மூட்டு வலி ஆர்த்ரைடிஸ்
ஆர்த்ரைடிஸ் என்பது தனிப்பட்ட நோய் அல்ல. மூட்டு வலி மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட நோய்களின் ஒட்டுமொத்த தொகுப்பை குறிப்பது தான் ஆர்த்ரைடிஸ்.
பொதுவாக 50 வயதுக்கு மேல் வயதாகும்போது வயது மூப்பின் காரணமாகவும் மூட்டு வலி வந்து கொண்டிருந்தது. ஆனால் சமீப காலங்களில் ஊட்டச்சத்து பற்றாக்குறையாலும், மாறிவிட்ட வாழ்க்கை முறை மாற்றங்கள், ஒரே இடத்தில் நாள் கணக்கில் அமர்ந்து வேலை பார்ப்பது என பல்வேறு காரணங்களால் எல்லா வயதினருக்கும் மூட்டுவலியும் அது சம்பந்தப்பட்ட நோய்களும் உண்டாகின்றன. குறிப்பாக பெண்கள் இந்த பிரச்சினையால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். ஆர்த்ரைடிஸ் பல வகையாக இருந்தாலும், பொதுவாக இவற்றிற்கு சில அறிகுறிகள் உண்டு. அவை,
·
மூட்டுவலி,
·
மூட்டுக்களில் வீக்கம்,
·
மூட்டு விறைப்பு,
·
நீட்டவோ மடக்கவோ முடியாமல் இயல்பான செயல்பாடு குறைவது
போன்றவை லேசாகவோ அல்லது கடுமையாகவோ இருக்கலாம். பல வருடங்களாக தொடர்ச்சியாக இந்த அறிகுறிகள் இருப்பதை நாள்பட்ட ஆர்த்ரைடிஸ் என்று குறிப்பிடுகிறார்கள். இவற்றில் சில வகையான மூட்டுவலி இதயம், கண்கள், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் தோல் ஆகியவற்றையும் பாதிக்கும்.
ஆர்த்ரைடிஸ் வகைகள்
ஆர்த்ரைடிஸ் அதன் தன்மைகள், பாதிப்புகள் மற்றும் ஏற்படும் காரணிகளை பொருத்து 4 வகைகளாக பிரிக்கப்படுகிறது. அவை,
1. ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் - கீழ்வாதம் (Osteoarthritis),
2. ஆட்டோ இம்யூன் இன்பிளமேட்டரி ஆர்த்ரைடிஸ் (autoimmune inflammatory arthritis),
3. தொற்றுக்களால் ஏற்படும் மூட்டுவலி (Infectious Arthritis)
4. கௌட் (gout- metabolic arthritis),
ஆகியவை ஆகும்.
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் - கீழ்வாதம் (Osteoarthritis)
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் தான் அதிகம் பேரை பாதிக்கும் ஆர்த்ரைடிஸ் பிரச்சினையாக இருக்கிறது. அதனாலேயே ஆர்த்ரைடிஸ் என்றாலே அது கீழ்வாதம் என்று நினைத்துக் கொள்கிறோம். கால் மூட்டுகள் மட்டுமின்றி உடலில் உள்ள எந்த மூட்டுகளையும் இந்த வாதப் பிரச்சினை பாதிக்கும். ஆனால் அதிகமாக பாதிப்படுவது கை, இடுப்பு மற்றும் முதுகெலும்பு பகுதிகள் தான்.
இந்த ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் பாதிக்கப்பட்ட மூட்டுகளில் உள்ள எலும்புகள் பலவீனமடைந்துவிடும். மூட்டுகளை இணைக்கும் இணைப்பு திசுக்களும் பலவீனமடையும். இதனால் மூட்டுக்களில் வீக்கம் போன்ற பிரச்சினையை உண்டாக்குகிறது.
