Sunday, November 22, 2020

“புதாறு" தஞ்சை நகருக்கு வந்த கதை

 

1935 ஆம் ஆண்டில் தான் புதாறு ... அதாவது "கல்லணை கால்வாய்" அல்லது "கிராண்ட் அனிகட் கெனால்" .. காவிரி பாசன நீர்த்தடமாக உருவானது.... பெரியகோயில் தெற்கு கோட்டை சுவர் அகழி வழியாக .. தஞ்சை நகருக்குள் ஓட ஆரம்பித்தது..   காவேரி டெல்டா பகுதி என்று குறிப்பிட்டால் கரந்தை பகுதியுடன் முடிந்து விடும் ... வடவாறு தெற்கு கரையிலிருந்து செம்மண் மற்றும் செம்பாரங்கல்
சுண்ணாம்பு பாறைகள் தெரிய ஆரம்பிக்கும் ... அதாவது காவேரியின் தெற்கு கிளையான வடவாற்றின் தெற்குக்கரையிலிருந்து செம்மண் பூமி ஆரம்பம் வடகரையிலிருந்து களிமண் பூமி ஆரம்பம்.

வடவாறு ஆற்றுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.. பழைய டெல்டா அமைப்பில் இது தான் தெற்கு கோடியில் ஓடும் காவேரியின் கடைக்குட்டி கிளை .. தென்பெரம்பலூரில் வெண்ணாற்றில் இருந்து பிரிந்து .. கரந்தைக்கும் தஞ்சை கோட்டை நகரத்திற்கு இடையே ஓடி ... கடைசியாக வடுவூர் ஏரியில் நீச்சம் பெற்று ... பிறகு வடுவூர் ஏரியில் இருந்து கண்ணனார் ஆறாக .. பாமணியாற்றில் கலந்து .. கடைசியாக கடலில் சங்கமமாகும். வடவாறு தண்ணீர் வீணாகாமல்... அதிக நிலங்களுக்கு பாயும் வகையில் ... ஷுட் டர்கள் அமைத்து .. வடவாறு நீர்ப்பாசன திட்டத்தை மேம்படுத்தி .. கூடுதல் நிலங்களை விவசாய பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனர் ஆங்கில ஆட்சியாளர்கள் . இந்த தெற்கு கோடி காவேரி கடைக்குட்டி கிளை, தஞ்சை கோட்டை நகருக்கு வடக்கே ஓடுவதால் .. "வடவாறு" என்று பெயர் வந்திருக்கக்கூடும்.

மிகவும் கூர்மையாக கவனித்தால் தஞ்சாவூர் நகரம் டெல்டா பகுதியை சார்ந்தது அல்ல ... மாறாக வறட்சி பகுதியின் தொடக்கம் ... இந்த நிலை தான் ஒரத்தநாடு, பாப்பாநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை பகுதிகளுக்கும் ... இந்த பகுதிகளுக்கு 1935க்கு முன் காவேரி ஆற்று பாசனம் கிடையாது ... விவசாயத்திற்கு மழை நீரை நம்பி இருந்த காலம் .... கேணி.. குளம் ..குட்டை.. ஏரி .. தான் நீர் ஆதாரமாக விளங்கின .

1935ல் தான் இப்பகுதிகள் எல்லாம் காவேரியின் அரவணைப்பில் கொண்டுவரப்பட்ட காலம் ... நியூ டெல்டா ஏரியாவாக மாறின காலம் .. பஞ்சம்-பட்டினி வாழ்வாதரத்தை புரட்டி போட்டு வாழ்வு அளித்த காலம் ... வாழ்வு அளித்தது காவேரி ... அதன் நீரை சுமந்து வந்துவானம் பாத்த பூமியெல்லாம் செழிப்பு நெற்களஞ்சியம் ஆனது ... ஒரு மகத்தான ஆறு வருகையால் ... அது தான்புதாறு” ..

