1929 ஆம் ஆண்டில், பாரதியாரின் கையெழுத்துப் பிரதிகளைக் கொண்டு பதிப்பிக்கப் பெற்றதாகத் தெரிகிறது. கையெழுத்துப் பிரதி அர்ணமா யிருந்த விடங்களில், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களையும், கவியோகி சுத்தானந்தா பாரதியார் அவர்களையும் கொண்டு பூர்த்தி செய்யப்பட்டதாகவும், கையெழுத்துப் பிரதியிற் காணாதன நகவளைவு (பிராக்கெட்)களுள் தரப்பட்டுள்ளன வென்று அக்காலத்துப் பதிப்பித்தவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தோத்திரப் பாடல்கள் தொகுதியும், வேதாந்தப் பாடல்கள் தொகுதியும் 1930 ஆம் ஆண்டில்பதிப்பிக்கப் பெற்றன. இத் தொகுதிகளுள் காணப்பெறும் சில பாடல்கள் 1910 ஆம் ஆண்டில் வெளியான பாடல் தொகுதியிலும் சேர்ந்திருந்தன.
|
விநாயகர் நான்மணி மாலை
வெண்பா
(சக்திபெறும்) பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்
சித்(தி பெறச் செய்வாக்கு வல்லமைக்கா ) -- அத்தனே
(நின்)றனக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யும் நூல்
இன்றிதற்கும் காப்புநீ யே.
|
1
|
கலித்துறை
நீயே சரணம்நின தருளே சரணஞ் சரணம்
நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்
வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்
தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே.
|
2
|
[பாட பேதம்]: சக்திவளர் -- சக்திகொள் -- சக்தியுள -- சக்தியுள்ள என்பனவெல்லாம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடபேதங்களாம். கைப்பிரதியில் பாரதியார், 'நூல் செய்திடினும் வல்லமைக்கா' என்பதை அடித்துச் 'சித்' என்று மட்டுமே எழுதியிருந்ததாக முன் பதிப்பில் குறிக்கப்பட்டிருக்கின்றது.
'வல்லமைக்கே' என்கிறார் சுத்தானந்த பாரதியார்.
'வைத்து நூல் செய்திடினும் வல்லமைக்கா' என்பதுவும், 'சித்தமதிற் கொண்டு நூல் செய்வரெனில்' என்பதுவும் கவிமணி அவர்களின் பாடபேதங்களாம்.
கலித்துறை எனக் குறித்தன வெல்லாம் கட்டளைக் கலித்துறைகள்.
|
விருத்தம்
செய்யுந் தொழிலுடன் தொழிலேகாண்; சீர்பெற் றிடநீ அருள்செய்வாய்,
வையந் தனையும் வெளியினையும் வானத் தையுமுன் படைத்தவனே!
ஐயா, நான்முகப் பிரமா, யானை முகனே, வாணிதனைக்
கையா லணைத்துக் காப்பவனே, கமலா சனத்துக் கற்பகமே.
|
3
|
அகவல்
கற்பக விநாயகக் கடவுளே, போற்றி!
சிற்பர மோனத் தேவன் வாழ்க!
வாரண முகத்தான் மலர்த்தாள் வெல்க!
ஆரண முகத்தான் அருட்பதம் வெல்க!
படைப்புக் கிறையவன் பண்ணவர் நாயகன்
இந்திர குரு எனது இதயத் தொளிர்வான்
சந்திர மவுலித் தலைவன் மைந்தன்
கணபதி தாளைக் கருத்திடை வைப்போம்;
குணமதிற் பலவாம்; கூறக் கேளீர்:
உட்செவி திறக்கும்; அகக்கண் ஒளிதரும்;
அக்கினி தோன்றும்; ஆண்மை வலியுறும்;
திக்கெலாம் வென்று ஜயக்கொடி நாட்டலாம்
கட்செவி தன்னைக் கையிலே எடுக்கலாம்;
விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
துச்சமென் றெண்ணித் துயரிலா திங்கு
நிச்சலும் வாழ்ந்து நிலைபெற் றேங்ங்கலாம்;
அச்சந் தீரும்; அமுதம் விளையும்;
வித்தை வளரும்; வேள்வி ஓங்கும்;1
அமரத் தன்மையு ம்எய்தவும்
இங்குநாம் பெறலாம்; இஃதுணர் வீரே.2
|
4
|
[பாட பேதம்]: 1 'வித்தை வளரும்; வீரமே யியல்பாம்' 2 'அமரத் தன்மையு மெய்தவம்; நமர்க ளிதனை நன்குணர் வீரே' -- கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
|
வெண்பா
(உண)ர்வீர், உணர்வீர் உலகத்தீர் இங்குப்
(புண)ர்வீ(ர் அமரரு)றும் போக(ம்) -- கண(ப)தி(யைப்)
(போத வடிவாகப் போற்றிப் பணிந்திடுமின்
காதலுடன் கஞ்சமலர்க் கால்.)
