ஊமத்தை காரத்தன்மையும்,கைப்புச்
சுவையும் கொண்ட தாவரம்; வாந்தி உண்டாக்கும்; இசிவைப் போக்கும்; உமிழ் நீரைக் கட்டுப்படுத்தும்;
பசியைக் குறைக்கும்.ஊமத்தை தூக்கத்தைத் தூண்டும். வாத நோய்களைக் கட்டுப்படுத்தும் ;நரம்புகளைப்
பலப்படுத்தும். வெளிப் பூச்சுத் தைலங்களில் இது சேர்க்கப்படுகின்றது .ஊமத்தை 1மீட்டர்
வரை உயரமாக வளரும்செடி வகையைச் சார்ந்தது. அகன்ற பசுமையான இலைகள், நீள்வட்ட வடிவில்
காணப்படும். வாயகன்று, நீண்ட குழலுள்ள புனல்போன்ற அமைப்பில் வெள்ளை நிறமான மலர்கள்
காணப்படும்.ஊமத்தை காய் உருண்டையாகவும் பசுமையான முட்கள் அடர்ந்ததாகவும் இருக்கும்.
இலை, பூ, காய் விதை ஆகியவை மருத்துவப் பயன் கொண்டவை.
ஊமத்தை தமிழகத்திலுள்ள எல்லா மாவட்டங்களிலும், சாலை
ஓரங்கள், தரிசு நிலங்களில் விளைகின்றது. உம்மத்தை, ஊமத்தான், வெள்ளுமத்தை, காட்டு ஊமத்தை
ஆகிய பெயர்களும் உண்டு.மலைப்பாங்கான பகுதிகளில் வளரும் ஊமத்தை நீலநிறமான இதழ்களுடன்
காணப்படுவதுண்டு (நீல ஊமத்தை/கரு ஊமத்தை).அரிதாக அடுக்கு இதழ்களால் ஆன மலர்களும் உண்டு
(அடுக்கு ஊமத்தை).மருத்துவப் பயன் பொதுவாக அனைத்திற்கும் ஒன்றே ஆகும். பழங்கால இந்திய
மருத்துவம் மற்றும் இலக்கிய நூல்களில் ஊமத்தை சிவசேகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது;
ஊமத்தை பூ சிவபெருமான் வழிபாட்டில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.
ஊமத்தை கெட்ட மணத்தையும், உட்கொண்டால் மயக்கத்தையும், வெறியையும்
கொடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது. சாராயம் போன்ற போதைப் பொருட்களில் இது சேர்க்கப்படுகின்றது.
இலை அல்லது பூவை அல்லது இரண்டையுமே உலர்த்தி சுருட்டு
போலச் செய்து புகை பிடிப்பது போல புகையை உள்ளிழுத்து வெளியிடுவதால் சுவாச காச நோய்
குணமாகும். ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் இவ்வாறு செய்யலாம். தலைச்சுற்றல், வாய்க் குமட்டல்
போன்றவை ஏற்பட்டால் உடனே மேற்கூறியவாறு செய்வதை நிறுத்திவிட வேண்டும். புண்கள், அழுகிய
புண்கள் குணமாக லு லிட்டர் தேங்காய் எண்ணெயில் லு லிட்டர் ஊமத்தை இலைச் சாற்றைக் கலந்து
அடுப்பில் நீர் வற்றும் வரை காய்ச்சி, குளிர்ந்த பின்னர், சீசாவில் பத்திரப்படுத்தி
வைத்துக் கொள்ள வேண்டும். இதனைப் பாதிக்கப்பட்டுள்ள இடத்தில் வெளிப்பூச்சாக பயன்படுத்தி
வரவேண்டும்.
ஊமத்தை இலையை நல்லெண்ணெயில் வதக்கி ஒற்றமிட கீல்வாயு
குணமாகும்.தேள், பூரான், வண்டு கடியால் ஏற்படும் வீக்கத்திற்கு ஊமத்தை இலையை அரைத்து
சிறிது மஞ்சள் தூள் சேர்த்துப் பிசைந்து பற்றுப் போடலாம்.வீக்கம் கட்டிகள் கரைய, ஊமத்தை
இலையை அரைத்து சம அளவு அரிசி மாவு சேர்த்து ஒரு விரல் கனத்திற்கு பாதிக்கப்பட்ட இடத்தில்
பற்றுப் போட வேண்டும்.பிஞ்சு ஊமத்தங்காயை உமிழ் நீர் சிறிதளவு சேர்த்து, அரைத்து, தலையில்
தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வர, தலைப்பேன்கள் குறையும்.
முடி வளரத் தொடங்கும். இது ஒரு பாரம்பரிய வைத்தியமாகும்.கரு ஊமத்தை மலைப் பகுதிகளிலுள்ள
புறம் போக்கு நிலங்கள், பாழ் நிலங்களில் அரிதாகப் காணப் படுவதாகும். மிக அரிதாகச் சமவெளிப்
பகுதியிலும் வளர்கின்றது.கரு ஊமத்தை பூக்கள் ஊதா நிறமானவை. பழங்கள் நீலம் படர்ந்தவை.
குறு முட்களுடன் கூடியவை. இது இதன் மருத்துவக் குணங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.