Thursday, January 14, 2021

தத்தாத்ரேயரின் பிறப்பு

 

               சப்த ரிஷிகளில் இரண்டாவது ரிஷியான  அத்ரி முனிவர், கர்தபிரஜாபதியின் மகளான அனுசூயாவை மணந்து கொண்டார். அனுசூயா கற்பு நெறி தவறாத மங்கையர்க்கரசி. கற்பு நெறி தவறாத அனுசூயாவைக் கண்டு திரிமூர்த்திகளின் மனைவிகளும் பொறாமை கொண்டார்கள். அவளின்  கற்பை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்பதற்காக தமது கணவன்மார்களை வேண்டிக் கொண்டார்கள்.  தங்கள் துணைவியார்களின் வேண்டுதலின் படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் முனிவர்கள் போன்று மாறுவேடமிட்டு அத்ரி முனிவர் இல்லாத போது அனுசூயாவின்  குடிலுக்கு சென்று உணவு தருமாறு கேட்டார்கள். அவளும் வந்துள்ள முனிவர்களுக்கு உணவு சமைத்தாள். மூவருக்கும் இலை போட்டு  உணவு பரிமாற  முற்பட்டாள். உணவை பரிமாற வந்தவளிடம் அவர்கள், ஒரு வினோத கோரிக்கையை வைத்தார்கள். பிறந்த மேனியாக, அதாவது அவள் உடலில் துளிக் கூட ஆடை இல்லாமல் உணவு பறிமாறினால் மட்டுமே, உணவருந்துவோம் என்று கூறிவிட்டனர். வந்துள்ளவர்களோ முனிவர்கள். இயலாது என்று கூற முடியாது.

      கற்புக்கரசியான அவளுக்கு அவர்களின் வேண்டுகோளை ஏற்பதும் இயலாது. எனவே அவள் தனக்கு வழி காட்ட வேண்டுமென்று  கணவரை   மனதில் நினைத்து வேண்டினாள். அடுத்த நிமிடமே மும்மூர்த்திகளும் பிறந்த குழந்தைகளாகி விட்டார்கள்.  அந்தக் குழந்தைகளை வாரி எடுத்து தனது மார்பில் இருந்து பாலூட்டினாள். அவள் கணவர் திரும்பி வந்தார். நடந்ததைக் கேட்டு அறிந்தார். தனது ஞான திருஷ்டியினால் நடக்கபோவதை அறிந்து கொண்டார். குழந்தைகள் அவளிடம் கொஞ்சி  விளையாடின.



      மும்மூர்த்திகள் திரும்பி வராததைக் கண்டு  பயந்து போன மூன்று தேவியரும் நாரதர் மூலம் நடந்ததை அறிந்து கொண்டார்கள். உடனே  அனுசூயாவிடம் சென்று நடந்ததற்காக மன்னிப்புக் கோரி தமது கணவர்களை திருப்பித் தருமாறு கேட்டார்கள். அனுசூயாவும்  அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு  மும்மூர்த்திகளை மீண்டும் பழைய நிலைக்கு ஆக்க தன் கணவனை வேண்டினாள். குழந்தைகள் மறைந்தன. மும்மூர்த்திகளும்  தமது உண்மையான ரூபத்தை அனுசூயா-அத்ரி முனிவர் தம்பதிகளுக்குக் காட்டி இன்னும் சில நாட்களிலேயே விஷ்ணுவானவர் அவர்களுக்கு மகனாகப் பிறப்பார் எனவும், பிறக்க உள்ள குழந்தை மும்மூர்த்திகளின் அவதாரமாக, அவர்கள் சக்தியை உள்ளடக்கி தத்தாத்திரேயர் என்ற அவதூதராக பிறந்து பூமியில் உள்ள அவல நிலையை ஒழிப்பார் என உறுதி தந்துவிட்டு அவர்களை ஆசிர்வத்தப் பின்னர் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கூறியபடியே அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் சுசீந்திரம் ஸ்தலத்தில் மார்கழி மாதம் பெளர்ணமி நாளில், மிருகசீரிட நட்சத்திரத்தில் சிவா, விஷ்ணு, பிரம்மா வடிவம் இணைந்தே மும்மூர்த்திகளின் அவதாரமாக மனித உருவில் பூமிக்கு தத்தாத்திரேயராக  விஷ்ணு பகவான் அவதரித்தார்.



      இறைவனே குழந்தையாகப் பிறந்ததால், தத்தாத்ரேயர் சாதாரணக் குழந்தையாக வளரவில்லை. மற்ற குழந்தைகளைக் காட்டிலும் அவரின் போக்கு வேறு விதமாகவும் விசித்திரமாகவும்  இருந்தது. யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தவர் சிறிது வளர்ந்ததும் வீட்டை விட்டு வெளியேறினார். பல இடங்களுக்கும் சுதந்திரமாக சுற்றித் திரிவார். மலைகளிலும், குகைகளிலும், காடுகளிலும் சென்று அமர்ந்து கண்களை மூடியபடி இருப்பார். அவரை சுற்றி எப்போதுமே பெரும் ஒளிவெள்ளம் இருந்தது. அவரைக் கண்ட ரிஷி முனிவர்கள் அவர் சாதாரண பிறவி அல்ல என்பதை புரிந்து கொண்டார்கள்.  மாபெரும் யோகி, ஞானி, அவதூதர் என அவரை பலரும் பலவிதமாக போற்றித் துதிக்கலாயினர். அவர் வேதங்களை நன்கு அறிந்தவர் என்பதை அறிந்து கொண்ட பல ரிஷிகளும் முனிகளும் அவரை  குருவாக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார்கள். அவர் குஜராத், மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகளில்  சுற்றித் திரிந்தார். கனகபுரா  என்று அழைக்கப்படும் கர்நாடகாவில் உள்ள ஒரு ஊரில் அவர் ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது. கிர்னாரில் ஒரு தனிமையான சிகரத்தில் அவரது அசல் கால்தடங்களை இன்னும் காணலாம் என்றும் கூறப்படுகிறது.

        தாணுமாலயனின் வடிவமே தத்தாத்ரேயர் அம்சம்தான் என்றும் சொல்லப்படுகிறது.  பிறந்தது முதலே ஞானவடிவாக விளங்கிய தத்தாத்ரேயர் வேத உபன்யாச ஞானியர்களுக்கு ஸத்குருவாகவும், பிரம்ம யோகியர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார்.

No comments:

Post a Comment