Friday, February 9, 2024

வீரமாமுனிவர்

 வீரமாமுனிவர்


1728-க்கு முன்பு ஏலாக்குறிச்சி என்ற சிறிய கிராமத்தில் அடைக்கல மாதாவுக்குக் கோயில் எழுப்பிய ஒருவர் வருவதற்கு முன்பு, ஒவுக்கும் ஓவுக்கும் வித்தியாசம் இல்லாமல்ஒரு ஒடம்என்றுதான் தமிழ்ச்சுவடிகள் இருந்தன. ஒரு வாக்கியத்தில் அந்த வார்த்தை தரும் பொருளை வைத்தே என்ன எழுத்து என்பது முடிவு செய்யப்பட்டது. தமிழை ஆழ்ந்து படித்தவருக்கே சுவடிகள் புரிந்தன. இந்தச் சிக்கலைச் சரி செய்ய என்ற குறில் எழுத்தைச் சுழித்து ஆக்கித் தமிழை எளிமைப்படுத்தினார் அவர். அதன்பிறகுதான் அந்தஒரு ஒடம்ஓடமாக ஓடியது. ஓடவைத்தவர் வீரமாமுனிவர்.

 

அதுமட்டுமா, ’கெடுவான் கேடு நினைப்பான்.’ இதில் உள்ள கெ-கே இரண்டுக்கும் வேறுபாடு இல்லாமல் ஒற்றைக் கொம்பை மட்டுமே பயன்படுத்தும் பழக்கமே இருந்தது. அந்தக் கொம்பை மேலே சுழித்துகேஎன்ற நெடிலாக்கியவர் வீரமாமுனிவர்தான்.

 

கொக்கரக்கோ கோழியும் சிரமப்பட்டது, ’கொவுக்கும்கோவுக்கும் வித்தியாசம் இல்லாமல். ‘கொவை மேலே சுழித்துகோஆக்கி அதைக் கூவ வைத்ததும் அவர்தான்.

 

காசா லேசாவில் வரும் நெடிலைச் சுட்டப் பயன்படும் அதே குறியீட்டையே (கால் வாங்குதல்) ரகரத்தின் உயிர்மெய்யானக்கும் மெய்யெழுத்தானர்க்கும் பயன்படுத்தும் பழக்கம் இருந்தது. இதையும் மாற்றி, மூன்று தனித்தனிக் குறியீடுகளாக முனிவர் வடிவமைத்தார். அதன் பின்புதான்ராமர்நமக்கு நெருக்கமானார்.

 

மெய் எழுத்துகளுக்குப் புள்ளி வைக்கும் பழக்கம் (க், ச்) தொல்காப்பியத்திலேயே சொல்லப்பட்டாலும், வைக்கும் புள்ளி ஓலையைக் கிழித்துவிடும் என்பதால் ஓலைச்சுவடிகளில் அது தவிர்க்கப்பட்டது. வீரமாமுனிவர் தனது நூல்களில் மெய் எழுத்துகளில் புள்ளி வைக்கும் பழங்கால நடைமுறையைத் தொடர்ந்தபிறகுதான் மெய்யெழுத்துக்கு உயிர் வந்தது.

 

நம் தமிழில் பல புதுமைகளைப் புகுத்திய வீரமாமுனிவர் பிறப்பால் ஒரு இத்தாலியர். தமிழ் கற்றதே தனது 30ஆம் வயதில்தான். பல ஆச்சர்யங்களைக்கொண்ட வாழ்க்கை இவருடையது. 1680ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1710ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு வந்தார். தனது 67ஆம் வயதில் 1747ஆம் ஆண்டு மறைந்தார். இந்த 37 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் வாழ்ந்தது ஏறக்குறைய 25 ஆண்டுகள். இதில் திருச்சியிலும் அதைச் சுற்றியுள்ள பழைய திருச்சி மாவட்டத்திலும் அவர் வாழ்ந்தது 15 ஆண்டுகள்... ஒரு மகத்தான தமிழ் வாழ்க்கையை முனிவர் வாழ்ந்ததற்கான தடயங்களைக் கொண்டதாகத் திருச்சிப்பகுதி காணப்படுகிறது.

