மின் கட்டணத்துக்கு GST-யா? மக்களின் குழப்பத்துக்கு பதில்!
மின் கட்டணம் செலுத்தும்போது, ஜி.எஸ்.டி வரியும் சேர்த்து வசூலிக்கப்படுவதால், மின் பயன்பாட்டுக்கு வரி வசூலிப்பதாக, நுகர்வோர் குழப்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில், `மின் சேவைகளுக்கான 18% ஜி.எஸ்.டி வரி வசூலிப்பைத் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்திருப்பதும், தமிழகத்தில் மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி வசூலிப்பதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், வசூலிக்கப்பட்ட வரித் தொகையைக் கட்டணத்தில் வரவு வைத்து ஈடு செய்ய வேண்டும்' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பேசியிருப்பதும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.மக்களின் குழப்பத்துக்குத் தீர்வு தரும் விதமாக, ``மத்திய அரசு ஜி.எஸ்.டி வரியை 2017 ஜூலையில் அமல்படுத்தியது. அதில், மின் பயன்பாட்டுக்கான கட்டணத்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதர மின்சார சேவைகளுக்கான பல்வகைக் கட்டணங்களுக்கு (வீடுகளுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்கும்போது, பதிவுக் கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீட்டுக் கட்டணம், வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின் பயன்பாட்டுக் கட்டணம்) மட்டும், 18% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையில் எந்தவிதமான மாற்றத்தையும் தமிழக அரசு ஏற்படுத்தவில்லை. அதனால், பொதுமக்கள் மின் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி என்கிற பொதுவான தகவலைக் கண்டு குழப்பமடைய வேண்டாம்.
பல்வகைக் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி!
அதேபோல மின் இணைப்புப் பெயர் மாற்றம், இடமாற்றம் உள்ளிட்ட இதர சேவைகளுக்கும் தனித்தனியே கட்டணம் வசூலிக்கிறது. மின்சார சேவைகளுக்கான இந்தப் பல்வகைக் கட்டணங்களுக்கு, ஜி.எஸ்.டி உண்டு.
தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு உள்ளிட்ட சேவைகளைப் பெற்ற, சில நுகர்வோர்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வகைக் கட்டணத்துக்கும், மின் துண்டிப்பு மற்றும் மறு இணைப்பு கட்டணத்துக்கும் இதுவரை ஜி.எஸ்.டி வசூலிக்கப்படாமல் இருந்தது. அப்படி ஜி.எஸ்.டி வசூலிக்காதவர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்குமாறு, ஜி.எஸ்.டி கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதிக மின் கட்டணம்: உண்மை நிலைதான் என்ன? எனவே, 2017 முதல் தற்போது வரை பல்வகைக் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி கட்டாதவர்களிடமிருந்து நிலுவைத் தொகையை வசூலிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, நுகர்வோர் சந்தேகம் எழுப்பினால் தெளிவுபடுத்தும்படி அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பம் ஏற்படுத்திய மின் கட்டண ரசீது
சமூக வலைதளங்களில் பி.வீராசாமி என்கிற நுகர்வோர் ஒருவர் கடந்த 23-ம் தேதி செலுத்திய மின் கட்டண ரசீதில், மின் பயன்பாட்டுக் கட்டணம் ரூ.95 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் மத்திய ஜி.எஸ்.டி ரூ.45, மாநில ஜி.எஸ்.டி ரூ.45 சேர்த்து ரூ.185 வசூலிக்கப்பட்டுள்ளது.
குழப்பம் ஏற்படுத்திய மின் கட்டண ரசீது
சமூக வலைதளங்களில் அந்த ரசீதைப் பார்த்த பலரும் மின்கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி-யா என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். உண்மை என்னவெனில், சம்பந்தப்பட்ட நுகர்வோர், 2018-ம் ஆண்டில் ஜனவரி 30 மற்றும் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 29 ஆகிய இரு தேதிகளில் இரண்டு முறை மறு மின் இணைப்புக்காகத் தலா ரூ.100 செலுத்தியுள்ளார்.
மேலும் 2020 செப்டம்பர் 1-ல் மின் இணைப்பு பெயர் மாற்றத்துக்கு, ரூ.300 பல்வகைக் கட்டணம் செலுத்தியுள்ளார். இதையடுத்து அந்த நுகர்வோர் செலுத்திய மொத்த தொகையான ரூ.500-க்கு, 18% ஜி.எஸ்.டியாக ரூ.90 வசூலிக்கப்பட்டுள்ளது. இந்த விவரத்தை மின் கட்டண ரசீதில் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தால் குழப்பம் ஏற்பட்டிருக்காது. அதனால் இனி பல்வகைக் கட்டணங்களுக்கு ஜி.எஸ்.டி வசூலிக்கும்போது அதை ரசீதில் தெளிவாக அச்சிடச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறோம்" என்றார் தெளிவாக.
இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல், மக்களை மேலும் குழப்பும் விதமாக அரசியல் கட்சி தலைவர்கள் மின்சார பயன்பாட்டுக் கட்டணத்துக்கு 18% ஜி.எஸ்.டி வரி வசூல் செய்வதை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என அறிக்கை விட்டுள்ளனர்.