Tuesday, July 12, 2022

1940 - 1980 ... பழைய தஞ்சை ... மறந்து போன 'பொத்த காசு காலணா

 1940 - 1980 ... பழைய தஞ்சை ... மறந்து போன 'பொத்த காசு காலணாகாணாமல் போன கதை

                                       1930 - 1940 களில் ...மின்சக்தி வருகையால் வாழ்க்கை தரம் வெகுவாக 1940-50 களில் இருந்து மாற தொடங்கின ... முன்பு சொன்னது போல .... வசதி பெற்ற வீடுகளில் மெதுவாக குண்டு பல்பு லைட், பேன், மற்றும் ரேடியோ புக ஆரம்பித்தன .. மண்எண்ணெய் அரிக்கன் விளக்குகள்.. பனை விசிறிகள் போன இடம் தெரியவில்லை.

 

                  1930- 40 களில் சினிமா கொட்டைகைகள், டெலிபோன்கள் சேவை ஆரம்பித்தன ... 1930 - 1940களில் ட்ராமா கொட்டகைகள் மற்றும் சபாக்கள், சினிமா கொட்டைகளாக மாற்றப்பட்டன .. தஞ்சையின் முதல் சினிமா கொட்டகை "டவர் சினிமா" (பிறகு ஞானம் டாக்கீஸ் என பெயர் மாற்றம்) . ..

 

             1950களில் முதல் காசு. பொத்த காசு காலணா .. பெரிய காலணா .. அரைணா... ஒரு அணா... நாலணா எட்டணா .. ஒரு ருபாய் காசு .. (16 அணா = 1 ரூபாய்) . காசுக்கு மதிப்பு இருந்த காலம் ... ஒரு முட்டை ஒரு அணா , கோழியின் விலை முக்கால் ரூபாய் ... ஒரு பவுன் தங்கத்தின் விலை ருபாய் 54/= ... ஆனால் ஒரு பவுண்ட் ஆஸ்திரேலியா திராட்சை ரூபாய் 20க்கு விற்கப்பட்டது ... உள்நாட்டில் அப்போது திராட்சை உற்பத்தி இல்லாத காலம் .. அப்போது ஒரு காலன் பெட்ரோல் சுமார் இரண்டு ரூபாயாக இருந்தது .. ஒரு காலன் என்றால் 4.5 லிட்டர் க்கு சமம்.

 

        தங்கம்.. குண்டுமணி கணக்கில் எடை போடுவார்கள் .. தானியம்/ அரிசி ... படி கணக்கில் .. சின்ன படி .. பெரிய படி.. மரக்கால் கணக்கிலும் அளப்பார்கள்..மது பாட்டில்.. டானிக் .. மருந்து... அவுன்ஸ் கணக்கில் .. ஒரு அவுன்ஸ் 30 ml க்கு சமம். எண்ணெய்.. பால் ... சேர் கணக்கில் .. ஒரு சேர் சுமார் 170 ml க்கு சமம்பெட்ரோல் ... காலன் கணக்கில்  எடை ... பவுண்ட் கணக்கில் .. ஒரு பவுண்ட்= 0.45 கிலோ. அளவு ... அடி கணக்கில்

 

          1958ஆம் ஆண்டு மெட்ரிக் முறை அறிமுகமானது ... மெதுவாக செல்லாமல் போனது அணா .. படி .. சேர்  அணா பைசாவானது ... படி மற்றும் சேர் .. லிட்டர் ஆனது , பெட்ரோலுக்கு காலனுக்கு பதிலாக லிட்டர் அளவு அறிமுகமானது .. எடை ... பவுண்ட் கணக்கில் இருந்து கிலோகிராம் கணக்காக மாறியது ... சாலைகளில் மைல் கற்கள் .. கிலோமீட்டர் கற்களாக மாறின ஆனால் ... அடி ... மீட்டராக மாறினாலும் இன்றுவரை அடி கணக்கே உபயோகத்தில் இருக்கின்றது ... பாடத்திட்டங்களில் உள்ள கணக்கு பாடங்களும் மெட்ரிக் முறைக்கு மாற்றப்பட்டன ..

