Monday, November 25, 2019

யோகா முத்திரைகள்


க்யான் முத்திரை

        அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும் மிக அடிப்படையான யோகாசன முத்திரை இதுவாகும். பத்மாசனா தோரணையில் அமர்ந்திருக்கும் போது காலையில் செய்ய வேண்டிய முத்திரை இது. இந்த முத்திரை உங்கள் ஒருமுனைப்படுதலை மேம்படுத்தி, தூக்கமின்மையை போக்கி, கோபத்தை கட்டுப்படுத்த உதவும்.

வாயு முத்திரை

       உடலில் உள்ள காற்று தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரையாகும். உட்காரும் போது, நிற்கும் போது அல்லது படுக்கும் போது, அந்த நாளில் எந்நேரம் வேண்டுமானாலும் இதை செய்யலாம். உடலில் உள்ள அளவுக்கு அதிகமான காற்றை வெளியேற்றி, வாயுவினால் ஏற்படும் நெஞ்சு வழியை குறைக்க இது உதவும்.

அக்னி முத்திரை

         உடலில் உள்ள நெருப்பு தனிமத்தை சமநிலைப்படுத்தவே இந்த முத்திரை. விடியற்காலையில் வெறும் வயிற்றில் இந்த முத்திரையை செய்யலாம். உடல் எடையை குறைப்பதற்கு இந்த முத்திரை; இது கொழுப்புகளை குறைத்து செரிமான செயல்பாட்டை துரிதப்படுத்தும்.

வருண முத்திரை 

     இந்த யோகாசன முத்திரை உடலில் உள்ள நீர் தனிமத்தை சமநிலைப்படுத்துவதற்காக செய்வதாகும். மேலும் உங்கள் அழகை மேம்படுத்த இந்த முத்திரை உதவும். உங்கள் உடலில் உள்ள நீரோட்டம் நன்றாக வைப்பதாலும், சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதாலும் உங்கள் சருமம் மின்னிடும்.

பிராண முத்திரை

         வாழ்க்கையை குறிக்கும் முத்திரை இது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யக்கூடிய முத்திரை இது. இந்த யோகாசன முத்திரை உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்தி, உங்கள் கண்பார்வையின் கூர்மையை அதிகரித்து, சோர்வை எதிர்த்து ஆற்றல் திறனுடன் வைத்திருக்க உதவும்.

ப்ரித்வி முத்திரை

        அண்டத்தில் உள்ள உலக தனிமத்தை உங்கள் உடலுக்குள் ஊக்குவிக்கவே இந்த முத்திரை. இந்த முத்திரையினால் கிடைக்கும் உடல்நல பயன்கள் - இரத்த ஓட்டம் மேம்படும், பொறுமை அதிகரிக்கும், தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடையும்.

சூன்ய முத்திரை

           சைபர் அல்லது சூன்ய முத்திரை என்பது உங்கள் காதுகளுக்கானது. இந்த முத்திரை உங்கள் காது வலிகளை போக்கும். மேலும் வயது மற்றும் நோயினால் காது கேட்கும் திறன் குறைபவர்களுக்கும் கூட இது உதவும்.

சூரிய முத்திரை

         சூரியனின் ஆற்றல் திறனை அனுசரிப்பதே சூரிய முத்திரையின் அடிப்படையாகும். சூரியனின் ஆற்றல் திறனை பெறுவதற்கு இந்த முத்திரையை விடியற்காலையில் செய்ய வேண்டும்.

லிங்கா முத்திரை

இந்த முத்திரை ஆண்களின் விரைக்குறியை குறிக்கும். அதனால் தான் என்னவோ உடலில் வெப்பத்தை உருவாக்குகிறது இது. இந்த முத்திரை உங்கள் ஆண்மையை அதிகரித்து, சளி சம்பந்தப்பட்ட உடல்நல பிரச்சனைகளை போக்கும்.

