக்கி, கால்களுக்கு இடையில் தலையை வைத்துக்கொள்ளுங்கள்.
l படுக்கையை விட்டு எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் முதலில் படுத்துக்கொண்டு அந்தப் பக்கமாகவே எழுந்திருங்கள்.
l எழுந்தவுடனேயே
நடந்து செல்ல வேண்டாம்.
l படுக்கையில் சிறிது நேரம் உட்கார்ந்த பிறகு நடந்தால், தலைசுற்றல் ஏற்படாது.
l படுக்கையிலிருந்து எழுந்ததும் எதையாவது எடுப்பதற்குக் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிக்காதீர்கள்.
l தலைக்குத் தலையணை வைக்காதீர்கள்.
l உடலின் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு உடனடியாக மாறாதீர்கள். உதாரணத்துக்கு, புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரளாதீர்கள்.
l அடிக்கடி தலைச்சுற்றல் பிரச்சினை உள்ளவர்கள், வீட்டுக் கழிப்பறை, குளியலறை போன்ற இடங்களில் பிடிமானக் கம்பிகளைச் சுவற்றில் பதித்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் தலைச்சுற்றல் வரும்போது இந்தக் கம்பிகளைப் பிடித்துக்கொள்வதன் மூலம் கீழே விழுவதைத் தடுக்கமுடியும்.
l வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரைவிரிப்புகளையே பயன்படுத்துங்கள்.
l இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள்.
l அடிக்கடி மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
l ரோலர் கோஸ்டர் போன்ற ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிருங்கள்.
l மருத்துவரின்
பரிந்துரை இல்லாமல் மருந்து சாப்பிடாதீர்கள். அப்படிச் சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுச் சாப்பிடுங்கள்.
l மன அழுத்தத்தைத் தவிருங்கள்.
l வாகனத்தை ஓட்டாதீர்கள். ஆபத்தான இயந்திரங்களை இயக்காதீர்கள்.
l ஆண்டுக்கு ஒருமுறை காதுப் பரிசோதனை செய்துகொள்ளுங்கள்.