காவேரி ஆற்று பாசனத்தில் விவசாயம் செய்பவர்கள் செல்வந்தர்களாக இருந்த காலம் ... காவேரி ஆற்றுப்பாசனத்தில் மற்றும் தான் பெரும்பாலான நெல் விளைச்சல் .... நெற்பயிர் தங்கத்துக்கு சமமாக விற்ற காலம் .. தமிழ்நாட்டிலேயே தஞ்சை காவேரி டெல்டா நிலசுவான்கள் கொடி கட்டி வாழ்ந்த காலகட்டம். மற்ற செம்மண் நிலமெல்லாம் வானம் பார்த்த பூமியாக .. கொள்ளு, கேவுரு, கம்பு, தினை, மக்கா சோளம், துவரை, கடலை போன்ற தானியங்களை பயிரிட்டு மழை பேயாமல் போனால் ... அனைத்தும் அவ்வளவுதான் .. என்ற அவல நிலை .. இந்த "வானம் பார்த்த பூமிசிறு விவசாயிகள் வசதி வாய்ப்பு குறைந்தவர்களாக பார்க்கப்பட்ட காலம் ...

காவேரி பாசனத்தில் நிலம்வைத்திருப்புவார்கள் இந்த சிறு விவசாயிகளுடன் கல்யாண சம்மந்தம் வைக்க கூட தயங்கிய காலம் .... ஏனென்றால் அவர்கள் வீட்டில் அரிசி வாங்கி சமைக்க கூட சக்தி இல்லாமல் இருந்த கஷ்டகாலம் ... கேழ்வரகு கூழ் கஞ்சியை பசியை ஆற்ற அருந்திய சிக்கன காலம் ... ஆற்று பாசனம் இல்லாதவர்கள் மற்றும் வறண்ட பகுதியில் இருந்தவர்கள் ... வானம் பார்த்த குளம், குட்டை, ஏரி மற்றும் கேணி தண்ணியை ஏற்றம் இறைத்து பாச்சின காலகட்டம் ..

1950 ஆண்டுக்கு முன் .. "போர்வெல்" என்றால் நிறையபேருக்கு தெரியாது .. போர் வெல் இல்லாததால் காவேரி பாசனம் இல்லாத மற்ற இடங்களில் அவ்வளவாக நெல் சாகுபடி இல்லாத நிலைமை ...

1950க்கு முன் விவசாயம் தான் பிரதான தொழிலாக இருந்தது .. வேறு பெரிய தொழில்சாலையோ .. மற்ற வேலைவாய்ப்போ குறைவாக இருந்த சமயம் .. தண்ணீர் வளம் பெற்ற இடங்கள் தான் செழிப்பாக இருந்தன ...
இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் ஒரு வானம் பார்த்த பூமி ... தண்ணீர் வளம் பெற்று ... செழிமை பெற்று ... விவசாயிகளின் உழைப்பால் உயர்ந்து ... ஒரு பசுமை புரட்சி உருவானது ... பொன் விளையும் பூமியாக மாறியது ... . கல்லணை கால்வாய் இந்த வறண்ட பகுதிக்கு வந்த நல்ல காலம் ... 1970க்கு பிறகு போர்வெல் வெகுவாக அறிமுகம் ... மேலும் இப்பகுதிகள் சிறப்படைந்தன...

