மகா சிவராத்திரி
அமாவாசைக்கு முதல் நாள் மாதசிவராத்திரி ஆகும். மாசி மாதத்தில் அமாவாசைக்கு
முன் வரும் சிவராத்திரி நாள், மகாசிவராத்திரி
ஆகும். ஒருசமயம் பார்வதிதேவி சிவபெருமானிடம், நாதா உங்களை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள் எது? என்று கேட்டாள்.
சிவன் பார்வதிதேவிஇடம்,
மாசி மாத தேய்பிறை 14ம் நாளான அமாவாசை நாளே எனக்கு மிகவும் உகந்த நாளாகும். அன்று விரதம் இருந்து வழிபாடு செய்பவர்கள் என் அருளைப் பூரணமாகப் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்றார். இவ்வாறு, சிவபெருமானே சொல்லிய விசேஷ விரதம் இது.
சிவராத்திரியன்று இரவு முழுதும் சிவன் கோயில்கள் திறந்திருக்கும். விடிய, விடிய நான்கு கால அபிஷேக, ஆராதனைகள் நடக்கும். முதல்காலத்தில்
பால், இரண்டாம் காலத்தில் தயிர், மூன்றாம் காலத்தில் நெய், நான்காம் காலத்தில் தேன் ஆகியவற்றால்
அபிஷேகம் செய்ய வேண்டும்.
சிவராத்திரியின் நான்கு காலங்களில் பஞ்ச வில்வங்களைக்
கொண்டு சிவலிங்கத்துக்கு
அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி இல்லாதபோது மூன்றாவது காலமான லிங்கோற்பவ காலத்திலேனும் பஞ்ச வில்வங்களைக்
கொண்டு பஞ்சமுகார்ச்சனை
செய்யலாம்.
லிங்கோற்பவ காலத்தில் தான் சிவபெருமான் சிவலிங்கத்தினின்று வெளிப்பட்டு அருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்தார்.
மூன்றாம் காலத்தில் லிங்கோற்பவ மூர்த்திக்கு நெய் பூசி, வெந்நீரால் அபிஷேகம் செய்து, எள்ளன்னம் நிவேதிக்க வேண்டும். ஊழிக்காலத்தில் உயிர்களைக் காப்பாற்று வதற்காக பார்வதிதேவி
ஓர் இரவின் நான்கு ஜாமத்திலும் சிவபூஜை செய்து மீண்டும் உலகைப் படைக்க வரம் பெற்ற திருநாளே மகாசிவராத்திரி.
சூரியன், மன்மதன், யமன், சந்திரன், அக்னி முதலானோர் இவ்விரதத்தை அனுஷ்டித்து
பேறு பெற்றுள்ளனர்.
விஷ்ணு இவ்விரதத்தை
அனுஷ்டித்து சக்ராயுதத்துடன்
லட்சுமியை யும், பிரம்மா சரஸ்வதியையும் பெற்றதாக புராணங்கள் கூறுகின்றன.
சிவராத்திரி அன்று இரவு முழுதும் கண் விழித்து வழிபாடு செய்ய இயலாவிட்டாலும் லிங்கோற்பவ காலமான இரவு 11.30 மணி முதல் 1 மணி வரை உள்ள காலத்தில் மட்டுமாவது சிவதரிசனம் செய்து வழிபடுவது சிறந்த பலன் தரும்.