அஞ்சல் குறியீட்டு எண் (Pin Code)
இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அஞ்சல் அலுவலகம் ஒவ்வொன்றுக்கும் அஞ்சல் குறியீட்டு எண் (Postal Index Number) ஒன்று பயன்பாட்டில் இருக்கிறது. 'அஞ்சல் அலுவலகங்களுக்கு இந்த அஞ்சல் குறியீட்டு எண்கள் ஏன் வழங்கப்பட்டிருக்கின்றன? இந்த எண்கள் எப்படி வழங்கப்பட்டன? இந்த எண்கள் எதற்கு உதவுகின்றன?' எனும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வழியில் அது குறித்த தகவல்கள் இங்கே தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன.
அஞ்சல் குறியீட்டு எண்
இந்திய அஞ்சல் அலுவலகங்களை அடையாளப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் அஞ்சல் குறியீட்டு எண் என்பதன் ஆங்கிலச் சொற்களான Postal Index Number என்பதன் முதல் எழுத்துகளை மட்டும் கொண்டு PIN என்று குறிப்பிடப்படுகிறது. இதனைப் பெரும்பான்மையான மக்கள் பின்கோடு என்றே சொல்கின்றனர்.
Postbox
ஆறு இலக்கங்களிலான அஞ்சல் குறியீட்டு எண்ணில் முதல் இலக்கம் மண்டலத்தையும், இரண்டாவது இலக்கம் துணை மண்டலத்தையும், மூன்றாவது இலக்கம் முதல் இரண்டு இலக்கத்துடன் இணைந்த மாவட்டத்தையும், கடைசியாக இருக்கும் மூன்று இலக்கங்கள் வரிசைப்படுத்திய மாவட்டத்திலுள்ள தனிப்பட்ட அஞ்சல் நிலையத்தின் குறியீட்டு எண்ணாகவும் அமைக்கப்பட்டிருக்கின்றன.
முதல் இலக்கம்
அஞ்சல் குறியீட்டின் முதல் இலக்கம் இந்திய அஞ்சல் துறையின் மண்டலத்தைக் குறிப்பிடுகிறது. அஞ்சல் துறையில், இந்தியா முழுவதும் ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை;
1 – தில்லி, அரியானா, பஞ்சாப், இமாசலப்பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக், சண்டிகர்.
2 – உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட்
3 – இராஜஸ்தான், குஜராத், டாமன் அண்ட் டையூ, தாத்ரா அண்ட் நகர் ஹவேலி
4 – மகாராஷ்டிரா, கோவா, மத்தியப்பிரதேசம், சத்தீஷ்கர்
5 – தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், கர்நாடகம்
6 – தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, லட்சத்தீவு
7 – மேற்கு வங்காளம், ஒடிசா, அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, மேகாலயா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், சிக்கிம்.
8 – பீகார், ஜார்க்கண்ட்
9 – இராணுவ அஞ்சல் சேவை (Army Postal Service) மற்றும் கள அஞ்சல் அலுவலகம் (Field Post Office)
அஞ்சலகம்
மேற்காணும் ஒன்பது மண்டலங்களில் 1 முதல் 8 வரையிலான மண்டலங்கள் இந்தியாவிலிருக்கும் அனைத்து மாநிலங்கள் மற்றும் இந்திய அரசின் ஒன்றியப் பகுதிகளையும் உள்ளடக்கிய நிலப்பரப்பினை முதன்மையாகக் கொண்ட எட்டு மண்டலங்களாகவும், ஒன்பதாவதாக இருக்கும் மண்டலம் இராணுவ அஞ்சல் சேவை மற்றும் கள அஞ்சல் அலுவலகங்களுக்கான செயல்பாடுகளை முதன்மையாகக் கொண்ட ஒரு தனி மண்டலமாகவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன.
