காலத்தில் கரைந்த அடையாளம்:
மயிலாடுதுறை காளியாகுடி ஓட்டல், மயிலாடுதுறையைச் சேர்ந்த கே.வி.சீனிவாசய்யரால்
1931-ல் தொடங்கப் பட்டது. இன்றும் நல்ல பெயரோடு, இங்கு சாப்பிடுபவர்கள்
பாராட்டும்படி அமைந்துள்ளது.
ஆரம்பித்த காலத்தில் சீனிவாசய்யர் போட்டுத் தரும் டிகிரி காபிக்காக, பெரிய பெரிய மனிதர்களெல்லாம் ஓட்டல் திறப்பதற்கு முன்பிருந்தே வந்து காத்திருப்பார்களாம்.
‘ஓட்டல் வாசலுக்கே எருமை மாட்டைக் கொண்டுவரச் செய்து கண்முன்னால் கறந்து, தண்ணீர் விடாமல் காய்ச்சி, பித்தளை ஃபில்டரில் டிகாஷன் இறக்கி, அவர் காபி போட்டுக் கொடுத்தால், வாசனையே மயக்கும்... கொப்புளம் கொப்புளமாக டம்ளரில் நுரை தளும்பும்’ என்று வாயூறச் சிலாகிக்கிறார்கள் மயிலாடுதுறைக்காரர்கள்.
கிட்ட்த்தட்ட ஒரு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக மாயவரத்தில் அதன் பெருமைகளில்
ஒன்றாக தன்னையும் இணைத்துக் கொண்டிருந்தது காளியாகுடி.
சாலையிலிருந்து ஒரு நாலு படி ஏறி ஒரு வராந்தாவைக் கடந்து அந்த சொர்க்கத்தில் நுழைய வேண்டும். கொலாப்சிபிள் கேட் திறக்கும் சத்தம் கேட்கும். மிதியடியை உதறி வாசல் முன் போடுவார்கள். வாசல் தெளித்து கோலம் போடப்படும்.
ஒவ்வொருவராக உள்ளே நுழைவார்கள். சீனிவாச அய்யர் கடுக்கணுடன் கம்பீரமாக கல்லாவில் உட்கார்ந்திருப்பார். ஹாலில் நிறைய டேபிள் சேர் இருக்கும். மார்க்கெட் வியாபாரிகள்,
ஸ்டாண்ட் டாக்ஸி டிரைவர்கள் எல்லாம் அதில் உட்கார்ந்திருப்பர்.
வாசுதேவாச்சாரும் இன்னும் சிலரும் ஹாலின் நடுநாயகமாய்
திகழும் பலகார அலமாரிக்குப் பின்னால் போவார்கள். வாசலில் இருந்து நுழைந்தால் அலமாரியின் இடப்பக்கம் சமயலறை, வலப்பக்கம் பெரிய ஹால் அதில் அந்த காலத்துப் பள்ளிக்கூட்த்தில் இருப்பது போல நீட்டுப் பலகை. சாம்பிராணிப் புகையும் வாசனையும் ஹோட்டல் முழுவதும் நிறைக்கும்.
அதிகாலை பெரிய ஃபில்டரில் இறக்கின டிக்காக்ஷன்
வாசனை. பிடியுடன் கூடிய குவளையில் எடுத்து வரிசையாக பரப்பி வைத்த டபரா செட்களில் காபி மாஸ்டர் அவரவர் டேஸ்ட்டுக்கேற்ப
ஸ்டார்ங்காகவோ லைட்டாகவோ போட்டு பாலை விடும்போது அது கொப்பளம் கொப்பளமாக நுரைத்து டம்பளரிலிருந்து டபராவில் எந்த நிமிஷமும் விழுவேன் என்று எட்டிப்பார்க்கும்.
சர்வர்கள் வெள்ளை வேஷ்டி, துண்டு மட்டும் யூனிபார்ம். அவரவர் பதம் பார்த்து ஆற்றியும் ஆற்றாமலும் காபி கைக்குக் கிடைக்கும். சிலர் டம்ப்ளரை துணியால் பிடித்துக் கொண்டு சூடாக நெருப்புக் கோழிமாதிரி காபி குடிப்பார்கள்.
முதல் முப்பது நிமிடங்கள் காபி மட்டும்தான்.
அதன் பிறகு பொங்கல் இட்லி வடை சப்ளை ஆரம்பிக்கும்.
