தத்தாத்ரேயரின் 24 குருக்கள்
ஒருநாள் யது என்ற மன்னன் காட்டிற்கு வேட்டையாட சென்றான். அங்கு , தத்தாத்ரேயர் மிகுந்த மகிழ்ச்சியோடு இருந்தார். அதைக்கண்டு ஆச்சர்யமுற்ற மன்னன், ஐயா! ஒரு குடையின் கீழ் உலகை ஆண்டு பொன், பொருள், அந்தஸ்து, அதிகாரம் இருந்தும் மகிழ்ச்சியற்ற நிலையில் இருக்கின்றேன்.ஆனால், தாங்களோ ஏதுமற்ற நிலையிலும் மகிழ்ச்சியோடு இருக்கிறீர்களே எப்படி?! ஏதுமில்லாமலும் மகிழ்ச்சியாய் இருக்க உங்களை பண்படுத்திய குரு யார்?! என வினவினான். அதற்கு, தத்தாத்ரேயர் மன்னா! எனக்கு மொத்தம் இருபத்தி நான்கு குருக்கள். அவர்களிடமிருந்து கற்ற பாடமே என்னை இப்படி மகிழ்ச்சியுள்ளவனாக ஆக்கியுள்ளது என்றார்.
ஐயா! எனக்கு விளங்கவில்லை. ஒருவருக்கு ஒரு குருதானே இருக்க முடியும்?! விதிவிலக்காக சிலருக்கு இரண்டு அல்லது மூன்று குருக்கள் இருக்கலாம். ஆனால், தாங்கள் இருபத்தி நாலு குருக்கள் என்று உரைப்பது ஆச்சர்யத்தையும், சந்தேகத்தையும் அளிக்கின்றது என பணிந்து நின்றான்.
மன்னா! பூமிதான் என் முதல் குரு. அதனிடமிருந்து பொறுமையை கற்றேன்.
தண்ணீரிடமிருந்து தூய்மையை கற்றேன்..
பலரோடு பழகினாலும் பட்டும் படாமலும் இருக்க காற்றிடம் கற்றேன்...
எதிலும் பிரகாசிக்க வேண்டுமென தீயிடம் கற்றேன்..
பரந்து விரிந்த எல்லையற்ற மனம் வேண்டுமென்பதை ஆகாயத்திடம் கற்றேன்....
மாறுபாடுகள் உடலுக்கே அன்றி ஆன்மாவுக்கல்ல என்பதை சந்திரனிடம் கற்றேன்...
மனம் ஒன்றாக இருந்தாலும் சிந்தனைகள் பலவற்றால் நிறைந்தது என்பதை சூரியனிடம் கற்றேன்...
வேடன் ஒருவனின் வலையில் சிக்கிய தன் குஞ்சு புறாக்களை காக்க தாய் புறாவும் வலிய சென்று வலையில் மாட்டியது. இதன் மூலம்
பாசமே துன்பத்திற்கு காரணம் என உணர்ந்தேன்..
எங்கும் அலையாமல் தன்னைத்தேடி வரும் உணவை உட்கொள்ளும் மலைப்பாம்பை போல கிடைத்ததை உண்டு உயிர்வாழ கற்றுகொண்டேன்.
கணக்கில்லா நதிகள் வந்தாலும் ஏற்றுக்கொள்ளும் கடலிடமிருந்து துன்பத்தை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை கற்றேன்..
பார்வையை சிதறவிடாமல் ஒரே இடத்தில் மனதை செலுத்த
விட்டில் பூச்சியிடம் கற்றேன்..
தேனீக்கள் பூக்களிடமிருந்து தேனை எடுப்பது போல துறவி யாசகம் பெற்று ஜீவிக்க வேண்டுமெனவும், அதேநேரத்தில் தேனை சேகரிப்பது போல் உணவை சேகரித்து பின் பறிகொடுக்கவும் கூடாதென
தேனீக்களிடம் கற்றேன்...
குழிக்குள் மாட்டிக்கொண்ட பெண் யானையின் மேல் மோகம் கொண்டு போன ஆண் யானையும் குழிக்குள் மாட்டிக்கொண்டதை கண்டு பெண்ணாசை கூடாதென கற்றேன்...