 

          1962ல், காமராஜர் ஆட்சியில், கரூர் - திருச்சி - தஞ்சை - நாகை ஸ்டேட் ஹய்வே சிமெண்ட் ரோடாக மாறிய காலங்களில் கூட மைல் கற்கள் மற்றும் பர்லாங் கற்கள் தான் இருந்தன (8 பர்லாங் ஒரு மைல்) ... 1970களில் அவைகளும் கிலோமீட்டர் கற்களாக மாறின... இருந்தாலும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை ... திருச்சி 32 மைல் , கும்பகோணம் 21 மைல் , நாகப்பட்டினம் 65 மைல் என்றுதான் வழக்கமாக கூறுவோம் ... ஒரு மைல் =1.6 கிலோமீட்டர் .

 

1970 வரை பவுண்ட் கணக்கில் தான் எடை போடுவார்கள் .... மெட்ரிக் முறைக்கு மாறுவதில் எங்களுக்கு அவ்வளவு சிரமம் ...கார்களில் பஸ்களில் மற்றும் மற்ற மோட்டார் வாகனங்களில் "மைல்ஸ் /பேர் ஹௌர்" (MpH - Miles Per Hour) ஸ்பீட் டயல் தான் இருந்தது 1970 வரை ... ஆனாலும் நாங்கள் இந்த இரண்டு அளவு முறைகளையும் கற்றோம்.

 

1940களில் இரண்டாம் உலகப்போரின் போது மில் துணிகளுக்கு பஞ்சம் ... ரேஷனில் தான் கிடைத்தது. கைத்தறி ஆடைகள் காப்பாற்றின. 1950களில் கூட, துணி வகைகள் கம்மியாக தான் கிடைக்கும் ... ரெடிமேட் ஆடைகள் சுத்தமாக கிடையாது ... 1960கள் வரை வயதானஆண்கள் பொதுவாக சட்டை போட மாட்டார்கள் ... நாலு முழ வேஷ்டி தோளில் ஒரு வெள்ளை துண்டு ... அவ்வளவு தான்... இந்த பழக்கம் இன்றும் கிராமங்களில் இருந்தாலும் ... அது தஞ்சையில் வெகுவாக குறைந்து போனது.

 

1950களில் வீடுகளில் விறகு அடுப்பு .. மண் சட்டிகளில் தான் சமையல்... வசதி படைத்தவர்கள் வெண்கல பாத்திரம், பித்தளை பாத்திரங்களில் ஈயம் பூசி சமையல் பண்ணுவார்கள் ..ஈயம் பூசுபவர்கள் வீடு வீடாக சென்று ஈயம் பூசி கொடுத்த காலம் .. அந்த காலகட்டத்தில் தான் அலுமினியம் மெதுவாக அறிமுகமானது ... பிறகு 1960 களில் எவர்சில்வர் பாத்திரங்கள் வெகுவாக அறிமுகம் ... அதற்கு பிறகு மண், வெண்கல பித்தளை பாத்திரங்கள் உபயோகம் கம்மியானது ... 1970க்கு பிறகு ஈயம் பூசுபவர்கள் காணாமல் போனார்கள் .. அதே கால கட்டத்தில் பிளாஸ்டிக் குடங்கள் ... பிளாஸ்டிக் உபயோக பொருட்கள் வெகுவாக அறிமுகம்.

 

1960-70 களில் செக்குகளில் எண்ணெய் ஆட்டும் பழக்கமும் போனது  வீடுகளில் அம்மிகல்-குழவி, ஆட்டுக்கல், உரல்-உலக்கை , திறுவை எல்லாம் போய் மிக்சி, கிரைண்டர் வீடுகளில் குடியேறியது. ... கேணி, கேணிக்கயிறு, பாதாளகரண்டி காணாமல் போய் போர்வெல் பம்புசெட் வந்தன ... அதன் காரணமாக வீட்டினிலேயே பைப் தண்ணி வர ஆரம்பித்து கூடவே பிளஸ் அவுட் கக்கூசும் அறிமுகமாயின ... இந்த காலகட்டத்தில் தான் காஸ் அடுப்புகள் அறிமுகம் ... விறகு அடுப்புக்கள் மெதுவாக விடைபெற ஆரம்பித்தனஅதே காலத்தில் தான் மர்பி, பிலிப்ஸ் ரேடியோ, டிரான்சிஸ்டர் வேகமாக அறிமுகம். ...

