Saturday, July 29, 2023

நோயணுகா விதிகள்

 

நோயணுகா விதிகள்

நோயணுகா விதிகள் பற்றி தேரையர் கூறுவதைக் கேளுங்கள்.

பாலுண்போம்; எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம்;

பகலில் புணரோம்; பகலில் துயிலோம்; பயோதரமும் மூத்த

ஏலஞ்சேர் குழலியரோடு இளவெயிலும் விரும்போம்;

இரண்டு அடக்கோம்; ஒன்றை விடோம்; இடது கையிற்படுப்போம்;

மூலஞ்சேர் கறிநுகரோம்; மூத்த தயிர் உண்போம்;

முதல்நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்;

ஞாலந்தான் வந்திடினும் பசி ஒழிய உண்ணோம்;

நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;

உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்;

உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்;

பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;

பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்து நீர் அருந்தோம்;

மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;

வாழையிளம் பிஞ்சொழிய காயருத்தல் செய்யோம்;

நண்புபெற உண்ட பின்னர் குறுநடை பயில்வோம்;

நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;

ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்;

அடர்நான்கு மதிக்கொருகால் பேதியுரை நுகர்வோம்;

கேறுமதி ஒன்றைக்கோர் தரநசியும் பெறுவோம்;

திங்களரைக் கிரண்டுதரம் சவலிவி ருப்புறுவோம்;

வீறுசதுர் நாட்கொருக்கால் நெய்முழுக்கைத் தவிர்ப்போம்;

விழிகளுக் கஞ்சனம் மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;

நாறுகாந்தம் புட்பமிவை நடுநிசியில் நுகரோம்;

நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே;

பகத்தொழுக்கு மாதர் அசம்கரம் துடைப்பமிவை தூள்;

படநிற்கோம்; தீபனமாந்தர் மரநிழலில் வசியோம்;

சுகப்புணர்ச்சி அசனவச னத்தருணஞ் செய்யோம்;

துஞ்சலுண விருமலஞ்செய் யோக மழுக்காடை;

வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவை மாலை விரும்போம்;

வற்சலம்தெய் வம்பிதுர் சற்குருவை விடமாட்டோம்;

நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்குமிட மசைகோம்;

நமனார்க்கிங்கே கேதுகவை நாமிருக்கும் மிடத்தே.

இதன் பொருள்

நாட்டு மாட்டின் பாலுணவை உண்போம்.

நல்ல எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம்.

பகலில் உடலுறவு கொள்ள மாட்டோம்.

தன் வயதை விட மூத்த பெண்ணோடும், பொது மகளிரோடும் உடலுறவு கொள்ளமாட்டோம்.

காலை இளம்வெயிலில் அலையமாட்டோம்.

மலம் சிறுநீர் ஆகியவற்றை அடக்க மாட்டோம்.

படுக்கும் பொழுது இடது கைப்புறம் ஒருக்களித்துப் படுப்போம். அப்போதுதான் வலப்புறம் சூரிய கலையில் மூச்சு ஓடும்.அது பன்னிரண்டங்குலம் ஓடுவதால் மூச்சு விரயம் ஆகாது .உடலும் கஷ்டப்படாது .

நன்றாக நாள்பட்ட ( மூத்த )புளித்த தயிர் உணவை விரும்பி உண்போம்.

முதல் நாள் சமைத்த கறியை அடுத்த நாள் உண்ணமாட்டோம்.

பசிக்காதபோது உண்ண மாட்டோம். பசித்தபொழுது மட்டும் உண்போம்.

ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் உண்போம்.ஒரு போது உண்பவன் யோகி, இரு போதுண்பவன் போகி , முப்போதுண்பவன் ரோகி(வியாதியுள்ளவன்), நான்கு போதுண்பவன் துரோகி ( உடலுக்கு துரோகம் செய்பவன் ).

பகலில் தூங்க மாட்டோம், இரவில் நன்றாகத் தூங்குவோம்.

மாதம் ஒருமுறை மட்டும் உடலுறவு கொள்வோம்.

மண்ணில் விளையும் கிழங்குகளில் கருணைக்கிழங்கு தவிர மற்ற கிழங்குகளைப் புசிக்க மாட்டோம்.

உணவு உண்ணும்பொழுது தாகம் அதிகரித்தாலும் இடையில் நீர் அருந்த மாட்டோம்.

பிஞ்சு வாழைக்காய்களையே கறி சமைத்து உண்போம். மிக முற்றிய காய்களை உண்ண மாட்டோம்.

உணவு உண்டபின் சிறிது தூரம் நடப்போம்.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்வோம்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதிக்கு மருந்து உட்கொள்வோம். ஒன்றரை மாதத்திற்கொருமுறை மூக்கிற்கு ( நசியம் ) மருந்திடுவோம். இதனால் சளி முதலிய பீனிச நோய் வராமல் தடுப்போம்.

வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்.

நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மையிடுவோம்.

மணம் வீசும் மலரை இரவில் நுகர மாட்டோம்.

ஆடு, கழுதை முதலியவை வருகின்ற பாதையில் எழுகின்ற புழுதி நம் உடல் மேல் படுமாறு நெருங்கி நடக்க மாட்டோம்.

தரை சுத்தம் செய்யும் இடத்தில் கிளம்பும் தூசி மேலே படும்படி நடக்க மாட்டோம்.

இரவில் விளக்கு ஒளியில் நிற்போரின் நிழலும், மரநிழலும் நிற்க மாட்டோம்.

பசிக்கும்பொழுதும், உணவு உண்ட உடனும் உடலுறவு கொள்ள மாட்டோம்.

அந்திப்பொழுதில் உறங்குதல், உணவு உண்ணல், காமச்செயல் புரிதல், அழுக்கு உடை அணிதல், தலைவாருதல் ஆகியவற்றைச் செய்ய மாட்டோம்.

நம்மிடம் இரக்க உள்ள தெய்வங்கள், பித்ருக்கள், குரு ஆகியோரை எப்பொழுதும் வணங்குவோம்.

பிறர் கை உதறும் பொழுது நகத்திலிருந்து வரும் தண்ணீரும், குளித்து தலைமுடியைத் தட்டும்பொழுது தெறிக்கும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்க மாட்டோம்.

இவற்றில் கூறியுள்ளவாறு நம் வாழ்வில் கடைபிடித்தால் எமன் நம்மிடம் வர அஞ்சுவான். நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ்வோம்.