. கம்ப்யூட்டர்
டிப்ஸ்...-4
பயன்படுத்தாத விண்டோக்களை மினிமைஸ் செய்திட...
பல்வேறு புரோகிராம்களைப் பயன்படுத்துகையில், பல விண்டோக்களத் திறந்து வைத்துக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோம். சில வேளைகளில் வெகுநேரம் பயன்படுத்தாமல் இருந்தாலும், அந்த விண்டோவினை மினிமைஸ் செய்திடாமல், அப்படியே வைத்திருப்போம். இந்த பயன்படுத்தாத விண்டோக்கள், நாம் மற்ற விண்டோக்களைக் கிளிக் செய்து பயன்படுத்துகையில் தொல்லை கொடுக்கலாம்.
இந்த பிரச்னைக்கு தீர்வு தரும் சிறிய புரோகிராம் ஒன்று இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் swept away (Windows). http://lifehacker.com/255055/lifehackercodesweptawaywindows என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், பயன்படுத்தாத விண்டோக்களைத் தானாகவே, குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னால் மினிமைஸ் செய்துவிடுகிறது. தொடக்கத்தில் இந்த கால இடைவெளி 300 விநாடிகளாக இருக்கிறது. இதனைக் குறைக்கலாம் மற்றும் அதிகப்படுத்தலாம். சில வேளைகளில், நாம் பயன்படுத்தா விட்டாலும் சில விண்டோக்கள் அப்படியே இருக்க விரும்புவோம். மினிமைஸ் செய்யப் படாமல் வைத்திருக்க எண்ணுவோம். அதற்கும் இந்த ஸ்வெப்ட் அவே புரோகிராம் வழி தருகிறது. இத்தகைய விண்டோக்களின் புரோகிராம்களுக்கான பட்டியலை விதிவிலக்கு புரோகிராம்களாகப் பட்டியல் செய்து வைத்துவிடலாம். அப்போது அந்த விண்டோக்கள் மினிமைஸ் செய்யப் படாமல் விடப்படும். இயக்கப்படும் புரோகிராம்களுக்கான டாஸ்க் பார் டேப்பில், ரைட் கிளிக் செய்து, அவற்றை இந்த விதிவிலக்கு பட்டியலில் சேர்க்கலாம்.
வயர்ட் மார்க்கர்
(Wired - Marker)
வெப் பிரவுசர்களில், டெக்ஸ்ட் எடிட்டர்களில் இருப்பது போல, ஹைலைட் செய்வதற்கும், டெக்ஸ்ட்டைக் குறித்து வைப்பதற்கும் வசதிகள் இல்லை. இணைய தளங்கள் சிறிய அளவில் 500 முதல் 1000 சொற்களுக்குள் இருந்தால், இந்த தேவை எழாது. ஆனால் 200 பக்க இணைய தளம் ஒன்றை எண்ணிப் பாருங்கள். படித்துப் பார்க்கவும், படித்ததில் குறித்து வைத்ததைத் தேடிப் பார்க்கவும் சில நாட்கள் ஆகலாம்.
இணைய தளங்களில் தகவல்களைப் படித்தறிகையில், அவற்றில் பல வரிகள் நமக்கு முக்கியமாகத் தென்படும். அவற்றை ஹைலைட் செய்திட விரும்புவோம். அவற்றின் முக்கியத்துவத்தின் அடிப்படையில், வெவ்வேறு வண்ணங்களில் ஹைலைட் செய்திட முயற்சிப்போம்.
பயர்பாக்ஸ் பிரவுசரில் இதற்கான வசதியை வயர்டு மார்க்கர் Wired Marker என்னும் சிறிய புரோகிராம் தருகிறது. இது ஒரு ஆட் ஆன் தொகுப்பாகும். இதனை எலக்ட்ரானிக் புக்மார்க்கர் என்று சொல்லலாம். இதனை இலவசமாக இறக்கம் செய்து, பதிந்து கொண்டு பயன்படுத்தலாம். இதனை தரவிறக்கம் செய்து, இன்ஸ்டால் செய்த பின்னர், வெப் பிரவுசரிலேயே இதற்கான டூல் இணைக்கப்படுகிறது. காண்டெக்ஸ்ட் மற்றும் டூல் மெனுவில் இது கிடைக்கிறது. இதில் இன்னொரு வசதியும் தரப்பட்டுள்ளது. நாம் இதன் மூலம் ஹைலைட் செய்திடும் வரிகள் அனைத்தும், ஒருவகையான ஸ்கிரேப் புக்கில் காப்பி செய்யப்படுகிறது. இதனை அப்படியே வேறு ஒரு இடத்தில் பேஸ்ட் செய்தும் கொள்ளலாம்.
