ரத்த அழுத்தத்தை குறைக்கும் ஆரோக்கிய பானங்கள்
இந்தியாவின் கார்டியோலாஜிகல் சொசைட்டி
(C.S.I) யின் ஆய்வறிக்கையின் படி மூன்றில் ஒரு இந்தியருக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் பாதிப்பு உள்ளதாகக் கூறுகிறது. மருந்து மாத்திரைகள் இதனை கட்டுக்குள் வைத்திருக்கும் என்றாலும் ஆரோக்கியமான உணவுமுறைக்கு மாறுவது தான் இன்னும் சிறந்தது. உப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவைத் தவிர்த்து காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதால் ரத்த அழுத்தம் குறையும். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கஃபைன் சேர்க்கப் பட்ட பானங்கள் மற்றும் மது பானத்தை கட்டாயம் தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய கோளாறுகளை தவிர்க்கக்கூடிய சில பானங்களைப் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
ஆப்பிள் சிடர் வினீகர்
இயற்கையின் வரப்பிரசாதமான இந்த ஆப்பிள் சிடர் வினிகரில் இருக்கும் நன்மைகள் ஏராளம்.
வினிகர்களின் பயன்பாட்டில் ஆப்பிள் சிடர் வினிகருக்கு தனி இடம் உண்டு. இதில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. தவிர உடலில் இருக்கக் கூடிய சோடியம் மற்றும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதிலுள்ள ரென்னின்
(Rennin) என்னும் என்சைம் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. தினமும் காலையில் சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகரில் தேன் கலந்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து குடித்து வந்தால் ரத்த அழுத்தம் சீராக இருக்கும்.
எலுமிச்சை சாறு
தினமும் காலையில் ஒரு க்ளாஸ் நீரில் எலுமிச்சை சாறு சேர்த்துக் குடித்து வர உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படும் என்கிறார்கள் உலகெங்கிலும் உள்ள ஆரோக்கிய வல்லுநர்கள். இது உடலில் உள்ள ஒவ்வொரு செல்களில் இருந்தும் நச்சுக்களை நீக்குகிறது. ரத்த நாளங்களை மென்மையடைய செய்வதோடு ரத்த அழுத்ததை குறைக்கவும் உதவுகிறது. இதில் வைட்டமின் சி நிறைந்துள்ளதால், உடலுக்குத் தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட் கிடைக்கிறது. இதனை தினமும் குடித்து வருவதனால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்
வெந்தயம்
வெந்தயத்தை ஊற வைத்து அந்த தண்ணீரை தினமும் குடித்து வந்தால் ரத்த அழுத்தம் குறையும். இந்த நீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை தினசரி காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். காலையில் எழுந்தவுடன் டீ, காபி போன்றவற்றைத் தவிர்த்து இதனைக் குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
சியா விதைகள்
சியா விதைகளில் ஒமேகா -3 கொழுப்புகள் அதிகம் உள்ளதால் உடலின் ரத்த அழுத்தம் குறைய உதவுகிறது.
இந்த சியா விதைகளை அரை மணி நேரம் ஊறவைத்து அந்த நீரை குடித்து வாருங்கள். இதன் பலனை கண்கூடாக ஒரு மாதத்தில் பார்க்கலாம்.
குறைந்த அல்லது கொழுப்பில்லாத பால்
உடலுக்குத் தேவையான பொட்டாசியம் மற்றும் கால்சியம், குறைந்த அல்லது கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் அதிகம் உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கப் பெரிதும் உதவுகின்றன. முழு கொழுப்புள்ள பாலில் உள்ள பால்மிட்டிக் அமிலம் ரத்த குழாய்களைத் தளர்த்தக்கூடிய சிக்னல்களை தடை செய்வதனால், ரத்த அழுத்தம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடிப்பது உடலுக்கு நன்மை தரும். மேலும் ரத்த அழுத்தத்தைக் குறைக்கக் கூடிய பானத்தை வீட்டிலேயே எப்படி செய்வது என்பதைப் பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்
புதினா இலை – 1 கப்
கொத்தமல்லி
– 1 கப்
பெரிய நெல்லிக்காய் – 5
தண்ணீர் – 1 கப்
செய்முறை
பெரிய நெல்லிக்காயை கொட்டை நீக்கிய பின், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து கொள்ளவும். பின் வடிக்கட்டி குடித்து வர இரத்த அழுத்தம் குறையும். இதனை செய்வதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகி ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.