 

வீரமாமுனிவர்

பிறந்த ஊர் ஏரிகள் சூழ்ந்த, காஸ்திலியோனே தெல்லே ஸ்டிவியரே, பெரியபெயர்; சிறிய ஊர். அங்கு 1680ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பிறந்தார். மொழிகளைக் கற்றுக்கொள்வதில் இவரின் திறமை அபாரமானது. இவருக்கு 10 மொழிகள் தெரியும் என்று வீரமாமுனிவரின் வரலாற்றை முதலில் எழுதிய சாமிநாதபிள்ளை சொல்ல; மிகுந்த ஆய்வுக்குப்பின் முனைவர் இராசமாணிக்கம் - இத்தாலியன், இலத்தீன், கிரேக்கம், எபிரேயம், போர்த்துகீசியம், இஸ்பாஞ்சியம், பிரெஞ்சு, தமிழ் என்று எட்டு மொழிகளில் முனிவர் அறிவோடு இருந்ததாகச் சொல்கிறார். ஆங்கிலம் தெரியாதா என ஆச்சர்யப்பட வேண்டாம். முனிவர் காலத்தில் ஆங்கிலம் உலக மொழியுமல்ல, வளர்ந்த மொழியுமல்ல. இப்படிப் பல மொழி அறிவுதான் அவரை உரைநடை, அகராதி, பேச்சு மொழி இலக்கணம், செந்தமிழ் இலக்கணம், மருத்துவம், காப்பியம், மொழிபெயர்ப்பு, எழுத்துச் சீரமைப்பு, இசை, திறனாய்வு என்று எல்லா திசைகளிலும் பயணப்பட வைத்தது.

 

அவரின் சொந்தப் பெயர் கான்ஸ்தான்ஸ் ஜோசப் பெஸ்கி. இவர் ஊரில் பிறந்து புனிதர் பட்டம் பெற்ற ஞானப்பிரகாசியார் ஏற்படுத்திய தாக்கத்தால் பெஸ்கி தானே விரும்பி தமிழ்நாட்டுக்கு வந்தார். வரும் முன்பே அவர் ரோமில் தமிழ் கற்றதாக அறிகிறோம்.

 

மண்மயப்படுதல்என்னும் வழியை இவர் இராபர்ட் தே நொபிலி என்ற இறைப்பணியாளரிடம் கற்றார். தன் பெயரை நொபிலிதத்துவ போதகர்என மாற்றிக்கொண்டதுபோல பெஸ்கி தன் பெயரைதைரியநாதர்என்று முதலிலும், பிறகு நல்ல தமிழில்வீரமாமுனிவர்என்று தமிழ்மயப்பட்டு மண்மயப்பட்டார்.

 

முனிவரின் காலத்தில் சாலையும் போதாது. வாகனமும் வண்டிதான். அவரைச் சுமந்து, பல ஊர்களுக்கு அழைத்துச்சென்று தமிழ் கற்கவைத்து- தமிழை வேகப்படுத்தியதில் அவர் வளர்த்த குதிரைக்குப் பெரும் பங்குண்டு. அதனால்தான்பரமார்த்த குருகதைஉட்பட அவரின் பல இலக்கியங்களில் குதிரைகள் ஓடும். குதிரையிலிருந்து கீழே விழுந்து அவர் காலை ஒடித்துக்கொண்டது தனிக்கதை. குதிரை வளர்ப்பில் அவருக்கு குரு அவர் அப்பா கொண்டல்போ பெஸ்கிதான். குதிரைப்படைத் தளபதியாக இருந்தவர் அவர்.

 

வீரமாமுனிவர் தமிழுக்குத் தந்த கொடை ஏறக்குறைய 53 நூல்கள். அவற்றில் நமக்குக் கிடைத்தவை 36 நூல்கள் என்பர். இவற்றில் செய்யுள் தொடங்கி உரைநடை வரை உண்டு. அகராதி முதல் இலக்கணம் முடிய எழுதினார். எழுத்துச்சீர்திருத்தம் செய்த அவர் மொழிபெயர்ப்பிலும் முனைந்தார். மக்களிடம் பேசியும் புழங்கியுமே அவர் தமிழைக் கற்றார். தொடர்ந்து கார்கம் முனிவரிடமும் தமிழ் படித்தார்.

