Thursday, June 10, 2021

திரு . K. துளசி வாண்டையார்

 திரு . K. துளசி வாண்டையார்

''சமீபத்தில ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுப் பயணம் போயிருந்தேன். பிரபலமான ஆட்கள் ஒன்றாகக் கூடி, தங்களை அறிமுகப்படுத்த, நான் என்னை ஒரு விவசாயினு சொன்னேன். அங்கிருந்த அத்தனை பேருமே ஆச்சர்யம் மேலிட பார்த்தாங்க. விவசாயம் மூலமா ஒரு ஆள் முன்னேறினான்னு அவங்களால நம்ப முடியலை. உலகமே விவசாயிகளை அப்படித்தான் பார்க்குது. விவசாயினு சொல்லிக்க பலரும் வெட்கப்படுற நிலை உருவாகிடுச்சி. வயித்துக்குச் சோறு போடுற வாழ்க்கையை விட உயர்ந்த வாழ்க்கை வேறென்னப்பு இருக்க முடியும்'' என்கிறார் நெற்றியை உயர்த்தி.

அலங்காரத்துக்காக வளர்க்கப்படும் செடி, கொடிகளை எல்லாம் தவிர்த்து விட்டு, பிரமாண் டமாக மூலிகைப் பண்ணையை தன்னுடைய கல்லூரி வாயிலில் அமைத்திருக்கிறார் வாண்டையார். அதை வலம் வந்தபடியே பேசியவர், ''காரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ் எல்லாம் இந்த மண்ணுல விளையாதுனு பலரும் சொல்வாங்க. இதெல்லாம் மண்ணோட மகிமை புரியாத பேச்சு. அதுக்காகவே அதை யெல்லாம் இங்கே பயிர் பண்ணி இருக்கேன். பாருங்க எப்படி விளைஞ்சிருக்கு. எந்த விதமான செயற்கை உரங்களையும் பயன்படுத்துறது கிடையாது. இப்போ இந்த மண்ணோட சக்தி எல்லாருக்கும் புரிஞ்சிடுச்சி. பத்து ஏக்கருக்கும் அதிகமான பரப்புல இதே மாதிரி காய்கறிகளை பயிரிட ஏற்பாடு நடந்து கிட்டிருக்கு. விஷமில்லாத காய்கறிகளை எங்கள் காலேஜ் விடுதி மாணவர்களுக்கு கொடுக்கணும் கிறதுதான் என்னோட ஆசை'' என்று குஷியோடு சுற்றிக் காட்டுகிறார்.

''அப்பா காலத்துல தினமும் ரெண்டு மணி நேரம் டிராக்டர் ஓட்டி உழுவேன். பெரியப்பா நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களை நேரடியா கவனிச்சு விவசாயம் பண்ணினவர். 'நாம நிலத்தைப் பார்த்தாத்தான் நிலம் நம்மளைப் பார்க்கும்னு அவர் சொன்ன பாடம் அப்படியே அசரீரி மாதிரி உள் மனசுல கேட்டுக்கிட்டு இருக்கு. அதனால தான் எல்லா நிலங்களையும் எம் பார்வையிலேயே கவனிச்சுக்கிட்டு இருக்கேன்.

இப்ப விவசாயச் செலவுகளும் கூலியும் உயர்ந்த அளவுக்கு சரியான விகிதத்தில நெல் விலை உயராததுதான் விவசாயத்தை முடங்க வெச்சிடுச்சி. வாழ்வாதாரமா இருக்கிற நெல்லுக்கு ஒழுங்கான விலை நிர்ணயத்தை நம்ம அரசு ஏற்படுத்த தவறிடுச்சு. அதைக் கேட்க விவசாய ஜீவன்களோட குரலுக்குச் சக்தி இல்லாமல் போயிடுச்சு. இயற்கை உரத்துக்காகக் கூட நாம ஏங்க வேண்டிய நிலையாகிடுச்சு. 'பண்ணிய புண்ணியம் பயிரிலே தெரியும்ணு சொல்வாங்க. இயற்கைக்கு எதிரான எதுவுமே பாவம்தான். இயற்கையின் சக்தி புரியாம அதுகிட்ட மனுஷன் மோதுறான். கடைசியில, தன்னோடு மோதுறவங்கள இயற்கை சிதறடிச்சிடும். இது தெரிஞ்சி மனமுருக இயற்கையை வணங்கக் கத்துக்கணும்'' எனச் சொன்ன வாண்டையார்,

