Monday, November 8, 2021

இராப்பட்டீஸ்வரம் சிவன்கோயில்

 திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், இராப்பட்டீஸ்வரம் சிவன்கோயில்


இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள - வைப்புத் தலமாகும்.

நல்லூரே நன்றாக நட்டமிட்டு

நரையேற்றைப் பழையாறே பாய ஏறிப்

பல்லூரும் பலி திரிந்து சேற்றூர் மீதே

பலர் காணத் தலையாலங்காட்டின் ஊடே

இல்லார்ந்த பெருவேளூர்த் தளியே பேணி

இராப் பட்டீச்சரம் கடந்து மணற்கால் புக்கு

எல்லாரும் தளிச்சாத்தங்குடியில் காண

இறைப் பொழுதில் திருவாரூர் புக்கார் தாமே.

திருநாவுக்கரசரின் 6ம் திருமுறையில் ௨௫ 25 வது பதிகத்தில் 10வது பாடலில் இந்த வைப்பு தலத்தை பற்றிய குறிப்பு உள்ளது இது திருவாரூர் தலத்துக்குரிய பதிகமாகும்.

கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் மணக்கால் அய்யம்பேட்டை உள்ளது. இந்த பேருந்து நிறுத்தத்தின் வடக்கில் செல்லும் சாலையில் உள்ளது கோயில். இக்கோயிலின் வடமேற்கில் பாடல் பெற்ற தலம் பெருவேளூர் உள்ளது வடகிழக்கில் கங்காதர ஈஸ்வரர் கோயில் உள்ளது. தெற்கில் அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது இவை அனைத்தும் சேர்ந்தே மணக்கால் அய்யம்பேட்டை என்று அழைக்கின்றனர்.

இறைவன் - சேஷபுரீசுவரர். இறைவி - அந்தப்புர நாயகி.

சிறப்புக்கள் பல உள்ளன.

. மூலவரின் திருமேனியில் பாம்பு வடிவம் உள்ளது, அதனால் சேஷபுரீஸ்வரர் எனப்படுகிறார்.

. மேற்கு நோக்கிய திருக்கோயில்

. உள் மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி சிலை 5 ½ அடி உயரத்திலும் சனகாதி முனிவர்கள் பக்கத்தில் 2 அடி உயரத்திலும் உள்ளனர். இறைவன் இறைவி சன்னதிகளின் இடையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

. மூலவர் முன்புள்ள நந்தி, தட்சிணாமூர்த்தியைப் பார்த்தவாறு முகத்தைத் திருப்பிக் கொண்டிருப்பதும் ஒரு அதிசயம்.

. மேற்கு நோக்கிய பைரவர் 5 ½ அடி உயரத் திருமேனி.

. வீணையில்லா சரஸ்வதி

புராண வரலாற்றை விரிவாக சொல்கிறேன் வாருங்கள்;

ராப்பட்டீச்வரம் என்ற பதம் ரிக்வேத ரக்திரி சூக்தம் என்பதில் இருந்து வந்தது, அதுமட்டுமல்லாது காமதேனு இத்தல இறைவனை வணங்கி பட்டி, நந்தினி, விமலை, சபாலி எனும் நான்கு பெண் குழந்தைகளை பெற்றதாலும் ரக்திரி+பட்டி+ஈஸ்வரர் என சேர்ந்து மருவி ராப்பட்டீச்வரம் என ஆனது.

அகத்திய முனிவர் ஆதித்ய ஹிருதய உபதேசத்தை இலங்கையில் போர் நடந்த போது ராமருக்கு உபதேசித்தார். சித்த கிரந்தம் எனப்படும் ஆதிசௌரபுராணத்தில் அகத்திய மகரிஷி மீண்டும் ஆதித்ய ஹிருதய உபதேசத்தை ராமருக்கு இரண்டு பாஸ்கர சக்தி ஷேத்திரங்களில் உபதேசம் செய்தார், என்கிறது. அவையே இந்த ராப்பட்டீச்வரம் மற்றும் சுரைக்காயூர் என்பதாகும்.

இங்குள்ள தக்ஷணமூர்த்தி சரஸ்வதிக்கு ஞானத்தையும் லட்சுமிக்கு வித்யா எனப்படும் கல்வியையும் அளித்துள்ளார் அதனால் இங்குள்ள சரஸ்வதி இரு கைகளிலும் தாமரை ஏந்தி ஞானசரஸ்வதியாகவும், அக்ஷர மாலை கொண்ட வித்யாலக்ஷ்மியாகவும் காட்சியளிக்கின்றனர் என்பது சிறப்பு.