 

அவரின்தேம்பாவணிதமிழ்க் காப்பியங்களில் ஒன்றாகக் கொண்டாடப்படுகிறது. மூத்த காப்பியங்களான சிலப்பதிகாரமும் சிந்தாமணியும் அச்சிடப்படுவதற்கு முன்பே தேம்பாவணி 1851-53இல் அச்சாகி வெளிவந்துவிட்டது. 3615 பாடலும் 36 படலமும் கொண்டது தேம்பாவணி. இந்நூல் குறித்து வீரமாமுனிவர் அடக்கத்தோடு சொல்கிறார், “சூசை சரிதையை வணக்கத்தோடு கையில் ஏந்தி, வளமிக்க இத்தமிழ்நாடு வாழ்வடைய இங்குக் கொண்டுவந்தேன். கன்னி மரியாள் வாயில் மலர்ந்த சொல்லால் ஆகிய மாலைதான் இத் தேம்பாவணிஎன்று.

 

திருச்சியில் உள்ள ஏலாக்குறிச்சிதிருச்சியில் உள்ள ஏலாக்குறிச்சி

தேம்பாவணி 1726ஆம் ஆண்டு எழுதி வெளிவந்தது. எழுதிய ஊர் பழைய திருச்சி மாவட்டத்திலுள்ள ஏலாக்குறிச்சிக்கு வடக்கேயும் திருமானூருக்குக் கிழக்கேயும் உள்ள திருக்காவலூர் (இன்றைய அரியலூர் மாவட்டம்). அங்கிருந்த அன்னை - பெரிய நாயகி, அடைக்கல நாயகியாக மாற்றம் அடைந்தபின்னால் அக்கோயில் திருக்காவலூர் ஆயிற்று. இதன் முந்தய பெயர் ஆரியனூர் என்று நம்பப்படுகிறது. வீரமாமுனிவர் தன் வாழ்வின் பெரும்பகுதியான 1718 முதல் 1733 வரை ஏலாக்குறிச்சியில் உள்ள திருக்காவலூரில்தான் வாழ்ந்தார் என்று பேரா.சூசை சொல்கிறார். தஞ்சை மராட்டிய மன்னர்கள் கிறித்தவர்களைத் துன்புறுத்தினார்கள். அங்கு வாழமுடியாத குருமார்கள் கொள்ளிடம் வடகரையில் ஏலாக்குறிச்சியில் கோயில் கட்டினர். இங்கு முனிவர் மூன்றாவது பங்கு குருவாக வந்து பணிசெய்தார். அப்பகுதியின் சிற்றரசராக இருந்த குமார ரெங்கப்ப மழவராயர் முனிவர்மீது கொண்ட அன்பால் பெரும் நிலத்தை தானம் அளித்தார். தேவாலயம் முனிவர் காலத்தில் விரிவடைந்தது. மழைக்காலத்தில் கொள்ளிடத்தைக் கடந்து மக்கள் வர முடியாததால் ஆறு மாத ஓய்வை ஆறு தந்தது. இந்த ஓய்வைப் பயன்படுத்தி முனிவர் தன் பல நூல்களை இங்கு எழுதினார். அப்படி எழுதிய ஒன்றுதான்திருக்காவலூர் கலம்பகம்.’ கலம்பகம் என்ற சிற்றிலக்கிய வகைமையைப் பயன்படுத்திய முனிவரின் சிறந்த இலக்கியக்கொடையாக இது கருதப்படுகிறது.

 

தன் சொந்தக் கையெழுத்தால் வீரமாமுனிவர் எழுதிய தேம்பாவணி இப்போது லண்டன் பிரிட்டிஷ் நூலகத்திலுள்ளது. இந்தப் புதையலும் திருச்சிக்குத் தெற்கே புதுக்கோட்டை சாலையிலுள்ள ஆவூரில் 1816-ல் கிடைத்தது. திருக்குறளைப் பதிப்பித்த அதே எல்லிஸ் துரைதான் தேம்பாவணியையும் 300 ரூபாய்க்கு முத்துசாமி பிள்ளையிடமிருந்து வாங்கினார். (அன்றைய 300 அது). பிறகு எல்லியட் அதைப்பெற்று லண்டன் நூலகத்தில் சேர்த்தார். முனிவரின் பெரும்படைப்பான தேம்பாவணி பிறந்ததும் கிடைத்ததும் திருச்சிப்பகுதியில்தான்.