மானின் வேகம் நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்ல. ஆனால், இசையை கேட்ட மாத்திரத்தில் ஓடுவதை நிறுத்தி இசையை கேட்க ஆரம்பிக்கும். அந்நேரத்தில் கொடிய விலங்குகள் வந்தால் அதன் கதி!?
பிரம்மச்சர்ய விரதம் மேற்கொள்வோர்
இசை, நடனங்களில் நாட்டம் கொள்ளாமல் இருக்கவேண்டுமென மானிடம் கற்றேன்..
நாவை அடக்க முடியாத சபலத்தால் தூண்டிலில் சிக்கி உயிரிழக்கும் மீனிடம் நாவடக்கத்தை கற்றேன்....
பிங்களா என்ற தாசிப்பெண் ஓரிரவில் பலருடன் சேர்ந்து வருமானம் பார்த்தப்பின்னும் இனியும் யாராவது வரமாட்டார்களா என்று காத்திருந்து ஏமாந்து கிடைத்ததே போதுமென உறங்கிவிட்டாள்.
இதிலிருந்து ஆசையை விட்டால் எல்லாமே திருப்திப்படுமென கற்றேன்...
குரரம் என்ற பறவை தன் இரையை பெரிய பறவைகளிடமிருந்து தப்புவிக்க கீழே போட்டு தன் உயிரை காப்பாற்ற்க்கொள்ளும். அதன்மூலம் வேண்டும் என்ற ஆவலை தவிர்த்தால் துன்பம் நேராது என்று கற்றேன்...
பாராட்டினாலோ, ஏசினாலோ எந்தவித உணர்ச்சிக்கும் சிறு குழந்தைகள் ஆட்படாது. அதுமாதிரியான உணர்ச்சிவசப்படாத மனம் முனிவனுக்கு வேண்டுமென சிறுவனிடம் கற்றேன்.
ஒரு சிறுமியின் கைவளையல்கள் ஒன்றோடொன்று உரசி சப்தமெழுப்பின.
அவள் ஒரு வளையலை கழட்டியப்பின் சப்தம் நின்றது. இதிலிருந்து இருவர் மட்டுமே இருந்தாலும் தேவையற்ற விவாதம் எழும் எனவும், தனிமையே சிறந்தது எனவும் கற்றேன்..
போர்
ஆயுதங்கள் செய்பவன் பக்கத்திலே போர் நடந்தாலும் தான் செய்த ஆய்தங்களை எடுத்து செல்லாமல்,
ஆய்தங்கள் செய்வதிலேயே அவன் கவனம் இருக்கும். அவனிடமிருந்து எண்ணத்தை சிதற விடாத தன்மையை கற்றேன்..
பாம்பு தனித்து இருந்தாலும் கவனமாய் இருக்கும். தனக்கென வீடோ, கூடோ கட்டிக்கொள்வதில்லை அதுப்போல முனிவருக்கும் வீடு கூடாதென பாம்பிடம் கற்றேன்..
தன்னிலிருந்து நூலை வெளியேற்றி வலை பின்னி அதனுடன் விளையாடி, உண்டு, உறங்கி பின் அதையே உணவாக உட்கொள்ளும். அதுப்போல பரபிரம்மமும் உலகை உருவாக்கி, காத்து பின் அதை தன்னுள் ஐக்கியமாக்கி கொள்வார் என உணர்ந்தேன்.
ஒரு வகை வண்டு, தன் முட்டையிலிருந்து புழுவை கொண்டு வந்து தன்னருகில் வைத்து ஒருவித ஆசையை எழுப்பிக்கொண்டே இருக்கும். அந்த சத்தத்துக்கு பயந்து அந்த புழுவும் வெளி செல்ல பயந்து அங்கேயே இருந்து
வண்டாய் மாறும். அதுப்போல மனிதன் பயம், பக்தி, காமம், குரோதமென தன் மனதை எதில் செலுத்துகின்றாறோ அதன் உருவை அடைவர் என உணர்ந்தேன்....
எனக்கூறி முடித்தார்..
யது மன்னனும் தத்தாத்ரேயரின் உபதேசத்தின்படி பதவி, நாடு, மனையாள், பிள்ளைகளை துறந்து ஆன்மீகத்தில் ஈடுபட்டான்...