ரம்புட்டான் பழம்
ரம்புட்டான் பழத்தின் அறிவியல் பெயர் நெபிலியம் லப்பாசியும் (Nephelium lappaceum) ஆகும். இது தென்கிழக்கு ஆசியாவை பூர்விகமாக கொண்ட ஒரு வகை மரமாகும். இம் மரத்தில் வளரும் பழத்தை ரம்புட்டான் என்றும் அழைக்கிறார்கள். ரம்புட்டான் என்ற பெயர் "ஹேரி"என்று பொருள்படும் ஒரு சொல்.
இந்தியாவில் ராம்புட்டான் :
இந்தோனேசியா, மலேசியா மற்றும் தெற்கு தாய்லாந்தை உள்ளடக்கிய மலாயன் தீவுக்கூட்டத்தில் ரம்புட்டான் பழம் உருவாகி இருந்தாலும் இந்தியாவில், ரம்புட்டான் சாகுபடி கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற தென் மாநிலங்களின் சில பகுதிகளில் நடை பெறுகிறது.
ராம்புட்டான் பழத்தின் வகைகள் :
ரம்புட்டானில் பல வகைகள் உள்ளன. அதில் 22 வகைகள் இந்தோனேஷியாவில் காணப் படுகின்றன. ராம்புட்டான் பழ வகைகளில் சிகோனெங், ராபியா, சினியோனியா மற்றும் பின்ஜாய் ஆகியவை அடங்கும். ரம்புட்டன் பழம் பச்சை நிறத்தில் தொடங்கி முதிர்ச்சியடையும் போது சிவப்பு அல்லது மஞ்சள் நிறமாக மாறும்.
ரம்புட்டான் பழத்தில் உள்ள சத்துக்கள் :
ரம்புட்டான் பழத்தில் பல வைட்டமின்கள், தாதுச் சத்துக்கள் மற்றும் நன்மை பயக்கும் தாவரத்தின் மூலம் கிடைக்கும் பல சத்துக்கள் உள்ளன. 100 கிராம் ரம்புட்டான் பழத்தில் 1.3 முதல் 2 கிராம் வரை நார்ச் சத்து உள்ளது. இது ஆப்பிள், ஆரஞ்சு அல்லது பேரீச்சம்பழங்களில் உள்ள நார்ச் சத்துக்கு சமமாகும்.
ரம்புட்டானில் கொழுப்பு மிகக் குறைந்த அளவில் உள்ளது. 100 கிராம் ராம்புட்டான் பழத்தில் 0.5 கிராமுக்கும் குறைவாக உள்ளது. ரம்புட்டான் பழத்தில் புரதமும் மிக குறைந்த அளவில் உள்ளது. 100 கிராம் ரம்புட்டான் பழத்தில் ஒரு கிராமுக்கும் குறைந்த அளவில் புரதச் சத்து உள்ளது. ரம்புட்டானில் கணிசமான அளவு தாமிரமும் உள்ளது. இது எலும்புகள், மூளை மற்றும் இதயம் உள்ளிட்ட பல்வேறு உயிரணுக்களின் சீரான வளர்ச்சி மற்றும் பராமரிப்பில் பங்கு வகிக்கிறது. மேலும் இதில் மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், மெக்னீசியம்,
இரும்பு மற்றும் துத்தநாகச் சத்தும் காணப்படுகிறது. 100 கிராம் ரம்புட்டான் பழத்தில் தினசரி உடலுக்கு தேவையான காப்பர் சத்தில் 20 சதவீதமும பிற ஊட்டச்சத்துக்களின் தினசரி பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் 2–6% பூர்த்தி செய்யும் அளவுக்கு சத்துக்கள் உள்ளன.
ரம்புட்டான் பழம் நன்மைகள் :
ரம்புட்டான் பழத்தின் மிகவும் பயன் தர கூடிய பல சுகாதார நன்மைகள் உள்ளன. எடை இழப்புக்கு உதவும் திறன், சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்துதல், செரிமானத்தை மேம்படுத்துதல், எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் ஆற்றல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்கிறது :
இரண்டு ரம்புட்டான் பழங்களை உட்கொள்வதன் மூலம் தினசரி வைட்டமின் சி தேவையை பூர்த்தி செய்ய முடியும். வைட்டமின் சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மற்றும் இரும்பு சத்து உறிஞ்சுதலை ஊக்கப் படுத்துவதோடு, இரத்த வெள்ளை அணுக்களின் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் உதவுகிறது. மேலும் வைட்டமின் சி அனைத்து உடல் திசுக்களின் வளர்ச்சிக்கும் அவசியமாகும். செல்களில் இருந்து நச்சுகளை அகற்றும் ஒரு முக்கிய ஆக்ஸிஜனேற்றியாகும்.