எட்டு வகையான மார்க்கர்கள் உடனடியாகக் கிடைக்கின்றன. கூடுதலாக இணைத்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. ஒவ்வொரு மார்க்கரும் ஒரு வண்ணத்தில், ஒரு குறிப்பிட்ட ஸ்டைலில் அமைந்துள்ளது. இதனால் ஒரே இணையதளத்தில் வெவ்வேறு நோக்கத்திற்காகத் தகவல்களைத் தேடுபவர்களுக்கு இந்த மார்க்கர்கள் மிகவும் உதவியாய் இருக்கும்.
ரைட் கிளிக் செய்தால், இந்த வயர்டு மார்க்கர் மெனு கிடைக்கும். இதில் நமக்குத் தேவையான வண்ணம் மற்றும் ஸ்டைல் மார்க்கரினைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றின் மூலம் ஹைலைட் செய்த டெக்ஸ்ட் வரிகள் அல்லது ஆப்ஜெக்ட்டுகள், அடுத்த முறை இந்த தளத்திற்குச் செல்கையில்,பக்கத்து பாரில் காட்டப்படுகின்றன. ஏற்கனவே ஹைலைட் செய்த டெக்ஸ்ட்டின் மீது டபுள் கிளிக் செய்தால், கர்சர் அந்த டெக்ஸ்ட் உள்ள இடத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இதனைப் பெற https://addons.mozilla.org/de/firefox/addon/6219/#categoriesdropdown என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
ஸ்பைவேர் (Spyware) - ஆட்வேர் (Adware) தடுப்பது எப்படி ?
அவை குறித்து இங்கு சுருக்கமாகக் காணலாம்.
1. ஸ்பைவேர் தடுப்பு: நீங்கள் ஏற்கனவே இதனைச் செய்திராவிட்டால், உடனே மேற்கொள்ள வேண்டிய செயல்பாடு இதுவாகும். உடனடியாக ஸ்பைவேர் தடுப்பு புரோகிராம் (spyware blocker) ஒன்றை நிறுவுங்கள். இங்கு குறிப்பிடப்படுவது ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் அல்ல. ஸ்பைவேர் என்பது வைரஸ் அல்ல. பல ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், ஸ்பைவேர் புரோகிராம்களைத் தடுப்பதில்லை. எனவே தான் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தாலும், ஸ்பைவேர்களைத் தடுக்கும் புரோகிராம்களையும் நாம் இன்ஸ்டால் செய்திட வேண்டும். செக்யூரிட்டி சூட் (Security Suite) என்று சொல்லபடுகிற தொகுப்புகளில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர் புரோகிராம் மற்றும் பயர்வால் சேர்ந்தே கிடைக்கின்றன. ஆனால் இந்தவகை தொகுப்பு புரோகிராமினால், உங்கள் கம்ப்யூட்டர் இயக்கம் மெதுவாகிறது என்றால், தனித்தனியே ஒவ்வொரு தடுப்பிற்கும்,தனி புரோகிராமினை நிறுவலாம்.
2. பயர்வால்: மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே பயர்வால் தடுப்பு ஒன்றினைத் தருவது ஒரு நல்ல முயற்சியாகும். ஆனால், கூடுதல் வசதிகள் கொண்ட, சிறப்பாகச் செயல்படும் பயர் வால்கள் சில உள்ளன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஒரு பயர்வால், உங்கள் கம்ப்யூட்டருக்குள் உங்கள் அனுமதி இன்றி, அல்லது உங்களுக்குத் தெரியாமலேயே நுழையும் எதனையும், அது ஸ்பைவேர், வைரஸ், மால்வேர், ஹேக்கர் போன்ற எதுவாக இருந்தாலும், அவற்றைத் தடுக்கிறது. பயர்வால் செட்டிங்ஸ் சில வேளைகளில் குழப்புவது போல் இருக்கும். எனவே தெளிவடைந்த பின்னரே, அதனை அமைத்துப் பயன்படுத்த வேண்டும். பயர்வால் அமைத்த பின்னர், அவை சரியாக உள்ளனவா என்று அறிய நீங்கள் Hackerwatch.org/ Malwarehelp.org என்ற இரண்டு தளங்களின் உதவியை நாடலாம்.