கடைசியாக அழுத்தம் தெறிக்கச் சொன்னது- ''மண்ணை விட மகத்தான திருநீறு வேறில்லை. அதை மறந்தால் நமக்கும் வேர் இல்லை. நம் சந்ததிக்கும் வேர் இல்லாமல் போய் விடும்.''

எத்தனை சத்தியமான வார்த்தைகள்!

வியக்க வைத்த 'சித்தமல்லி

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பே தன் சொந்த ஊரான சித்த மல்லியில் இருபது வேலிக்கும் அதிகமான நிலத்தை தனியாக ஒதுக்கி, நவீன முறையில் விளைச்சலை பெருக்கி முன் மாதிரியான புரட்சியை செய்திருக்கிறார் வாண்டையார். அதற்கு 'சித்தமல்லி ப்ராஜெக்ட்என்றும் பெயர் சூட்டியிருக்கிறார். 'பயிர்கள் தகுந்த இடைவெளியோடு காற்றோட்டம் செல்லும்படி இருந்தால்தான் நல்ல விளைச்சல் கிட்டும்என்பதுதான் சித்தமல்லி ப்ராஜெக்ட்டின் தாத்பர்யம். அதைத் தொடர்ந்து பலரும் அதை கடைபிடித்து பயன் பெற்றிருக்கிறார்கள்.

வாண்டையார் சொல்லும் வழிமுறைகள்

எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பரவாயில்லை, விவசாயத்தையும் நிலத்தையும் தங்கள் கண்பார்வையிலேயே வைத்துக் கொள்ள வேண்டும்.

இயற்கையை மிஞ்சியது எதுவுமில்லை. வீரிய உரங்களைக் கொண்டு விளைச்சலைப் பெருக்குவது சுலபம். ஆனால், விஷமில்லாத விளைச்சல்தான் நமக்கு முக்கியம். நுண்ணுயிர்களும், மண்புழுக்களும் மண்ணுக்குக் கிடைத்த வரங்கள். அவற்றைப் பாதுகாத்தாலே உரங்களுக்கான பாதி செலவு நமக்கு மிச்சமாகி விடும்.

கால்நடைகள் வளர்ப்பதை வெட்கப்படுகிற விஷயமாக நினைக்கக் கூடாது. இனி வரும் காலங்களில் பால் விலையை விட எரு விலை அதிகமாகி விடும். பத்து மாடுகளை வளர்த்தால் நம் வயற்காடுகளின் பசுமைக்கு துணிந்து உறுதி சொல்லலாம்.

விவசாய கணக்கு வழக்குகளை விரல் நுனியில் வைத்துக் கொண்டு, அதற்குத் தக்கபடி விளைச்சலைப் பெருக்கி பலன் காண வேண்டும். 'ஆற்றில் போட்டாலும் அளந்து போட வேண்டும்என்பது விவசாயத்துக்காகவே சொல்லப்பட்ட பழமொழி

இந்த மண்ணுதான் எனக்கு திருநீறு!” துளசி அய்யா வாண்டையாரின் சொல்லே , வாண்டையார் குலத்துக்கு வேதவாக்கு

கல்வி வள்ளல் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார் 1991 முதல் 1996 வரை தஞ்சாவூர் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர் பூண்டி கி. துளசிஐயா வாண்டையார் அவர்கள். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஒருநாள் தவறாமல் அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சுதந்திரத்திற்குப் பிறகு உயர்கல்வியில் ஒரு மாபெரும் யுகப்புரட்சியை நடத்தியவர். ஏழை, எளிய மாணவர்களுக்கு அவர்கள் எந்த வகுப்பைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு கல்வி வழங்கியவர். இலவசமாக உணவும் உறைவிடமும் அளித்து கல்வியில் சாதனை படைத்தவர் துளசிஐயா வாண்டையார்.