புதாறு என்று சொல்லப்படும் "கல்லணை கால்வாய்" அல்லது "கிராண்ட் அனிகட் கெனால்" 1935 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. முன்னதாக இந்த திட்டத்தின் பணிகள் 1929 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. இந்த திட்டத்தை முடிக்க சுமார் ஐந்து ஆண்டுகள் ஆனது. இதில் 16 கிளை கால்வாய்கள் ... அவற்றில் மிகப்பெரியவை, ராஜாமடம் மற்றும் கல்யாண ஓடை. “புதாறுசுமார் 70 மைல் (110 கிலோமீட்டர்) நீளம் கொண்டது ... குறுக்கே 14 காட்டு நீரோடைகளைக் கடக்கிறது .... இது மேல் சரிவுகளில் ஓடி (contour canal system) அதன் வடகிழக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் மட்டுமே நிலங்களுக்கு நீர்ப்பாசனம் செய்யும் ஒரு கால்வாய் ... அந்த காலத்திலேயே இரண்டு ராட்சத இயந்திரங்கள் ... ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுடன் .. இந்த ஆறு வெட்டப் பட்டதாக கூறப்படுகிறது ...

முதலில் இந்த கால்வாய் வல்லம் மேடு - மருங்குளம் வழியாக ஈச்சங்கோட்டை வரை செல்ல திட்டமிடப்பட்டது, ஆனால் தஞ்சாவூர் மக்களின் வேண்டுகோளின் பேரில் இது தஞ்சை பெரிய கோயிலின் கோட்டையை ஒட்டி பாயும் வகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.

தஞ்சாவூரிலிருந்து பட்டுகோட்டை பகுதி வரை இந்த வறண்ட நிலப்பரப்புகளில் கால்வாயிலிருந்து தண்ணீர் பாய்வதைக் கண்ட எங்கள் பெரியவர்கள் சொன்ன கதை எனக்கு நினைவிருக்கிறது.

இந்த சிவப்பு மண், வறண்ட, வானம் பார்த்த பூமியில், கற்றாழை, ஈச்சமரங்கள் மற்றும் பனைமரங்கள்.. சப்பாத்தி காடுகள் இருக்க க்கூடிய திடலாக இருந்தது . பெரும்பாலும் வறண்ட நில பயிர்கள் மட்டும் சிறிய இடங்களில் பயிரிடப்பட்டன.

1935ல் மக்கள் தங்கள் வாழ்க்கையில் முதல்முறையாக இந்த கால்வாயிலிருந்து காவிரி நீரைப் காண ஏராளமான மக்கள் கூடினர். இது புதிய-காவிரி விவசாயிகளுக்கு ஒரு பண்டிகை உற்சாகமாக இருந்தது. கரடு முரடாக இருந்த நிலத்தை மண்வெட்டியால் பழைய வேர்களை பறித்து...சமப்படுத்தி ... முரட்டு வரப்பு கட்டி தண்ணீரை தேங்க வைத்து ... ... ஏர் ஒட்டி பத படுத்தினர் ...

ஆரம்பத்தில் நெல் நடவு செய்வதற்கு மண் பொருத்தமானதாகயில்லை ... ஆரம்ப ஆண்டுகளில் அவர்கள் போராட வேண்டியிருந்தது...சிவப்பு சேற்று நீரில்... பென்சில் போல் கூர்மையான சவுக்கு களிகளை வரிசை கொண்டு சேற்றை குத்தி நெல் நாற்றினை நட்டனர். காவிரி தண்ணீர் பாய பாய சிவந்தமண் கருப்பு ஆனது. தஞ்சை - பட்டுக்கோட்டை ரோடு ... இரு பக்கமும் பச்சை பசேரென்று காட்சியளிக்க ஆரம்பித்தது. இந்த நீர்ப்பாசன இடங்களில் இன்றும் நீங்கள் 7 அல்லது 8 அடி தோண்டினால் அந்த இரத்த சிவப்பு மண் கிடைக்கும்.

இந்த G.A.Canal திட்டத்தை ஆரம்பத்தில் பழைய டெல்டா விவசாயிகள் எதிர்த்தனர், ஏனெனில் அவர்கள் தண்ணீரின் பங்கை இழக்க நேரிட்டது . இது ஒருவிதமான சிறிய காவிரி பிரச்சனை . G.A.Canal அமைப்பில் தண்ணீர் விடப்படுவதற்கு முன்னர் பழைய டெல்டா பகுதிகளின் தேவைகள் முதலில் பூர்த்தி செய்யப்படும் என்று ஒப்புக் கொள்ளப்பட ஒரு சமரசம் ஏற்பட்டது.

