Monday, November 8, 2021

"செக் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட், இரண்டுக்கும் இடையே என்ன வேறுபாடு?"

 

                   செக் மற்றும் டிமாண்ட் டிராஃப்ட் இரண்டையுமே தினசரி வங்கிப் பரிவர்த்தனைகளுக்காக நாம் பயன்படுத்தியிருப்போம். ஆனால், அனைவருக்கும் இவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகள் செய்யும் வாய்ப்பு இருந்திருக்குமா எனத் தெரியாது. சிலருக்கோ வங்கியின் செயல்பாடுகள் மற்றும் வங்கியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளே அச்சமூட்டுவதாக இருக்கும். ஆனால், வங்கியின் செயல்பாடுகளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும், பணப் பரிவர்த்தனை தொடர்பான அடிப்படைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறையப் பேருக்கு இருக்கும். நம் வாசகர் ஒருவருக்கும் வங்கிப் பரிவர்த்தனை தொடர்பான சந்தேகம் ஒன்று எழுந்திருக்கிறது. அதனை மேற்கூறிய கேள்வியாக நமது டவுட் ஆஃப் காமன் மேன் பக்கத்தில் கேட்டிருந்தார்.



டிமாண்ட் டிராஃப்ட்

                     செக் மற்றும் டிடி (டிமாண்ட் டிராஃப்ட்) இரண்டுமே வங்கிப் பணப் பரிவர்த்தனைகளுக்காகப் பயன்படுத்தப்படுபவைதான். ஆனால், இரண்டுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. செக் என்பது ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளரால் வழங்கப்படுவது. ஒரு வாடிக்கையாளர் செக் எழுதிக் கொடுக்கிறார் என்றால், அவரது கணக்கில் கண்டிப்பாகப் பணம் இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒரு வேளை செக்கைக் கொடுத்தவரின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால் அந்தச் செக்கானது பவுன்ஸ் ஆகி விடும். ஒரு செக் பவுன்ஸ் ஆவதற்கு வங்கிக் கணக்கில் பணமில்லாமல் இருப்பது ஒரு காரணமாக இருந்தாலும், வேறு சில காரணங்களும் இருக்கின்றன. செக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதி, வங்கிக்கணக்கு எண், பெயர் ஆகிய விவரங்கள் தவறாகவோ அல்லது பிழையுடனோ இருந்தாலும் செக் பவுன்ஸ் ஆவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

                     டிடி என்பது ஒரு வங்கியால் வழங்கப்படுவது. செக் என்றால் வாடிக்கையாளரிடம் இருந்து செக்கைப் பெற்றுக் கொண்டு வங்கி அவருடைய கணக்கில் இருந்து பணம் அளிக்கும். ஆனால், டிடி என்பது நாம் பணத்தைச் செலுத்திய பிறகு அதற்கான ரசீது போல வங்கியால் வழங்கப்படுவது. எனவே, செக்கைப் போல பவுன்ஸ் ஆகும் பிரச்னைகள் டிடியில் கிடையாது. இதனால்தான் நிறுவனங்கள் பலவும் வங்கிப் பணப்பரிவர்த்தனை என்றால் டிடியையே பிரதானமாகக் கேட்கின்றன.

 



                      செக் மற்றும் டிடியிலும் சில வகைகள் இருக்கின்றன. டிடியில் சைட் டிடி (Sight DD) மற்றும் டைம் டிடி (Time DD) என இரு வகைகள் இருக்கின்றன. சைட் டிடியாக வழங்கப்பட்டால் பணத்தைப் பெறுபவர் குறிப்பிட்ட ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில் அந்த டிடியைக் கொண்டு பணத்தைப் பெற முடியாது. டைம் டிடி என்றால், டிடியில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்திற்குப் பிறகுதான் பணத்தைப் பெற முடியும். அதற்கு முன்னால் பணத்தைப் பெற முடியாது.


                      செக்கிலும், பியரர் செக், ஆர்டர் செக், கிராஸ்டு செக் மற்றும் ஸ்டேல் செக் என சில வகைகள் இருக்கின்றன. பியரர் செக்காக (Bearer Cheque) வழங்கப்படும் செக்கில், ஒரு குறிப்பிட்ட செக்கை யார் வைத்திருந்தாலும் அந்த செக்குக்குரிய பணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆர்டர் செக் (Order Cheque) எனப்படுவது ஒரு செக்கில் குறிப்பிடப்பட்டிருக்கும் நபரால் மட்டுமே பணத்தைப் பெற முடியும். ஆர்டர் செக் என்றால் நம்முடைய அடையாள அட்டை ஒன்றையும் உடன் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம். கிராஸ்டு செக் (Crossed Cheque) என்றால் நம்மால் நேரடியாக அந்த செக்கைக் கொடுத்துப் பணத்தைப் பெற முடியாது. செக்குக்கான பணத்தை நம்முடைய வங்கிக் கணக்கிற்குத்தான் மாற்ற முடியும். நான்காவது வகை ஸ்டேல் செக் (Stale Cheque). இந்த வகை செக்கில் டைம் டிடியைப் போல குறிப்பிட்ட நேரத்திற்குப் பின்னர்தான் நம்மால் பணத்தைப் பெற முடியும்.