3. அப்டேட், அப்டேட்: உங்களுடைய செக்யூரிட்டி சாப்ட்வேர் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டால் தான், திடீர் திடீரென உருவாக்கப்பட்டு வரும் கெடுதல் அளிக்கும் புரோகிராம்களைத் தடுக்கலாம். விண்டோஸ் அப்டேட்ஸ், செக்யூரிட்டி அப்டேட்ஸ், பேட்ச்சஸ், டெபனிஷன்ஸ், உங்களுடைய பயர்வால், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், ஸ்பைவேர் புரோகிராம் ஆகிய அனைத்தும் அப்டேட் செய்யப்பட்டதாகவே இருக்க வேண்டும்.
4. பாதுகாப்பான இன்டர்நெட் பயணம்: இன்டர்நெட் பிரவுஸ் செய்வது, இப்போதெல்லாம் ஊர்ந்து, பறந்து, பாய்ந்து செல்லும் ஜீவராசிகள் வாழும் காட்டின் நடுவே நடந்து செல்வது போல ஆகிவிட்டது. எந்த நேரத்தில் எந்த வைரஸ் அல்லது மால்வேர் வந்து நம்மைத் தாக்கும் என்று நமக்குத் தெரியாது. சில வழிமுறைகளைக் கடைப்பிடித்தால், நாம் இவற்றைத் தடுக்கலாம். இணைய தளங்களில் எந்த லிங்க்கிலும் கிளிக் செய்திட வேண்டாம். 25 நாளில் 25 கிலோ எடை குறைய, இங்கே கிளிக் செய்திடுக என்று உங்களைத் தூண்டும் வாசகம் இருக்கும். அதிலிருந்து ஓடிவிடுங்கள். பிரபலமான சினிமா நடிகை குறித்த சுவராஸ்யமான தகவல் குறித்து அறிவிப்பு இருக்கும். அலட்சியப்படுத்துங்கள். பாப் அப் விண்டோ எழுந்து வருகிறதா? அதில் இது போன்ற செய்தி உள்ளது. உடனே அதில் உள்ள எக்ஸ் அடையாளத்தில் கிளிக் செய்து, அதனை மூட முயற்சிக்காதீர்கள். அதில் கிளிக் செய்தால் கூட, அது ஆக்டோபஸ் போல உங்களை இழுத்துக் கொண்டு நாசப்படுத்தும். அதுதானே அப்போதைக்கு ஆக்டிவ் விண்டோ. எனவே ஆல்ட்+ எப்4 அழுத்துங்கள். அது உடனே மூடப்படும்.
இதே போலத்தான் இமெயில் செய்திகள் கொண்டு வரும் லிங்க்குகளும். எதனையும் தொட வேண்டாம். அதில் உங்கள் கர்சரைக் கொண்டு சென்றாலே, அது உங்களை இழுத்துச் செல்ல இருக்கும் தளத்தின் முகவரி காட்டப்படும். அதனைப் பார்த்தே, அந்த தளம் உண்மையானதா என்று தெரியவரும்.
5. புரோகிராம் இன்ஸ்டலேஷன்: பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் குறித்துத் தெரிந்து கொண்டு, அவற்றை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்கிறோம். அவற்றை இன்ஸ்டால் செய்திடும் முன், அதில் தரப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் படித்துவிடுங்கள். சில சிறிய அளவான எழுத்துக்களில், உங்கள் பெர்சனல் தகவல்களைத் திருடுவதற்கான தகவல் இருக்கும்.
6. யூசர் ஐ.டி. திருட்டு: நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட்களைத் திருடுவது, இப்போது மிகவும் அதிகரித்து வருகிறது. எனவே யூசர் நேம் கூடுமானவரை குழப்பமானதாகவே இருக்கட்டும். அதே போல பாஸ்வேர்டுகளும், யாரும் எளிதில் கணிக்க முடியாததாக இருக்கட்டும்.