அபான் முத்திரை
            பல்துறை முத்திரையான இது அனேகமாக அனைவருக்குமே பயனை அளிக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மை கலந்த நீரை இந்த அபான் முத்திரை சுத்தப்படுத்தும். சிறுநீரக கோளாறுகளை கையாள உதவும் இம்முத்திரை. அதே போல் மலம் கழித்தலையும் சீராக்கும். யோகா முத்திரைகள் செய்முறையை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

யோகா


            உடல் எடை குறைப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் உடற்பயிற்சியை விட யோகாவே சிறந்ததாக விளங்குகிறது. யோகா ஒரு பழமையான கலை என்று நம் இந்திய வேத புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

               முனிவர்களின் ஞானம் மற்றும் தற்போதைய நவீன விஞ்ஞானத்தின் கலவையான யோகா, மற்ற உடற்பயிற்சிகளை விட உங்களுக்கு பல வித நன்மைகளை அளிக்கும். யோகா என்றால் வெறும் ஆசனங்களும் இருக்கைகளும் மட்டுமல்ல. சிலருக்கு மட்டும் தெரிந்த முத்திரைகளும் கூட யோகாவில் உள்ளது. இந்த யோகாசன முத்திரைகளும் கூட நீங்கள் வியக்கும் படியான உடல்நல பயன்களை அளிக்கிறது.

                ஒவ்வொரு யோகாசன முத்திரையும் தனித்துவம் பெற்றது. அதனால் அவைகளை சரியான வழியில் செய்திட வேண்டும். இந்த ஒவ்வொரு முத்திரைகளுக்கும் உள் அர்த்தங்கள் உள்ளது. உதாரணத்திற்கு, க்யான் முத்திரை பொதுவான ஒன்று. இந்த முத்திரை அறிவையும் ஒருமுனைப்படுதலையும் குறிக்கும். அதே போல் வாயு முத்திரை காற்றை குறிக்கும். உடலில் உள்ள காற்று சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அது சமநிலைப்படுத்தும்.

            அனைத்து யோகாசன முத்திரைகளும் கை அசைவுகளே. அவைகள் உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கக்கூடிய நன்மைகளை அளிக்கும். ஆனால் இந்த முத்திரைகளை நினைத்த மாத்திரத்தில் செய்யக்கூடாது. ஒவ்வொரு முத்திரையை செய்யவும் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரம் இருக்கிறது. குறிப்பிட்ட வகையில் அமர்வது, நிற்பது, படுப்பது போன்றவைகளும் இதில் அடங்கியுள்ளது. உடல் நல பயன்களை பெறுவதற்கு இந்த விசேஷ கை சைகைகளை பயன்படுத்துங்கள். அடிப்படையான யோகாசன முத்திரைகளையும் அதனால் உங்கள் உடலுக்கு ஏற்படும் பயன்களையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Saturday, November 23, 2019