 

1950 களில் ஒரே ஒரு MBBS டாக்டர் தான் தஞ்சையில் இருந்தார் ... அவர் தான் டாக்டர் ராமநாதன் ... முதல் தனியார் ஆஸ்பத்திரி... பெட் வசதியுடன் கிளினிக் தொடங்கியவரும் அவரே .. (ராமநாதன் பஸ் ஸ்டாப் அருகில்) . 1964ல் தஞ்சை மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி தற்போது உள்ள வளாகத்தில் செயல்பட ஆரம்பித்தது ... மருத்துவ கல்லூரி தொடங்கியபின் 1970 களில் இருந்து நிறைய டாக்டர்கள் தஞ்சையில் குடியேறி ... தெற்கலங்கம் பகுதியில் நிறைய கிளினிக்குகள் உருவாக்கினார்கள் ... மருத்துவ வசதி கூட, கூட,.. தஞ்சை வாழ் மக்களின் வாழ்நாள் தரம் கூடியது ... சராசரி 45-50 வயதாக இருந்த வாழ்வுகாலம் ... 65 வயதாக ஆனது .. மக்கள் நீண்ட வாழ்வு பெற தொடங்கினர்.

 

14 ஜனவரி1969-ல் தான்மதராஸ் ஸ்டேட்”, “தமிழ் நாடுஎன்று முதலமைச்சர் C.N. அண்ணாதுரை அவர்களால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது .. 1969/1970ல் காலங்கள் மாற... "டாஞ்சூர்" என்ற அரசு பதிவு பெயரும், "தஞ்சாவூர்" ஆக மாறியது ...

 

1947க்கு முன்னாள், வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் சிங்கப்பூர் , மலேயா , பர்மா, சிலோன் போன்ற நாடுகளுக்கு சென்று வேலை பார்க்க, நிரந்தரமாக தங்க சுலபமாக பெர்மிட் கிடைத்துவிடும் .. ஏனெனில் அவை யாவும் வெள்ளையர்களால் ஆட்சி புரிந்த நாடாகும். ஆனால் சுதந்திரத்திற்கு பிறகு கடினமாயிற்று . 1977 முதல் மத்தியில் ஜனதா ஆட்சியின் போது பாஸ்போர்ட் பெறும் வசதி எளிமையாக மாற்றப்பட்டு, மூன்று மாதத்தில் விண்ணப்பம் செய்த்தவர்கள் அனைவருக்கு பாஸ்போர்ட் கொடுக்கப்பட்டது ... அதற்கு முன் பாஸ்போர்ட் பெறுவது ஒரு சாதாரண காரியம் அல்ல ... இரண்டு வருடங்கள் கூட காத்திருக்க வேண்டிய சூழ்நிலை அப்போது இருந்தது ... சாமானியர்கள் பெறமுடியாத சூழ்நிலை இருந்தது ... பாஸ்போர்ட் எளிதானபிறகு சிங்கப்பூர் , துபாய்,குவைத் மலேசியா போன்ற நாடுகளுக்கு சுலபமாக வேலைக்கு செல்ல முடிந்தது .. தஞ்சையிலும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து நிறைய பேர் வெளிநாடுகளுக்கு வேலை தேடி போக ஆரம்பித்தனர் ... கொத்தனார் சம்பளம்... ஆசாரி சம்பளம் எல்லாம் வெகுவாக ஏற ஆரம்பித்தன ... இதன் காரணமாக பணபுழக்கம் வெகுவாக உயர்ந்தது ... இந்த கால கட்டத்தில் தான் எங்கு பார்த்தாலும் பழைய நாட்டு ஓடு வீடுகளும், கீற்று கொட்டகை வீடுகளும் மறைந்து ... புது ஒட்டு வீடுகள் கட்டப்பட்டன ... விலைவாசியும் ஏற தொடங்கின.. 1970ல், 150 ரூபாய்க்கு விற்ற ஒரு பவுன் தங்கம் .. 1980ல் ரூபாய் 1000 த்தை தாண்டியது !!