அனீமியாவை தடுக்கிறது :
வைட்டமின் சி உணவில் இருந்து இரும்புச் சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இரும்பு சத்து குறைபாடு இரத்த சோகை எனப்படும் நோய் உண்டாக காரணமாக அமைகிறது. அனைத்து செல்கள் மற்றும் திசுக்களுக்கும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல உடலில் போதுமான அளவு சிவப்பு இரத்த அணுக்கள் இல்லாத நிலை இரத்த சோகை அல்லது அனீமியா எனப்படுகிறது. ரம்புட்டான் பழங்களை சாப்பிடுவது அல்லது ரம்புட்டான் சாறு குடிப்பதால், இரும்புச் சத்துக்கள் போதுமான அளவு உறிஞ்சப் படுவதை உறுதிசெய்து, இரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியை அதிகப் படுத்தி சிறப்பாக செயல்பட ஊக்குவிக்கிறது.
காய்ச்சலில் இருந்து பாத்துக்காகிறது :
ரம்புட்டான் பழத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் இரத்த ஓட்டத்தை ஊக்கு விக்கிறது. இது நச்சு உருவாவதைத் தடுக்கும் முக்கிய பணியை செய்கிறது. தீங்கு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள் உடலில் சேர்ந்தால் ஜலதோஷம், சளி, காய்ச்சல், ஒவ்வாமை, ஆஸ்துமா போன்ற நோய்களைத் தூண்ட வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் நோயெதிர்ப்பு அமைப்பு செயல்படத் தவறும் பொழுது உடலின் உள்ளார்ந்த பாதுகாப்பு செயல் முறைகளை அதிகரிக்க ரம்புட்டான் பழத்தில் உள்ள வைட்டமின் சி உதவுகிறது. இது ஜலதோஷம், சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவதைத் தடுக்கிறது.
விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்கிறது :
ரம்புட்டானில் உள்ள வைட்டமின் சி அளவு விந்தணு வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. மேலும் விந்தணு எண்ணிக்கை குறைபாடு இனப் பெருக்க திறனைப் பாதிக்கிறது. ராம்புட்டான் பழம் உட்கொள்வது விந்தணு எண்ணிக்கை மற்றும் தரத்தை உயர்த்துகிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது :
ரம்புட்டான் பழத்தில் ஏராளமான நார்ச் சத்து உள்ளது. இவை முழுமையாக செரிமானம் அடைவதை தாமதப் படுத்தி அதன் மூலம் பசியை சிறிது நேரம் கட்டுப்படுத்துகிறது. மேலும் செல்கள் மற்றும் திசுக்களில் லிப்பிட் வளர்சிதை மாற்றத்தையும் ஒழுங்குப் படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள ஸ்டார்ச் மற்றும் சர்க்கரை அளவைக் குறைக்கிறது.
புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது :
தாய்லாந்தில் உள்ள சியாங் மாய் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், ரம்புட்டான் பழத்தில் ஃபிளாவனாய்டுகள் எனப்படும் பயனுள்ள ஆக்ஸிஜனேற்றிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அவற்றில் பல வகைகள் கொழுப்பின் அளவைக் குறைக்கும் என்று கருதப் படுகிறது. மேலும் புற்றுநோய்க்கு எதிரான பண்புகள் இருப்பதாக நம்பப்படுகிறது.
எலும்புகளைப் பலப் படுத்துகிறது :
எலும்பு பலவீனம் வயதுக்கு ஏற்ப தவிர்க்க முடியாதது. இருப்பினும், ஆரோக்கியமான உணவு மற்றும் உடல் செயல்பாடு இந்த சிக்கலின் வீதத்தையும், தீவிரத்தையும் குறைக்க உதவுகிறது. பொட்டாசியத்தின் விளைவுகள் காரணமாக ரம்புட்டான் போன்ற பழங்களை அதிக அளவு உட்கொள்வதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தை பலப் படுத்தலாம். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம், கால்சியம் போன்ற தாது சத்துக்கள் காரணம். மேலும் சிறுநீர் மூலமாக வெளியேறும் கால்சியத்தின் அளவை குறைப்பதன் மூலம், எலும்பு பலவீனம் மற்றும் ஆஸ்டியோ போரோசிஸைத் வராமல் தடுக்கலாம்.