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்

கிரைய பத்திரம் பதியும் போது கவனிக்க வேண்டிய 16 விஷயங்கள்
1. ஒரு நிலத்தை ஒரு நபரிடமிருந்து விலை கொடுத்து வாங்கி உங்கள் பெயருக்கு மாற்றி கொள்வதற்கு போடப்படும் ஆவணம் தான் கிரயப் பத்திரம் ஆகும்.
2. மேற்படி கிரயப்பத்திரம் முத்திரை தாள்களில் எழுதப்பட்டு சார்பதிவகத்தில் சாட்சிகள் முன்னிலையில் பதியப்படுவது தான் கிரயப் பத்திர பதிவு ஆகும்.
3. எழுதி கொடுப்பவரின் பெயரும் & இன்சியலும், அவரின் அடையாள அட்டை, பட்டா . மின் இணைப்பு, முன் பத்திரம் மற்றும் இதர ஆவணங்களில் உள்ளது போலவே பத்திரத்தில் எழுதப்பட்டுள்ளதா என பார்க்க வேண்டும்.
4. எழுதி கொடுப்பவர், ஏற்கனவே முன் வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ள அவரின் முகவரியும், தற்போது இருக்கும் முகவரியும் ஒன்றா என்று பார்க்க வேண்டும். இரண்டும் வேறு வேறு முகவரி என்றால் இரண்டு முகவரியும் இப்போது எழுதுகிற கிரைய பத்திரத்தில் காட்ட வேண்டும்.
5. கிரயம் எழுதி வாங்குபவரும் தன்னுடைய பெயர் , இன்சியல், முகவரி ஆகியவை அடையாள அட்டையுடன் பொருந்தும்படி பிழையில்லாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
6. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு சொத்து எப்படி வந்தது,
• அவர் வேறு நபரிடம் கிரயம் வாங்கி இருக்கலாம்.
• அவருடைய பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தாரிடம், இருந்து செட்டில்மெண்ட், பாகபிரிவினை, விடுதலைப் பத்திரம் மூலம் அடைந்து இருக்கலாம்.
• உயில் , தானம் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பொது ஏலம், நீதிமன்ற தீர்வுகள் மூலம் கிடைத்து இருக்கலாம்.
• பூர்வீகமாக பட்டா படி பாத்தியப்பட்டு வந்து இருக்கலாம். அதனை கிரயம் எழுதி கொடுப்பவர் தெளிவாக ஆவண எண் விவரத்துடன் மேற்படி சொத்து எனக்கு கிடைத்தது என்று சொல்லி இருக்க வேண்டும்.
7. கிரயம் எழுதி கொடுப்பவருக்கு, யார் மூலம் சொத்து வந்தது என எழுதுவது மட்டும் இல்லாமல் அவருக்கு முன் கிரயம் பெற்றவருக்கு யார் மூலம் சொத்து வந்தது என்று நதிமூலம் ரிஷிமூலம், பார்த்து அணைத்து லிங்க் டாகுமென்ட்யையும் வாரலாறாக தற்போதைய கிரைய பத்திரத்தில் எழுதுவது மிக சிறப்பானது ஆகும்.
8. கிரயம் நிச்சயித்த உண்மை தொகை எழுத வாய்ப்பு இருந்தால் தெளிவாக எழுதுங்கள் (அல்லது) வழிகாட்டி மதிப்பு தொகை எழுதினாலும் எழுதுங்கள். எவ்வளவு பணம் அக்ரிமெண்ட் போடும்போது கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் காசோலையாக கொடுக்கப்பட்டது, எவ்வளவு பணம் வங்கி கணக்கில் கட்டப்பட்டது, எவ்வளவு பணம் ரொக்கமாக கொடுக்கப்படுகிறது, என தெளிவாக குறிப்பிட வேண்டும்.
9. கிரயம் எழுதி கொடுப்பவர், எழுதி வாங்குபவருக்கு கீழ்க்கண்ட உறுதி மொழிகளை கட்டாயம் கொடுத்து இருக்க வேண்டும்.
1.தானம்
2. அடமானம்
3. முன் கிரயம்
4. முன் அக்ரிமெண்ட்,
5. உயில்
