Friday, February 23, 2024

பிப்ரவரி 12 (1984)

 பிப்ரவரி 12 (1984)

36ஆண்டுகளுக்கு முன்....இதே தினம், பிப்ரவரி 12 (1984) அன்று நம் சென்னிமலையில் நிகழ்ந்த அதிசயம் !! லட்சக்கணக்கான மக்கள் கண்டு களிக்க, இரட்டை மாட்டு வண்டி நம் சென்னிமலையின் 1320படிக்கட்டுக்கள் வழியாக மலை உச்சியை அடைந்த நிகழ்வு..

 

·          12.2.84 .  கிழக்கே வெளுத்தது !. சென்னிமலை, சென்னிமளையைச் சுற்றியுள்ள ஊர்கள், மற்றும் தமிழகத்தின் பல ஊர்களில் இருந்தும் மக்கள் சென்னிமலை மலைஅடிவாரத்தில்மலை உச்சி வரையில் உள்ள படிக்கட்டுக்களின் இரு பக்கங்களிலும் நின்றும் அமர்ந்தும், மரக்கிளைகளில் அமர்ந்து கொண்டும் கிளைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டும் தங்களுக்கான இடத்தைத் தக்க வைத்துக்கொள்ள ஆயத்தமாயினர்.

 

·         12,2,1984 அன்று காலை சரியாக 7:30மணி. அலங்காரம் செய்யப்ட்ட இரட்டை மாட்டு வண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளை மாடுகளும் கம்பீரமாக தயாராக இருக்க,அப்பொழுதுதான் வண்டியை யார் ஓட்டுவார் என்று அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடி பச்சை வேட்டி மஞ்சள் துண்டு அணிந்து, வண்டியை ஓட்ட, வண்டியில் அமர்ந்தவர் 60வயதான பெருந்துறை சிவன்மலைக் கவுண்டர்..

 

·         சிவன்மலைக் கவுண்டர் வண்டியில் ஏறி உட்கார்ந்ததும், காளைமாடுகள் இரண்டும் கம்பீரமாகப் படிக்கட்டுக்களில் ஏற ஆரம்பித்து விட்டன.

 

·         காளை மாடுகள் ஒவ்வொரு படியையும் மிதித்து மேலேறும் போது, மலையே அரகரா என்று முழக்கமிட்டதைப் போல அடிவாரம் முதல் மலை உச்சி வரை இருந்த பக்தர்களின் அரகர முழக்கங்கள் அதிர்ந்து எதிரொலித்தன.

 

·         லட்சக்கணக்கான மக்கள் சுற்றிலும் இருந்து அரகரா முழக்கங்களை எழுப்பியபோதும், வண்டியில் பூட்டப்பட்ட மாடுகள் இரண்டும் மக்கள் கூட்டத்தைக்க் கண்டும், கோஷங்களைக் கேட்டும் சிறிதும் மிரளவில்லை. இராணுவ வீரர்களைப் போல் ஒருவிதமான மிடுக்கோடு மலைப்படிகளில் ஏறின ! சரியாக நாற்பத்தாறு நிமிடங்களில் ஆயிரத்து முன்னூற்று இருபது படிகளையும் கடந்து, மலையுச்சியிலுள்ள முருகன் சந்நிதியில் போய் நின்றன

 

·         மலையுச்சியை வண்டி மாடுகள் அடைந்ததும் லட்சக்கணக்கான மக்களின் அரகரா முழக்கமும் உச்சத்தைத்தொட,வண்டி மாடுகளுடன் சிவன்மலைக் கவுண்டருக்கும் வண்டி மாடுகளுக்கும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

·         சென்னிமலை வேலவரே கனவில் வந்து ஆணையிட்டதாகக் கூறி, வண்டி,காளைமாடுகள், சாட்டை போன்றவற்றை பக்தர்கள் வேட்டுவபாளையம் வேளாளத் தம்பிரான் மடத்துச் சின்னப் பூசாரியார் பொன்னுச்சாமி வசம் காணிக்கையாக அளித்தனர்.

 

·         அன்றைய நாளில் சுமார் நான்காயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு காளை மாடுகளை இந்த நிகழ்வுக்குக் காணிக்கையாக கொடுத்தவர் சென்னிமலையை அடுத்த முத்தூர் துரைசாமிக் கவுண்டர்.. காளை மாடுகளைப் பூட்டிச் செல்லும் இரட்டை மாட்டு வண்டியை காணிக்கையாகக் கொடுத்தவர் விராலிக்காட்டூர் கோபால் கவுண்டர். இதுபோலவே சாட்டையையும் இன்னொரு பக்தர் காணிக்கையாக கொடுத்துள்ளார்.