 

வீரமாமுனிவரை மிகக்கவர்ந்த நூலாகத் திருக்குறளே தெரிகிறது. அவர்தான் நம் திருக்குறளை வேறு மொழிக்கு அறிமுகம் செய்த முதல் அறிஞர். அன்றைய உலகில் இலத்தீன்தான் உலகமொழி - அறிஞர்மொழி. அந்த இலத்தீனில் குறளைக் கொண்டுசென்றதால் உலகின் பல மொழிகளில் குறளின் அறம்-பொருள் பேசப்பட்டது. தமிழ் தலை நிமிர்ந்தது. துறவியாக இருந்ததால் காமத்துப்பாலை முனிவர் மொழிபெயர்க்கவில்லை. ஆனால் இவருக்குப் பின்வந்த டாக்டர் ட்ரூ பாதிரியார் காமத்துப்பாலையும் மொழிபெயர்த்தார்.

 

முதலில் குறள் தமிழில், பின் ரோமன் எழுத்தில் அதே குறள், தொடர்ந்து இலத்தீன் மொழிபெயர்ப்பு - அதற்குக் கருத்து விளக்கம் தந்து, பிறகு கடினமான சொற்களுக்கு விளக்கமும் தருகிறார் முனிவர். இந்த நூல் பிற்காலத்தில் வி.வி.ஞானப்பிரகாசம் அவர்களால் பதிப்பிக்கப்பட்டது. முப்பது வயதில் தமிழ்படித்த ஒருவரின்குறள் அறிவுதமிழைத் தாய்மொழியாகக்கொண்ட நம்மை நாணச்செய்கிறதல்லவா?

 

தம்மிடம் வேதம் படித்த வேதியருக்குச் செந்தமிழால் திருக்குறள் கற்பித்தார் முனிவர். அதே நேரம், படிப்பு கிடைக்காத பாமர மக்களுக்காகதம் கால பேச்சு வழக்கில்உரையொன்றையும் எழுதினார் என்பது நமக்கு வியப்பைத்தருகிறது. மாதிரிக்கு ஒன்று - “எனைத்தானும் நல்லவை கேட்க” (குறள் 416) முனிவரின் எளிய விளக்கம்: “ஒருத்தன், தினம் ஒரு பணம், கொஞ்சமா இருக்குதின்னு தள்ளாமல், பையிலே வைத்தால், பின்னுக்குப் பை ரெம்பிப்போய் ஆஸ்திக்காரனாய்ப் போவான். அப்படிப்போல, ஒருவன் பெரியவர்கள் சொல்லுகிற புத்தி எதுவானாலும், தள்ளாமல் கேட்டால், கடைசியிலே புத்திமானாய்ப் போவானென்பது கருத்து.” எப்படி முனிவரின் விளக்கம்?

 

குறள் இலத்தீன் மொழிபெயர்ப்பை 1725-30 களில் செய்திருக்கலாம் என்றும் அப்போது அவர் ஏலாக்குறிச்சியில் உள்ள திருக்காவலூரில் இருந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். தன் குதிரைமீதேறி அவர் தனது சமயத்தை மட்டுமல்ல, தமிழையும் பரப்பினார். அதனாலேயே அவரது 300 ஆம் ஆண்டுவிழா இத்தாலியில் கொண்டாடப்பட்டபோது அவருக்குச் சிலைவைத்துதமிழ் மொழியின் தாந்தேஎன்ற பட்டத்தையும் தந்தனர்.

 

அன்றைய பல பெரிய மனிதர்களின் நட்பை முனிவர் பெற்றிருந்தார். வேலூர் நவாப் முதல் மதுரையின் முதலமைச்சரான முதலியார் வரை இவரது நட்பு பரந்தது. அதில் திருச்சியை ஆட்சி செய்த சந்தா சாகிபு முக்கியமானவர். இவரை திவானாக நியமித்து பல ஊர்களை தானமாகத் தந்ததோடு, தன் பல்லக்கையே சந்தா சாகிபு தந்ததாகவும் ஒரு செய்தியுண்டு. அதனாலேயே இவரை ராஜரிஷி என்றும் பண்டாரசாமி என்றும் திருச்சபை அழைத்தது.