அந்த பொங்கலின் வர்ணனை இல்லாமல் பொங்கலை உங்களுக்கு புரிய வைக்க முடியாது. அது தட்டு இல்லாத காலம். வாழை இலை டிபன் இலை கையில் கொண்டு வருவார் கணேசன். இலையைப் போட்டு தண்ணீர் தெளிப்பார். குடிப்பதற்கு
தண்ணீர் வைப்பார். ஒரு தட்டில் பொங்கலைக் கொண்டுவந்து அப்படியே இலையில் இறக்குவார் பாருங்கள். என்ன ஒரு நேர்த்தி. அந்த பொங்கலும் கெட்டியாக இல்லாமல் ரொம்ப இளகலாகவும் இல்லாமல் அப்படியே ஆவி பறக்க அந்த இலையில் பாதி இடத்தை ஆக்ரமித்துக்கொள்ளும்.
கணேசனின் கையை இப்போது கொத்துக் கிண்ணம் அலங்கரிக்கும். இலையில் ஒரு மூலையில் பொங்கலுக்கு மிக அருகில் அதன் மேல் ரொம்ப விழாமல் பார்டர் கட்டின மாதிரி சட்னியை இறக்குவார். எதிர் மூலையில் சாம்பார் வந்து சேரும். சாம்பார் வெங்காயம் முழுசாய் மிதக்கும், சிவப்பு மிளகாய் கொஞ்சம் உடைந்து அதன் சிவப்பு சாம்பாரில் கசியும். கறிவேப்பிலை தட்டுப் படும். தாளிப்பு தாராளமாக இருக்கும்.
பொங்கலைப் பற்றி கேட்கவே வேண்டாம். இரண்டு மூன்று முந்திரி, எண்ணெயில் வதங்கிய இஞ்சித்துண்டுகள், நெய்யில் பொறித்த மிளகு கறிவேப்பிலை,
அங்கங்கு தெரியும் ஜீரகம் என்று சர்வாலங்கார
பூஷணையுடன் நாம் சாப்பிடக் காத்திருக்கும். ஆவி லேசாக மேலே எழும்பிக்கொண்டிருக்கும். விரலால் அதை உருட்டி சட்னியோ சாம்பாரோ சேர்த்து வாயில் போட்டு மிளகைக் கடித்து ஒரு காரம் இறங்கும் பாருங்கள் அதற்கு ஈடு இணை இந்த உலகத்தில் எதற்கும் இல்லை.
சூடான வடை வந்து சேரும். பொங்கல் வடை காம்பினேஷன் முடிந்தவுடன்
இட்லி வரும். இட்லிக்கு கச்சேரிகளில் மிருதங்கம் கடத்தோடு கஞ்சிரா போல் மிளகாய்ப்பொடியும் உண்டு.
கூட்டம் கொஞ்சமாக அதிகரிக்க ஹால் களை கட்டும். டபரா டம்ளர் பொறுக்கி அலம்பும் சப்தம், அந்த காலத்தில் சர்வர்கள் டேபிளில் ஆர்டர் எடுத்த உடன் அங்கேயே நின்று உள்ளே ஆர்டர் கொடுப்பது ஒரு அழகு. இரண்டு ரவா, ஒரு மாவு தோசைய்யை என்று சொல்வார்கள்.
இவர் சொல்லி முடித்த இடைவெளியில் உள்ளேயிருந்து
கல் துடைத்து அதில் தண்ணீர் தெளிக்கும் “சொய்ங்” சப்தம் ஹாலில் எதிரொலிக்கும்.
பலகார அலமாரியில் அவ்வப்போது சரக்கு கொண்டு வைத்து சில சமயம் அங்கிருந்தும் சப்ளை நடக்கும். மைசூர் பாகு, மைசூர் போண்டா, காராசேவு வடை பூரிக் கிழங்கு இட்லி இவை பார்சலுக்கு அங்கு வரும். மந்தாரை இலையில் பார்சல் சுறுசுறுப்பாக கட்டப்பட்டும்.
அலமாரியின் மேலிருந்து ஒரு மாய நூல் இறங்கி இவர்கள் இழுக்க இழுக்க திரௌபதி சேலை மாதிரி வந்து கொண்டிருக்கும்.
