23ஆம் புலிகேசி பட விடுகதை
23ம் புலிகேசி படத்தில் மன்னனாக வரும் நடிகர் வடிவேலு தன்னிடம் பணி செய்யும் படை வீரனிடம் இரண்டு கேள்வி கேட்பார்.
முதல் கேள்வி...
தட்டானுக்கு சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்... அவன் யார்?
இந்த விடுகதையானது சாதாரணமாக வரும் உளறலோ பிதற்றலோ நகைச்சுவையோ அல்ல. இது ஒரு தெய்வீக விடுகதை... இதற்கு புராணத்தை வைத்தே விளக்கி விடலாம். தானம் கேட்கும் வறியவர்களுக்கு தட்டாமல் வழங்குபவர் தான் தட்டான்.
( தட்டான் - மஹாபலிச் சக்கரவர்த்தி )
தட்டானுக்கு சட்டை போடுவது என்றால், தானம் கொடுக்க நினைப்பவரின் எண்ணத்தை தடுப்பது அதாவது அவரின் ஈகை உள்ளத்தை மறைப்பது என்று பொருள். நம் மஹாபலிச் சக்கரவர்த்தி 99 அசுவமேத யாகம் செய்து விட்டு நூறாவது அசுவமேத யாகம் செய்யும் போது பெருமாள் வாமன அவதாரத்தில் வந்து அவரிடம் தானம் கேட்கிறார்... ( குட்டை பையன் - வாமன அவதாரத்தை குறிக்கிறது. )
ஆனால் சுக்ராச்சாரியார் மஹாபலி தானத்தை தாரை வார்ப்பதைத் தடுக்க வண்டாக உருமாறி கமண்டலத்தின் வாயை நீர் வராதவாறு அடைத்துக் கொள்கிறார்... அப்பொழுது நம் குட்டைப் பையன் வாமனர் என்ன செய்கிறார் ?
ஒரு குச்சியை (கட்டை) எடுத்து கமண்டலத்தின் குழாயை குத்தி சுக்ராச்சாரியருக்கு ஒரு கண் ஊனமாகி விடுமாறு செய்கிறார்.
பின் சுக்ராச்சாரியார் தன் தவறை உணர்ந்தார். அவரை மன்னித்து, கொடுப்பதில் வள்ளலான மஹா பலிச் சக்கரவர்த்தியின் புகழை உலகறிய செய்தவர் பெருமாள். இது தான் தட்டானுக்குச் சட்டை போட்டால் குட்டைப் பையன் கட்டையால் அடிப்பான்…” என்பதற்கான விளக்கம்…!! அடுத்து ... சரி அதை விடு. அடுத்த கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும். சரியா? என்று கேட்பார். பணியாளன் கேளுங்கள் மன்னா என்று பயம் கலந்த பதற்றத்தில் அவரை நோக்குவான்.
அடுத்த கேள்வி இதுதான்
பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை இதற்கு என்ன பதில் என்பார். இரண்டாவது கேள்விக்கும் பதில் தெரியாத பயத்தில் மன்னா என்று மன்னரின் காலை பிடித்து கதறுவான். படம் பார்த்த நமக்கு அது ஒரு நகைச்சுவை காட்சியாக மட்டும் தான் தெரியும். அதன் பொருள் நமக்கு தெரியாது.
இதோ அதற்கான விடை
குலசேகரன் என்றால் குபேரன் என்று பொருள்
ஸ்ரீ என்றால் செல்வம், அந்த செல்வத்தின் அதிபதி லட்சுமியை மணக்க பெருமாளுக்கு பைனான்ஸ் செய்தவர் நம் குபேரன். ஆக
பெருமாளின் குலம் பெருக ரட்சித்த குபேரன் தான் பெருமாளின் குலசேகரன். குபேரனுக்கு EMI கட்ட பெருமாளுக்கு பொருளீட்ட ஒரு ஸ்தலம் தேவைப் பட்டது. அப்பொழுது பெருமாளுக்கு ஏழுமலையை அளித்தவர் ஸ்ரீ வராகப் பெருமாள்... அதனால் (வராகம் - பன்றி முகம்
உடையவர் ) ஸ்ரீ வராகப் பெருமாளுக்கு நன்றி சொல்லி, குன்றின் (திருப்பதி )மீது நின்ற கோலத்தில் மக்களுக்கு அருள் புரிந்து அவருடையை குலசேகரனுக்கு (குபேரன்) சேர வேண்டிய பணத்தை கொடுத்து, கடனை வென்றாராம் பெருமாள். இது தான் பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிடலாம் குலசேகரனை… என்ற விளக்கம்...
குருவே சரணம்