நல்ல ஸ்பைவேர் தடுக்கும் புரோகிராம், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், பயர்வால், சரியான யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட், அடிக்கடி அப்டேட்டிங் ஆகிய வற்றைக் கடைப்பிடித்தால், நம் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு பாதுகாப்பானது என்ற நல்ல நம்பிக்கையுடன் செயல்படலாம்.
உங்கள் தனிநபர் விருப்பங்கள் உங்களுக்கு மட்டும்
என்னதான் இணைய தளங்கள், நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும், தனிநபர் தகவல்களையும் பாதுகாப்பாக வைத்திருப்போம் என உறுதி அளித்தாலும், சில இணைய தளங்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கையில், சில விளம்பர நிறுவனங்களின் புரோகிராம்கள், நம் தனிநபர் விருப்பங்களைத் திருடிக் கொண்டிருக்கலாம். இவற்றை எப்படி அறிவது? இதற்கு இணையத்தில் ஒரு தளம் உதவுகிறது. இதன் முகவரி http://www.privacychoice.org/whos_watching. இந்த தளத்திலிருந்து, நீங்கள் பார்க்கும் இணைய தளங்களில், நீங்கள் அறியாமல் உங்கள் பெர்சனல் தகவல்களைத் திரட்டும் நிறுவனங்கள் குறித்த தகவல்களை அறியலாம்.
இதிலிருந்து விலகிக் கொள்ளும் முடிவை நீங்கள் எடுக்கலாம். இந்த தளம் விட்ஜெட் எனப்படும் சிறிய புரோகிராம் ஒன்றைத் தருகிறது. இதன் மூலம் வேவு பார்க்க உதவிடும் தளங்களையும் நீங்கள் புறக்கணிக்கலாம். இந்த தளத்தில் நுழைந்தவுடன் Your Choices என்னும் டேபினைத் திறக்கவும். இங்கு நீங்கள் விலக்க விரும்பும் தளங்கள் வகையினை நிர்ணயம் செய்திடலாம். தேர்ந்தெடுத்த தளங்களை விலக்கி வைக்கலாம். அல்லது இத்தகைய அனைத்து தளங்களையும் விலக்கலாம். இந்த இரண்டு ஆப்ஷன்களில் ஒன்றை ஏற்றுக் கொள்கையில், மேலும் மூன்று ஆப்ஷன்கள் உங்களுக்குத் தரப்படும். அவை Opt out through the Network Advertising Initiative, Optout with the TACO Firefox Addon, மற்றும் Block Tracking Through your Browser ஆக இருக்கும். இவற்றில் எதனைத் தேர்ந்தெடுத்தாலும் மீண்டும் பல ஆப்ஷன்கள் கொடுக்கப்படும். இது குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், இந்த தளத்திலேயே அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அவற்றிற்கான பதில்கள் உள்ளன. அவற்றைப் படித்துத் தெளிந்து கொள்ளலாம். உங்கள் அந்தரங்கம் புனிதமானது. அது உங்களுக்கு மட்டுமே தெரிய வேண்டும். மற்றவர்களுக்கல்ல.
யு.எஸ்.பி. கார்ட் விலக்கல்
யு.எஸ்.பி. போர்ட்டில், பல சாதனங்களை இணைத்துப் பயன்படுத்துகிறோம். பிளாஷ் ட்ரைவ், டேட்டா கார்ட், கேமரா போன்ற அனைத்தும் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைக்கும் வகையில் இன்று வடிவமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இவற்றை போர்ட்டிலிருந்து, மீள விலக்கும்போது அதற்கான Safely Remove Hardwareஐகானைக் கிளிக் செய்து மெசேஜ் கிடைத்த பின்னரே எடுக்க வேண்டியுள்ளது. பொறுமை இன்றி, எடுக்கும்போது, சிஸ்டம் அந்த சாதனத்தின் ட்ரைவில் ஏதேனும் எழுதிக் கொண்டிருந்தால், பிரச்னை ஏற்படுகிறது. இந்த பிரச்னையைத் தீர்க்க, விரைவில் ட்ரைவ் மற்றும் பிற சாதனங்களை விலக்க ஒரு தீர்வு உள்ளது. இதற்கான செட்டிங்ஸில் சிறிய மாற்றம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும். விண்டோஸ் எக்ஸ்புளோரரில் மெமரி கார்டிற்கான ட்ரைவில் ரைட் கிளிக் செய்திடவும்.
