Thursday, October 27, 2022

வலம்புரி சங்கு

 வலம்புரி சங்கு

சாகா வரம் தரும் அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த 16 வகை தெய்விகப் பொருட்களில் வலம்புரிச்சங்கும் ஒன்று. கடலில் உருவாகும் சங்குகளில் பல வகை உண்டு. மணி சங்கு, துவரி சங்கு, பாருத சங்கு, வைபவ சங்கு, பார் சங்கு, துயிலா சங்கு, வெண் சங்கு, பூமா சங்கு, திரிசங்கு ஆகியவற்றில் வலம்புரியாகக் கிடைக்கும் சங்குகளுக்கு சக்தி அதிகம் என்கின்றன ஆகமசாஸ்திரங்கள் ஒரு வீட்டில் இச்சங்கு அலங்காரமாக வைக்கப்பட்டிருந்தால் குபேரன் அருள், மகாலட்சுமியின் நித்திய வாசம் தொடர்ந்து இருக்கும்.

வலம்புரிச் சங்கு மிக உயர்ந்தது மகாலட்சுமிக்கு ஈடானது. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றியவளே எனவேதான் வலம்புரிச் சங்கு "லக்ஷ்மி சகோதராய" என்று அழைக்கப் படுகிறது. ஸ்ரீ மஹாவிஷ்ணு வலம்புரிச் சங்கை தனது கரத்திலும் ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயை தனது மார்பிலும் தாங்கியபடி காட்சி அளிக்கிறார்.
வலம்புரிச் சங்கில் தீர்த்தம் துளசி இட்டு பூஜை செய்து மங்கள ஸ்நானம் செய்தால் நமக்கு பிரம்மஹத்திதோஷம் இருப்பின் போய்விடும்.

சுவாமிக்கு அபிஷேகம் செய்தாலும் நமக்கு உள்ள தோஷம் நீங்கிவிடும். கார்த்திகை சோமவாரத்தில் 108 சங்கு அபிஷேகத்தில் நடுவில் வலம்புரிச்சங்கு உருவில் குபேரன் இருப்பார். ஸ்ரீகிருஷ்ணபரமாத்மா வைத்திருந்த சங்குக்கு பாஞ்சஜன்யம் என்று பெயர். குருகுல வாசம் முடிந்ததும் குருநாதர் சாந்தீபனி முனிவரிடம், "குருதட்சணையாக என்ன வேண்டும்?" எனக் கேட்டார் கிருஷ்ண பரமாத்மா. அவரும் அவர் மனைவியும், தங்கள் ஒரே மகனை  ஞ்சஜனன் எனும் அசுரன் கடத்தி கடலுக்குள் வைத்திருப்பதாகவும், அவனை மீட்டுத் தரும்படியும் வேண்டினார்கள். கிருஷ்ணரும் அந்த அசுரனுடன் போரிட்டு குருவின் மகனை மீட்டு வந்தார். அந்த அசுரன் எரிந்து சாம்பலாகி ஒன்று திரண்டு சங்கு வடிவமானதால், அதற்கு பாஞ்ச ஜன்யம் என்று பெயர்.

கண்ணனைப் போன்று பாண்டவர்கள் ஐவருமே ஒவ்வொரு வகையான சங்கை கொண்டிருந்தனர் தருமர்- அனந்த விஜயம்; அர்ஜுனன்- தேவதத்தம்; பீமன்- மகாசங்கம்; நகுலன்- சுகோஷம்; சகாதேவன்- மணிபுஷ்பகம். திருப்பதி பெருமாள் மணிசங்கு கொண்டிருக்கிறார். இவரைப் போன்றே திருவனந்தபுரம் ஸ்ரீஅனந்தபத்மநாப ஸ்வாமி பாருத சங்கும், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் வைபவ சங்கும், திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜ பெருமாள் துயிலா சங்கும் கொண்டு திகழ்கிறார்கள்.