காரணமும்
தீர்வும்
உடல் பருமன், போதிய உடற்பயிற்சி இன்மை, ஊட்டச்சத்துக்கள் குறைவான உணவு பழக்கம் ஆகியவையும் இந்த கீழ்வாத பிரச்சினை உண்டாக முக்கியக் காரணமாக இருக்கிறது.
இந்த பிரச்சினையை வெறும் மருந்துகளால் மட்டும் சரிசெய்துவிட முடியாது. உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது போன்றவை மிக அவசியம்.
ஆட்டோ
இம்யூன் இன்பிளமேட்டரி ஆர்த்ரைடிஸ் (autoimmune
inflammatory arthritis)
நோயெதிர்ப்பு மண்டலம் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது மிக அவசியம். இது தொற்றுக்களில் இருந்து பாதுகாப்பும், காயங்கள் போன்றவை வேகமாக ஆறவும் வீக்கத்தை குறைக்கவும் செய்யும். ஆனால் இந்த இன்பிளமேட்டரி ஆர்த்ரைடிஸ் பிரச்சினை உள்ளவர்களுக்கு நோயெதிர்ப்பு மண்டலம் அதன் இயல்பில் இருந்து மிக வேகமாக இயங்கும் (overactive).
இதனால் மூட்டுக்கள், முதுகெலும்பு, கை, கால்களில் வலி ஆகியவை உண்டாகும். அதுமட்டுமின்றி கண்கள், சருமம், இதயம் மற்றும் உடலின் பிற உறுப்புகளிலும் பாதிப்பை எற்படுத்தக் கூடும்.
ஆன்டி பயாடிக் சிகிச்சைகள் எடுத்துக் கொள்கிறவர்கள், வைரஸ் தொற்று பாதிப்பு மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த வகையான ஆட்டோ இம்யூன் இன்பிளமேட்டரி ஆர்த்ரைடிஸ் பிரச்சினை உண்டாகலாம்.
நோயெதிர்ப்பு மண்டலத்தின் இயக்கத்துக்கு ஆரோக்கியமான உணவுமுறையும் உடற்பயிற்சி எவ்வளவு முக்கியமோ அதேபோல மன அழுத்தம் இல்லாமல் இருப்பதும் மிக முக்கியம்.
சரியான மருத்துவ சிகிச்சையுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி. போதுமான அளவு தூக்கம், மன அழுத்தம் இல்லாமல் இருப்பது போன்றவை மிக முக்கியம்.
தொற்றுக்களால்
ஏற்படும் மூட்டுவலி (Infectious
Arthritis)
உடலில் வைரஸ் தொற்றோ அல்லது பாக்டீரியாா தொற்றுக்களோ ஏற்படும்போது அவை ஆர்த்ரைடிஸை தூண்டும். இதுதான் தொற்றுக்களால் ஏற்படும் ஆர்த்ரைடிஸ்.
என்று சொல்லப்படுகிறது.
உடலில் ஏதேனும் தொற்றுக்கள் ஏற்பட்டிருக்கும்போது அந்த தொற்று பரவல் எலும்பு மூட்டுகளுக்கும் பரவத் தொடங்கும்.
தொற்றுக்களால் ஏற்படும் ஆர்த்ரைடிஸின் போது சினோவியல் என்னும் திரவத்தின் சுரப்பு மூட்டுகளுக்கு இடையே அதிகரிக்கும். ஆன்டி ஃபங்கல் மற்றும் ஆன்டி பாக்டீரியல், ஆன்டி வைரல் மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. சினோவியல் திரவ உற்பத்தியை குறைக்கும் மருந்துகளை கொடுப்பதன் மூலம் ஓரளவு இந்த தொற்றுக்களால் ஏற்படும் ஆர்த்ரைடிஸ் பிரச்சினையின் தீவிரத்தை குறைக்க முடியும்.
கௌட்
எனனும் மெட்டபாலிக் ஆர்த்ரைடிஸ்
மெட்டபாலிக் ஆர்த்ரைடிஸ் என்பதை தான் கௌட் என்ற பெயரால் அழைக்கிறோம்.