இந்த திட்டத்தின் காரணமாக மூன்று லட்சம் ஏக்கர் வறண்ட நிலம் இரட்டை அறுவடைக்கு வசதியான வளமான நிலமாக மாறியது. இந்த பகுதியின் விவசாயிகளின் சிறப்பு என்னவென்றால் எந்த விதமான பயிரையும் திறமையாக சாகுபடி செய்யக்கூடியவர்கள் ... அதே சமயம் பெரும்பாலான காவேரி பழைய டெல்டா விவசாயிகள் பொதுவாக நெல்லை தவிர்த்து மற்ற சாகுபடியில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.. புத்தாற்றின் சிறப்பு என்னவென்றால் தண்ணீர் உபயோகிப்பு சிறப்பாக இருக்கும் ... வேகமாக பாயக்கூடிய சக்தி வாய்ந்தது. விரைவாக கடைகோடிக்கு தண்ணீரை சேர்க்கும் தன்மைவாய்ந்தது ... தண்ணீர் வீணாகாது. பழைய டெல்டாவின் பரப்பளவு பத்து லட்சம் ஏக்கர்... நீர் வீணாகும் நிலை ... ஏனென்றால் அகலமான ஆறுகளில் "சீப்பேஜ்" ஜாஸ்தி இருக்கும்..

இந்தியாவின் வைஸ்ராய் மற்றும் ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் லார்ட் இர்வின் 1929 ஆம் ஆண்டு தஞ்சைக்கு வருகை புரிந்தார். தஞ்சை ரயில்வே ஸ்டேஷன் சாலையில் (இப்போது காந்திஜி சாலை) புதாறு குறுக்கே பெரிய நீர்ப்பாசன திட்டத்தின் அடையாளமாக கட்டப்பட்ட பாலத்தை திறந்தார். (தஞ்சை பகுதியில் 1929ம் ஆண்டு முதலே புதாறு வெட்டும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன). எனவே இந்த பாலத்திற்கு IRWIN BRIDGE என்று பெயரிடப்பட்டது.

புதாறு திட்டம் 1928--29ல் தொடங்கி 1935ல் பூர்த்தியானது ...இந்த புதாறு G.A.Canal திட்டத்தைப் நினைவு கூறும் வகையில் அதை பற்றிய பற்றிய விவரங்கள் கோர்ட் சாலையில் பெரியார் ஜோதி நினைவுச்சின்னம் இப்போது அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில், திறந்த புத்தக வடிவிலான கல்வெட்டில் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதப்பட்டு பதிக்கப்பட்டிருந்தது. இந்த கல்வெட்டை 1960 களில் நான் பார்த்திருக்கிறேன். அந்த அபூர்வ கல் கல்வெட்டு இப்போது இல்லை.... பாதுகாக்க தவறிவிட்டனர்

மற்றொரு சுவாரஸ்யமான தகவலை எனது தந்தையார் கூறினார். தோண்டப்பட்ட மண்ணை நிலங்களில் கொட்ட அனுமதிக்குமாறு என் தந்தையிடம் பொறுப்பான பொறியாளர் கோரியிருந்தார். இப்போது ஹோட்டல் பரிசுத்தம் & யாகப்பா டாக்கீஸ் இருக்கக்கூடிய ... அப்போது காலியாக இருந்த இடத்தில் புதாறு தோண்டப்பட்ட மண்ணால் நிரப்ப அனுமதிக்கப்பட்டன. தற்போது உள்ள பிளேக் பள்ளி கிரௌண்ட் இருந்த இடத்தில் கூட ஒரு குளம் ஒன்று இருந்தது ... இந்த குளம் தமிழறிஞர் ஜி. யு. போப் அவர்களால் 1852ம் ஆண்டு வெட்டப்பட்டதாக வரலாறு சொல்கிறது .. பிற்காலத்தில் இது பயன் இல்லாமல் போனதால் ... புதாறு தோண்டும் போது .. அதன் மண்ணை வைத்து இதை தூற்றனர் ...