6. செட்டில்மெண்ட்,
7. கோர்ட் அல்லது கொலாட்ரல் செக்யூரிட்டி,
8. ரெவின்யூ அட்டாச்மெண்ட்
9. வாரிசு பின் தொடர்ச்சி,
1௦. மைனர் வியாஜ்ஜியங்கள்.
11. பதிவு பெறாத பத்திரங்கள் மூலம் எழுதும் பாத்திய கோரல்கள்,
12.சொத்து ஜப்தி,
13.சொத்து ஜாமீன்,
14.பைசலுக்காக சர்க்கார் கடன்கள்,
15.வங்கி கடன்கள்,
16.தனியார் கடன்கள்,
17.சொத்து சம்மந்தமான வாரிசு உரிமை ,
18.சிவில், கிரிமினல் வழக்குகள்,
19.சர்க்கார் நில ஆர்ஜிதம்,
20.நிலகட்டுப்பாடு ,
21.அரசு நில எடுப்பு முன் மொழிவு நோட்டீஸ்,
22.நில உச்ச வரம்பு கட்டுப்பாடு,
23.பத்திரப்பதிவு சட்டம் 47(a) சட்டத்தின் கீழ் சொத்து இல்லை
24. இதில் சொல்லாத பிற வில்லங்கங்கள் இல்லை
போன்ற உறுதி மொழிகளை வில்லங்கம் இல்லை என்று கண்டிப்பாக உறுதி அளித்து இருக்க வேண்டும்.
10. சர்க்கார் வரி வகைகள் முழுவதும் கட்டியாயிற்று, சொத்து சம்மந்தமான அசல் நகல் ஆவணங்களை ஒப்படைத்து விட்டேன். எதிர்காலத்தில் பிழை இருந்தால் அல்லது வேறு ஏதாவது பத்திரம் இந்த சொத்து பற்றி எழுதி கொடுக்க சொன்னால் கைமாறு எதிர்பார்க்காமல் எழுதி கொடுக்கின்றேன் என்று கிரைய பத்திரத்தில் உறுதி அளித்து இருக்க வேண்டும்.
11. சொத்து விவரத்தில் மிக தெளிவாக மாவட்டம், வட்டம், கிராமம் புல எண், உட்பட அனைத்தையும் தெளிவாக குறிப்பிட்டு இருக்க வேண்டும். தெருவோ, கதவு எண்ணோ இருந்தால் நிச்சயம் குறிப்பிட்டு இருக்க வேண்டும். மின் இணைப்பு இருந்தால் மின் இணைப்பு எண், நிலத்தின் பட்டா எண், புதிய சர்வே எண், பழைய சர்வே எண், பட்டா படி சர்வே எண். தெளிவாக எழுதிருக்க வேண்டும்.
12. இடத்தின் அளவு நாட்டு வழக்கு முறையிலும் , பிரிட்டிஸ் அளவு முறையிலும், மெட்ரிக் அளவு முறையிலும் தெளிவுடன் எழுதி இருக்க வேண்டும். மெட்ரிக் அளவு முறையில் எழுதி இருந்தால் பட்டா மாற்றத்திற்கு உதவியாக இருக்கும் .
13. கிரைய சொத்தை சுற்றி இருக்கும் நான்கு பக்கங்களில் இருக்கின்ற சொத்துக்களை சிறு அளவு பிழை இல்லாமல் அடையாள படுத்த வேண்டும். நான்கு பக்கங்களில் இருக்கின்ற நீள அகல அளவுகளை தெளிவுடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
14. பத்திரத்தின் எல்லா பக்கங்களிலும் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சோதனையிட வேண்டும். எழுதி கொடுப்பவர் தரப்பின் சாட்சிகள், பெயர் & முகவரியுடன் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று சரிபார்க்க வேண்டும்.
15. தேவையான பட்டா, வரைபடம், அடையாள அட்டை நகல்கள் பத்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ளதா , அதில் எழுதி கொடுப்பவர் கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.
16. முத்திரைத்தாள்கள் சரியாக வாங்கி இருக்கிறோமோ, பதிவுக்கட்டணம் DD சரியாக எடுத்துள்ளதா, ஆவண எழுத்தர் அல்லது வக்கீல் , ஆவணம் தயாரித்தவர் என்று கையொப்பம் இட்டு இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