சிவாகம கிரந்தம் சந்தனவித்யா என்றொரு சொல்லுக்கு விளக்கமாக, பல பிறப்புக்கள் எடுக்கிறோம் அதில் கற்கும் கல்வியானது மறுபிறப்பிலும் நம்முள் வாசமாக வருவதை சந்தனவித்யா என்கிறது.இதையே நாம் ஞானம் என்கிறோம், இந்த சந்தனவித்யா எனப்படுவதை இங்குள்ள தக்ஷணமூர்த்தி அளிக்கிறார் என்பது நமையெல்லாம் ஆச்சரியப்படத்தானே வைக்கும்.

இப்படி ஒரு ஞானத்தை வேண்டி சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் தக்ஷணமூர்த்திக்கு சந்தன அபிஷேகம் செய்தால் அவர் நமக்கு இந்த ஆன்ம ஞானத்தினை அளிப்பார்.

ஆலயத்தில் முகப்பு கோபுரமில்லை முகப்பு வாயில் கடந்து உள்ளே சென்றால் நீண்ட முகப்பு மண்டபத்தின் வாயிலில் லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளனர். கருவறையில் மேற்கு நோக்கிய இறைவன் சேஷபுரீஸ்வரும், அவரது வாயிலில் இரு துவாரபாலகர்கள் உள்ளனர். இடது புற துவாரபாலகர் அருகில் ஆறடிக்கு உயர்ந்து நிற்கும் பைரவபெருமான் உள்ளார்.

அம்பிகை தெற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். அருகில் ஆறடி உயரமுள்ள தக்ஷணமூர்த்தியும் அருகில் சனகாதி முனிவர்களும் 2 அடி உயரத்தில் தனித்தனியே உள்ளனர். கோட்டத்து மூர்த்தியாக இல்லாமல் இறைவன் இறைவி இருவருக்கும் இடையில் உள்ளது சிறப்பு திட்டை ஓமாம்புலியூர் போன்ற ஊர்களில் மட்டுமே இவ்வாறான தரிசனம் கிடைக்கும்.

இங்குள்ள இறைவன் சேஷபுரீஸ்வரர் மேற்கு நோக்கியவர், லிங்கத்தின் மீது பாம்பு போன்ற வடிவம் காணப்படுகிறது, இத்தல இறைவனை ஆதிசேஷன் வழிபட்டு பெரும்பேறு பெற்றுள்ளார். இதனால் இது சர்ப்பதோஷ நிவர்த்தி தலம் ஆகும்.

பைரவ பெருமான் மிகவும் வரப்பிரசாதி ஆவார், தேய்பிறை அஷ்டமியில் வாழை இலையில் தயிர்சாதமும் வடையும் பைரவருக்கு நிவேதனம் செய்யப்படுகிறது. இவர் வடகிழக்கில் இருந்தவர் ஆகலாம். பங்குனி 7-11 -௧௧ தேதி வரை ஐந்து நாட்கள் மாலை சூரிய அஸ்தமனத்தின் போது சூரிய ஒளி இறைவன் மீது விழுவது அபூர்வகாட்சி.

உள்மண்டபத்தில் பெரிய விநாயகர் ஒருவர் தென்மேற்கில் உள்ளார் வடமேற்கில் பெரிய முருகனும் வள்ளி தெய்வானையும் உள்ளனர் இவ்விரு மூர்த்தங்களும் வெளி பிரகாரத்தில் இருந்தவர்கள் ஆகலாம்.

கோயிலுக்கு வடபுறம் உள்ள தீர்த்தம் மலட்டுத் தன்மையைப் போக்கும் தன்மையதாகச் சொல்லப்படுகிறது.

பிரகாரங்களில் வடகிழக்கில் சண்டேசர் சன்னதி பெரியதாக கருங்கல் கொண்டு கட்டப்பட்டுள்ளது. அதில் பல கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பெரும்பாலும் நிலக்கொடை அளித்த விபரங்களே உள்ளன. தென்கிழக்கில் உள்ள மடைப்பள்ளி முற்றிலும் சேதமடைந்துள்ளது.

கருவறை கோட்டங்களில் துர்க்கை லிங்கோத்பவர் தென்முகன் உள்ளனர். தென்புற கருவறை சுவற்றிலும் பல கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.தென்புறம் முன்னிழுக்கப்பட்ட மண்டபம் நடராஜர் தரிசனம் காண்பதற்காக இருந்திருக்கலாம். பல சிலைகள் உடைந்தும் சிதைந்தும் ஆங்கங்கே கிடத்தப்பட்டுள்ளன.

பல சிறப்புக்கள் கொண்ட இக்கோயில் சரியான பராமரிப்பின்றி சிதைவடைய ஆரம்பித்துள்ளது. முறையான பூசகரும் இல்லை என்பது காலை நேரத்தில் அடைத்த கதவுகள் சொல்கின்றன. அருகாமை வீட்டில் இருக்கும் வயதான கமலம்மாள் இருக்கும் வரை விளக்கு மட்டுமாவது எரியும்.