|
5
|
கலித்துறை
காலைப் பிடித்தேன் கணபதி நின்பதங் கண்ணிலொற்றி
நூலைப் பலபல வாகச் சமைத்து நொடிப்பொழு(தும்)
வேலைத் தவறு நிகழாது நல்ல வினைகள் செய்துன்
கோலை மனமெனும் நாட்டின் நிறுத்தல் குறியெனக்கே.
|
6
|
விருத்தம்
எனக்கு வேண்டும் வரங்களை இசைப்பேன் கேளாய் கணபதி,
மனத்திற் சலன மில்லாமல், மதியில் இருளே தோன்றாமல்,
நினைக்கும் பொழுது நின்மவுன நிலைவந் திடநீ செயல்வேண்டும்,
கனக்குஞ் செல்வம் நூறு வயது இவையும் தரநீ கடவாயே.
|
7
|
அகவல்
கடமை யாவன தன்னைக் கட்டுதல்,
பிறர்துயர் தீர்த்தல், பிறர்நலம் வேண்டுதல்,
விநாயக தேவனாய், வேலுடைக் குமரனாய்,
நாரா யணனாய், நதிச்சடை முடியனாய்,
[பாட பேதம்]: 'தஞ்சமெனக் கொண்டு தளரா தெந்நாளுமவன் கஞ்சமலர்த் தாள் பணிந்தக்கால்'
(அல்லது)
'நெஞ்சிலிருத்தி நிதமுமன் பாகவவன
கஞ்சமலர்த் தாள் பணிந்தக் கால்'
'நூறு வய தெல்லாந்தர நீ கடவாயே
-- கவிமணி
|
|
பிற நாட் டிருப்போர் பெயர்பல கூறி,
அல்லா யெஹோவா எனத்தொழு தன்புறும்
தேவருந் தானாய், திருமகள், பாரதி,
உமையெனுந் தேவியர் உகந்தவான் பொருளாய்,
உலகெலாங் காக்கும் ஒருவனைப் போற்றுதல் --
இந்நான் கேயிப் பூமியி லெவர்க்கும்
கடமை யெனப்படும்; பயனிதில் நான்காம்,
அறம், பொருள், இன்பம், வீடெனு முறையே
தன்னை யாளுஞ் சமர்த்தெனக் கருள்வாய்,
மணக்குள விநாயகா, வான்மறைத் தலைவா,
தனைத்தான் ஆளுந் தன்மைநான் பெற்றிடில்,
எல்லாப் பயன்களும் தாமே எய்தும்;
அசையா நெஞ்சம் அருள்வாய்; உயிரெலாம்
இன்புற் றிருக்க வேண்டி நின் னிருதாள்
பணிவதே தொழிலெனக் கொண்டு
கணபதி தேவா, வாழ்வேன் களித்தே.
|
8
|
வெண்பா
களியுற்று நின்று கடவுளே யிங்குப்
பழியற்று வாழ்ந்திடக்கண் பார்ப்பாய் -- ஒளிபெற்றுக்
கல்விபல தேர்ந்து கடமையெலாம் நன்காற்றித்
தொல்வினைக்கட் டெல்லாம் துறந்து.
|
9
|
கலித்துறை
துறந்தார் திறமை பெரிததினும் பெரிதாகு மிங்குக்
குறைந்தாரைக் காத்தெளியார்க் குண வீந்து குலமகளும்
அறந்தாங்கு மக்களும் நீடூழி வாழ்கென அண்டமெலாம்
சிறந்தாளும் நாதனைப் போற்றிடுந் தொண்டர் செயுந்தவமே.
|
10
|