கிழங்கு சட்னி எல்லாம் பொட்டலத்தில் அடங்கி விடும். பார்சலுக்கு கொடுக்கும் கெட்டிசட்னி ரொம்ப தெரிந்தவர்களுக்கு மட்டும் இலையில் போடப்படும். சாம்பாருக்கு நாம்தான் டிபன் பாக்ஸ் கொண்டு வரவேண்டும்.
அது டிபன் ஹோட்டல் அதனால் சாப்பாடு என்ற பேச்சே இருக்காது. இட்லி வடை பொங்கலில் ஆரம்பிக்கும் தினம் மெதுவாக பூரி, தோசை என்று சூடு பிடிக்கும். காபி எப்போதும் உண்டு. போண்டா (மைசூர்) காலை வேளைகளில். பதினோரு மணிக்கு மேல் தயிர் வடை. அதன்மேல் கொஞ்சம் காராபூந்தி தூவி வைப்பார்கள். வெயில் காலத்தில் ஐஸ் பாக்ஸில் கிரேப் ஜூஸ், ரோஸ்மில்க், ஐஸ் கிரீம் சப்ளை உண்டு.
இரண்டு மணிக்கு மேல் தினம் நடக்கும் அதிசயம் அரங்கேறும் இரண்டு டிரேயில் கோதுமை அல்வா அலமாரிக்கு வந்து சேரும். அதற்கும் அல்வா ரசிகர்கள் குழுமி விடுவார்கள். முதலில் ஒரு போண்டா அல்லது மெதுவடை சாப்பிடும்போதே அல்வா வந்து விடும். அந்த அல்வா தொட்டால் மெத்தென்று இருக்கும் அதன் கலரோ சிவப்பு என்றும் சொல்ல முடியாமல் பழுப்பு என்றும் சொல்ல முடியாமல் ஒரு கலவையாக இருக்கும். கொஞ்சம் காராசேவு கொண்டு வைப்பார்கள்.
காளியாகுடியின் அல்வா மாஸ்டர் வைத்தியைப் பற்றி இங்கு ஒரு குறிப்பு அவசியமாகிறது. அல்வா வைத்தி என்று பெயர். ஆஜானுபாகுவாக
இருப்பார் எட்டு முழ வேஷ்டி அவர் உயரத்திற்கு கணுக்கால் வரைதான் இருக்கும். வெற்றிலை போடுவார். நல்ல உயரம். பதினொரு மணிக்கு உள்ளே போனால் பெரிய வாணலியில் கோதுமைப் பால் வைத்து காயவைத்து சக்கரை நெய் வாசனாதி திரவியங்கள் கலந்து அந்த அல்வாத் துடுப்பால் சுவரில் ஒட்டாமல் கலக்கி பதம் வரும்போது போதுமான நெய் விட்டு துடுப்பில் அப்படியே ஒரு தூக்கு தூக்கினால் சமத்து குழந்தை மாதிரி அல்வா துடுப்பில் வந்து வாணலியில் விழும். இரண்டு மணிக்கு டிரேயில் போட்டு கட் பண்ணி வைத்து விட்டு வருவார்.
அவர் வெளியே வர ஒரு கூட்டம் காத்திருக்கும். இடுப்பில் ஒரு மூன்று பொட்டலம் இருக்கும். அடி அல்வா. முருங்கை மரத்து கோந்து கெட்டிப்பட்ட்து
போல் இருக்கும். கோவில் மண்டகப்படி மாதிரி முன்பே சொல்லி வைத்து அதை வாங்க முடியும். ( பல கர்ப்பிணிப் பெண்களின் மசக்கையில் இதுவும் இடம் பெறும். குழந்தை காதில் சீழ் வராமல் இருக்க வாங்கி கொடுத்து விடுவார்கள்)
என் காளியாகுடியின் விஜயம் எண்ணிலடங்காதது. மாமாவுடன், அப்பாவுடன் அம்மா தங்கைகள் தம்பியுடன் தீபாவளி ஜவுளி வாங்கி, நண்பர்களுடன் பார்ட்டி. வாரம் ஒரு நாள் போடும் கடப்பாவிற்காக அங்கு ஜமாகட்டி அடித்த ரகளைகள். சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு வரும் சொந்தக்கார்ர்களுக்கு காளியாகுடியில் அளித்த பார்ட்டி. திருமணமானவுடன் மனைவியுடன், குழந்தைகளுடன் என எத்தனையோ அற்புத கணங்கள்....