 

ஒரு மொழியை வளர்க்கவும் பயன்பாடுமிக்கதாக மாற்றவும்அகராதிகள்அவசியம் வேண்டும். தமிழில் நிகண்டுகள் உண்டு. ஆனால் அவை செய்யுளாலானவை. பெரிய புலவர்களுக்கே புரியும். பேச்சுத் தமிழுக்கு இலக்கணம் எழுதி, தம்பிரான் வணக்கம் போன்ற தமிழ் உரைநடை நூல்களை அச்சிட்டவர் போர்த்துக்கீசியரான அண்டிறீக்கு பாதிரியார்தான். இந்திய மொழிகளில் அச்சடிக்கப்பட்ட முதல்மொழி தமிழ்தான். அவர் உருவாக்கிய தமிழ்-போர்த்துகீசிய அகராதி இதுவரை கிடைக்கவில்லை. இப்படியான நிலையில் வீரமாமுனிவரை அகராதித் தந்தை என அழைக்கக் காரணம் உள்ளது. அவர்தான் தமிழ் வார்த்தைகளுக்குத் தமிழிலேயே பொருள் சொல்லும் முறையை அறிமுகம் செய்தார்.

 

நான்கு அகராதிகளை முனிவர் உருவாக்கியுள்ளார். இவற்றுள்சதுரகராதிபல பதிப்புகளைக் கண்டுள்ளது. தமிழ்ச் சொற்களை அகரவரிசையில் முதலில் தொகுத்தவர் வீரமாமுனிவரே. அதற்கு அகராதி என்று பெயரிட்டவரும் அவரே. ஒரு சொல்லுக்கு - பெயர், பொருள், தொகை, தொடை என்ற நான்குவகையில் பொருள் சொல்லும் முறையை இவர் பின்பற்றியதால் இதுசதுரகராதிஎனப்பட்டது. இதை அவர் 1732இல் உருவாக்கியுள்ளார். இந்த அகராதியும் ஏலாக்குறிச்சியில் திருக்காவலூரில் எழுதப்பட்ட ஒன்றுதான்.

 

சந்தா சாகிப் 1742 போரில் தோற்றார். அரசியல் சூழல் மாறியது. என்ன நடந்தது என்று தெரியவில்லை என்பதே ஆய்வாளர்களின் நிலை. முனிவர் திருச்சிப்பகுதியை விட்டு தூத்துக்குடிக் கடற்கரைப் பகுதிக்குச் சென்றார். அங்கும் தமிழப்பணி தொடர்ந்தது. அங்கு எழுதியதுதான் அவரின் புகழ்பெற்ற பரமார்த்தகுரு கதை. தமது 64 ஆம் வயதில் 1744இல் இதை எழுதினார்.

 

நகைச்சுவை இலக்கியத்தின் முன்னோடியாக இது பார்க்கப்படுகிறது. இதன் பாத்திரங்களும் பேசும் மொழியும் உலகின் 54 மொழிகளில் இதைக் கொண்டு சேர்த்தது. முனிவரே இதை இலத்தீனில் மொழிபெயர்த்தார். வெளிநாட்டு மாணவர்கள் (மத போதகர்) தமிழ் கற்கும்போது, அவர்களுக்குப் பேச்சுத்தமிழ் இலக்கணத்தை எளிமையாகச் சொல்லித்தரவே இந்த நூலை முனிவர் எழுதினார். பேச்சுத் தமிழுக்கும் (கொடுந்தமிழ்) செந்தமிழுக்கும் இலக்கணம் வகுத்தார்.

 

தன்வாழ்வின் இறுதி நாள்களில், 1746இல் அவர் கேரளாவின் அம்பலக்காடு, சம்பாலூர் குருமடத்தின் அதிபராகப் பணிமாற்றம் செய்யப்பட்டார். தனது 67ஆம் வயதில் 1747, பிப்ரவரி 4ஆம் நாள் காலமானார்.