Thursday, January 14, 2021

உத்தரகோசமங்கை மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம்

 

சந்தனப் பூச்சின்றி உத்தரகோசமங்கை மரகத நடராஜர் !

                   ராமநாதபுரம் திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயிலில் ஆருத்ரா தரிசனம் அன்று மரகத நடராஜர் சிலையின் சந்தனப் பூச்சு கலைக்கப்பட்ட தரிசனம் கிடைக்கும்.



     இலக்கியச் சிறப்பும், இதிகாசப் பெருமையும் உடையது ராமநாதபுரம் அருகேயுள்ள திருஉத்தரகோசமங்கை அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோயில். இக்கோயிலில் உள்ள மூலவரான மங்களநாதசுவாமியாகிய சிவலிங்கம் சுயம்புவால் ஆனதாகும். ராமநாதபுரத்திலிருந்து தென்மேற்கே 10 கி.மீ.தொலைவில் உள்ள இக்கோயிலில் நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதக்கல்லினால் ஆளுயரத்தில், நடனம் ஆடும் திருக்கோலத்தில், விலை மதிக்க முடியாத அபூர்வ நடராஜர் சிலை உள்ளது. தமிழர்களின் கலைத்திறனுக்கும், நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளுக்கும் எடுத்துக் காட்டாக விளங்கும் வகையில் இச்சிலை அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

            நவரத்தினங்களில் ஒன்றான பச்சை மரகதம் இயற்கையாகவே மென்மையானது. ஒலி,ஒளி அதிர்வுகளைத் தாங்க முடியாத தன்மை உடையது. இதன் காரணமாக மத்தளம் முழங்க மரகதம் உடைபடும் என்ற சொல்லுக்கேற்ப ஒலி, ஒளி அதிர்வுகளிலிருந்து இச்சிலையைப் பாதுகாக்க சிலைக்குச் சந்தனப்பூச்சு கலவையைப் பூசிப் பாதுகாத்து வருகிறார்கள். ஆண்டுக்கு ஒருமுறை திருவாதிரைத் திருநாளில் மட்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக சந்தனப்பூச்சு கலையப்பட்டு அன்று இரவே மீண்டும் சந்தனம் பூசப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

     ஆருத்ரா அன்று காலையில் அருள்மிகு பச்சைமரகதக்கல் நடராஜருக்குச் சந்தனப்பூச்சு கலைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் நடராஜப் பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெறுகின்றன. அன்று ஒரு நாள் பகல் முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக பச்சை மரகத மேனியுடன் அருள்மிகு நடராஜர் காட்சியளிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து இரவு ஆருத்ரா தரிசன நாளை முன்னிட்டு மீண்டும் ஆருத்ரா மகா அபிஷேகமும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்த பின்னர் அருள்மிகு நடராஜருக்கு மீண்டும் சந்தனக்கலவை பூசப்படும்.

பாடிய வேதங்கள் தேடிய பாதம்.... பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம்.....