சிறுநீரக கல் உருவாகாமல் தடுக்கிறது :
சிறுநீரக கற்கள் பொதுவாக அதிகப் படியான கால்சியம் சேர்வதால் உருவாகிறது. ரம்புட்டான் பழங்களில் உள்ள அதிக அளவு பொட்டசியம் சிறுநீரகங்களில் கால்சியத்தின் மறு உருவாக்கத்தை அதிகரிக்கிறது. பொட்டாசியம் அதிக அளவு உட்கொண்டால் சிறுநீரக கல் வளர்ச்சி குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது :
பல பழங்களைப் போலவே, ரம்புட்டானும் இதய ஆரோக்கியத்திற்கு சாதகமான ஊட்டச் சத்துக்களை கொண்டுள்ளது. கொழுப்பு, நார்ச்சத்து, இரத்த அழுத்ததைக் குறைக்க உதவும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். மேலும் ரம்புட்டானில் உள்ள ஃபோலேட் மற்றும் பிற பி-வைட்டமின்கள் வீக்கம் (ஹோமோசிஸ்டீன்) அளவைக் குறைக்கின்றன. இதனால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 25% வரை குறைக்கிறது. ரம்புட்டான் பழத்தில் உள்ள வைட்டமின் சி தமனிகளை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களைத் அழிக்க உதவுகிறது. இதன் மூலம் இதய ஆரோக்கித்தையும் பாதுகாக்கிறது.
உடனடி ஆற்றலை தருகிறது :
ரம்புட்டானில் மாவு சத்து மற்றும் புரதச் சத்து இரண்டும் உள்ளன, இவை இரண்டும் தேவைப்படும் போது உடலுக்கு ஆற்றலை அளிக்கிறது. ரம்புட்டான் பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரைகளும் இந்த செயல் பாட்டிற்கு உதவுகின்றன. மேலும் வைட்டமின் பி5 போன்ற ஊட்டச் சத்துக்கள் ரம்புட்டான் பழத்தில் நிறைந்துள்ளன. இது உணவை ஆற்றலாக மாற்ற உதவுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் பி5 உணவு மூலம் மட்டுமே கிடைக்கிறது. உடலால் இயற்கையாக உற்பத்தி செய்ய முடியாது.
நீரிழப்பை தடுக்கிறது :
ரம்புட்டான் பழம் ஜீரணிக்க எளிதானது மற்றும் பெரும்பாலும் வயிற்றுப் போக்கு நோயாளிகளுக்கு ஒரு உணவாக உபயோகப்படுத்தப் படுகிறது. தொடர்ச்சியான வயிற்றுப் போக்கு நீரிழப்பை ஏற்படுத்துகிறது. குழந்தைகளில் நீரிழப்பு குறிப்பாக ஆபத்தானது. ஏனெனில் இது சிறுநீரகங்களில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது, மேலும் இது மரணத்திற்கு கூட வழிவகுக்கும். ரம்புட்டான் பழத்தில் அதிக நீர்ச் சத்து உள்ளதால், இந்த பழத்தை அதிக அளவில் உட்கொள்வது நீரிழப்பைத் தடுக்கிறது.
சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது :
ரம்புட்டான் பழத்தில் பாஸ்பரஸ் இருப்பதால் ரம்புட்டான் சாப்பிடுவது உங்கள் சிறுநீரகத்திலிருந்து தேவையற்ற கழிவுகளை வெளியேற்ற உதவும். திசுக்கள் மற்றும் உடல் உயிரணுக்களின் வளர்ச்சி, புத்துணர்ச்சி மற்றும் பராமரிப்பு போன்ற செயல்களில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
ரம்புட்டான்
பழம் தீமைகள் :
அன்னாசி, பப்பாளி தர்பூசணி, துரியன், ரம்புட்டான் போன்ற பழங்களை கர்ப்பிணி பெண்கள் உட்கொள்ள அனுமதிக்கப் படவில்லை. காரணம் கருச்சிதைவு பற்றிய பயம் மற்றும் அந்த பழங்களை சாப்பிடுவதால் வயிற்றில் வெப்பம் உண்டாவதாக கருதப் படுகிறது. சிலர் பூசணி விதைகள், சூரிய காந்தி விதைகள் அல்லது பிற உண்ணக்கூடிய விதைகளைப் போலவே ரம்புட்டான் விதைகளைப் பற்றி நினைக்கிறார்கள், ஆனால் ரம்புட்டான் பழ விதைகளில் சிறிதளவு நச்சு தன்மை இருப்பதாக சொல்லப்படுகிறது. டைப் 2 நீரிழிவு நோயாளிகள் அதிகமாக பழுத்த ரம்புட்டானை சாப்பிடும்போது அது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதிக அளவு பழுத்த ரம்புட்டான் பழங்களை அதிக அளவில் சாப்பிடும் பொழுது அவற்றில் உள்ள சர்க்கரை ஆல்கஹால் பண்புகளைப் பெறத் தொடங்கும்.
இது கொழுப்பின் அளவை மட்டுமல்ல அவர்களின் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே உயர் இரத்த அழுத்தம் பிரச்சினை இருப்பவர்கள் இந்த பழங்களை உணவில் சேர்க்கும் முன் மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.