Wednesday, November 20, 2019

மிசா சிறையில் தாக்கப்பட்டாரா ஸ்டாலின்? விசாரணை அறிக்கைகள் சொல்வது என்ன?


 
         
                திமுக தலைவர் ஸ்டாலின் மிசாவில் கைதுசெய்யப்பட்டு, மோசமான சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பதற்கான ஆதாரமே இல்லை என்று பலரும் பேசிக்கொள்வதாக இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது தெரிவித்திருந்தார் அமைச்சர் பாண்டியராஜன். கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பிலும் நன்மதிப்பைப் பெற்றிருப்பவர் அவர். மிசா காலகட்டத்தைப் பற்றிய ஷா கமிஷன் அறிக்கையையும், இஸ்மாயில் கமிஷன் அறிக்கையையும் கவனத்தில் கொள்ளாமலேயே அவர் தனது கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அவர் என்னுடைய நண்பர். இது பற்றி தகவல் கேட்டிருந்தால் நானே கொடுத்திருப்பேன்.
             தமிழ்நாட்டைப் பொறுத்தவரை நெருக்கடிநிலை இரு கட்டமாகச் செயல்பட்டது. ஜூன் 1975 முதல் ஜனவரி 1976 வரை முதல் கட்டம். அப்போது, தமிழகத்தில் மு.கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சி நடைபெற்றது. அவரது அரசை மத்திய அரசு காரணமின்றிப் பதவி விலக்கியது இரண்டாம் கட்டம். அதாவது, பிப்ரவரி 1, 1976 முதல் மார்ச் 1977 வரை. அந்தக் காலகட்டத்தில் ஸ்டாலின் உட்பட திமுக தலைவர்கள் பலரும் கைதுசெய்யப்பட்டனர்.
        
              தமிழ்நாட்டில் கருணாநிதி முதல்வராக இருந்த முதல் கட்டத்தில், இந்திரா காந்தி தான் நினைத்தவாறு எல்லோரையும் கைதுசெய்ய முடியவில்லை. திமுக அரசை சட்டவிரோதமாகப் பதவி விலக்கிய பிறகு, கைதுப் படலம் அதிகமானது. ஷா கமிஷன் அறிக்கையின்படி தமிழ்நாட்டில் திமுகவும் திகவும்தான் அதிகமான தாக்குதலைச் சந்திக்க நேர்ந்தது. 419 திமுகவினரும், 35 திராவிடர் கழகத்தினரும் கைதுசெய்யப்பட்டிருந்தனர். அவர்கள் கைதுக்கு முகாந்திரமே இல்லை என்றும், அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட மிசா தடுப்புக் காவல் உத்தரவு தெளிவற்றதாக இருந்ததாகவும் நீதிபதி ஷா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

                ஷா கமிஷன் விசாரணையில் பெரிய அளவுக்குத் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பங்குகொள்ளவில்லை. ஏனெனில், ஷா கமிஷன் அமைப்பதற்கு முன்னாலேயே 12.5.1977 அன்றைய ஆளுநர் பிரபுதாஸ் பட்வாரி உத்தரவின் பேரில் நீதிபதி இஸ்மாயில் கமிஷன் அமைக்கப்பட்டது. அப்போது சென்னை மத்திய சிறையில் பிப்ரவரி 1976-ல் மிசா கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை விசாரிப்பதற்காகவும் இதர காரணங்களுக்காகவும் அந்த கமிஷன் நியமிக்கப்பட்டது. அந்த கமிஷனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக நான் ஆஜரானதால், சில உண்மைகள் எனக்கும் தெரியும் என்பதால் இவற்றைக் கூறுகிறேன். அரசு அதிகாரபூர்வமாக வெளியிட்ட இஸ்மாயில் கமிஷனின் முழு அறிக்கையின் நகல் என்னிடம் உள்ளது.