 1977 வரை சைக்களில் டபுள்ஸ் போனால் போலீஸ் அபராதம் .. சைக்கிளில் லைட் இல்லை என்றால் அபராதம் .. சைக்களுக்கு லைசன்ஸ் வாங்க வேண்டிய காலம் .. தஞ்சையில் முனிசிபாலிட்டி ஊழியர்கள் சைக்கிள் லைசன்ஸ் செக் செய்து ... இல்லை என்றல் சைக்கிளை பிடுங்கி வைத்துவிடுவார்கள் .. லைசன்ஸ் வாங்கிய பிறகு தான் விடுவிப்பார்கள். 1977ல் எம். ஜி. ஆர். ஆட்சிக்கு வந்தபின் இவைகள் ஒழிக்கப்பட்டன.

 1975 வரை தெரு முனைகளில் கிழக்கேயிருந்து வந்த இரட்டை மாட்டு வைக்கோல் வண்டிகள், மேற்கேயிருந்து வந்த விறகு வண்டிகள் ஆங்காங்கே நிற்கும். ... தஞ்சை பூக்கார தெரு வியாகுல மாதா கோவில் கிரௌண்டில் வாரத்திற்கு ஒரு முறை வைக்கோல் வண்டிகளும் விறகு வண்டிகளும் நின்ற காலம் ... திருவிழா கூட்டம் போல ஜனங்கள் இவைகளை வாங்கிய காலம் சிறுபிள்ளையாக நாம் கண்ட காட்சிகள் ... இன்றும் மனதில் பதிந்து படமாக காட்சியளிக்கிறது ... இப்போது வீட்டில் பசுமாடுகள் வளர்ப்பதும் இல்லை ... விறகு அடுப்பில் சமைப்பதும் இல்லை ... வைக்கோல் வண்டிகளும் விறகு வண்டிகளும் காணாமல் போயின....

 புலி வேஷம் ...

குடுகுடுப்பை காரன் ..

பூம் பூம் மாடு ...

மார்கழி விடியற்காலையில் சங்கு ஊதுபவர்கள் ..

பாம்பாட்டிகள்...

குறவர்கள் ... அவர்கள் விற்ற பாசி மாலை மற்றும் மாட்டு கொம்பில் செய்த சீப்பு ... போன்ற காலாச்சாரங்கள் 1970களில் இருந்து எங்கே போனது என்று தெரியவில்லை.

 

தஞ்சை லோ பிரிட்ஜில் இருந்து நாஞ்சிக்கோட்டை ரோடு மற்றும் பூச்சந்தை-விளார் ரோடு பிரியும் சந்திப்பில் மற்றும் நாகபட்டினம் - திருச்சி ரோட்டின் நடுவே முக்கோண வடிவில் ஒரு குட்டி மைதானம் இருந்தது ... அங்கு தான் வண்டி மாடுகளுக்கு லாடம் அடிப்பார்கள் ... பயணிகள் செல்லக்கூடிய வாடகைஒத்த மாட்டு வண்டிகளும் அங்கு நிற்கும்... 1970 முதல் அவைகளும் காணாமல் போயின ...

 முதன்முதலில் 1862ல் இருந்து தஞ்சையில் ஓட ஆரம்பித்தஜிக்கு-புக்குகரி நீராவி ரயில் என்ஜின்கள், 1980களில் மறைய தொடங்கின .. 1990 களில் முழுமையாக காணாமல் போயின... ரயில்கள் முற்றிலும் டீசல் என்ஜின்களில் ஓட ஆரம்பித்தன.

காலங்களும் வேகமாக ஓட ஆரம்பித்தன...