 

·         கனவில் தோன்றிய இறை ஆணையைக் குறிப்பிட்டு, 12.2.84 அன்று காலை சென்னிமலை முருகன் கோவில் படிக்கட்டுக்களில் இரட்டைமாட்டு வண்டி செல்ல வேண்டும் என்பதற்காக, முன்னதாகவே பெரியார் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜாராம் அவர்களிடம் அனுமதி கேட்கப்பட்டபோது, இம்மாதிரியான் நிகழ்வுக்கு முன் மாதிரி இல்லாத சூழ்நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் வண்டியை இழுத்துக் கொண்டு மாடுகள் மலைப் படிக்கட்டுக்களில் ஏறிச் செல்லும்போது, கூட்டத்தைக் கண்டு, காளை மாடுகள் மிரண்டு போய், தாறுமாறாக ஓட ஆரம்பித்து விட்டால், பல உயிர்ப்பலிகளைச் சந்திக்க வேண்டுமே என்ற மக்களின் பாதுகாப்புக் காரணங்களுக்காக முதலில் அவர் அனுமதி மறுத்திருக்கிறார். “முருகன் அருளால் எந்தவிதமான அசம்பாவிதமும் நடக்காதுஎன்று பலரும் எடுத்துக்கூறிய போதும் கலெக்டரின் சந்தேகம் நீங்கவில்லை. எனவே,கலெக்டரே சென்னிமலைக்கு வந்து, உச்சிவரை படிக்கட்டுக்களில் ஏறிச்சென்று பார்வையிட்டிருக்கிறார். பிறகே நிகழ்ச்சிக்கு அனுமதி யளித்திருக்கிறார்.     

 

 ·        முந்தையநாளான 11.2.1984 அன்று பிற்பகல் சின்னவேட்டுவ பாளையத்திலிருந்து சென்னிமலைக்கு  விட்டுப் புறப்பட்ட வண்டிக்கு வழி நெடுக வரவேற்பு அளிக்கப்பட்டது. இரவு சென்னிமலை அருள்மிகு கைலாசநாதர் கோவிலிலும்12.2.84 அதிகாலை மலை அடிவாரத்திலும் சிறப்புப் பூசைகள் நடைபெற்றன.

 

·         1320 படிகளிலும் கம்பீரமாக ஏறிச் சென்ற காளை மாடுகள் பூட்டிய வண்டியைப் பின்தொடர்ந்து சென்ற அதிமுக்கியப்பிரமுகர்கள் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராஜாராமன், துணை ஆட்சியர் சந்திரபிரகாஷ், காவல்துறை கண்காணிப்பாளார் திரு அப்பாத்துரை ஆகியோர்.

 

     அன்றைய கோவைப் பதிப்புமாலை முரசு”  “சென்னிமலையில் இன்று நடந்த அதிசய நிகழ்ச்சி ..ஆறு லட்சம் பேர் பக்தர்கள் திரண்டு பார்த்தனர்என்று முதல் பக்கக் கொட்டை எழுத்துத் தலைப்புச் செய்தியாக, சென்னிமலையில் மாட்டு வண்டி மலையேறிய செய்தியை வெளியிட்டது. இவ்வபூர்வ நிகழ்ச்சியைஹிந்து” ”இந்தியன் எக்ஸ்பிரஸ்முதலிய ஆங்கிலத் தினசரிகளும், “தினமணி” ”தினத்தந்தி” “மாலைமுரசுமுதலிய தமிழ்தினசரிகளும், “இதயம் பேசுகிறது” ”தேவிமுதலிய தமிழ் வார இதழ்களும் சிறப்புச்செய்திகளாக வெளியிட்டன. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி நிறுவனமும்  இந்த நிகழ்ச்சி குறித்து செய்தி வெளியிட்டதனால், தேசிய அளவிலும்  சென்னிமலையில்இரட்டைமாட்டு வண்டி மலைப்படிக்கட்டுகளில் ஏறிச் சென்ற நிகழ்ச்சி முக்கியத்துவம் பெற்றது

 

       12.2.1984 அன்று காலையிலேயே வண்டி மாடுகள் மலையேறப் போகிறது என்பதால்11.2.84 அன்று இரவிலிருந்தே பல ஊர்களில் இருந்து மக்கள் கூட்டம் சென்னிமலையில் பரவசத்தோடு எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது. பெண்கள், பிள்ளைகள் என்று ஒவ்வொருவரும் ஓர் இரவு முழுவதையும் ஒரு பரவசத்தை எதிர்நோக்கி மலைப்படிகளிலும் ஊரின் பல பகுதிகளிலும் அமைதியாக விழித்துக் காத்திருந்தார்கள்.    

 

சென்னிமலைக்கு வரும் எல்லா வழித்தடங்களிலும் பேருந்துகள் வாகனங்கள் சில கிலோ மீட்டர் தூரத்திலேயே நிறுத்தப்பட்டன.

*மிகக்குறுகிய நேரத்தில் பல லட்சம் பேர் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சிக்குக் காவல் துறை சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தது.

 

 ** பரப்பளவில் சிற்றூராக உள்ள நம் சென்னிமலையில்,  “மலையா -மக்கள் தலையாஎன்று அதிசயக்கும் வண்ணம் ஒரே சமயத்தில் பல லட்சம் மக்கள் கலந்து கொண்டபோதும், எந்தவித அசம்பாவித நிகழ்வுகளும் இல்லாமல், 1320 மலைப் படிக்கட்டுக்கள் இரட்டை மாட்டு வண்டி ஏறிச் சென்ற அதிஅற்புத - அதிசய நிகழ்ச்சியை. நிகழ்வு நடைபெற்று 35 ஆண்டுகள் கழித்து, அதே தினத்தில் இன்று 12.2.2019 யானமலரும் நினைவுகளாகமீண்டும் நினைவு கூர்வதிலும்செய்தியைப்  இன்றைய தலைமுறையினர் அறிந்து கொள்ளப் பகிர்ந்து கொள்வதிலும்  மிகுந்த மகிழ்ச்சி..