எவரிடமும் நன்கொடை பெறாமல், குறிப்பாக மாணவர்களிடம் எதுவும் பெறாமல் கல்லூரியை நடத்த முடியும் என்று நடத்திக் காட்டி வரும் சாதனையாளர்களில் இவரும் ஒருவர் . அத்துடன் ஏழை மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் விடுதிக் கட்டணத்தையும் தன் சொந்தப் பொறுப்பில் கட்டணம் செலுத்திப் படிக்க வைக்கும் கல்வி வள்ளல் இவர்.

ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில், ஐம்பதுகளைக் கடந்த பட்டதாரிகளை, ''எங்கே படித்தீர்கள்?'' என்று கேட்டால், அவர்களின் பெருவாரியான பதில், 'பூண்டி கல்லூரிஎன்பதாகத்தான் இருக்கும்.

'நாக்அமைப்பின் நான்கு நட்சத்திர அங்கீகாரத்தோடு, தன்னாட்சிக் கல்லூரியாக இயங்கும் திருபுட்பம் கல்லூரி, கல்வித் துறையில் தனியார் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணம். சமூகரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை, குறைந்த கல்விக் கட்டணம் என்று கிட்டத்தட்ட ஓர் அரசுக் கல்லூரிபோலவே மாணவர்களுக்குச் சலுகை காட்டுகிறார்கள் என்கிறார்கள் முன்னாள், இன்னாள் மாணவர்கள்.

இப்போது 7,000 மாணவ - மாணவிகள் படிக்கிறார்கள். ஆண்டுதோறும் 200 மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படுகிறது. கல்லூரி வளாகத்திலேயே, அரசுப் பதிவு பெற்ற சித்த - ஆங்கில மருத்துவ மையம் இயங்குகிறது. மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சிகிச்சை இங்கே இலவசம்.

நூலகத்துக்கு என்றே தனி வளாகம். நாட்டின் சிறந்த 300 நூலகங்களில் ஒன்று என்ற பெருமையுடன் கம்பீரமாக எழுந்து நிற்கும் இந்த நூலகத்தில், லட்சம் புத்தகங்கள் இருக்கின்றன. ''இந்த நூலகமும் கல்லூரியின் முகப்பில் உள்ள பிரமாண்ட தியான மண்டபமும் ஒவ்வொரு மாணவரும் தவறாமல் தினமும் வந்து செல்லும் வகையில் இருக்க வேண்டும் என்ற அக்கறையோடு கட்டப்பட்டவை. கல்லூரியைச் சுற்றி உள்ள தோட்டங்களில் நெல்லும், காய்கறிகளும் இயற்கை முறையில் விளைவிக்கப்படுகின்றன. இவற்றில் இருந்துதான் விடுதி மாணவர்களுக்கு உணவு தயாரிக்கப்படுகிறது. 'முதலில் ஒழுக்கம், அடுத்துதான் கல்விஎன்பது கல்லூரியின் தாளாளர் துளசி அய்யா வாண்டையாரின் கொள்கை. இயற்கை வேளாண்மையின் முக்கியம் மாணவர்களுக்கு பயன்பாட்டின் அடிப்படையில் தெரிய வேண்டும் என்பார் அவர். பூண்டிக் கல்லூரி தன் மாணவர்களுக்குத் தர விரும்புவதும் இதைத்தான்''

திரு. கிருஷ்ணசாமி வாண்டையார்.

