Saturday, December 7, 2019

அரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்!


அரசு ஊழியர் வருகையை ஆன்லைனில் கண்காணிக்கலாம்!
           எல்லாமே டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் ஊழியர்களுக்கான வருகை பதிவேட்டையும் மத்திய அரசு டிஜிட்டல் மயமாக்கி ஆன்லைனுக்கு கொண்டு வந்திருக்கிறது. இதன் பயனாக அரசு ஊழியர்களின் தினசரி வருகை விவரங்களை பொதுமக்களில் யார் வேண்டுமானாலும் ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அரசு ஊழியர் செயல்பாட்டில் திறந்தவெளித்தன்மையை கொண்டு வரும் வகையிலான இந்த திட்டம் ஊழியர் வருகையை கண்காணிப்பதற்கும் வழி செய்யும் முன்னோடித்திட்டமாக இருக்க்கிறது.

           ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் பயோமெட்ரிக் முறையிலான வருகை பதிவேட்டின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
            இந்த ஆன்லைன் வருகை பதிவேட்டை http://attendance.gov.in/ எனும் இணையதளத்தில் பார்வையிடலாம். அரசு அலுவலகங்களில் ஊழியர்களின் வருகை பற்றி அறிய முற்படும் போது பெரும்பாலும் அலட்சியத்திற்கே ஆளான திருவாளர் பொதுஜனம் இந்த தளத்தை பார்த்தால் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிடுவார். ஏனெனில் இதில் மத்திய அரசு அலுவலகங்களில் எந்த எந்த துறைகளில் எத்தனை ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளனர் என்பதை தெரிந்து கொள்ளலாம். மொத்த ஊழியர்களில் பணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கையை தெரிந்து கொள்வதுடன், அவர்களில் குறித்த நேரத்தில் வந்தவர்கள் ( 9.00-10.00 மணி) எண்ணிக்கை, தாமதமாக வந்தவர்கள் மற்றும் 11 மணிக்கு பின் வந்தவர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்க்ளையும் அறிந்து கொள்ளலாம். இவை அழகிய வரைபடமாக காட்டப்படுகிறது.

             துறை வாரியாக விவரங்கள் இருப்பதால் குறிப்பிட்ட நாளில் ஒரு அரசு அலுவலகத்தில் எத்தனை பேர் வேலைக்கு வந்துள்ளனர் என்ற தகவலையும் சுலபமாக தெரிந்துகொள்ளலாம். இந்த விவரங்கள் தொடர்ந்து அப்டேட் செய்யப்படும் என்பதால் குறிப்பிட்ட கால அளவிலான ஊழியர் வருகை குறித்த போக்கையும் இந்த தளம் சுட்டிக்காட்டும்.
             ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் பயோமெட்ரிக் முறையில் இந்த வருகை பதிவேடு உருவாக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் வருகைக்கான டிஜிட்டல் பலகை அல்லது கைய்டக்க ஸ்கேனர் மூலம் வருகையை பதிவு செய்யலாம். அந்த விவரம் உடனே பதிவேட்டில் ஏற்றப்பட்டுவிடும். பயோமெட்ரிக் முறை என்பதால் ஊழியர் மட்டும் தான் பதிவு செய்ய முடியும். வராமல் கையெழுத்து போடுவதோ, தாமதமாக வந்து கையெழுத்து போடுவதோ சாத்தியமில்லை.
           முதல் கட்டமாக தலைநகர் தில்லியில் உள்ள 148 அரசு துறைகளின் வருகை விவரம் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளது. படிப்படியாக மற்ற மத்திய அரசு அலுவலகங்களுக்கு விரிவிபடுத்தப்பட்டு நாடு தழுவிய அளவில் இது அறிமுகமாக உள்ளது.

ஆன்லைன் வருகை பதிவேடு

        பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இந்த ஆன்லைன் வருகை பதிவேட்டின் இன்னொரு முக்கிய அம்சம், இந்த விவரங்களை அப்படியே டவுண்லோடு செய்து கொள்ளலாம் என்பது தான். அதே போல அரசு ஊழியர்களின் பெயரை குறிப்பிட்டு தேடும் வசதியும் இருக்கிறது. ஊழியரின் பதவி, இமெயில் உள்ளிட்ட விவரங்களையும் பெற முடியும். அந்த அளவுக்கு இந்த திட்டம் விரிவாகவும் நுட்பமாகவும் இருக்கிறது.
        அரசு ஊழியர்கள் செயல்பாட்டில் இந்த திட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது. தகவல் அறியும் உரிமை சட்டம் போலவே இந்த தகவல்களை பொதுமக்களும் செயற்பாட்டாளர்களும் மக்கள் நலனுக்காக ஆயுதமாக பயன்படுத்தலாம்.
              மொத்த இந்தியாவுக்கும் விரிவு படுத்தப்பட்டால் இந்த திட்டம் எப்படி இருக்கும் என யோசித்துப்பாருங்கள்.  அருமையான திட்டமாக இருக்கிறது என்று ஆச்சர்யப்படுகிறீர்களா? எனில் அரசு அதிகாரியான ராம் சேவக் சர்மாவுக்கு பாராட்டு தெரிவிக்க வேண்டும். ஆதார் திட்டத்தில் நந்தன் நிலேகனியின் வலதுகரமாக செயல்பட்ட சர்மா , ஜார்கண்ட் மாநில தலைமை செயலாளராக நியமிக்கப்பட்ட போது ,தலைமை செயலகத்தில் சில ஊழியர்கள் பதிவேட்டில் வருகை தந்திருந்தாலும் அலுவலகத்தில் இல்லாமல் இருப்பது கண்டு அதிருப்தி அடைந்தவர் அதார் அட்டை அடிப்படையில் ஊழியர்கள் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யும் முறையை கொண்டு வந்தார்.: attendance.jharkhand.gov.in.

         இப்போது இந்த திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு 24 மாவட்டங்களில் 69 துறைகளில் 34,000 ஊழியர்களை உள்ளடக்கியதாக இருக்கிறது.
இந்த ஆண்டு துவக்கத்தில் மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப துறையில் செயலராக நியமிக்கப்பட்டவர் ஜூன் மாத வாக்கில் பிரதமர் நரேந்திர மோடியிடம் இந்த திட்டத்தை எடுத்துரைத்தார். மோடி இதற்கு பச்சைக்கொடி காட்டவே டிஜிட்டல் இந்தியாவின் அங்கமாகி அமலுக்கு வந்துள்ளது.;

                           இந்த திட்டத்தை மாநில அளவிலும் விரிவுபடுத்துவது சாத்தியம் என்கின்றனர். இது நேர்மையான நிர்வாகத்திற்கான முக்கிய ஆயுதமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. உதாரணத்திற்கு பள்ளிகளில் மதிய உணவு பயனாளிகளுக்கும் இதை விரிவுபடுத்தலாம். அப்போது மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவின் அளவை ஒப்பிட்டு பார்த்து திருட்டை தடுப்பதம் சாத்தியமாகலாம். அரசு மருத்துவமனை உள்ளிட்ட எல்லா துறைகளிலும் இதை பயன்படுத்தலாம். இதன் சாத்தியங்கள் எல்லையில்லாதது. நடைமுறையில் இதன் பயன்பாட்டை பொருத்திருந்து பார்க்கலாம்.

அரசு ஊழியர் வருகையை அறிய: http://attendance.gov.in/

No comments:

Post a Comment