பின்னர் கிடைக்கும் மெனுவில், ப்ராப்பர்ட்டீஸ் (Properties) ) தேர்ந்தெடுக்கவும். இப்போது காட்டப்படும் விண்டோவில் ஹார்ட்வேர் (Hardware) என்னும் டேப்பில் கிளிக் செய்து இங்கு மெமரி கார்ட் ரீடரைத் தேர்ந்தெடுக்கவும். இங்கும் உள்ள மெனுவில் ப்ராப்பர்ட்டீஸ் (Properties)தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் பாலிசீஸ் (Policies)டேப்பில் கிளிக் செய்திடவும். பாலிசீஸ் காட்டப்படும் முன் சேஞ்ச் செட்டிங்ஸ் Change Settings) பட்டனைக் கிளிக் செய்திட வேண்டி இருக்கலாம். இனி உள்ள விண்டோவில் Download updates but let me choose whether to install themஎன்பதைத் தேர்ந்தெடுத்துப் பின் கிளிக் செய்து வெளியேறவும். இனி Safely Remove Hardware உங்களுக்குத் தேவை இருக்காது.
போல்டர் வியூ
எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப் படுவார்கள். அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (Default) போல்டராக அமைந்துவிடும்.
டச்பேட்
லேப்டாப் பயன்படுத்து பவர்கள், தாங்கள் கீ போர்டில் வேலை செய்திடுகையில், டச் பேடில் விரல்களோ, உள்ளங்கையோ பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறித் தொந்தரவு தரும். இதனை நீக்க டச் பிரீஸ் (Touch Freeze) என்ற சிறிய புரேகிராமினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.
விண்டோஸ் கீ
உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் அதி வேகத்தில் இயங்கினாலும், சில கீகளைப் பயன்படுத்தி, இன்னும் அதனைக் கூடுதல் வேகத்தில் இயக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பயன்படுத்தி, செயல்பாடுகளை மேற்கொண்டு பார்த்தால் இதன் உண்மை விளங்கும்.
சிஸ்டம் தகவல்கள் அறிய: உங்களுடைய சிஸ்டம் குறித்த தகவல்களை உடனே அறிய, Windows மற்றும் Pause கீகளை அழுத்துங்கள். உடன் சிஸ்டம் குறித்த சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்.
டாஸ்க்பார் அப்ளிகேஷன்ஸ்
நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளி கேஷன் தொகுப்புகளை, டாஸ்க்பாரில் போட்டு வைக்கவும். இதனால் ஒரு மவுஸ் கிளிக்கிலேயே, அப்ளிகேஷன்களை இயக்க நிலையில் பெறலாம். இதனால் பல மவுஸ் கிளிக்குகள் மிச்சமாகும். டாஸ்க் பாரில் போட்டு வைத்த பின், விண்டோஸ் கீயுடன் ஏதேனும் ஒரு எண்ணுக்கான கீயினை இணைத்து அழுத்தவும். இப்போது, டாஸ்க் பாரில் அந்த எண்ணுக்குரிய இடத்தில் எந்த அப்ளிகேஷன் உள்ளதோ, அந்த புரோகிராம் இயக்கப்பட்டு நமக்குக் கிடைக்கும். ஒரு புரஜக்டரை இணைக்கும் போதோ, அல்லது உங்களுடைய லேப்டாப் கம்ப்யூட்டரை, வெளியே உள்ள ஒரு டிஸ்பிளே சாதனத்துடன் இணைத்துக் காட்டவிரும்பும்போதோ, விண்டோஸ் கீயுடன் ப்பி (Windows+P) கீகளை அழுத்தவும்.
ஏதேனும் ஒரு அப்ளிகேஷனை இயக்கநிலைக்குக் கொண்டு வர, விண்டோஸ் கீ அழுத்தி, அதில் உள்ள ரன் பாக்ஸில், அதற்கான கட்டளைப் (பெரும்பாலும் அதன் சுருக்கப்பெயர்) பெயரைத் தந்தால் போதும்.
ரன் டயலாக் பாக்ஸைப் பெற விண்டோஸ் + ஆர் கீயினை அழுத்தவும்.
No comments:
Post a Comment