கல்வி தானத்தைப் போலவே சிறந்தது அன்ன தானம். அதனால்தான் அந்தக் காலத்தில் இருந்து இன்றும் நாடிவருபவர்களுக்கு அன்ன தானம் வழங்கிவருகிறோம். இதைப் போன்ற பாரம்பரியக் குடும்பத்தில் வந்ததால், நான் இழந்தது, என் சிறுவயது குறும்பு வாழ்க்கையை. ஏனென்றால் ஏழு வயது வரை வீட்டிலேயே பாடம் படித்தேன். அதன் பிறகு தஞ்சாவூரில் தூய இருதயனார் பள்ளியில் படிப்பு. குதிரை வண்டியில் செல்லும்போது எல்லாம் 'நம்மால் சாதாரண மனிதர்கள் போல வாழ முடியவில்லையேஎன்ற ஏக்கம் எழும். அதனால், வீட்டில் யாருக்கும் தெரியாமல் சைக்கிளில் நண்பர்களை அழைத்துக்கொண்டு 6 கி.மீ. தொலைவில் உள்ள குமுளக்குழி முனியாண்டவர் கோயிலுக்குப் போய்விடுவேன். அதே போல ஆற்றில் குளிக்கப்போய் நேரம் போவதே தெரியாமல் நீச்சலடித்து அம்மா கையால் அடி வாங்கியதும் உண்டு.

ஊரின் பிரதானத் தொழில் விவசாயம் மட்டும்தான். தாத்தா காலத்தில் எல்லாம் யானை கட்டித்தான் போரடிப்போம். மூன்று போகமும் நெல் விளைச்சல் இருக்கும் என்பதால், வருஷத்தில் 365 நாட்களும் வேலை இருக்கும். வைகாசி மாசம் நடக்கும் புஷ்பவனேஸ்வரர் கோயில் திருவிழாவின்போது எல்லா வேலைகளையும் ஒதுக்கிவைத்துவிட்டு அனைவரும் திருவிழாவில் கலந்துகொள்வார்கள். 11 நாள் ரொம்ப விமர்சையாக நடக்கும் அந்தத் திருவிழா. இந்த ஊருக்குக் கீழே வரும் 18 கிராம மக்களும் இங்கேதான் அப்போது ஒன்றுகூடுவார்கள் அந்தத் திருவிழாதான் எங்களுக்குப் பெரிய பொழுதுபோக்கு.

திருவிழாவின்போது இரவுகளில் 15 அடி உயரத்துக்குப் பூத வேஷம் போடுவார்கள். பார்க்கவே பயங்கரமாக இருக்கும். கண்விழித்து விடிய விடியப் பார்ப்போம். நாங்கள் இருக்கும் தெருவுக்கு வலவு தெரு என்று பெயர். ஆண்கள் எல்லோரும் அவர்களுக்கு என்று இருக்கும் பங்களாவில் இருக்க வேண்டும். அதே மாதிரி குடும்பத்தில் இருக்கும் பெண்கள் அனைவரும் தங்குவதற்கு தனியாக இன்னொரு பங்களா இருக்கும். அதை அந்தப்புரம் என்று சொல்வார்கள். பாட்டியில் இருந்து அம்மா, பெண், பேத்தி எல்லோருமே பகல் முழுவதும் அங்கேதான் இருக்க வேண்டும். அந்தப் பழக்கத்தை எல்லாம் இன்றுவரை எங்கள் அப்பா, அம்மா மாற்றிக்கொள்ளாமல் இருக்கிறார்கள்.

பூண்டி புஷ்பம் கல்லூரிக்காக, தஞ்சாவூரில் இருந்து சாலியமங்கலம் வரைக்கும் சிமென்ட் ரோடு போட்டுத் தந்தார் அப்போதைய முதல்வர் காமராஜர். 1960-களில் போடப்பட்ட ரோடு 1985 வரைக்கும் இருந்தது. அதைப் போல், கல்லூரிக்காகவே வந்ததுதான் எங்கள் ஊர் குடிகாடு ரயில்வே ஸ்டேஷன்.

வணிக நோக்கத்தை பெரிதாக நினைத்து, சேவை செய்வதில் சின்ன குறைகூட வந்துவிடக்கூடாது என்பதனால்தான் பொறியியல் கல்லூரி தொடங்க எவ்வளவோ வற்புறுத்தல்கள் வந்தும்கூட, நாங்கள் தொடங்க மறுத்துவிட்டோம். ஏனென்றால் வசதி, வாய்ப்பு, பதவியால் வருகிற மரியாதை கால ஓட்டத்தில் போய்விடும். ஆனால், கல்வியையும் அன்னத்தையும் தானமாக வழங்குவதால் கிடைக்கும் மரியாதை என்றும் போகாது.