அப்போது தான் காவேரி நீர் முதன் முதலாக எங்கள் நிலத்திலும் பாய்ந்தது... நத்தம்படிபட்டி, யாகப்பாச்சாவடி, கீழவஸ்தாத்ச்சாவடி ... இடையே எங்கள் நிலத்திலும் ஆறு வெட்டப்பட்டது ...

மேட்டூர் அணை கட்டுமானமும் இதே காலகட்டத்தில் தான் தொடங்கியது ... 1931 ஆம் ஆண்டில் தொடங்கி 1934 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதி திறக்கப்பட்டது. இது ஒரு பெரிய, திட்டமிட்ட தற்செயலான நல்ல பயனுள்ள நிகழ்வு. இந்த இரண்டு பெரிய காவிரி பாசன திட்டத்தை பிரிட்டிஷ் அரசாங்கம் மிக திறமையாக ஒரே நேரத்தில் நிறைவேற்றியது.

புதாறு வருவதுற்கு முன் சாரை சாரையாக காவேரி பாசன வயல்களுக்கு சென்று உழவு உழுது.. நாத்து நட்டு ...அறுவடை செய்த "வானம் பார்த்த பூமி புதல்வர்கள்" ... சிறு விவசாயிகள் ... புதாறு காவிரி தண்ணி அவர்கள் சொந்த ஊரிலேயே பாய தொடங்கிய பிறகு ... தங்கள் சொந்த ஊரிலேயே நெல் சாகுபடி செய்ய ஆரம்பித்து ... அவர்களது அயராது உழைப்பால் ... அவர்கள் வாழ்வாதரத்தை உயர்த்தி காட்டினர் உலகிற்கு ... தண்ணீர்... வாழ்க்கை தரத்தையே மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தது என்று நிரூபித்த தருணம் ...

தெற்கு தஞ்சை மாவட்டத்தை சார்ந்த லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதரத்தை உயர்த்தி ... இந்த மாபெரும்புதாறு திட்டத்தை முதன் முதலில் 1910ல் வடிவமைத்தவர் ... மேட்டூர் டாம் கட்டிய கெர்னல் எல்லிஸ். காவேரி மேட்டூர் ப்ராஜெக்ட் அல்லது மேட்டூர் ஸ்கீம் என்பது மேட்டூர் நீர்த்தேக்கம், அணை, கிராண்ட் அனிகட் கால்வாய் மற்றும் வடவாறு எக்ஸ்டென்ஷன் பாசன திட்டம் ... அதாவது ... வடுவூர் ஏரியிலிருந்து பாமணியாற்றுடன் கலப்பது வரை ... இந்த முப்பெரும் திட்டங்களை வடிவமைத்தவர் தான் Col. W.M. எல்லிஸ் .
பிற்காலத்தில் .. 1928ல் இருந்து .. அயராது உழைத்து, மேற்பார்வையிற்று, புதாறு திட்டத்தை செயல்படுத்தி காட்டியவர் மற்றுமொரு மகத்தான மனிதர் ... ... அப்போதய மெட்ராஸ் மாகாணத்தின் நீர்ப்பாசன திட்ட என்ஜினீயர் ...சார் கிளமெண்ட் முல்லிங்ஸ் !!

இந்த மகத்தான இரண்டு மனிதர்களை .. புதாறு விவசாயிகளாகிய நாம் .. அவ்வளவாக நினைவு கூறுவதும் இல்லை ... கொண்டாடுவதும் இல்லை ...

"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது."

விளக்கம்:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்.