Saturday, May 11, 2024

காருக்கு பின்னாடி ஒரு சிலர் ஏன் ஸ்பாய்லர் வெச்சுக்கறாங்க தெரியுமா?

காருக்கு பின்னாடி ஒரு சிலர் ஏன் ஸ்பாய்லர் வெச்சுக்கறாங்க தெரியுமா? சும்மா ஸ்டைலுக்குனு நெனச்சு விட்றாதீங்க!


ஒரு சிலர் தங்கள் கார்களுக்கு பின்னால் ஏன் ஸ்பாய்லர் வைத்து கொள்கின்றனர்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம். கார்களின் பின் பகுதியில் நீங்கள் ஸ்பாய்லர்களை (Spoilers) நிச்சயமாக பார்த்திருப்பீர்கள். ஒரு சில கார்கள் ஸ்பாய்லர்கள் உடனே விற்பனைக்கு வருகின்றன. ஸ்பாய்லர்கள் இல்லாமல் விற்பனைக்கு வரும் கார்களை வாங்க கூடியவர்கள், அவற்றை தனியாக பொருத்தி கொள்கின்றனர். கார்களில் வெறும் அழகிற்காக மட்டுமே ஸ்பாய்லர்கள் பொருத்தப்படுவதாக ஒரு சிலர் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறான எண்ணம். ஸ்பாய்லர்கள் மூலமாக கார்கள் கூடுதல் அழகாக தெரிகின்றன என்பது உண்மைதான். ஆனால் அழகிற்காக மட்டுமே கார்களில் ஸ்பாய்லர்கள் பொருத்தப் படுகிறது என்பது தவறு. ஏனெனில் ஸ்பாய்லர்கள் மூலம் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன? என்பதைதான் இந்த செய்தியில் தெரிந்து கொள்ள போகிறோம்.

 

முன்னோக்கி செல்லக்கூடிய ஒரு கார், எதிர் திசையில் காற்றை எதிர்கொள்ளும். அந்த காற்றை கிழித்து கொண்டுதான் கார் முன்னோக்கி செல்லும். இது 'ட்ராக்' (Drag) என்று அழைக்கப்படுகிறது. அதாவது இழுவை என்று சொல்லலாம். இந்த இழுவையை குறைப்பதுதான், ஸ்பாய்லர்களால் கிடைக்க கூடிய முக்கியமான நன்மை.

 

'ட்ராக்' காரணமாக, காரை முன்னோக்கி இழுத்து செல்வதற்கு இன்ஜின் மிக கடுமையாக சிரமப்படும். இதன் விளைவாக காரின் வேகம் குறையும். ஆனால் உங்கள் காரில் ஸ்பாய்லரை பொருத்தினால், 'ட்ராக்' குறையும். எனவே கார் வேகமாக செல்லும். பொதுவாக ஸ்போர்ட்ஸ் கார்களில்தான் (Sports Cars) ஸ்பாய்லர்களை அதிகமாக காண முடியும். மின்னல் வேகத்தில் செல்வதற்கு ஸ்பாய்லர்கள் உதவி செய்வதுதான் இதற்கு காரணம். மேலும் உங்கள் காரில் ஸ்பாய்லர்கள் இருந்தால், 'டிராக்ஸன்' (Traction) மற்றும் கையாளுமையும் (Handling) நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்பாய்லர்களால் நமக்கு மற்றொரு மிக முக்கியமான நன்மை கிடைக்கிறது. சிறப்பான மைலேஜ்தான் அந்த மற்றொரு நன்மை. ஸ்பாய்லர்கள் இருந்தால், 'ட்ராக்' குறையும் என்பதுடன், 'ட்ராக்ஸன்' மேம்படும் என்று ஏற்கனவே கூறினோம் அல்லவா? இந்த இரண்டு விஷயங்களும், எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துவதற்கு, அதாவது சிறப்பான மைலேஜ் கிடைப்பதற்கு உதவி செய்கின்றன. அதாவது இந்த 2 நன்மைகளால், இன்ஜின் மிகவும் சிரமப்பட்டு வேலை செய்ய வேண்டிய தேவை ஏற்படாது. எனவே குறைவான எரிபொருளையே இன்ஜின் பயன்படுத்தும்.

 

இதன் காரணமாக காரின் மைலேஜ் உயரும். இதுதவிர ஸ்பாய்லர்கள் மூலம் பாதுகாப்பு தொடர்பான நன்மைகளும் நமக்கு கிடைக்கின்றன. இரவு நேரங்களில் முன்னால் செல்லும் வாகனம் தெளிவாக தெரியாத காரணத்தால் ஏராளமான சாலை விபத்துக்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் உங்கள் காரின் பின் பகுதியில் ஸ்பாய்லர்கள் இருந்தால், உங்களுக்கு பின்னால் வருபவர்களுக்கு, முன்னால் ஒரு கார் சென்று கொண்டுள்ளது என்பது தெளிவாக தெரியும். மற்றவர்களுக்கு காரை மிகவும் தெளிவாக தெரிய செய்வதால், சாலை விபத்துக்கள் நிகழ்வதற்கான வாய்ப்புகளையும் ஸ்பாய்லர்கள் குறைக்கின்றன. இதுதவிர காரின் அழகையும் ஸ்பாய்லர்கள் கூட்டுகின்றன என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி சொல்லலாம். ஸ்பாய்லர்கள் உங்கள் காருக்கு ஸ்போர்ட்டியான லுக்கை (Sporty Look) வழங்குகின்றன. இதன் மூலம் காரின் மறு விற்பனை மதிப்பு, அதாவது ரீசேல் வேல்யூ (Resale Value) உயர்வதற்கும் அவை உதவி செய்கின்றன.

எனவே நீங்கள் காரை விற்பனை செய்வதாக இருந்தால், உங்களுக்கு சற்று கூடுதல் தொகை கிடைக்கலாம். ஸ்பாய்லர்கள் இருக்கும் கார்கள், மிகவும் விலை உயர்ந்த தயாரிப்புகளை போல தோன்றும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதுபோன்ற பல்வேறு நன்மைகள் கிடைப்பதன் காரணமாகவே, தங்கள் கார்களில் ஸ்பாய்லர்களை பொருத்தி கொள்வதற்கு பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது சந்தையில் மிக குறைவான விலையில் கூட ஸ்பாய்லர்கள் கிடைக்கின்றன. ஆனால் நீங்கள் உங்கள் காருக்கு ஸ்பாய்லர் பொருத்துவதாக இருந்தால், விலையை விட தரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். ஆன்லைன் மூலமாகவும் கூட ஸ்பாய்லர்களை தற்போது வாங்க முடியும். நிபுணத்துவம் பெற்ற மெக்கானிக்குகளின் உதவியுடன் அவற்றை நீங்கள் சுலபமாக பொருத்தி கொள்ளலாம்.