யூரிக் அமிலம் அதிகமாகப் படிந்து மூட்டுக்களில் வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. யூரிக் அமிலத்தை நம்முடைய உடலில் உள்ள செல்களும் உருவாக்கும்.
அதைதவிர, இதன் அளவு அதிகரிக்க நாம் எடுத்துக் கொள்ளும் சில உணவுகளும் காரணமாக இருக்கின்றன. குறிப்பாக சிவப்பிறைச்சி, சில மீன் வகைகள், ஈரல் உள்ளிட்ட விலங்குகளின் உள்ளுறுப்புகள். அதிகமாக மது அருந்துவது போன்ற பல்வேறு காரணங்களால் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கிறது.
கௌட் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட எல்லோருக்குமே யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. சிலருக்கு அதிகமாக இருக்கும். சிலருக்கு வேறு பிரச்சினைகள் கூட காரணமாக இருக்கலாம்.
கௌட் பிரச்சினைக்கு உணவுமுறையாலும் வாழ்க்கை முறை மாற்றங்களாலும் தான் தீர்வு உண்டாகும். ஆனால் யூரிக் அமிலம் அதிகரிப்பதால் ஏற்படும் கௌட் பிரச்சினைக்கு யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதற்கான மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது.
அறிகுறிகள்
ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
ஆர்த்ரைடிஸ்க்கான அறிகுறிகளோ அல்லது உங்களுடைய கை மற்றும் கால், இடுப்பு, முதுகெலும்பு போன்றவற்றில் வலியை உணர்ந்தால் முதலில் நீங்கள் மருத்துவரை சந்திக்க வேண்டும்.
மருத்துவர் மூட்டுவலிக்கான காரணத்தைக் கண்டறிந்து அது சாதாரண வலி தானா அல்லது எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை மற்றும் ஆர்த்ரைடிஸ்க்கான அறிகுறி என்று தெரிந்தால் அவர் எலும்பு சிகிச்சை நிபுணரை பரிந்துரை செய்வார்.
அதன்பின் அவர் பரிந்துரைக்கும் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொள்ளத் தொடங்க வேண்டும். உணவு மற்றும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
சாப்பிட
வேண்டிய, தவிர்க்க வேண்டிய உணவுகள்
ஆஸ்டியோ ஆர்த்ரைடிஸ் என்னும் கீழ்வாதப் பிரச்சினை உள்ளவர்கள்
·
சிவப்பு இறைச்சி,
·
பதப்படுத்தப்பட்ட உணவுகள்,
·
வெள்ளை சர்க்கரை,
·
ரீஃபைண்ட் செய்யப்பட்ட உணவுகள்,
போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவை மூட்டுகளின் வீக்கத்தை அதிகப்படுத்தும். ஆனால், ஆன்டி ஆக்சிடண்டுகள் நிறைந்த
·
பெர்ரி வகை பழங்கள்,
·
கீரைகள்,
·
இலைவடிவ காய்கறிகள்,
·
முழு தானியங்கள்,
·
புரதங்கள் நிறைந்த உணவுகள்,
·
மீன் வகைகள்,
·
ஆலிவ் ஆயில்
ஆகியவற்றை தங்களுடைய டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வலி குறைய என்ன செய்யலாம்?
மூட்டுகளில் வலி மற்றும் வீக்கம் ஏற்படும் போது ஐஸ் ஒத்தடம் அல்லது வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது வலியைக் கொஞ்சம் குறைக்கும்.
மருத்துவர்களின் அறிவுரையோடு வலி நிவாரணிகளை பயன்படுத்தலாம். தீவிரமான வலியும் வீக்கமும் அதிகரிக்கும்போது, மருத்துவர் அறுவை சிகிச்சையை பரிந்துரைக்கலாம்.