மத்திய சிறைக்கு நேரில் சென்றேன்

சிறைக் கைதிகள் தாக்கப்பட்ட தகவல் கிடைத்தவுடன், மனித உரிமை வழக்கறிஞர் என்ற முறையில் உடனடியாக மத்திய சிறைக்கு நேரில் சென்று பார்த்தேன். அதன் பிறகு, மனித உரிமை ஆர்வலர்கள் ஆளுநரிடம் மனு அளித்ததால் இஸ்மாயில் கமிஷன் நியமனம் செய்யப்பட்டது.
பத்திரிகையாளர் சோலை 2010-ல் வெளியிட்டஸ்டாலின் மூத்த பத்திரிகையாளர் பார்வையில்என்ற புத்தகத்தில்கண்ணீர் காவியம்என்ற தலைப்பில் (பக்கம் 125) ஸ்டாலின் கூறுவதாக இவ்வாறு எழுதியிருந்தார்: “சிறையில் இருந்த மார்க்சிஸ்ட் தோழர்களைச் சந்திக்க ஒரு வழக்கறிஞர் வந்தார். மிசா சட்டம் அனுமதிக்கும் எந்த வசதியும் இல்லாது அனைவரும் அவதிப்படுவதை அறிந்தார். அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வெற்றிதான். அந்த வழக்கறிஞர்தான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு. பின்னர், மிசா கைதிகளுக்கு லுங்கியும் சோப்பும் அனுமதிக்கப்பட்டன. டிரான்சிஸ்டர் ரேடியோ வைத்துக்கொள்வதற்கும் தடையில்லை. ஒவ்வொரு மாதமும் முதல் தேதி கலைஞர் அனுப்பிய உதவித்தொகை தங்கள் வீடு தேடிச்செல்வதை அறிந்த மிசா கைதிகள் பூரித்துப்போயினர். பட்ட துயரங்களெல்லாம் பஞ்சாய்ப் பறந்துபோயின.”

             இனி, இஸ்மாயில் கமிஷன் அறிக்கையிலிருந்து சில பகுதிகள்: கமிஷன் முன்னால் 17.7.1977 அன்று மு..ஸ்டாலின் மனுதாரர்களின் இரண்டாவது சாட்சியாக விசாரிக்கப்பட்டார். கமிஷன் அறிக்கையில் பக்கம் 40-ல் அன்றைய சிறைக் கண்காணிப்பாளர் (வித்யாசாகர்) 4.3.76 தேதியிட்ட கடிதத்தைத் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியதில் உள்ள சாராம்சம் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில், 3.3.76 அன்று திமுக தலைவர் கருணாநிதி, மிசா கைதியாக இருந்த மு..ஸ்டாலினை மத்திய சிறையில் நேர்காணல் கண்டதாகவும், அப்போது அவர்களுக்கிடையே நடைபெற்ற உரையாடலில் ஸ்டாலின் தன்னை யாரும் அடித்ததாகக் கூறவில்லை என்றும் எழுதியிருந்தார்.

எம்ஜிஆரும் ஏற்றுக்கொண்ட அறிக்கை

             இதுகுறித்து நீதிபதி இஸ்மாயில் தனது அறிக்கையில் அவரது சாட்சியம் நம்ப முடியவில்லை என்றும், அப்படியே அடிபட்டிருந்தால் அன்றைய காலகட்டத்தில் யாரும் சிறை அதிகாரிகள் முன்னிலையில் தாங்கள் அடிபட்டதைப் பற்றி சொல்லியிருக்க முடியாது என்றும், ஒருவேளை சொல்ல முயன்றிருந்தால் சிறை அதிகாரிகள், உறவினர் நேர்காணலைத் தடுத்திருப்பார்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். கைதிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டதைத் தவிர, மோசமாக நடத்தப்பட்டதையும் திமுகவினரைக் கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய பலவந்தப்படுத்தப்பட்டதையும் குறிப்பிட்ட நீதிபதி இஸ்மாயில், சம்பந்தப்பட்ட சிறை அதிகாரிகள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்குப் பரிந்துரைத்திருந்தார்.

            அவர் அறிக்கை சமர்ப்பித்த காலகட்டத்தில் எம்ஜிஆர் தலைமையில் மாநில அரசு செயல்பட்டது. கமிஷனின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசு, அரசாணை 379 (15.2.1978) உத்தரவை வெளியிட்டது. எம்ஜிஆர் தலைமையிலான அஇஅதிமுக அரசானது நீதிபதி இஸ்மாயில் அறிக்கையை ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல் சிறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்றத்திலும் உறுதி அளித்தது. நண்பர் பாண்டியராஜன் இதுபோன்ற ஆதாரம் இல்லாத தகவல்களை இனிமேல் வெளியிடக் கூடாது என்பது என் விருப்பம்.

கே.சந்துரு,  முன்னள்  நீதிபதி, சென்னை உயர்நீதிமன்றம்