கூடாரவல்லி
அனைத்து வைஷ்ணவத் திருத்தலங்களில், 'கூடாரவல்லி’ என்ற
பெயரில் ஒரு வைபவம் நடைபெற்றது
ஆண்டு தோறும் மார்கழி மாதம் 27ஆம் நாள் வைஷ்ணவத் திருத்தலங்களில்,
'கூடாரவல்லி’ என்ற பெயரில் ஒரு வைபவம் நடைபெற்று வருகிறது. இந்த நாளில் ஆண்டாளை தரிசித்தால்
மனம் போல மாங்கல்யம் அமையும் பிரிந்த தம்பதியர் கூடுவார்கள் என்பது ஐதிகம். கோடி நன்மை
தரும் கூடாரவல்லி நாளில் தன்வந்திரி பீடத்தில் திருமண யோகம் தரும் திருமாங்கல்ய பூஜை
நடைபெறுகிறது.
ஆண்டாள் அருளிச் செய்த முப்பது பாடல்கள் கொண்ட திருப்பாவையை
ஸ்ரீ கிருஷ்ணருக்கு உகந்த மார்கழி மாதம் அதிகாலைப் பொழுதில் பாடி, 27ம் நாள்
"கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா" எனும் பாடலை பாடி, "மூடநெய் பெய்து
முழங்கை வழி வார" என்றபடி, பெருமாளுக்கு நெய் நிறைந்த அக்காரஅடிசல் நிவேதனம் செய்து
அன்னதானம் செய்வது நலமளிக்கும்.
நெய் வழிய அக்கார அடிசல்
"கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே யென்றனைய பல்கலனும் யாமணிவோம்
ஆடையுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடியிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்."ஆண்டாளின் வேண்டுதல் பாவை நோன்பு இருந்த ஆண்டாள், தனக்கும் ரங்கநாதருக்கும் திருமணம் செய்துவைத்தால், அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்து படைப்பதாக கள்ளழகர் பெருமாளிடம் வேண்டிக்கொள்கிறாள். ஸ்ரீரங்கத்தில் ஆண்டாள் ஸ்ரீரங்கநாதருடன் ஐக்கியமான பிறகு, கள்ளழகருக்கு அக்காரவடிசலும் வெண்ணெயும் சமர்ப்பிக்கமுடியாமல் போனது. பின்னாளில் வந்த எம்பெருமானாராகிய ராமானுஜர் இதுபற்றிக் கேள்விப்பட்டு, ஆண்டாள் வேண்டிக்கொண்டபடியே அக்காரவடிசலும் வெண்ணெயும் கள்ளழகருக்குச் சமர்ப்பித்தார். இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில் ஆண்டு தோறும் 27ஆம் கூடாரவல்லி வைபவத்தின்போது, 120 லிட்டர் பால், 250 கி.கிராம் அரிசி, 15 கிலோ கல்கண்டு, கிலோ கணக்கில் முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை என எல்லாம் சேர்த்துப் பல மணி நேரம் சுண்டக் காய்ச்சித் தயாரிக்கும் அக்காரவடிசலும் வெண்ணெயும் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
கூடாரவல்லி அன்று பெருமாள் கோயில்களில் குறிப்பாக ஆண்டாள் அவதரித்த ஸ்ரீவில்லிபுத்தூரில் " முழங்கை வழியே நெய் ஒழுகுமாறு' சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிப்பார்கள். இன்று பெருமாளைத் தரிசித்து பிரசாதம் பெற்றால் கன்னியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் நல்ல கணவன் கிட்டுவார் என்பது ஐதீகம். மேற்கண்ட வைபவங்களுக்கு தேவையான மூலிகைகள், அபிஷேக திரவியங்கள், நெய், மஞ்சள், குங்குமம், வாசனை திரவியங்கள், தேங்காய், நல்லெண்ணெய், பழ வகைகள், புஷ்பங்கள், மலர் மாலைகள், வஸ்திரங்கள், மளிகை பொருட்கள் வாங்கி அளிக்கலாம்.