இரண்டு மற்றும் மூன்றாவது இலக்கம்
அஞ்சல் குறியீட்டு எண்ணில் மேற்காணும் ஒன்பது மண்டலங்களின் முதல் இலக்கத்தை அடுத்து வரும் இலக்கம் சேர்ந்து அஞ்சல் துறையின் துணை மண்டலத்தை, அதாவது, இந்திய இராணுவத்தின் செயல்பாட்டு மண்டலத்தைத் தவிர்த்த, இந்தியாவின் குறிப்பிட்ட நிலப்பகுதியினைக் குறிக்கிறது. முதல் இரு இலக்கங்களுடன் இணைந்த மூன்றாவது இலக்கமானது, மிக முக்கியமான நகரத்தின் முதன்மையான அஞ்சல் அலுவலகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட அஞ்சல் மாவட்டத்தை அல்லது அஞ்சல் துறையால் வரிசையாக்கப்பட்ட மாவட்டத்தைக் குறிக்கிறது. இங்கு கையாளப்படும் அஞ்சல்களின் அளவைப் பொறுத்து, வரிசையாக்கப்பட்ட அல்லது அஞ்சல் மாவட்டத்தின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. அவை;
11 – தில்லி
12 மற்றும் 13 – அரியானா
14 முதல் 15 வரை – பஞ்சாப்
16 - சண்டிகர்
17 – இமாசலப்பிரதேசம்
18 மற்றும் 19 – ஜம்மு மற்றும் காஷ்மீர், லடாக்
20 முதல் 28 வரை – உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட்
30 முதல் 34 வரை – இராஜஸ்தான்
36 முதல் 39 வரை – குஜராத்
306210 – டாமன் அண்ட் டையூ
396 – தாத்ரா அண்ட் நகர்ஹவேலி
40 முதல் 44 – மகாராட்டிரம்
403 – கோவா
45 முதல் 48 வரை – மத்தியப்பிரதேசம்
49 – சத்தீஷ்கர்
50 – தெலுங்கானா
51 முதல் 53 வரை – ஆந்திரப்பிரதேசம்
56 முதல் 59 வரை – கர்நாடகம்
60 முதல் 66 வரை – தமிழ்நாடு
605 – புதுச்சேரி
67 முதல் 69 வரை – கேரளம்
70 முதல் 74 வரை – மேற்கு வங்காளம்
737 – சிக்கிம்
744 – அந்தமான் மற்றும் நிக்கோபர் தீவுகள்
75 முதல் 77 வரை – ஒடிசா
78 – அசாம்
790 முதல் 792 வரை – அருணாசலப்பிரதேசம்
793 முதல் 794 வரை – மேகாலயா
795 – மணிப்பூர்
796 – மிசோரம்
797 முதல் 798 வரை – நாகாலாந்து
799 – திரிபுரா
80 முதல் 85 வரை – பீகார், ஜார்க்கண்ட்
90 முதல் 99 வரை – இராணுவ அஞ்சலகச் சேவை
நான்காவது இலக்கம்
அஞ்சல் குறியீட்டு எண்ணின் நான்காவது இலக்கம், அஞ்சல் துறையின் வரிசைப்படுத்தப்பட்ட மாவட்டத்தில் அஞ்சல் வழங்கும் அலுவலகத்தின் சேவைப் பாதையினைக் குறிப்பிடுகிறது. வரிசைப்படுத்தப்பட்ட மாவட்டத்தின் முக்கியப் பகுதியிலுள்ள அலுவலகங்களுக்கு ‘0’ எனும் எண் வழங்கப்பட்டிருக்கிறது.
கடைசி இரு இலக்கங்கள்
அஞ்சல் குறியீட்டு எண்ணின் கடைசி இரண்டு இலக்கங்கள் அஞ்சல் வழங்கும் அலுவலகத்தினைக் குறிப்பிடுகின்றன. பொது அஞ்சல் அலுவலகம் (General Post Office) அல்லது தலைமை அலுவலகம் (Head Office) 01 எனும் இலக்கத்தைக் கொண்டிருக்கிறது. அஞ்சல் வழங்கும் அலுவலகத்தின் எண்ணிக்கையானது கையாளப்படும் அஞ்சல்களின் எண்ணிக்கையைக் கொண்டே உருவாக்கப்படுகிறது. புதிய அஞ்சல் வழங்கும் அலுவலகம் உருவாக்கப்படும் போது, கடைசி இரு இலக்கங்களின் எண்ணிக்கையை அதிகரித்து புதிய அஞ்சல் குறியீட்டு எண் உருவாக்கப்படுகிறது.
அஞ்சல் வழங்குதல்
அஞ்சல் வழங்கும் அலுவலகங்களாகப் பொதுத்தலைமை அலுவலகம் (General Post Office
- GPO), தலைமை அலுவலகம் (Head Office – HO), துணை அலுவலகம் (Sub-Office - SO) போன்றவை இருக்கின்றன. இந்த அலுவலகங்கள் எல்லாம் நகர்ப்பகுதிகள், நகரைச் சார்ந்த பகுதிகளாக இருக்கின்றன. கிராமப்பகுதிகளில் கிளை அலுவலகங்கள் (Branch Office – BO) அமைக்கப்பட்டிருக்கின்றன. கிளை அலுவலகங்களுக்கு அருகிலுள்ள அஞ்சல் வழங்கும் அலுவலகத்தின் அஞ்சல் குறியீட்டு எண்களே பயன்படுத்தப்படுகின்றன.
அஞ்சலகம்
அஞ்சல் பெட்டிகளிலிருந்து சேகரிக்கப்படும் அஞ்சல்கள், அஞ்சல் அலுவலகங்களில் பெறப்படும் அஞ்சல்கள் என்று அனைத்தும் அஞ்சல் அலுவலக முத்திரையிடப்பட்டு, வரிசைப்படுத்தப்பட்ட மாவட்டம், துணை மண்டலம், மண்டலம் என்று அஞ்சல் குறியீட்டு எண்களைக் கொண்டு விரைவாகப் பிரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதே போன்று, மண்டலம், துணை மண்டலம், வரிசைப்படுத்தப்பட்ட மாவட்டம். வழங்கல் அலுவலகம் வாரியாக விரைவாகப் பிரித்து உரியவருக்குக் கொண்டு சேர்க்கும் பணிகளையும் மேற்கொள்கின்றனர். அஞ்சல் குறியீட்டு எண்களிடப்பட்ட அஞ்சல்கள் உரியவர்களுக்கு விரைவில் கொண்டு சேர்க்கப்படுகின்றன. அஞ்சல் குறியீட்டு எண்களில்லாத அஞ்சல்கள் உரியவர்களுக்குச் சென்றடைவதில் மிகுந்த காலதாமதம் ஏற்படுகிறது.