மனம் உருகுதே நாவலிலிருந்து...
எழுத்துச் சித்தர் பாலகுமாரன் ஐயா அவர்களின் மனம் உருகுதே நாவலிலிருந்து...
"உலகத்துல ஒரு மனுஷா நல்ல பெற்றோர் இல்லாமக்கூட இருந்துடலாம். நல்ல பொண்டாட்டி கிடைக்கலைன்னா ரொம்பக் கஷ்டம். நல்ல மனைவி கிடைக்கறதுக்கு ரொம்பக் கொடுத்து வைச்சுருக்கணும்.
தனக்குக் கிடைச்சுது நல்ல மனைவின்னு புரிஞ்சுக்கறதுக்கு இன்னும் அதிகமா கொடுத்து வைச்சுருக்கணும். அப்படிக் கிடைச்ச மனைவியைப் புரிஞ்சு அவளைக் கொண்டாடறதுக்கு ரொம்பக் குறைச்சலான ஆட்களால் தான் முடியும். "பொண்டாட்டியைக் கொண்டாடறதா? நோ, நோ, ஐயம் நாட் அ ஹென்பெக்" அப்படிம்பா. இங்கிலீஷ்ல ஹென்பெக்குன்னா தமிழ்ல பொண்டாட்டிதாசன்னு அர்த்தம்.
நாம யாருக்கும் தாசனா இருக்கறதுக்கு ஆசைப்படலை. எல்லாருக்கும் எல்லா நேரமும் தலைவனா இருக்கணும்னுதான் ஆசை. ரூல் பண்ணணும்னு தான் வெறி. ஆனால் ரூல் பண்றதுக்கு உண்டான யோக்கியதை இருக்கா அப்படின்னு யாரும் ஆராய்ஞ்சு பார்த்ததில்லை. குறிப்பா பொண்டாட்டி விஷயத்துல, இவளை அடக்கி ஆளணும்னா அதுக்குண்டான யோக்கியதை இருக்கா, அப்படின்னு எந்தப் புருஷனும் நினைக்கல.
ஏதோ ஒரு விளக்குமாறு ஆபீஸுக்குப் போய் இரண்டாயிரம், மூவாயிரம் சம்பாதிச்சுட்டா, தான் பெரிய ஆம்பளைன்னு நினைக்கறான். அங்க வெட்டி முறிக்கறதா கற்பனை பண்றான். அங்க என்ன செருப்படி வாங்கறான் அப்படின்னு வெளியே சொல்றதேயில்லை. ஆனா வீட்டுக்கு வந்தா பொண்டாட்டிக்கிட்டே, "நான் யார் தெரியுமா? தொலைச்சுடுவேன். தொலைச்சு" அப்படின்னு விரலைக் காட்டி மிரட்டறான். பொண்டாட்டி, 'உன்னைத் தொலைக்கணும்னு' ஆரம்பிச்சா சொடுக்கு நேரம் போறும்.