தீபாவளி பிறந்த கதை
தீபாவளி என்பது இந்தியாவின் முதன்மைப் பண்டிகை. இது இந்தியா முழுவதிலும் உற்சாகமாகக் கொண்டாடப்படுகின்ற முக்கியமான விழாவாகும்.
இந்தியாவில் மட்டுமல்லாது நேபாளம், இலங்கை, மியான்மர், பாகிஸ்தான், மொரீசியஸ், கயானா, மலேசியா, சிங்கப்பூர், பிஜி போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.
தீபாவளி என்ற சொல்லை தீபம் + ஆவளி எனப் பிரித்து தீபங்களின் வரிசை எனப் பொருள் அறியப்படுகிறது.
பொதுவாக இது வருடந்தோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாள் சதுர்த்தசியில் தென்னிந்தியாவிலும், ஐப்பசி மாத அமாவாசை அன்று வட இந்தியாவிலும் கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை இந்துக்கள், சமணர்கள், சீக்கியர்கள் ஆகியோரால் மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை வட இந்தியாவில் லட்சுமி பூஜை என்றும், வங்காளத்தில் காளி பூஜை என்றும் வழங்கப்படுகிறது.
தீபாவளி பற்றிய கதைகள்
மகாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்த போது பூமாதேவிக்கும் வராக மூர்த்திக்கும் பிறந்த மகன் நரகாசுரன். தனக்கு தன் தாயின் கையாலே மரணம் நிகழ வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றிருந்தான் நரகாசுரன். எந்த தாயும் தன் மகனை கொல்லமாட்டாள் என்ற கர்வம் தலைக்கேற, உலக மக்களை மிகவும் கொடுமைப்படுத்தினான்.
மகாவிஷ்ணுவின் கிருஷ்ணர் அவதாரத்தின்போது நரகாசுரனுக்கும், கிருஷ்ணருக்கும் இடையே ஏற்பட்ட போரில் பூமாதேவியின் அவதாரமும் கிருஷ்ணனின் மனைவியுமான பாமாவால் இறுதியில் கொல்லப்பட்டான்.
சாகும் தருவாயில் பகவான் கிருஷ்ணனிடம், தான் இறந்த இந்த நாளை நன்னாளாக மக்கள் எல்லோரும் புத்தாடை அணிந்து, இனிப்புகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்ற வரத்தினைப் பெற்றான் என தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு தென்னிந்திய மக்களிடம் வழிவழியாக இருந்து வரும் கதையாகும்.
இராமாயணத்தில் ராமன் ராவணனுடன் போர் புரிந்து சீதையை மீட்டு மீண்டும் அயோத்தி நகரை அடைந்தபோது வழி எங்கும் மக்கள் தீபங்களை ஏற்றி ராமனை வரவேற்ற நாளே தீபாவளி என கொண்டாடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.
பார்வதி தேவியின் கேதார கௌரி விரதத்தை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் பார்வதி தேவிக்கு தனது இடது பாகத்தை அளித்து அர்த்தநாதீஸ்வராக அருட்பாலித்தது தீபாவளித் திருநாளில்தான் என்கிறது கந்த புராணம். மேலே கூறிய காரணங்களுக்காக தீபாவளிப் பண்டிகை கொண்டாவது இந்து மக்களின் நம்பிக்கை.
மகாவீரர் முக்தி அடைந்த தினமாக சமண மக்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சீக்கிய மக்களின் குருக்களில் ஒருவரான குரு கோவிந்த சிங் என்பவர், முகலாய மன்னன் ஜஹாங்கீரால் சிறையில் அடைக்கப்பட்டு பின்பு விடுதலையான உடன் அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலில் சென்று தீபங்களை ஏற்று வழிபாடுநடத்தினார். குரு கோவிந்த சிங் விடுதலையான நாளையே தீபாவளியாக சீக்கிய மதத்தினர் கொண்டாடுகின்றனர்.
தமிழ்நாட்டில் தீபாவளிப் பண்டிகை
தீபாவளிப் பண்டிகை தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத அமாவாசைக்கு முந்தைய நாளான சதுர்த்தசியில் கொண்டாடப்படுகிறது.
அதாவது தீபாவளியன்று அதிகாலையில் (4.30 முற்பகல் -6.00 முற்பகல்) சதுர்த்தசி இருக்கவேண்டும் என்றே தீபாவளி கொண்டாடும் நாள் கணக்கிடப்படுகிறது.
தீபாவளியன்று மக்கள் அதிகாலையில் எழுந்து நல்லெண்ணெய் தேய்த்து, பின் சிகைக்காய் தேய்த்து வெந்நீரில் குளிக்கின்றனர். இதனையே கங்கா ஸ்நானம் என்று அழைக்கின்றனர். தீபாவளி அன்று நல்லெண்ணெயில் லட்சுமியும், வெந்நீரில் கங்கையும் உள்ளதாக கருதுகின்றனர்.
பின் தீபாவளிப் பண்டிகைக்கான புதிய ஆடைகள், இனிப்புகள், தின்பண்டங்கள் ஆகியவற்றை வைத்து வீட்டில் வழிபாடு நடத்துகின்றனர்.பின் புதிய ஆடைகளை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துகின்றனர்.
பின்னர் குடும்பத்தினருடன் உணவருந்துகின்றனர். உற்றார் மற்றும் அண்டையில் வசிப்பவர்களுக்கு இனிப்புக்கள் மற்றும் தின்பண்டங்கள் வழங்குகின்றனர். வெடிகள் வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
No comments:
Post a Comment